குடும்பம்-உளவியல்

குழந்தைகளிடம் வன்மத்தை வளர்க்கும் காணொளிகளும் கணினி விளையாட்டுக்களும்

Written by Administrator

நாகரிக உலகின் மறுபக்கம் மிகக் குரூரமாகவே உள்ளது. மனிதன் மனி தனைக் கொல்வதும் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதும் பல் வேறு விதமான ஆயுத வன்முறைகள் காணொளிகளாக பதிவுசெய்யப்பட்டு, மக்கள் அவற்றை பொழுதுபோக்கிற்காகப் பார்த்து ரசிக்கும் கேடுகெட்ட நிலைமை இன்றைய உலகில் சர்வ சாதாரணம்.

குழந்தைகளுக்கு கார்டூன்களை அனுமதிக்கலாமா என்ற வாதம் நீடித்துச் செல்லும் நிலையில், வன்முறைகளைப் பிரதிபலிக்கும் காணொளிகள் மற்றும் கணினி விளையாட்டுக்களை பெற்றார் அவர்களின் பார்வைக்கு விடுவது அவர்களது உள்ளங்களில் வன்மத்தை வளர்க்கவே காரணமாகும். கணினித் திரையில் தோன்றும் வன்முறைக் காட்சிகள் குழந்தைகளின் ஆழ்மனதில் பதியவும் செயற்பாடாக மாறவும் வாய்ப்புள்ளது என்பதை உளவியல் ஆய்வுகள் நிறுவியுள்ளன.

தொலைக்காட்சியில் காண்பதை நடத்தையில் வெளிப்படுத்தல் 50 வீதம் சாத்தியமானது என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. எந்தக் களங்கமும் அற்ற குழந்தை உள்ளத்தில் ஆரம்பத்தில் பதியும் இத்தகைய காட்சிகள், அவை இளைஞர்களாகவோ யுவதிகளாகவோ வளரும் பட்சத்தில் அவர்களது நடத்தையில் தாக்கம் செலுத்தக் கூடியன.

நவீன தொழில்நுட்பங்களால் விளைந்த பொழுதுபோக்குச் சாதனங்களும் குழந்தைகளிடம் வன்மங்களை வளர்ப் பதற்கு மறைமுகமாக உதவுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. தற்காலத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை. இணைய இணைப்புக்களையும் மிக இலகுவாகப் பெற முடிகின்றது. பல வகையான இலத்திரனியல் கருவிகள் எமக்கு இலகுவாகக் கிட்டுகின்றன. சிறுவர்கள் இத்தகைய இலத்திரனியல் சாதனங்களைக் கையாள்வதற்கு விரைவில் கற்றுக்கொள்கின்றனர்.

தொலைக்காட்சி தொடர் நாடகங்களில், சினிமாப் படங்களில் குடும்ப வன்முறைகள் சித்தரிக்கப்படுகின்றன. நேரடியான சண்டைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. பெரியவர்களுடன் இணைந்து சிறுவரும் இக்காட்சிகளை அவதானிக்கின்றனர். இணையங்களில் உலா வரும் சிறுவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொறிகளில் சிக்கி வயதுக்கு ஒவ்வாத காணொளிகளுக்கு இலக்காகின்றனர்.

போர் வீரர் எதிர்ப்படுவோரை துப்பாக்கியால் சுட்டு முன்னேறிச் செல்வது போன்ற கணினி விளையாட்டுக்கள் பல காணப்படுகின்றன. புள்ளிகளுக்காக கணினியில் தோன்றிய மனிதரை இலக்கு வைத்த சிறுவன், கையில் துப்பாக்கி கிடைத்ததால் அதன் மூலம் மனிதரை இலக்கு வைக்கும் எண்ணம் உருவாக வழிவகுக்கும் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் குறித்து அமெரிக்கக் குழந்தை நலக் கல்வி நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அதில், தரம் தாழ்ந்த நடவடிக்கைகள் தொடர்பான காணொளிகள், மனிதனை சுட்டுக் கொல்வதாக அமையும் கணினி விளையாட்டுக்கள் என்பன அவற்றைப் பார்வையிடும் சிறுவனின் உள்ளத்தில் வண்மத்தை வளர்ப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2016 ஜூலை 18 அன்று வெளியான குழந்தைநல மருத்துவ நிறுவனத்தின் அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாத்தா, பாட்டி வாயிலாக முன்பொரு காலத்தில் நீதிக் கதைகளையும் சுவா ரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களை யும் கேட்டு வளர்ந்த சிறுவர்களுக்கு தற்போது தொலைக்காட்சியும் கணினித் திரைகளும் ஸ்மாட் ஃபோன் விளையாட்டுக்களுமே அடைக்கலமாகியுள்ளன. இதனால் பெற்றோர் அரவணைப்புக் குறைந்து மொழியறிவு வளர்வதற்கான வாய்ப்பும் அற்றுப் போய் விட்டது. மொத்தத்தில் தலைமுறை இடைவெளியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

பிள்ளைகளோடு இல்லாத பெற்றோர்கள், தொழிலுக்காக வெளிச் செல்பவர்கள் இதில் மிகுந்த நிதானத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளின் ஒட்டுமொத்த நடத்தையையும் இதுவே தீர்மானிக்கின்றது. 6 வயதிற்குக் குறைவான சிறுவர்கள் காட்சித் திரைகளில் காணும் தோற்றத்திற்கும் வாழும் யதார்த்த சூழ்நிலைக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

எனவே, வன்முறைக் காட்சிகளைப் பார்வையிடும் கள்ளம் கபடமற்ற சிறுவர்கள் பெரியவர்களான பின்னர் தாம் பார்த்த காட்சித் திரைகளை தமது சூழலில் பிரயோகித்தப் பார்க்க முயல்கின்றனர். இதுவே நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வாயிலாகக் கேள்விப்படும் வன்முறைகளாக அமைகின்றன. இந்நிலையை மாற்றுவதற்கான சூழல் குடும்பங்களிலிருந்தே கட்டியெழுப்பப்பட வேண்டும். பிள்ளைகளை ஊடகங்கள் குறித்து பொருத்தமாக நெறியாள்களை செய்வது பெற்றோரின் பொறுப்பாகும்.

About the author

Administrator

Leave a Comment