உள்நாட்டு செய்திகள் சமூகம் பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்

மரங்கள் நடுவதைப் போல அதனைப் பாதுகாக்கவும் வேண்டும் – ஸலாமா தின நிகழ்வில் சூழலியலாளர் சங்கத்தின் தலைவர்

Written by Web Writer

ஸலாமா மரம் நடும் தினத்தை முன்னெடுத்திருப்பது சிறந்ததொரு விடயமாகும். மரங்கள் சூழலுக்கு இன்றியமையாதவையாகும். மரங்கள் நடுவதைப் போலவே அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கைச் சூழலியலாளர் சங்கத்தின் தலைவர் வஜிர சிரிமான்ன தெரிவித்தார்.

இயற்கையை நேசிப்போம், உயிர்களைக் காப்போம் என்ற தொனிப்பொருளில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 2018 ஆம் ஆண்டுக்கான ஸலாமா வார நிகழ்வுகளின் தேசிய நிகழ்வு ஹெம்மாதகம இஸ்லாமிய சமூக அபிவிருத்திச் சங்க ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஹெம்மாதகம அல் அஸ்ஹர் கல்லூரியில் எம்.எச்.எம். ஷாபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு. திரிமான்ன இவ்வாறு தெரிவித்தார்.
ஹெம்மாதகம பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதிதியாகக் கலந்து கொண்ட கேகாலை மாவட்ட அரசாங்க அதிபர் எல்.ஜே.எம்.ஜீ. சந்திரசிறி பண்டார உரையாற்றும் போது, உலகத்தில் தோன்றிய எல்லா மதங்களும் மார்க்கங்களும் சூழலைப் பாதுகாக்குமாறே உபதேசித்துள்ளது. உலகில் நீர் வளம் அருகி வருகிறது. இன்னும் 20 வருடங்களில் ஆசியக் கண்டத்தில் நெல் உற்பத்தி கூடச் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட முடியும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஸலாமா நிறுவனம் இந்தத் தொனிப்பொருளில் ஸலாமா தினத்தை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு ஹெம்மாதகம பிரதேசத்தில் 700 மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் மரநடுகையும் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு ஸலாமாவின் இணையத் தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத், மாவனல்ல பிரதேச செயலாளர் எம்.எம்.பி. பிரியங்கனி பெதன்கொட, அரநாயக்க பிரதேச செயலாளர் இஸட். ஏ. எம். பைஸல், ஹெம்மாத்தகம பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் எம்.எச்.எம். யூசுப் ஆகியோரும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


About the author

Web Writer

Leave a Comment