இலக்கியம் கலை சிறப்புக்கட்டுரைகள்

தேவை : வலி தெரியாமல் உழைக்கும் அலிகள்

Written by Administrator
 – எம்.எப்.முஹம்மத் –

எமது காலப்பிரிவில் சமூக மாற்றத்தையும் அரசியல் மாற்றத்தையும் மிகச் சிறந்த முறையில் அடையாளப்படுத்திய பாத்திரம் மொஹமட் அலி தான். (கறுப்பின மக்களுக்காக தோன்றிய) மாட்டின் லூதர் கிங்கை விடவும் அமெரிக்க மக்களிடையே இணைப்பினை ஏற்படுத்துவதற்கு அலியினால் முடிந்தது. அண்மையில் காலஞ் சென்ற உலக அதிபாரக் குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலி பற்றி அவரது விளையாட்டு உலகில் நீண்ட காலம் பயிற்றுவிப்பாளராக இருந்த பொப் ஏரம் கூறிய வார்த்தைகள் இவை.

எத்தனையோ விளையாட்டு வீரர்கள் தமது துறைகளில் சாதனை படைத்துவிட்டு மறைந்து சென்றாலும், அலியின் மரணம் மறக்க முடியாமல் போவதற்குக் காரணம் தனது பேரையும் புகழையும் மனித குலத்தின் விடிவுக்காகப் பயன்படுத்தியமைதான். இருட்டு வர்ணத்தில் படைக்கப்பட்டதற்காக உலகில் உயர்ந்த ஜாதியான மனித ஜாதியின் வாழ்க்கையை ஏன் இன்னொரு சாரார் இருட்டாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அவரது கேள்வி. இதற்கு விடிவு தேடியது தான் அவரது போராட்டம்.

ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவுக்காக முஹம்மத் அலி தங்கப்பதக்கம் வென்றார். சதாவும் அதனைத் தனது தோளிலே பெருமையுடன் அணிந்து கொள்வார், நாட்டுக்குத் தன்னால் ஈட்டிக் கொடுக்க முடியுமான பெருமையையும் சேர்த்து. பதக்கத்தை அணிந்து கொண்டு ஒரு தேநீர் விடுதியில் கோப்பியும் ஹொட்’dடோக்கும் கேட்ட அலிக்கு, “கறுப்பர்களுக்கு இங்கு உணவு கிடையாது” என்று பதில் அளிக்கப்பட்டது. இங்கு தான் அலி வெகுவாகப் பாதிக்கப்பட்டார். அமெரிக்காவுக்கு என தான் ஈட்டிய தங்கப் பதக்கத்தை ஒஹியோ நதியில் வீசி எறிந்தார். தன்னைப் போல எந்தக் கறுப்பரும் பாதிக்கப்படக் கூடாது என போராட்டத்தில் இறங்கினார்.

முஹம்மத் அலி கஷியஸ் கிளே ஆக இருந்த காலங்களில் அடிக்கடி தனது தாயாரிடம் வினவுவார். இயேசு ஏன் வெண்ணிறத் தோல்களும் நீல நிறக் கண்களுமாக இருக்கிறார்?  கறுப்பர்களே இருக்கின்ற ஆபிரிக்கக் காடுகளின் ராஜாவான டார்ஸன் ஏன் வெள்ளையராகக் காட்டப்படுகிறார்? விடை காண முடியாத இந்தக் கேள்விகளுக்கு, இஸ்லாத்தைத் தழுவிய கறுப்பின விடுதலை வீரர் மல்கம் எக்ஸின் நேசன் ஒப் இஸ்லாம் நிறுவனத்தில் விடை கிடைக்கிறது. நிறங்களுக்கு அப்பாற்பட்ட அல்லாஹுத் ஆலாவை கடவுளாக ஏற்று தனது போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்குகிறார்.

“முஹம்மத் அலி” ஆனதன் பின்னரும் இனவெறி பிடித்த சில போட்டியாளர்கள் கஷியஸ் கிளே என்ற பெயரிலேயே அலியை அழைத்தனர். இதற்கான எதிர்ப்பை அவர் தனது போட்டிகளிலேயே வெளியிட்டார். ”அங்கள் டொம். (தனது எதிராளியை அலி இப்படித் தான் அழைப்பார்) எனது பெயரைச் சொல் என்று கூறி இரத்தம் வரும் வரை அவர்களை ஆவேசமாகக் குத்தித் தொலைப்பார். கஷியஸ் கிளே என்பது அடிமைத்தனமான பெயர். அடிமை யுகத்தில் எஜமானர்களே அடிமைகளுக்கு, தமக்குப் பிடித்த பெயர்களை வைத்தார்கள். நான் இப்போது சுதந்திரவான். அடிமைப் பெயரிலிருந்து விடுபடுவதற்கு இனி என்னால் முடியும் என அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

எதிராளி மீதான அலியின் கோபம் ஆடுகளத்துக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போட்டியின் பின்னர் தன்னிடம் தோற்றவர்களுடன் தோழமையுடன் பழகினார். தோற்கடிக்க முடியாதவர்கள் என யாருமே என் வாழ்க்கையில் இருந்ததில்லை. இதனால் ஆடுகளத்தில் நான் மூர்க்கமாகவே நடந்து கொள்வேன். அதற்கு வெளியில் நடந்து முடிந்த போட்டியைப் பற்றி நான் கதைத்ததில்லை. ஏனென்றால் நான் குத்தியிருப்பது எனது ஒரு நண்பனுக்குத்தான் என்ற உணர்வு என்னில் மேலிடும். இன்றும் கூட எனது சிறந்த நண்பர்கள் என்னிடம் தோற்றவர்கள்தான் என்கிறார் முஹம்மத் அலி. இஸ்லாமியர் என்ற வட்டத்தைத் தாண்டி உலகின் ஏராளமானவர்கள் அவரது நட்பு வட்டத்தில் இணைந்திருந்தமைக்கு அவரது இந்த மனிதாபிமானம் தான் காரணம்.

இந்த மனிதாபிமானம்தான் அவரை மனிதாபிமானத்தின் தாயகமான இஸ்லாத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ஒரு குத்துச் சண்டை வீரன் என்பதைத் தாண்டி, நான் சத்தியத்தின் மனிதன். இஸ்லாம் பயங்கரவாதிகளுடன் இணைத்துப் பேசப்படுகிறது. பரிஸிலும் பர்னன்டிலோவிலும் அல்லது உலகில் எந்த மூலைமுடுக்கிலும் அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு இஸ்லாம் பொறுப்பல்ல. இஸ்லாம் என்பது அமைதி. அது படுகொலைகளுக்கு எதிரானது. பயங்கரவாதத்துக்கு எதிரானது. இஸ்லாத்தின் பெயரால் சிலரால் பின்பற்றப்படும் பயங்கரவாதம் இஸ்லாத்துக்கு எதிரானது. இஸ்லாம் பயங்கரவாதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி  இருந்தால் நான்  இஸ்லாமியனாக மாறியிருக்க மாட்டேன் என்று முஹம்மத் அலி கூறிய வார்த்தைகள் அமெரிக்கர்களின் இஸ்லாம் பற்றிய பார்வையை மீள்பரிசீலனை செய்ய வைத்தன.

1970 களில் அமெரிக்கா வியட்நாம் யுத்தத்தில் மூக்கை நுழைத்தது. வடக்கு வியட்நாமின் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராகப் போராடிய மேற்கு சார்பு தென் வியட்நாமியர்களுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் களமிறங்கி பல வருடங்களாகப் போராட்டம் நடத்தின. போராட்டம் நீண்டு கொண்டே சென்றதால் மேலதிக படையினர் தேவைப்பட்டனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இராணுவ சேவையில் சேர வேண்டும் என விதியாக்கப்பட்டது. அப்போது உலக அதிபார குத்துச் சண்டை விருதை வென்றிருந்த முஹம்மத் அலியும் வியட்நாமிய யுத்தத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டார். அலி அதனை மறுத்தார்.

வடக்கு வியட்நாமின் வியட்கொங் படையினருடன் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. அடுத்தவர்களின் பிரச்சினைக்காக நாங்கள் ஏன் யுத்தம் செய்ய வேண்டும்? அவர்கள் என்னை இராணுவச் சீருடையணிந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று எங்களுக்கு எந்த அநியாயமும் இழைக்காத அங்குள்ள (வியட்நாமிலுள்ள) அப்பாவி மக்களை கொன்றொழிக்கச் சொல்கிறார்கள். நான் ஏன் அவர்களை அழிக்க வேண்டும்? லூயிஸ்வில்லில் (அவரது ஊர்) வாழும் கறுப்பின மக்கள் எந்தவித மனித உரிமைகளும் இன்றி நடத்தப்படும் பொழுது, அந்த வெள்ளையர்களுக்கு எதிராகவல்லவா நாங்கள் போராட வேண்டும்? என்னுடைய மதத்தில் அப்பாவிகளைக் கொல்வதற்கு அனுமதி இல்லை என்று முஹம்மத் அலி தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். (இந்த இறுதி வாசகங்களுக்காக இஸ்லாம் முஹம்மத் அலிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என ஒரு சிங்களப் பத்திரிகையின் கட்டுரை கருத்து வெளியிட்டிருந்தது.)

தனது நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் ஹூஸ்டன் நகரின் பெடரல் நீதிமன்றத்தின் முன்னால் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் சேர்ந்து அமெரிக்காவே, வியட்நாமைத் தாக்காதே என்று கோஷமெழுப்பினார் முஹம்மத் அலி. தனது சமூகத்துக்கு அநியாயம் நடக்கையில் அரசுக்கு எதிராகப் பேசினால் தனது பதவியையும் அரசியல் இலாபங்களையும் இழக்க நேருமோ என இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளின் பாணியில் அவர் யோசிக்கவில்லை. தைரியமாக, தனது சமூகத்துக்காக உண்மையாகக் குரல் கொடுத்தார். அவரது பதக்கங்கள் பறிக்கப்பட்டன. அதுவரை உலகச் சம்பியனாக அவரைப் போற்றிய ஊடகங்கள் எல்லாம், தேசத்துரோகி, கம்யூனிஸவாதி, வெளிநாட்டு ஏஜன்ட், நாட்டைக் காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் அவரைத் தூற்றத் தொடங்கின. 24 வயது முதல் 29 வரையான அவரது இளமைக் காலத்தின் பொன்னான நாட்கள் அரசாங்கத்தினால் சூறையாடப்பட்டது. ஐந்து வருடங் கள் அவருக்கு ஆட்டத் தடை விதிக்கப்பட்டது.

அலி போராட்டத்தை கைவிடவில்லை. நீதிமன்ற வாசல்களுக்கெல்லாம் ஏறினார். பலவருட இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் 1971 இல் அலி குற்றமற்றவராக தீர்ப்பு வழங்கப்படுகிறார். இடைப்பட்ட காலங்களில் அலி நடத்திய போராட்டத்தில் இன, நிற பேதமின்றி நீதியை விரும்பும் பலரும் சேர்ந்து கொள்கிறார்கள். 1970 ஆகும் பொழுது அமெரிக்காவில் யுத்த எதிர்ப்பு மனப்பாங்கு வெகுவாக வளரும் அளவுக்கு இந்தப் போராட்டம் தாக்கம் செலுத்தியிருந்தது. இது தொடர்பில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு நெருக்கமான ஆலோசகரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான அல்ஷாப்டன் கூறுகையில், 1960 களின் நடுப்பகுதியில் முஹம்மத் அலி உலக அதிபார குத்துச் சண்டை வீரராக உச்சியில் இருந்தார். அப்போது அவருக்கு வயது 23. தொடர்ந்தும் போட்டிகளில் நிலைத்திருந்து பணம் ஈட்டவும், வெற்றிகளை அதிகரிக்கவும் பதக்கங்களைப் பெறவும் அவருக்கு இயலுமாக இருந்தது. ஆனால் இவை அனைத்தையும்விட அவருக்கு அவரது கொள்கை முக்கியமானதாக இருந்தது.  அவரது இந்த நிலைப்பாடு தனிநபரது நிலைப்பாடு என்ற கட்டத்தைத் தாண்டி, அமெரிக்க மக்களின் நிலைப்பாடாக மாறியது. அலியின் தைரியமான, உறுதியான இந்த நிலைப்பாடுதான் 1970 களில் அமெரிக்க மக்களிடையே யுத்த எதிர்ப்பு மனோபாவத்தை வளர்த்தது என்கிறார்.

தமது சமூகத்தின் விடிவுக்காக சாத்வீகமாகப் போராடுபவர்களுக்கு முஹம்மத் அலியிடம் நிறையப் பாடங்கள் இருக்கின்றன. அவர் கலந்து கொண்ட போட்டிகளில் அவர் எதிலுமே நொக்அவுட் ஆனதில்லை. அதேபோல அவரது கறுப்பின சமூகம், அவர் ஏற்றிருந்த மார்க்கம், மனிதநேயம் போன்றவற்றுக்கான அவரது போராட்டமும் தோல்வியடையவில்லை. அவரது மரணத்துக்கு முன்னரே அவரது இனத்தைச் சேர்ந்த ஒருவரை அமெரிக்க மக்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக்கும் அளவுக்கு அவரது போராட்டம் வெற்றியடைந்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக பராக் ஹுஸைன் ஒபாமா பேசும் அளவுக்கு இந்த வெற்றி வளர்ந்திருக்கிறது.

அமெரிக்க முஸ்லிம்களை குறிவைக்க வேண்டாம். அமெரிக்காவைப் பாதுகாக்கின்ற பாதுகாப்பு வீரர்களாகவும், நாட்டுக்குப் பெருமை தேடித்தந்த விளையாட்டு வீரர்களாகவும் அமெரிக்க முஸ்லிம் சகோதரர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் என ஒபாமாவை மக்களை நோக்கிப் பேசச் செய்யும் அளவுக்கு இந்தப் போராட்டம் இடம்பிடித்திருக்கிறது. ட்ரம்ப் போன்ற இனவாதிகளுக்கு இதன் மூலம்  சாட்டையடி விழுந்திருக்கிறது.

நலிந்துபோயுள்ள இலங்கைச் சமூகத்துக்கும் சுய இலாபத்தைக் கருத்தில் கொள்ளாது மனிதகுலத்தின் விடிவுக்காக போராடுகின்ற துணிச்சலான முஹம்மத் அலிகள் நிறையவே தேவைப்படுகிறார்கள்.

About the author

Administrator

Leave a Comment