ஆரோக்கியம் குடும்பம்-உளவியல்

5R முறைக்கூடாக வீட்டுக் கழிவுகளை எவ்வாறு முகாமை செய்யலாம்?

Written by Administrator

 – கலாநிதி பரீனா ருஸைக் –

உலகில் ஒரு நாளைக்கு 1.3 பில்லியன் டொன் கழிவுகள் உற்பத்தியாகின்றது. 2025ஆம் ஆண்டாகும் பொழுது இவ்வெண்ணிக்கை 2.2 பில்லியனாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திண்மக் கழிவுகள் மிக வேகமாக அதிகரிப்பதன் காரணமாக சூழல் மாசடைகின்றது. அத்தோடு தொற்று நோய் அதிகரிப்புக்கும் காரணமாக அமைகின்றது. கொழும்பில் சுமாராக ஒரு நாளைக்கு 800 மெட்ரிக் டொன் கழிவு உற்பத்தியாகின்றது. இலங்கை முழுவதிலும் சுமார் 60-65 வீதமான கழிவுகளே உள்ளுராட்சி மன்றங்களினால் சேகரிக்கப்படுகின்றது. ஏனையவை வீட்டுத்தோட்டங்களிலும் வீதியோரங்களிலுமே சிதறிக் காணப்படுகின்றன. மேல்மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் காணப்படுகின்றார்கள். இலங்கையில் 80,000 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 230இற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் இறந்துள்ளார்கள். சூழல் மாசடைவதே இதற்கு காரணமாக உள்ளது. கழிவு முகாமைத்துவத்தில் இன்று பொடுபோக்கு நிலை காணப்படுகிறது.

வீட்டு மட்டத்திலேயே அதிகமான திண்மக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதனை எவ்வாறு முகாமை செய்யலாம்? இதற்கு 5சு முறையை பின்பற்றலாம்.

  1. Reduce – குறைத்தல்

கழிவுகள் தோற்றம் பெறும் அளவை குறைக்க வேண்டும். கொழும்பில் ஒரு நாளைக்கு ஒருவர் சராசரியாக 0.85கிலோ கிராம் கழிவுகளை உற்பத்திசெய்கின்றார். இதை எந்தளவு குறைக்கலாம்? கடைக்குச் செல்லும் போது ஒவ்வொருவரும் பிரம்பால் வேயப்பட்ட அல்லது பிடவையால் நெய்யப்பட்ட பிரத்தியேக பையை எடுத்துச்செல்ல வேண்டும். அப்போது பொலிதீன் பாவனையை குறைக்கலாம். கடைகளில் பொதிசெய்யப்பட்டு தருகின்ற பொருட்களை மறுக்க வேண்டும். பொருட்களை வாங்கும் போது ஒரு வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்க வேண்டும். அடிக்கடி பொருள் வாங்குவதை குறைத்துக்கொள்ள வேண்டும். சமலறைக் கழிவுகளில் உணவுகளே அதிகமான காணப்படுகின்றது. எமக்கு தேவையான அளவையே நாம் சமைத்து உண்ண வேண்டும். உலகிலுள்ள ஒரு பில்லியன் மக்களின் பசியை போக்குவதற்கு போதுமான உணவுகள் ஒவ்வொரு நாளும் விரையமாக்கப்படுகின்றது. நாம் பாவித்த பொருட்களை கழிவுத் தொட்டியில் வீசி விடாமல் அதனை திருத்திப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது ஏனைய ஒருவருக்கு கொடுப்பதின் மூலம் கழிவுகளை குறைக்கலாம். இவ்வகையில் எமக்கு கழிவுகளை வீட்டு மட்டத்தில் குறைத்துக்கொள்ள முடிகிறது.

2. Reuse – மீள்பயன்பாடு

சில விடயங்களை நாம் கழிவுகளாக வீசி விடாமல் அதனை வேறு தேவையொன்றிற்கு பயன்படுத்த முடியும். உதா, பிளாஸ்டிக் பக்கட் உடைந்தால் அதனை வீசி விடாமல் அதில் மன்னை போட்டு ஒரு தாவரச் செடியை வைக்க முடியும்.

3. Recycle – மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்

உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை மீற்சுழற்சிக்கு உட்படுத்தலாம். வியாபாரிகள் உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வீட்டுக்கு கேட்டு வந்தால் அதனை அவர்களுக்கு வழங்கலாம். பாவித்த கடதாசிகளையும் அவ்வாறு வழங்கலாம். இவ்வகையில் அவற்றை வீட்டு மட்டத்தில் வேறுபடுத்தி அனுப்பினால் கொட்டப்படும் உக்காத கழிவுகளும் குறைந்துவிடும்.

4. Refuse – மறுத்தல்

நாம் ஏதாவதொரு பொருளை கடையில் வாங்கும் போது சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உக்காத பொருட்களை வாங்காமல் (ரெஜிபோன், பொலிதீன்) அதனை மறுத்து உக்கும் பொருட்களை வாங்க வேண்டும். உதாரணமாக பழங்களை வெட்டி ரெஜிபோன் பையில் போட்டு வதை;திருப்பார்கள். அவற்றை நாம் தவிர்த்து பழங்களை தனித்தனியாக வாங்க வேண்டும்.

5. Rethink – சிந்தித்தல்

நாம் பொருளொன்றை வாங்க முன்னர் சிந்திக்க வேண்டும். இது எந்தளவுக்கு கூடுமானது? என்பதை யோசிக்க வேண்டும். சிலபோது நாம் குப்பைகளை கொட்டும்போது சிந்திக்காமல் சோம்பேறித்தனத்திற்கு சமைத்த உணவுகளை கொண்டு வரும் பொலிதீன்களை அப்படியே உக்கும் பொருட்களுக்குள் போட்டு விடுகின்றோம். அதனால் சிறந்த பசளை உற்பத்தியை அங்கு பெற முடியாமல் போகும். எனவே 5சு முறையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துகின்ற போது வீட்டு மட்டத்தில் உருவாகும் திண்மக்கழிவுகளின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.

வீட்டு மட்டத்தில் கழிவுகளை வேறுபடுத்தி முகாமைசெய்கின்ற போது உக்கும் பொருட்களை பசளையாக மாற்றி 1 கிலோவினை 12-15 ரூபாவிற்கு விற்கலாம். அது போன்று பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை 1 கிலோ 40-60 ரூபா வரையில் வி;ற்பனை செய்யலாம். உலோகங்களை 35-40 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம். கார்போட், பேப்பர் போன்றவற்றை 3-4 ரூபாவிற்கு விற்பனைசெய்யலாம். கண்ணாடிக் கழிவுகளை 2-3 ரூபாவிற்கு விற்கலாம். இவ்வாறு கழிவுகளுக்கு பெறுமதி காணப்படுகிறது. அது தொடர்பாக மக்கள் அறிவூட்டப்பட வேண்டும்.

கழிவுகளை வருமானமீட்டும் மூலங்களாக பயன்படுத்தலாம். கழிவுகளை வேறுபடுத்தல் என்கின்ற விடயம் வீட்டுமட்டத்தில் மிக மிக அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. அரசாங்கமும் கழிவுத் தொட்டிகளை வீட்டு மட்டத்தில் இலவசமாக வழங்கி வைக்க வேண்டும். மக்கள் விரும்பும் வகையில் கழிவுத் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் அதிகளவிலான கழிவுகள் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளலாம்.

About the author

Administrator

Leave a Comment