பெண்கள் ஷரீஆ

அரசியல் செயற்பாட்டில் பெண்களின் வகிபாகம் பற்றிய ஷரீஆவின் நிலைப்பாடு

Written by Administrator

 – முஹம்மத் பகீஹுத்தீன் –

நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும் ஆண் பெண் இருபாலாரதும் இணைந்த செயற்பாடு என்பதே அல்குர்ஆனிய சிந்தனையாகும்.

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் ஸஹபாக்களின் வாழ்வுமுறையும் இதற்கு நடைமுறை வடிவம் கொடுத்துள்ளதை நம்பகமான அறிவுப்புக்களில் பரவலாக காணமுடியும்.
எனவே இலங்கை மண்ணிலும் உயர்ந்த விழுமியங்களை கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதில் பெண்ணின் பங்களிப்பை எவரும் மறுக்கவோ குறைத்து மதிப்பிடவோ முடியாது. அவள் தனது சமூக எழுச்சிப் பாதையில் முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு இடமளிக்கப்படுவதே நபி வழியாகும்.
பெண் ஆணின் சரிபாதி என்பது நபி வாக்காகும். அவளும் உரிமை கடமைகளில் சம பொறுப்புள்ளவள்.
ஆனால் அவளது வகிபங்கு ஆணை விட சற்று வித்தியாசமானது என புரிந்து கொள்வது பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் விசேட கௌரமாகும்.
அந்த வகையில் ஒரு பெண்ணின் வகிபங்கு இரண்டு முக்கிய பரப்புக்களில் காணப்படுகிறது.
முதலாவது அவளது குடும்பம். அங்கு அவள் மனைவி, தாய் என்ற பெண்ணுக்கேயுரிய அதி உன்னதமான பாத்திரங்களை வகிப்பதன் மூலம் பொறுப்புமிக்க ஒரு குடும்பத்தின் அச்சாணியாய்த் திகழ்கின்றாள்.
இரண்டாவது சமூகப் பரப்பு. இங்கு ஒரு பெண் தனக்குரிய ஒழுக்க விழுமியங்களைப் பேணி, அரசியல், கல்வி, கலாசாரம், பொருளாதாரம் என சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் தனது பங்களிப்பை எடுப்பாக வழங்குவாள்.
அதில் அவளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்பட முடியாது. ஆனால் இந்த இரண்டு பரப்பிலும் அவள் சமனிலை பேண வேண்டும் என்பதே முக்கியமானது.

அண்மைக்காலமாக பெண்களின் அரசியல் செயற்பாடு குறித்து ஒடுங்கிய சிந்தனைப் பதிவுகள் அல்லது பிழையான புரிதலின் அடிப்படையில் எழுந்த கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்படுவதை அவதானிக்க முடிந்தது. எனவே அரசியல் செயற்பாட்டில் அவளது பங்களிப்பு சம்பந்தமாக மிக சுருக்கமான சில குறிப்புக்களை வழங்குவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
ஆணைப் போலவே பெண்ணும் சம பொறுப்புள்ளவள் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான சிந்தனையாகும். அரசியல் போராட்டமும் அதில் அடங்கும்.

நன்மையை ஏவி தீமையை தடுத்தல், உபதேசம் செய்தல், நல்லவிடயங்களுக்கு ஆதரவு வழங்குதல், சீர்கேடுகளை எதிர்த்தல் போன்ற விவகாரங்கள் இருபாலாருக்கும் உள்ள கடமைகளே.

அந்த வகையில் பெண்; தனது சக்திக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப இஸ்லாமிய வரையரைகளை பேணிக் கொண்டு அரசியல் போராட்ட செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது மற்றும் சமூக எழுச்சிக்காக பாடுபடுவதும் பங்களிப்பதும் அவளுக்கு கடமையாகும்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான பொறுப்புக்கள் பற்றி பேசும் அல்குர்ஆன் வசனம் இப்படிச் சொல்கிறது. ‘முஃமினான ஆண்களும் பெண்களும், அவர்களில் சிலர் இன்னும் சிலருக்குப் பொறுப்பாக இருப்பர். நன்மையை ஏவுவார்கள் தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தைக் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் கட்டுப்படுவார்கள். இவர்களுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பான்’ (தௌபா – 71)

இவ்வசனத்திற்கு அறிஞர் ரஷீத் ரிழா விளக்கம் கூறும் போது ‘நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் ஆண்-பெண் ஆகிய இருபாலாருக்கும் கட்டாயக் கடமையாகும். கலீபாக்கள், ஆட்சியாளர்கள், ஆளுனர்கள் போன்ற பொறுப்பில் இருப்பவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் விமர்சிப்பதுவும் இதில் அடங்கும். பெண்கள் இந்த உண்மையை புரிந்தவர்களாகவும் செயற்படுத்துபவர்களாகவும் இருந்தார்கள்.’ என்று கூறியுள்ளார்கள்.

உதாரணமாக உம்மு தர்தா (ரழி) அவர்கள் ஆட்சியாளர் அப்துல் மலிக் அவர்களின் தவறொன்றை விமர்சித்த சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அவ்வாறே அஸ்மா (ரழி) அவர்கள் அநியாயக்கார ஆட்சியாளர் ஹஜ்ஜாஜ் பின் யூஸுபுக்கு எதிராக பேசிய வார்த்தைகள் சாட்டையடியை விடக் கடுiமான அரசியல் விமர்சனமாக நோக்கப்படுகிறது. இந்த சம்பவம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

அரசியல் விவகாரத்தில் பெண் கவனம் செலுத்துவது கடமைதான் என்பதை உரத்துச் கூரிய உம்மு ஸலமாவின் ‘நானும் மக்களில் ஒருவர்தான்’ என்ற வார்த்தை இங்கு நோக்கத்தக்கது. அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவது ஆண்களுக்கு மட்டுமே உள்ள தனிச் சொத்தல்ல. அது பெண்களுக்கும் தான் என அற்புதமாக வெளிப்படுத்திய தருணம் இது. இந்த சம்பவம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

ஒரு பெண் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்கக் கூடிய எந்த வசனமும் ஷரீஆவில் இல்லை. மாற்றமாக அவள் அரசியல் போராட்டத்தில் ஈடுபாடு காட்டியதற்கு ஏறாளமான சான்றுகள் உள்ளன.
எனவே பெண்ணின் அரசியல் போராட்டம் கால, இட, சூழ்நிலைகளுக்கும் நடைமுறைக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஷரீஆ அனுமதித்த எல்லலைக்குள் இடம் பெறுமாயின் அது ஆகுமானதே.

இதன் பொருள் பெண்கள் ஆட்சிபீடத்தில் அமர்த்தப்படவேண்டும் என்று தூண்டுவதல்ல. மாறாக அவளது ஆற்றலுக்கு இஸ்லாம் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதே. தலைமத்துவ ஆற்றல் என்பது இருபாலாருக்கும் பொதுவானதே. எனவே தகுதியும் ஆற்றலும் உள்ள ஒரு பெண் பொறுப்புக்கள் வகிப்பதை தடை செய்வதற்கு முடியாது.

இங்கு ‘பெண்களிடம் தங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்’ என்ற ஹதீஸ் பற்றி கொஞ்சம் விளக்குவது சிறந்தது.
அறிஞர் முஹம்த் கஸ்ஸாலி அவர்கள் குறித்த இந்த ஹதீஸுக்கு முரணாக சூரா நம்லின் 23ம் வசனம் காணப்படுகிறது எனக் கூறி, சுன்னாவும் குர்ஆனும் முரண்படும் போது குர்ஆன் முற்படுத்தப்படும் என கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முஹம்மத் கஸ்ஸாலி மேலும் விளக்குகிறார். ‘ அல்-குர்ஆன் ஸபா நாட்டு அரசியை தனது அதிகாரத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி தனது மக்களை சுலைமான் (அலை) அவர்களுக்கு பணிந்து நடக்க வழிப்படுத்தியவளாக காட்டுகிறது என்றும் அவ்வகையில் ஒரு அரச தலைவியின் சிறந்த ஒரு முன்மாதிரியாக அவள் விபரிக்கப்படுகிறாள்’ என்றும் விளக்குகிறார்.
இங்கு தலைமைப் பொறுப்பு ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானது என்ற அல்குர்ஆனின் வழிகாட்டலே முற்படுத்தப்படவேண்டும் என முஹம்மத் கஸ்ஸாலி கருதுகின்றார். அதாவது ஒரு பெண்ணுக்கு தலைமை வகிக்கும் ஆற்றலும் தகுதியும் இருந்து சூழ்நிலைகள் ஷரீஆவின் நிலைப்பாட்டுக்கு உடன்படுமாயின் அவளுக்கு அந்தப் பதவியை கொடுப்பதில் தவறில்லை என்பதே கஸ்ஸாலியின் கருத்தாகும்.

இது தவிர இன்னும் பல கோணங்களில் இந்த ஹதீஸ் புரியப்பட்டள்ளது. பாரசீக மன்னன் மரணித்த வேளை, அவர்கள் மன்னனின் மகளை நாட்டின் தலைமைக்கு நியமித்த தருணத்திலேயே இந்த ஹதீஸை நபிகளார் மொழிந்திருக்கிறார்கள்.
எனவே இது பொதுவாக எல்லா தலைமைகளையும் குறிக்க மாட்டாது. நாட்டின் அதியுயர் பதவியான சிரேஷ்ட தலைமை பதவியை மாத்திரமே குறித்த ஹதீஸ் தடுக்கிறது என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

இன்னும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸில் நபியவர்கள், பெண் என்பதன் காரணமாக இந்த வார்த்தையைச் சொல்லவில்லை. மாற்றமாக பாரசீகத்தில் தலைமைக்கு நியமிக்கப்பட்ட பெண், சிறு வயதுப் பெண்ணாகவும், ஆட்சி செய்வதற்குரிய தகைமையில்லாத பெண்ணாகவும் இருந்ததால்தான் இவ்வாறு சொன்னார்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஹதீஸ் பற்றி இது போன்ற இன்னும் பல வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து பெண்களின் அரசியல் செயற்பாடுகளையோ அல்லது தலைமைப் பதவிகளுக்கு வருவதை தடுப்பதற்கோ முடியாது என்பது தெளிவு.
பெண் என்பவள் சமூகத்தின் ஒரு பிரஜை என்ற வகையிலும் அவளுக்கும் உரிமை கடமைகளில் சம பொறுப்புக்களை ஷரீஆ வழங்கியுள்ளது என்ற வகையிலும் குறிப்பாக காலத்தின் தேவை என்ற அடிப்படையிலும் பினவரும் அரசியற் செயற்பாடுகளில் அவளது பங்களிப்பு தவிர்க்க முடியாத கடமையாகும்.

1. ஆட்சியாளர்களை தெரிவு செய்வதில் பங்கேற்றல்
2. தேர்தல்களின் போது வாக்குரிமைய பயன்படுத்தி சட்ட சபைகளின் பிரதிநிதிகளை தெரிவு செய்தல்
3. அரசியல் அராஜகங்களை சட்டம் அனுமதிக்கும் வழிமுறைகளில் எதிர்த்தல். பேச்சு, எழுத்து, எதிர்ப்புப் பேரணி, பகிஷ்கரிப்பு என பல வடிவங்களில் அது அமைய முடியும்.
4. கட்சிகள் மற்றும் தேசிய அரசியல் சக்திகளது செயற்பாடுகிளல் பங்கேற்றல்
5. உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்கு வேட்பாளராக நிற்றல்.

மேற்கூறிய எந்த ஒரு நடவடிக்கையிலும் பெண்ணின் வகிபாகத்தை பிடுங்கி எடுப்பதை நியாயப்படுத்துவதற்கு ஷரீஆவில் எத்தகைய தெளிவான சட்ட வசனங்களும் இல்லை.
எனவே ஆணைப் போலவே பெண்ணும் அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டியவள். சமூகத்தின் எழுச்சிப் பாதையில் அவளும் தனது சக்திக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பங்களிக்க வேண்டும். விழுமிய அரசியலுக்காக பாடுபடும் பெண்ணின் வகிபாகம் ஒரு வகையில் ஜிஹாத் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

About the author

Administrator

Leave a Comment