குடும்பம்-உளவியல்

ஆரோக்கியமான குடும்ப உருவாக்கத்தில் இஸ்லாத்தின் வகிபாகம்

Written by Administrator

 – மிப்றாஹ் முஸ்தபா (நளீமி) –

ஒவ்வொரு தனிமனிதனும் அங்கத்துவம்  வகிக்கும் சமூக உருவாக்கம் குடும்ப அமைப்பில் இருந்தே ஆரம்பமாகின்றது. ஒரு சமூகம் எழுச்சி பெறுவதும், வீழச்சி அடைவதும் அந்தந்த சமூகங்களின் குடும்ப நிறுவனங்களது சீரான இயக்கத்திலேயே தங்கியிருக்கின்றது. குடும்பக் கட்டமைப்பு சீரழிந்து காணப்படும் இந் நவீன யுகத்தில், இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழியில் குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்வதே நிம்மதியான வாழ்வுக்கும், சிறப்பான சமூக உருவாக்கத்திற்கும் வழி சமைப்பதாய் அமையும்.

இஸ்லாம் தனிமனிதர்களைப் பயிற்று வித்து, அவர்களைக் கொண்ட குடும்பங் களை உருவாக்கி, இறுதியில் பண்பாடு மிக்க சமுதாயத்தைத் தோற்றுவிப்பதை இலட்சியமாகக் கொண்ட மார்க்கம். இஸ் லாமிய இலக்குகளில் குடும்ப உருவாக்கம் முதன்மை இடத்தைப் பெறுகின்றது.

ஒரு சமூகத்தின் வித்தாக அமைவது குடும்பம். வித்து ஆரோக்கியமாக அமைந்தால்தான் விருட்சமும் ஆரோக்கியமாக அமையும். சீரான குடும்பங்கள் உருவாகும் போதே சிறப்பான சமூகம் தோன்ற முடியும். இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் அழகிய வழிகாட்டல் களை வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், மனித இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தும் குடும்ப வாழ்வுக்கும் சீரிய நெறிகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.

  • திருமணம்:

திருமணம் என்பது குடும்பமாக வாழ்வதற்கு ஷரீஅத் விதித்துள்ள நிபந்தனைகளைப் பேணி ஒர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் மேற் கொள்ளப்படும் உடன்படிக்கையாகும். இத் திருமண உடன்படிக்கையே குடும்ப வாழ்வின் நுழைவாயிலாக அமைகின்றது. மனிதர்களிடம் இயற்கையாகக் குடிகொண்டிருக்கும் பாலியல் உணர்வினை நெறிப் படுத்தும் கேடயமாக திருமணம் காணப் படுகின்றது. விபச்சாரத்தில் மூழ்கி சீரழிந்து போன ஜாஹிலிய்யக் கால குடும்ப அமைப்பை கௌரவமான நிலைக்குக் கொண்டு வந்தது இஸ்லாம் அங்கீகரித்துள்ள திருமண முறையே ஆகும்.எனவே, முஸ்லிமான ஆண், பெண் இருவரும் குடும்ப வாழ்வில் இணைந்திருப்பது ஒரு பொதுவான அடிப்படையாக இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய நிலைப்பாடாகும்.இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் இளைஞர்களை நோக்கி திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.

  • குடும்ப வாழ்வு தொடர்பான அழகிய உபதேசங்கள்:

இன்று சமூகத்தில் அவசர,அவசரமாக திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு முடித்து வைக்கப்படுவதனால் குடும்ப வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமைவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது ஓர் இபாதத் என்ற வகையில் நீண்ட, நிறைவான, நிம்மதியான குடும்ப வாழ்வு அமைவதற்கு திருமணத்திற்கு முன்னர் சில வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது.

கணவன், மனைவி தெரிவு, பெண் பார்த்தல், பொருத்தப்பாடு, திருமண பேச்சுவார்த்தை போன்ற இஸ்லாமிய வழி காட்டல்கள் குடும்பக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமு மில்லை. அவ்வாறே திருமணத்திற்குப் பின்னரான சீரான வாழ்வுக்கும் அல்குர் ஆன் சில ஆலோசனைகளைத் தந்துள்ளது. (அன்னிஸா-34,35).

  • பலதாரமணம்:

இஸ்லாம் மனித இயல்புகளோடு பொருந்திச் செல்லக் கூடிய வாழ்வியல் நெறியாக அமைந்திருப்பதனால் அதனது போதனைகள் தூரநோக்குடையவை. இயற்கையாகவே மனிதர்களிடம் அமையப் பெற்றிருக்கும் பாலியல் உணர்வானது அனைவரிடையேயும் ஒரே மாதிரியாகக் காணப்படாது. பாலியல் உணர்வு அள வானவன் ஒரு மனைவியோடு திருப்தி கொள்வான். பாலியல் உணர்வு அதிகமான வன் மாற்றான் மனைவியை நாடிச் செல் லும் நிலை உருவாகும். இது சமூகத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனைத் தவிர்ப்பதற்காக இஸ்லாம் சில வரையறைகளோடு அனுமதித்துள்ள ஒரு மாற்றுத் தீர்வே பலதாரமண முறையாகும். (அன்னிஸா-3).

இஸ்லாம் அனுமதித்துள்ள இம்முறை யானது குடும்ப அமைப்பைச் சீரழிக்கக் கூடிய விபச்சாரம், எயிட்ஸ், கருச்சிதைவு, சட்ட விரோதக் குழந்தைகளின் அதிகரிப்பு போன்ற அவலங்களில் இருந்து மனித இனத்தைப் பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த தீர்வாக விளங்குகின்றது.

  • தலாக்:

இஸ்லாம் குடும்ப வாழ்வின் மூலம் சில நோக்கங்களை அடையாளப்படுத்தியுள்ளது. “கல்லானாலும் கணவன், புல்லா னாலும் புருஷன்” என்ற தத்துவத்திற் கேற்ப குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தவில்லை. இஸ்லாம் எதிர்பார்க்கும் நோக்கத்தை அடையத் தவறும் குடும்ப அமைப்பு அல்லது ஒரு திருமணம் வெறுப்பு மிக்கதாகவும், விரக்தி மிக்கதாகவும் மாறும். இதனால் கணவன்-மனைவி ஆகி யோர் தவறான நடத்தைகளுக்கு செல் வதற்கு வழிசமைக்கும். இந்த மோசமான நிலைமையினைத் தவிர்த்து குடும்பக் கட்டுக்கோப்பைப் பாதுகாக்கின்ற ஒரு வழிமுறையாக இஸ்லாம் தலாக்கை அங்கீகரித்திருக்கின்றது. (அத்தலாக்-1).

  • முன்மாதிரி மிக்க நபிகளாரின் குடும்ப வாழ்வு:

 இஸ்லாமியப் போதனைளும், வழி காட்டல்களும் வெறும் கற்பனைச் சித்தாந் தங்கள் அல்ல. மாற்றமாக அவை நடை முறைக்குச் சாத்தியமான யதார்த்தபூர்வமான அம்சங்கள். அந்தவகையில் நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்வு அழகிய முன்மாதிரியாக முழு மனித சமூகத் திற்குமே காணப்படுகின்றது.

நபி(ஸல்) அவர்களது குடும்ப வாழ் விலே அன்பும், அமைதியும், நேர்மையும், விட்டுக்கொடுப்பும் என அனைத்து அம்   சங்களையும் காண முடியும். நபி(ஸல்)அவர்கள் தனது மனைவிமாருக்கு நேர் மையான கணவராகவும், குழந்தைகளுக்கு பாசம் மிக்க தந்தையாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். வீட்டு வேலைகளில் தனது மனைவிமாருக்கு உதவி ஒத்தாசைகள் புரிபவர்களாக நபிகளார் காணப்பட்டார்கள். சமூக, அரசியல்  விடயங்களில் மனைவிமாரிடத்தில் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அதுபோல மனைவிமார்களை இபாதத்துக்களின் பக்கம் ஆர்வமூட்டியிருக்கின்றார்கள். மேலும் தனது பேரக் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடியிருக்கின் றார்கள். இப்படியாக நபி(ஸல்) அவர்களது குடும்ப வாழ்வு சீரான குடும்ப வாழ்வுக்கு முன்மாதிரியாய் அமைந்திருக்கின்றது.

குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் கணவன், மனைவியின் வகிபாகம்

குடும்ப நிறுவனத்தின் இரு பெரும் சக் கரங்களாக கணவன், மனைவி ஆகியோர் செயற்படுகின்றனர்.  இவ்விரு சக்கரங்க ளும் சுழலும் போதுதான் குடும்ப நிறுவனம் தனது இலக்குகளை நோக்கி சரியான பாதையில் சுழலும். அந்த வகையில் குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் கண வன், மனைவி ஆகியோரது வகிபாகம் பிரதான இடத்தை வகிக்கின்றது. குடும்ப வாழ்வை செம்மையாக்கிக் கொள்வதற்கு கணவன், மனைவி ஆகியோருக்கிடையிலான பணிகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. இதனைப் பின்வரும் அமைப்பில் சுருக்கமாக நோக்க முடியும்.

  • குடும்பத்தை நிர்வாகம் செய்தல்:

இஸ்லாம் குடும்ப நிர்வாகத்தில் ஆணுக் குத் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது. “ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக் கூடிய வர்களாவர். ஏனெனில் அவர்களில் சிலரைக் காண சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும், (ஆண்களா கிய) அவர்கள் தங்கள் செல்வங்களில் இருந்து (பெண்களுக்காக) செலவு செய்வ தாலுமாகும்.” (அன்னிஸா-34).

குடும்பத் தலைவனாக விளங்கும் கண வன் தனது மனைவியோடு கலந்தாலோ    சனை செய்து குடும்ப வாழ்வை செம்மைப் படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் உபதேசிக்கின்றது. “மேலும் (யுத்தம், சமாதானம் முதலிய மற்ற)காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக” (ஆல இம்ரான்: 159).

குடும்ப நிர்வாகத்தின் தலைவர் என்ற வகையில், ஓர் ஆண் தனது மனைவியை அன்பாகவும், கண்ணியமான முறையிலும் நடத்த வேண்டும். அவ்வாறே ஒரு பெண் தனது கணவரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக கூறியுள்ளது.

“நல்லொழுக்கமுள்ள பெண்கள் (என் போர் அல்லாஹ்வுக்குப் பயந்து, தங்கள் கணவனுக்கு) பணிந்து நடப்பவர்கள் (கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய) மறைவானதை அல்லாஹ் பாதுகாக் கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள் பவர்கள்”(அன்னிஸா-34).

பெண் என்பவள் குடும்ப நிர்வாகத்தில் தனது கணவனுக்கு உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கி சிறப்பான குடும்ப வாழ்வுக்கு பக்க பலமாக இருக்க வேண் டும். இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

“எந்தப் பெண் தன் கணவர் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளை இட்டால் அவனுக் குக் கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விடயத்திலும், தனது பொருள் விடயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் கடைப்பிடிக்க மாட்டாளோ அத்தகையவளே அனைவரையும் விட மிகச் சிறந்தவளாவாள்.” (நஸாஈ).

எனவே குடும்ப நிர்வாகத்தில் கணவனும், மனைவியும் தங்களது கடமைகளையும், பொறுப்புக்களையும் உணர்ந்து நடக்கும் போது குடும்ப வாழ்வு எத்தகைய சிக்கல்களுமில்லாமல் மகிழ்ச்சியானதாக வும், நிம்மதியானதாகவும் அமையும் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை.

  • குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டைக் கண்காணித்தல்:

குடும்ப வாழ்வு சீராக அமைவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலை நல்ல முறையிலும், ஹலாலான முறையிலும் அமைந்திருக்க வேண்டும். அந்தவகையில் குடும்பத்திற்கு பொருளீட்டிச் செலவு செய்யும் பொறுப்பை இஸ்லாம் கணவனுக்கு வழங்கியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒரு உணவுக் கவளத்தை உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுவதும் நற்செயலில் ஒன்றாகும்” (புகாரி,முஸ்லிம்).

எவ்வாறு குடும்பத்துக்கு உழைத்துக் கொடுப்பது கணவனின் கடமையோ, அவ்வாறே கணவனின் வருமானத்திற்கேற்ப குடும்பச் செலவுகளை அமைத்துக் கொள் வது மனைவியின் கடமையாகும். அப்போதுதான் குடும்ப வாழ்வு சீரானதாக அமையும்.இதனை போராசிரியர் ஜோட் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“பெண்கள் தங்களது வீடுகளையும், குழந்தைகளையும் பராமரித்துக் கொள்வதில்தான் குடும்ப நிம்மதி நிறைந்திருக்கின்றது. இதனால் வாழ்க்கைத் தரத்தில் வசதிகள் குறைந்தாலும் கூட இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும்”.

  • ஆன்மீக ரீதியாகக் குடும்பத்தைப் பயிற்றுவித்தல்:

குடும்ப வாழ்வின் மிகப் பிரதான இலக்கு முன்மாதிரிமிக்க பரம்பரையை உருவாக்குவதாகும். எனவே குடும்ப வாழ் வின் சீரான இயக்கத்திற்கு கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பரம் தமது பலங்களையும், பலவீனங்களையும் இணங்கண்டு வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். தனது குடும்பத்தை ஆன்மீக ரீதியாக பயிற்றுவிப்பது கணவனின் பொறுப்பாகும். இதனை அல்குர் ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங் கள்” (அத்தஹ்ரீம்-6).

அல்லாஹ்வின் மார்க்கம் பூமியில் நிலைநாட்டப்படுவதற்காக என்ற தூய நோக்கத்தின் அடிப்படையில் செயற்படும் போதே குடும்பங்கள் வெற்றிகரமாக அமையும்.

திருமணமானதும் கணவன், மனைவி ஆகியோரின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தைப் பேறாகும். திருமணமும் அதைத் தொடர்ந்த குழந்தைப் பேறுமே குடும்பவியலையும், சமூகவியலையும் நிர்மாணிக்கின்றது. குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் பிள்ளைகளின் வகிபாகமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இன்று இளைஞர்கள் காதல் விவகாரம், போதைவஸ்துப் பாவனை, சினிமா மோகம் போன்ற வலைகளில் வீழ்ந்துள்ளதால் குடும்ப வாழ்வு சீரழிந்து போயுள்ளது. எனவே தமது பிள்ளைகளை ஒழுங்கான முறையில் வளர்த்து ஆளாக்குவது பெற்றோர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

குடும்பக் கட்டுக்கோப்பைப் பேணுவதில் சமூகத்தின் வகிபாகம்

ஒரு சமூகத்தின் கொள்கை, கலாச்சாரம், நடத்தைகள் என்பவற்றை அடுத்தடுத்த சந்ததியினருக்கு நகர்த்துகின்ற முதல் நிறுவனம் குடும்பமாகும். அந்தவகையில், குடும்பக் கட்டுக்கோப்பை சீரான முறையில் பேணுவதற்கு சமூகத்தின் வகிபாகம் அவசியமாகும். இன்று குடும்பம் சார்ந்த பிரச்சினைகளையும், மூட நம்பிக்கைகளையும் சமூகம் கண்டும், காணாமல் இருக்கின்றது. இதன் விளைவாக, எதிர்காலப் பரம்பரை பாதிக்கப்படுவதானது சமூகத்துக்கே கேடாக அமையும்.

எனவே குடும்ப நலன் சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை சமூக நிறுவனங்கள் நடாத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அந்தவகையில், குழந்தை வளர்ப்பில் தந்தை பங்கெடுக்க வேண்டும் என்ற சிந்தனை சமூக மட்டத்தில் பாரியளவு விளக்கப்பட வேண்டும்.

அது போல வறுமை காரணமாக பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதனால் பல குடும்பங்கள் சீரழிந்து செல்கின்றன. பெண்கள் வெளிநாடு செல்வதற்கான சூழலை உருவாக்கிய சமூகம் பொறுப்பை உணர வேண்டும். எனவே வறுமைக் கோட்டின் கீழ் வாடும் குடும்பங்களை இணங்கண்டு அவற்றின் பொருளாதார நிலைமைகளை ஸ்திரப்படுத்த சமூக நிறுவனங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், எதிர்காலப் பரம்பனையினரின் ஆளுமை விருத்திக்கு பயிற்சி அளிக்கக் கூடிய வகையில் சிறுவர் நூலகங்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் போன்றவற்றை உருவாக்கு வதில் சமூகம் முனைப்புக் காட்ட வேண் டும். இதுதவிர, இஸ்லாமிய ஊடகங்களை உருவாக்குவதன் மூலம் அந்நியக் கலாச்சாரத் தாக்கங்களில் இருந்து இளைஞர்களை விடுவிக்க சமூகம் முன்வர வேண்டும்.

இவ்வாறான விடயங்களில் சமூகம் கரிசனையோடு செயற்படும் போது குடும்பக் கட்டுக்கோப்பு சீரான முறையில் இயங்கி, ஆரோக்கியமான பரம்பரை உருவாகும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

மிகச் சுருக்கமாக கூறப்போனால், ஒவ்வொரு தனிமனிதனும் அங்கத்துவம் வகிக் கும் சமூக உருவாக்கம் குடும்ப அமைப் பில் இருந்தே ஆரம்பமாகின்றது. ஒரு சமூகம் எழுச்சி பெறுவதும், வீழச்சி அடைவதும் அந்தந்த சமூகங்களின் குடும்ப நிறுவனங்களது சீரான இயக்கத்திலேயே தங்கி இருக்கின்றது. இதன் காரணமாகத் தான்; குடும்ப ஒழுங்கு பற்றி அல்குர்ஆனும் ஸுன்னாவும் மிகவும் விரிவாகப் பேசியிருக்கின்றன.

எது எவ்வாறிருப்பினும் குடும்பக் கட்டமைப்பு சீரழிந்து காணப்படும் இந் நவீன யுகத்தில், இஸ்லாம் காட்டித் தந் துள்ள வழியில் குடும்ப வாழ்வை அமைத்துக் கொள்வதே நிம்மதியான வாழ்வுக்கும், சிறப்பான சமூக உருவாக்கத்திற்கும் வழி  சமைப்பதாய் அமையும்.

About the author

Administrator

Leave a Comment