குடும்பம்-உளவியல்

சிதைந்து செல்லும் குடும்பக் கட்டுக்கோப்பை சீரமைப்பதன் அவசியம்

Written by Administrator

 – மிப்றாஹ் முஸ்தபா (நளீமி)

குடும்பம்… அது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் என அனைவருக்கும் மத்தியில் ஈடற்ற அன்பும் கலப்பற்ற பாசமும் ஒட்டி உறவாடும் ஓர் அற்புத உலகம். அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்:

“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் எல்லோரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள் பெண்கள் என பலரை (இப்பூமி யில்) பரப்பினான்.” (அன்னிஸா:1)

அந்தவகையில் மனித இனத்தின் பெருக்கம் ஆணிலிருந்து தொடங்கி, அது குடும்பமாக மாறி, அங்கிருந்து சமூகம் தொடங்குவதாக மேலுள்ள வசனம் சுட்டிக் காட்டுகின்றது. உண்மையிலேயே குடும்பம் என்பது மனித சமூக இயக்கத்தின் அடிப்படையாகவும் பிரபஞ்ச நியதியாகவும் திகழ்கிறது. இதனால்தான் அல்குர்ஆன் ஸுன்னா போன்ற அடிப்படை மூலாதாரங்கள் ஏனைய விடயங்களைப் பேசாத அளவுக்கு குடும்ப ஒழுங்கு பற்றி அடிப்படை முதல் கிளைச் சட்டங்கள் வரை விரிவாகப் பேசியிருக்கின்றன.

இன்று துரதிஷ்டவசமாக குடும்பக் கட்டுக்கோப்பைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கும் சிந்தனைகள் தோற்றம் பெற்றதன் விளைவாக விவாகரத்துக்களும், பாலியல் குற்றங்களும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்றன. இதனால் மனித சமூகம் தமது விழுமியங்களை இழந்து, நிம்மதியைத் தொலைத்து ஒரு விடிவை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றது. இஸ்லாம் காட்டித் தந்துள்ள குடும்ப வாழ்வே மனித சமூகம் இழந்து விட்ட விழுமியங்களையும் தொலைத்து விட்ட நிம்மதியையும் பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

குடும்பம் – ஓர் அறிமுகம்

உஸ்ரா என்பது அரபு மொழியில் குடும்பத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் படும் நவீன காலச் சொல்லாகும். உஸ்ரா என்ற சொல்லுக்கான கருத்தை முஃஜம் அல் வஸீத் என்ற அறபு அகராதி இவ்வாறு குறிப்பிடுகிறது. “உஸ்ரா என்பது ஒருவ னுடைய குல கோத்திரத்தினர் மற்றும் அவனைச் சூழ வாழ்வோரைக் குறிக்கும்”. உஸ்ரா என்ற பதம் அஸ்ர் என்ற அடியில் இருந்து பிறக்கின்றது. அஸ்ர் என்றால் பலம் எனப் பொருள்படும். ஒருவன் தனது குல கோத்திரத்தாரைக் கொண்டு பலம் பெறுவதால் உஸ்ரா என்ற சொல் குடும்பத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஒக்ஸ்போர்ட் ஆங்கில-தமிழ் அகராதி (Oxford) குடும்பம் என்ற பதத்தை பின் வருமாறு வரைவிலக் கணப்படுத்துகின் றது. “ஒருவரோடு ஒருவர் உறவுடைய ஒரு குழு.அதாவது குடும்பம் என்ற சொல் சில சமயங்களில் பெற்றோர் மற்றும் குழந்தைகளைக் குறிப்பதற்காகவும்; (Nuclear Family), சில வேளைகளில் பெற்றோரின் பெற்றோர், பெற்றோரின் உடன்பிறப்புக்கள் போன்ற ஏனைய உறவினர்களைக் குறிப்பதற்காகவும் (Extended Family) பயன்படுத்தப்படுகின்றது.

குடும்பம் பற்றிய வரைவிலக்கணங்கள் அகராதிகளில் மேற்படி அமைந்தாலும் குடும்பம் தொடர்பாக சமூகவியலாளர்கள் வரலாறு நெடுகிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். இவை பெரும்பாலும் சடவாதக் கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது கருத்துக்களில் இருந்து குடும்பம் தொடர்பாக பின்வரும் வரைவிலக்கணத்தினை சுருக்கமாக முன்வைக்கலாம்.

“குடும்பம் என்பது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் இடம்பெறும் திருமணத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு சமூக நிறுவனம்.அது சமூகத்தினை சீரான இயக்கத்தில் கொண்டு செல்வதில் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றது. ஒரு சமூகத்தின் தனித்துவமும், இலக்குகளும் இந்த நிறுவனத்தின் மூலமே பாதுகாக்கப் படும்”.

குடும்பம் தொடர்பான இஸ்லாமிய நிலைப்பாடு மேலுள்ள கருத்துக்களை விட வித்தியாசமானது. இஸ்லாம் சிறந்த சமூக உருவாக்கத்தை இலட்சியமாகக் கொண்ட மார்க்கம் என்ற வகையில் தனி மனித உருவாக்கத்தில் கூடிய கரிசனை செலுத்துகின் றது. மனிதன் பலவீனமான அமைப்பில் படைக்கப்பட்டுள்ளதால் அவனால் இந்த உலகில் தனித்து நின்று சாதிப்பது சிரம சாத்தியமானது. எனவேதான் இஸ்லாம் குடும்பமாக சேர்ந்து வாழுமாறு மனிதர்களை ஆர்வமூட்டுகின்றது.

குடும்பம் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வரையறைகளை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது குடும்பமானது பின்வரும் 3 வகையான அமைப்பிலேயே அமைய வேண்டும் என்றும், இது அல்லாத வேறு எந்த விதமான நிலையிலும் மனித உறவுகள் குடும்பமாக உருவாவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

இரத்தக் கலப்பின் மூலம் ஏற்படும் உறவு

திருமணத் தொடர்பின் மூலம் ஏற்படும் உறவு

பால்குடியின் மூலம் ஏற்படும் உறவு

அந்தவகையில் இஸ்லாத்தின் பார்வையில் குடும்பம் என்பது, இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த திருமணத்தின் மூலம் உருவாக்கப்படும் ஒரு சமூக நிறுவனம். அது இஸ்லாமிய சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு மிகப்பிரதானமாக தனிநபர்களை இஸ்லாமிய அடிப்படையில் பயிற்றுவிப்பதன் மூலம் பங்களிப்புச் செய்யும் ஒரு மூல அலகாகத் தொழிற்படும்.

இஸ்லாத்தின் பார்வையில் குடும்ப வாழ்வின் முக்கியத்துவம்.

இஸ்லாம் ஓர் இயற்கையான, மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற மார்க்கம் என்றபடியால், அது மனித இன விருத்தி யில் இயற்கை வரம்பை மீறாமல் செயற் படும் நிறுவனமான குடும்பத்திற்கு அதி கூடிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குடும்பம் சார்ந்த மார்க்கம் (Family Oriented) என வர்ணிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய ஷரீஅத்தில் மூன்று பொது நோக்குகளில் மிக அடிப்படை நோக்கமாகிய ‘ழரூரிய்யாத்’தில் உள்ளடங்கும் ஐந்து விடயங்களில் பரம்பரையைப் பாதுகாத்துப் பேணலும் ஒன்றாகும். இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இஸ்லாம் குடும்பத்தைக் கருதுகின்றது.

குடும்பக் கட்டமைப்பைத் தகர்த்தெறியும் வாழ்க்கை அமைப்பான துறவறத்தை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இஸ்லாம் ஏனைய மதங்களைப் போல் வணக்கஸ்தலங்களோடு மாத்திரம் சுருங்கிக் கொண்ட மார்க்கமல்ல. மாற்றமாக அது மனித வாழ்வோடு சம்பந்தப்பட்ட அனைத்துப் பகுதிகளைப் பற்றியும் பேசுகின்ற, அவற்றுக்கான வழிகாட்டல்களை வழங்குகின்ற சம்பூரணமான வாழ்க்கை நெறியாகும். இதனால்தான் இஸ்லாம் மனித உணர்வுகளை மதிக்காது, அவற்றை நசுக்க முற்படவில்லை. மனிதர்களுக்கே உரித்தான இந்த இயல்பான உணர்வுகளை திருமணம் என்ற கேடயத்தைக் கொண்டு நெறிப்படுத்தி உள்ளது.

குடும்ப வாழ்வைத் தகர்த்தெறியும் துறவறம் குறித்து அல்குர்ஆன் தனது நிலைப்பாட்டை இவ்வாறு முன்வைக் கின்றது. “(உலகத்தின் எல்லா இன்பங் களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை” (அல் ஹதீத்-27).

எனவே ஆன்மீக விமோசனம் எனக் கூறிக்கொண்டு அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை நியதிகளைப் புறக்கணித்து வாழ் வதை இஸ்லாம் தடை செய்வதோடு, குடும்ப வாழ்வின் பக்கம் மனிதர்களைத் தூண்டுகின்றது. இதனால்தான் உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரழி) இவர்கள் துறவறம் பூணுவதற்கு நபியவர்களிடம் அனுமதி கோரிய போது அதனை நபி(ஸல்) அவர் கள் நிராகரித்தார்கள். (புகாரி)

குடும்ப வாழ்வின் மூலம் மனித இனம் பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் அல்லாஹ்விடம் வெறுக்கத்தக்க பாவமாகக் கருதப்படும் விபச்சாரத்தின் பக்கம் செல்லவிடாது, மனித இனத்தை கௌரவமாக வாழ வைப்பதில் குடும்ப வாழ்வு பிரதான இடத்தை வகிக்கின்றது.

மேலும் குடும்பமாக சேர்ந்து வாழ்வது மனித உள்ளங்களில் சந்தோஷத்தையும், நிம்மதியையும் விதைத்து விடுகின்றது. அத்தோடு, குடும்ப வாழ்வின் மூலம் மனக் கட்டுப்பாடு, சந்ததி விருத்தி, பாதுகாப்பு, கௌரவம், ஆரோக்கியம் போன்ற இன்னோரன்ன பயன்களை மனித இனம் அடைந்து கொள்கின்றது.

நவீன காலத்தில் குடும்ப நிறுவனங்கள் சிதைந்து செல்வதற்கான காரணங்களும், விளைவுகளும்

குடும்ப உருவாக்கத்தில் அல்லாஹுதஆலா வைத்துள்ள இயற்கை நியதி ஆணும், பெண்ணும் சட்டபூர்வமாக இணைந்து கொள்வதாகும். இந்நியதிக்கு மாற்றமாக மனித சமூகம் செயற்பட முற்பட்டால் அது சமூகத்தில் பாரிய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும்.

இன்றைய நவீன யுகத்தில் குடும்பம் என்ற சமூகத்தின் அடித்தளத்தை சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் சிந்தனைகள் வேகமாக செல்வாக்குப் பெற்று வருவதனால் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பை பாதுகாக்க வேண்டிய தேவை அதிகமாக உணரப்பட்டது. இதனால் உலக சுகாதார அமைப்பு 1994ஆம் ஆண்டை சர்வதேச குடும்ப நல ஆண்டாக அறிவிப்புச் செய்ததுடன், ஒவ்வொரு வருடமும் மே 15ம் திகதியை சர்வதேச குடும்ப தினமாகப் பிரகடனப்படுத்தி உள்ளது.

இன்று குடும்பக் கட்டமைப்பானது குறிப்பாக இரண்டு வகைகளில் காணப்படுகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகளில் குடும்ப வாழ்வைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. காலையில் திரு மணம், மாலையில் விவாகரத்து என்பதெல்லாம் இந்நாட்டு மக்களிடம் சகஜமாகிப் போயிருக்கின்றன. இந்தியா, சீனா போன்ற கீழைத்தேய நாடுகளில் குடும்பக் கட்டமைப்பு இதற்கு முற்றிலும் மாற்றமாக அமைந்துள்ளது. இந்நாடுகளில் திருமணம் என்பது தெய்வீக பந்தமாகக் கருதப்படுகின்றது.

கணவனும், மனைவியும் இறுதிவரை ஒன்றாகவே வாழ வேண்டும், கணவன் மரணமடைந்து விட்டால் மனைவி உலக சுகபோகங்களை விட்டும் ஒதுங்கி இருக்க வேண்டும், உடன் கட்டை ஏற வேண்டும் போன்ற மோட்டுத்தனமான நம்பிக்கைகள் இவர்களிடம் காணப்படுகின்றன. இவ்வாறு இந்நாடுகளில் குடும்ப அமைப்பானது நெகிழ்வுத் தன்மையாக அல்லது இறுக்கமானதாக அமையப் பெற்றுள்ளமையானது குடும்ப வாழ்வு சீரழிந்து செல்வதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது.

எது எவ்வாறிருப்பினும், இன்று குடும்பக் கட்டுக்கோப்பு ஆட்டம் கண்டிருப்பதற்கான பிரதான காரணிகளாக மூன்று தரப்பினர்களை அடையாளம் காண முடியும்.

1) கணவன், மனைவி: குடும்ப நிறுவனத்தை இஸ்லாம் புனிதமாக நோக்குகின்றது. அதனைப் பாதுகாப்பதில் அதீத கவனம் செலுத்துகின்றது. அந்தவகையில், குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் கணவன், மனைவி ஆகியோரின் செயற் பாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆனால் இன்று கணவன், மனைவி ஆகி யோரிடையே புரிந்துணர்வின்மை, விட்டுக் கொடுப்பின்மை, கலந்துரையாடலின்மை, சந்தேகப் பார்வை போன்றன ஊடுருவிக் காணப்படுவதானது குடும்ப அமைப்பை அடியோடு அழிக்குமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காதி நீதிமன்றங்களுக்கு வருகின்ற அதிகமான வழக்குகள் சிறுசிறு பிரச்சினைகளை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றன இவ்வாறான குடும்ப நிறுவனங்களின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், ஒரு கணவன் எவ்வாறு இயங்க வேண்டும், ஒரு மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற அடிப்படை அறிவு கூட இவர்களிடையே காணப்படாமைதான் என்பது நிதர்சனம்.

2) பிள்ளைகள்: குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெற்றோர்கள் 80வீதமான பங்கை வகிக்கின்றனர். இவ் வணிக உலகில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்களுக்கு குடும்பத்துடன் இருந்து மூவேளை சாப்பிடவே நேரமில்லாதிருக்கின்றது. இவ்வாறு பெற்றோரின் வழிகாட்டலின்றி விடப்படும் குழந்தைகளுக்கு ஊடகங்கள் வளர்ப்புப் பெற்றோராக மாறி இருக்கின்றன. இதனால் குழந்தைகள் சினிமா, நாடகங்கள், ஆபாசப் பாடல்கள் போன்றவற்றின் பக்கம் ஈர்க்கப்பட்டு வழி தவறிச் செல்லும் நிலை உருவாகி இருக்கின்றது. இதன் காரணமாக, குடும்ப வாழ்வின் மூலம் இஸ்லாம் எதிர்பார்க்கின்ற ஆரோக்கியமான பரம்பரை உருவாக்கம் தடைப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலையை இன்றைய சமூகம் எதிர்நோக்கியுள்ளது.

நல்ல பண்பாடுகளால் உரமூட்டப்பட வேண்டிய பிஞ்சு உள்ளங்கள் கவனிப் பாரற்று விடப்படுகின்றன. இதன் விளைவாக, குழந்தைகள் மோசமான நடத்தையுள்ள நண்பர்களோடு தொடர்பேற்படுத்திக் கொள்கிறார்கள். இப்படியான மோசமான தொடர்பு அவர்களை காதல், பாலியல் குற்றங்கள், போதை வஸ்த்துப் பாவனை போன்ற தவறான நடத்தைகளில் ஈடுபடச் செய்து, எதிர்கால வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகின்றது. இளைஞர்களின் இவ்வாறான நடத்தைகளினால் குடும்பக் கட்டுக்கோப்பு சீரழிவதோடு, ஒரு சமூகத்தின் இருப்பும் கூட ஐயத்துக் குள்ளாகின்றது.

3) சமூகம்: குடும்ப வாழ்வின் மிக முக்கிய நோக்கம் ஆரோக்கியமான, முன்மாதிரி மிக்க பரம்பரையை உருவாக்குவதாகும். குடும்பக் கட்டக்கோப்பைச் சீராக வைத்துக் கொள்வதில்தான் ஒரு சமூகத்தின் எதிர்காலம் தங்கி இருக்கின்றது. ஆனால் இன்று சமூகத்தில் நிலவக் கூடிய சில மோசமான சம்பிரதாயங்கள் குடும்ப வாழ்வைத் துண்டாடுமளவுக்கு பாரதூரமானவை களாக விளங்குகின்றன.

அவற்றில் மிகப் பிரதானமானது, ஒட்டு மொத்த பெண் இனத்திற்கே சாபக்கேடாக விளங்கும் வரதட்சனைக் கொடுமையாகும். இதன் காரணமாக, கருவிலேயும், பிறந்த பின்னரும் பெண் சிசுக்கள் கொல்லப்படும் ஜாஹிலிய்ய நாகரிகம் இன்றும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது. வரதட்சனை கொடுக்க வழியில்லாத பல ஏழைக்குமர்கள் முதிர் கன்னிகளாக மாறி மன அழுத்த நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் திருமண வாழ்வு வழங்கப்படாததன் காரணமாக தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறான வழிகளைத் தேடிக்கொண்டுள்ளனர்.

திருமணமானதன் பின்னரும் கூட இந்த வரதட்சனைப் பிரச்சினையால் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்பது கசப்பான உண்மையாகும். இந்த     அசிங்கமான, கேவலமான சம்பிரதாயத்தை சமூகம் கண்டும் காணாதிருப்பது அல்லது மறைமுகமாக அங்கீகரிப்பதானது குடும்ப வாழ்வின் புனிதத்தையே இல்லாமலாக்கியுள்ளது. இவை தவிர சமூகத்தில் இன்று புரையோடிப்போயுள்ள பெண் விடுதலை தொடர்பான சிந்தனைகள். ஓரினச்சேர்க்கை என்பனவும் குடும்ப வாழ்வு சீரழிந்து செல்வதற்கான சமூகக் காரணிகளாகும்.

(தொடரும்)

About the author

Administrator

Leave a Comment