கலை சமூகம் சிறப்புக்கட்டுரைகள்

சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்த ஆளுமை மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் 

வை.எம்.எம்.ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் செயலாளரும், பிரபல சமூக சேவையாளருமான அஷ்ரப் ஹுஸைன் தனது 72 ஆவது வயதில் கடந்த சனிக் கிழமை (16) காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அன்று மாலை 7 மணியளவில் மாளிகாவத்தை மையவாடி யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச். முஹம்மதின் மைத்துனரும் ஆவார். கொழும்பு ஜனாஸா நலன்புரிச்    சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர், கொழும்பு லயன்ஸ் கழக வடக்குத் தலைவர், கொழும்பு மத்திய வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு அங்கத்தவர் என பல்வேறு அமைப்புகளிலும் இணைந்து சமூகப் பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள், கல்விமான்கள், உலமாக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

அஷ்ரப் ஹுஸைன் ஒரு தனி ஆளுமை கொண்ட மாமனிதராகவே வாழ்ந்தார். பெருமை, கர்வம், மமதை போன்ற எண்ணமின்றி அரசியலில் உட்புக வேண்டுமென்ற சிந்தனையின்றி பட்டம் பதவிகளை அடைந்துகொள்ள வேண்டுமென்ற நாட்டமின்றி இன, மத வேறுபாடின்றி மக்கள் பணி செய்த ஒருவரே அவர்.

அவர் எம்மிடையே வாழும் போதும் ஆரவாரம் இன்றி அமைதியாக, பணிவாக இருந்து சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் தனக்காக எதையும் சேமித்து வைக்காமல் இறுதி மூச்சு வரை இஸ்லாமிய ஷரீஆ வழியில் பொருளாதாரத்தை பங்கிட்டவர். அவர் நோய்வாய்ப்படுவதற்கு முன் புனித மக்காவுக்குச் சென்று உம்றா கடமையை நிறைவேற்றிவிட்டு வந்தவர்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் சிறு வயது முதல் மாளிகாவத்தையில் வாழ்ந்த மர்ஹூம் மௌலவி நிஸார் (குவ்வதி) யுடன் இணைந்து மக்கள் மத்தியில் இஸ்லாமிய வாழ்க்கை முறையை பரப்பு வதற்கு உறுதுணையாக சேவையாற்றியவர். முதலில் அவருடைய சமூகப் பணி அதுவாகவே இருந்தது.

பொது வாழ்க்கையில் மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய பொருளாதாரத்தி லிருந்தும், நண்பர்களின் உதவியுடனும் கொழும்பு வாழ் மக்களுக்கு மட்டுமன்றி, தேசிய ரீதியாகவும் தன்னலம் பாராது பணிபுரிந்தார். குறிப்பாக கிழக்கு மாகாணத்துடன் கூடிய தொடர்புடையவர்.

இவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் மாணவனாக கல்வி கற்கும் காலம் முதலே பொதுப் பணியில் கவரப்பட்டு ஏழைகளின் துயர் துடைக்கவும், வறுமையில் வாழ்பவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி புரிவதிலும் முன்னின்று உழைத்தவர். இவரின் தகப்பனார் மர்ஹூம் முஹம்மத் ஹுஸைன் பொருளாதாரத்தில் செல்வாக்கு மிக்கவர். இதனால்தான் இவரும் பள்ளிப் படிப்பை பாடசாலை மட்ட உயர் கல்வியுடன் நிறுத்திக் கொண்டு வர்த்தகராக மாறினார். கொழும்பு பழைய சோனகத் தெருவில் ‘பாச்சா – கம்பனி’ என்ற பெயரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் முழு நேரமும் பொதுப் பணியில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாகவிருந்தது.

கொழும்பிலும் ஏனைய அண்டிய பிரதேசங்களிலும் மற்றும் தூர இடங்களுக்கும் வைத்தியசாலைகளில் மரணித்த ஏழைகளின் ஜனாஸாக்களைக் கொண்டு செல்வதில் அக்குடும்பங்கள் கஷ்டப்படுவதை அறிந்து கொழும்பு ஜனாஸா நலன்புரிச் சங்கத்தை நிறுவி, அதன் மூலம் இலவச வாகன வசதி வாய்ப்பை ஏற்பாடு செய்தார். இதனால் மக்கள் வைத்தியசாலையிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மக்பறாவுக்கு ஜனாஸாக்களை எடுத்துச் செல்ல இலகுபடுத்தினார்.

அவர் வாழும் காலத்தை இன, மத பேதமின்றி மக்கள் வாழ்வுக்காகப் பயன்படுத்திய ஆளுமை கொண்ட மனிதர். கொழும்பு வடக்கு லயன்ஸ் கழகத்தின் தலைவராக, கொழும்பு தேசிய வைத்திய  சாலை விபத்து சேவை நண்பர்கள் அமைப்பின் செயலாளராக, கொழும்பு மத்திய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சிரேஷ்ட அங்கத்தவராக, இலங்கை விழிப்புலனற்றோர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினராக மற்றும் சர்வதேச வை.எம்.எம்.ஏ.யின் ஆயுட் காலத் தலைவராக என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புக்களில் இருந்து சமூகம் சார்ந்த விவகாரங்களில் முன்னின்று பங்களிப்புச் செய்தவர் அவர். சிறந்த சமூக சேவையாளரும் மார்க்கப் பற்றுள்ளவருமான மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் நிறையவே நற்பணி செய்திருக்கிறார். திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் முன்னோடி ஸ்தாபகராகவும் திகழ்கிறார். அதன் இன்றைய கம்பீரமான வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் இவரின் அர்ப்பணிப்பும் காரணம் எனலாம்.

“உங்களில் மரணித்தவர் களின் நற்செயல்களை நினைவு கூருங்கள்” என இஸ்லாம் கூறுகின்றது. மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் சமூகப் பணி, பொதுப்பணி புரிபவர்களில் வித்தியாசமானவர். எந்த இனம், எந்த மதம் என்று கூடப் பார்க்க மாட்டார். கூடுதலாக லயன்ஸ் கிளப் மற்றும் விழிப்புலனற்றோர் சங்கம், பொது நூலகம், வைத்தியசாலை, சைனா நட்புறவுச் சங்கம், ரி.பி. ஜாயா மன்றம் போன்ற பல்வேறு அமைப்புக்களின் மூலம் சிங்கள-தமிழ்-கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு உதவிகளை அள்ளி வழங்கிய கொடையாளி.

அவர் மரணித்தாலும் அவர் நாமம் மறைய மாட்டாது. அவருடைய நண்பர்களான என்.எம்.அமீன், என்.எம்.றஸீன் மாஸ்டர், அஷ்ரப் அஸீஸ், எம்.ஏ.எம். நிலாம், எப்.எம். பைரூஸ், எம்.இஸட் அஹமட் முனவ்வர், சட்டத் தரணி இம்தியாஸ், பஸ்யாலை நிலாம், மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், ஊடகவியலாளர் சுஐப் காஸிம் இன்னும் பலர் இதற்கு சான்றாகும். மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் மிக முக்கியமாக சமுதாயத்தில் நினைவு கூரப்பட வேண்டிய வராவார். சமூகத்துக்காக தன்னுடைய குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர். ஒரு காரியாலயம் இன்றி தன்னுடைய வீட்டையே காரியாலயமாகப் பயன்படுத்தி தன்னுடைய சொந்தப் பொருளாதாரத்தில் செலவு செய்து பணி செய்தவர் அவர்.

நாட்டில் நல்லாட்சி ஒன்று உருவாக வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு சகல சமய சமூகங்களும் வெளிப்படைத் தன்மையுடன் ஒட்டி உறவாடி புரிந்துணர் வோடு வாழும் சூழ்நிலையைத் தோற்று விப்பதற்காக குரல் கொடுத்த ஒரு மனிதர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சூழல் தோற்றம் பெற்றபோது அதனை எதிர்த்தும் குரல் கொடுத்தவர் அவர்.

அவர் இன்று மறைந்து விட்டார். ஆனால் அவரின் பணி தொடர வேண்டும். நோன்பு காலங்களில் மக்களின் நலன் கருதி வீதி மின்விளக்குகள் சீராக ஒளிரவும், மின்    சாரம், தண்ணீர் என்பன தடையின்றிக் கிடைக்கவும், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கை விடுத்தவர். அவரின் பணிகளில் சர்வதேச வை.எம்.எம்.ஏ. மூலம் நாடளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மாணவர்களுக்கு உதவியவர். கிழக்கு மாகாணத்தில் சுனாமி யால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று பல்வேறு உதவிகளை வழங்கியவர்.

பாதுகாப்பு படையினர் வசமிருந்த மஸ்ஜித்களை புத்திசாதுரியமாக மீட்டு மக்கள் பாவனைக்கு ஒப்படைத்தவர். அவர் நரைத்த தாடி, அழகான புன்முறுவல் பூத்த வதனம் கொண்டவர். தஹஜ்ஜத் தொழுகைக்காக உரிய நேரத்திற்கு எழும்பும் பழக்கமுடையவர். குர்ஆன் ஓதுவதில் அதிகமான நேரத்தை செலவிடுவார். ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலுமுள்ள ஹதீஸ் கிரந்தங்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் மிக்கவர். இவ்வாறான சிறந்த நற்பண்புகளைத் தன்னுள் வளர்த்துக் கொண்ட ஒருவரின் வாழ்க்கையில்   பிரகாசித்த நற்செயல்களை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக மர்ஹூம் அஷ்ரப் ஹுஸைன் ஊடகத்துறையை மிகவும்   நேசித்தவர். ஊடகத்தின் மூலம் சமுதாயத் துக்காக நன்மை பயக்க வைத்தவர். அதிகமான ஊடக நண்பர்களைக் கொண்டவர். பாராட்டையும், புகழையும் தேடிச் செல்லாதவர். அவரைத் தேடி தானாகவே பாராட்டும் புகழும் குவிந்தன. அமெரிக்க நிறுவனம் ஒன்று கூட அவரின் சேவையைப் பாராட்டி கௌரவித்தது.

அன்னாரின் பாவங்களை வல்லோன் அல்லாஹ் மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தை வழங்க பிரார்த்திப்போமாக. அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையைக் கொடுப்பானாக.

மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா

தேசிய அமைப்பாளர்

சர்வதேச வை.எம்.எம்.ஏ

About the author

Administrator

Leave a Comment