சமூகம் வியாபாரம்

என்னை மன்னிக்கவும், ACJU ஹிஜாப், நிகாப் பத்வா விவகாரம்!

முஸ்லிம் சமூகம், அதன் தலைமைகள், நிறுவனங்கள், இயக்கங்களுக்கான ஒரு திறந்த மடல்….

எம் மதிப்பிற்குரிய உலமாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜம்இய்யதுல் உலமா இன்நாட்டு முஸ்லிம்களுக்கு பல சேவைகளை செய்துள்ளது, செய்து வருகின்றது. இதனை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.

            அண்மையில் சமூக வலைத் தளங்களிலும், இன்னும் பல மட்டங்களிலும் ஹிஜாப்,நிகாப் குறித்த விடயங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்கு உட்பட்டு வந்த நிலையில் அதுதொடர்பாக 11.09.2016 அன்று “பெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவு” என்ற தலைப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழு செயலாளரினால் ஒரு அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

            அந்த அறிக்கை தொடர்பிலான விடயங்களை சற்று அலசிப்பார்ப்பதற்காக ஜம்இய்யதுல் உலமாவின்  இணையத்தற்கு சென்ற போது அங்கிருந்த பல பத்வாக்களையும் கூட வாசிக்கக் கிடைத்தது.

            இதன் பின்னணியில் இந்த நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் பொருப்பு வாய்ந்த ஒரு குடிமகன் என்ற வகையில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிறுவனங்கள், இயக்கங்கள், தலைமைகளை நோக்கியும் எனது தாழ்மையான சில அவதானங்களை தெரிவிப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்.

            குறித்த அறிக்கையை பொருத்த வரை அதில் ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட “சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்” என்ற நூல் தொடரின் ஆறாம் பகுதியில் இடம் பெற்றிருந்த ஹிஜாப், நிகாப் தொடர்பான விடயங்களை மேற்கோள் காட்டியது குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்துப் பார்த்த போதும், அந்த உரையை கேட்ட போதும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டதற்கு மாற்றமாகவே அந்த நூலிலும் உரையிலும் இருந்த விடயங்கள் காணப்பட்டன. இதனைக் கண்டு நான் ஆச்சரியமும்அதிர்ச்சியும் அடைந்தேன். இவ்வாறான பொருப்பு வாய்ந்த ஒரு சபை இப்படி செய்திருக்குமா என்ற கேள்விதான் என்னுள் எழுந்தது. உண்மையில் இப்படியான போக்கு எங்கு மேல் எழுந்தாலும் அது கண்டனத்துக்குரியதே.

            அதைவிட ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விடயம் அந்த அறிக்கை குறித்த ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு இன்னோர் தரப்பபை நோக்கி பேசுவது போல் அமைந்திருந்தமை. அது இந்த அறிக்கையில் மாத்திரமல்ல ஜம்இ்ய்யதுல் உலமாவின் பல பத்வாக்களும் அந்த தொணியிலும் பாணியிலுமே அமைந்திருந்தமையை அவதானித்த போது மிகவுமே அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் அந்த பத்வாக்கள் ஒரு வகையான நலுவல் பாணியில் அமைந்த உபதேசங்களாகவே பல போது அமைந்திருக்கின்றனவே அல்லாமல் ஒரு தலைமையில் இருந்து வருகின்ற நடு நிலையான பத்வாவாக இல்லை. இவை தப்பித் தவறியாவது சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப் படுமாயின் பாரிய சிக்கல்களை தரவல்லவையாக காணப்படுகின்றன. ஒரு பொது சபை குறித்த ஒரு மத்ஹபை சார்வதோ,சிந்தனைப் பள்ளியை சார்வதோ எந்தளவு தூரம் பொருத்தமானது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அது பொதுவில் விடயங்களை அனுக வேண்டும். அதுவும் சிறுபான்மையாக நாம் வாழும் இந்த நாட்டிலே இன்றைய காலப் பகுதியில் மிகவுமே நேர்மையாக இவை அமைவதே வேண்டத்தக்கதாகும்.

            அதைப் பார்க்கிலும் வருத்தத்துக்குரிய விடயம் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்திற்கும், இந்த நாட்டிற்குமுரிய தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ முதன்மைப் பிரச்சினைகள் இருக்க, ஸஹாபாக்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாட்டிற்குரிய விடயமாக அமைந்த ஒரு விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவை ஒற்றை நிலைப்பாட்டில் வைத்துக் கொண்டு “நிகாப், ஹிஜாப் தொடர்பான மார்க்கத் தெளிவுக் கருத்தரங்கு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாகும்.

            இது பிரச்சினைக்குரியதல்ல என்றிருந்தாலும் இதைப் பார்க்கிலும் முக்கியமான சமூகப் பிரச்சினைகளான வறுமை, அதனடியாக பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற்றுச் செல்லுதல், சிறுவர் துஷ் பிரயோகம், போதைப் பொருள் பாவனை, குடும்ப சீரழிவும் பாலியல் முறை கேடுகளும்…போன்ற விவகாரங்களிலும் முதன்மையான கவனத்தை இது போன்ற விடயங்களில் எடுப்பதைப் பாரக்கிலும் இந்த நிறுவனம் எடுக்குமாயின் அதுவே வரவேற்கத் தக்கதாகும்.

            இஸ்லாம் எந்த இடத்திலும் முன் பின் முரணான, வெளிப்படைத் தன்மையற்ற நிலைப்பாடுகளை கொண்டதல்ல. அப்படி நடப்பது அதன் விழுமியங்களுக்கான அடிப்படை முரண் கொண்டதாகும். இப்படியான ஒரு மனோ நிலையில் இந்த சமூகம் வழிநடாத்தப்படுவது இஸ்லாத்தின் போக்கிற்கு மாற்றமானதாகும்.

இந்த வகையில் ஜம்இய்யதுல் உலமாவின் இந்த விடயங்கள் சம்மந்தமாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பொருப்பு வாய்ந்தவர்கள், நிறுவனங்கள் கவனத்தை செலுத்துவது முக்கியமானது. மார்க்கத் தீர்ப்பு போன்ற மிகவுமே பொருப்பு வாய்ந்த சட்டம் சொல்லும் நிலை குறித்த ஒழுங்குகள் குறித்து ஒரு மாநாடு நடப்பது நிகாப் குறித்த மாநாடு நடாத்துவதைப் பார்க்கிலும் முக்கியமானதாகும். இது குறித்து ஜம்இய்யதுல் உலமா மீள்பரிசீலனை செய்வது சிறந்தது. இதனை சமூகத்தின் தலைமைகள் கவனத்தில் எடுப்பதுஇன்றை காலத்தின் கடமையாக உள்ளது. இல்லாத போது அது எமது சமூகத்தின் பிளவுக்கும் வீணான பிரச்சினைகளுக்கும் மாத்திரமல்லாமல், இந்த நாட்டின் இன ஐக்கியத்திற்கும் இஸ்லாம் குறித்த பிழையான பதிவுகளுக்கும் காரணமாக அமையும்.

இந்த விடயங்களில் கடந்த காலங்களில் கவனம் அற்ற ஒரு நிலையில் இருந்திருப்பதை இட்டு மார்க்கத்தை கற்ற, இந்த நாட்டினதும், சமூகத்தினதும் பொருப்பு வாய்ந்த ஒரு அங்கத்தவன் என்ற வகையில் என்னை மன்னித்துக் கொள்ளுமாறு சமூகத்திடம் வேண்டி விடை பெறுகிறேன்.

அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்வானாக!

 – அஷ்ஷெய்க் எம்.என்.இக்ராம் –

About the author

Administrator

2 Comments

Leave a Comment