எழுவாய் பயமிலை சமூகம்

மாடுகளுக்கு சூடுகள் தேவையில்லை I எழுவாய், பயமிலை

Written by Web Writer

மாடுகளுக்கு சூடுகள் தேவையில்லை : எழுவாய், பயமிலை

– அபூ ஷாமில் –

வேலையில்லாத நாவிதன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம் என்று சொல்வார்கள். மக்கள் இப்படித்தான். தமக்கு வேலை ஏதும் இல்லாவிட்டால் முட்டையில் மயிர் பிடுங்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். இதற்குச் சரியான வழி அவர்களை வேலையில் ஈடுபடுத்துவதுதான்.

முஸ்லிம் சமூகத்துக்கும் ஆயிரம் வருடங்களாக அழிவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தக் காலப்பிரிவில் மக்களுக்கு பேசுபொருளாக எதுவும் இருக்கவில்லை. அதனால் மார்க்கத்தில் இதுவரை தீர்வுகள் கண்டறியப்படாத விடயங்களை வைத்துக் கொண்டு அவற்றில் மயிர் பிளக்கும் ஆராய்ச்சிகளை தமது அறிவுக்கு எட்டிய மட்டில் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சினைகளைக் காரணமாக வைத்தே ஊரைப் பிரித்து வேடிக்கை பார்த்து பொழுது போக்கினார்கள். பள்ளிவாசல்களை ஒவ்வொரு கொள்கைகளுக்குமான கொள்கைக் காரியாலயங்களாக வேறுபிரித்தார்கள்.

இந்த நிலையில் தான் கலிமா சொன்னவர்கள் எல்லோரும் ஒன்று தான் என்பதை எதிரிகள் எங்களுக்குப் புரிய வைத்தார்கள். கண்டி மாவட்டத்தில் மட்டும் 26 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இவை எந்தக் கொள்கையின் காரியாலயம் என்று தாக்கியவர்கள் பார்க்கவில்லை. தனது கூட்டத்தாரை ஒதுக்கி வைத்த பள்ளிவாசல் என்று முஸ்லிம் சமூகம் பிரித்துப் பார்க்கவுமில்லை. பள்ளிவாசல் தாக்குதலுக்கு ஆளானதன் பின்னர், இது அந்தக் கொள்கையின் காரியாலயம், இது உடைக்கப்பட்டதையிட்டு நாங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று யாரும் ஒதுங்கிக் கொள்ளவுமில்லை.

பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கு முன்னர் இது எங்களது கொள்கைக்கான காரியாலயம், இங்கு வேறு யாரும் வரக் கூடாது, நாங்கள் மட்டும் தான் இங்கு அதிகாரம் செலுத்துவோம் என்று ஆர்ப்பரித்தவர்களின் ஆணவங்களையெல்லாம் இந்தத் தாக்குதல்கள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன. பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஊரிலுள்ள அனைவரும் தான் ஓடோடி வந்தார்கள். பள்ளிவாசலைப் பாதுகாத்தார்கள். தாக்கப்பட்ட பள்ளிவாசலை மீளவும் கட்டியமைப்பதற்கு உதவி செய்கிறார்கள். இந்த வேளைகளில் எல்லாம் சமூகத்தில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினதும் பங்களிப்பைப் பெறுவதற்கு பள்ளிவாசல்கள் பின்னிற்பதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு சிறந்த உதாரணமாக பள்ளிவாசல்கள் இந்தச் சந்தர்ப்பங்களில் செயற்படுகின்றன.

இப்படி அமைதியாக இருக்கும் போது பிளவுபட்டு விட்டு அழிவு வரும் போது மட்டும் ஒன்றுபடுவது எமக்கே நியாயமாக இருக்கிறதா ? அழிவு தான் எங்களை ஒன்றுபடுத்த வேண்டுமா ? ஏன் அமைதியாக இருக்கக் கிடைத்த நாட்களில் நாங்கள் ஒன்றுபட்டிருக்கக் கூடாது ? அப்படி நாங்கள் இருந்திருந்தால் இன்று அழிவைச் சந்தித்திருக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது. நாங்கள் ஒன்றுபடுவதற்கு ஏன் அழிவு வரும் வரை காத்திருக்கிறோம் ?

இந்த இடத்தில் நாங்கள் உணர்வு பெற வேண்டும். மாடு கூட அடிவாங்கிய பின்னர் படிப்பினை பெறுகிறது.  அந்தளவுக்கு நாங்கள் இறங்கத் தேவையில்லை. நல்ல நிர்வாகிகளுக்கு ஒரு சூடு போதுமானது. இனியாவது முஸ்லிம்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகங்களை அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். தெல்தெனிய சம்பவத்தின் மூலகாரணம் நான்கு முஸ்லிம்கள் குடிபோதையில் தாக்குதல் நடத்தியமைதான். செய்தி நாடு முழுவதும் பரவியதும் முஸ்லிம்கள் குடிக்கிறார்களா என்ற  கேள்வி பரவலாக ஆச்சரியம் மேலிட எழுப்பப்பட்டது. மது அருந்தும் இளைஞர்களை பள்ளிவாசல்கள் திருத்தத் தவறியமை தான் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்றும் நம்மில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

எப்படிப் போனாலும் ஊர்களைப் பிரித்து வைத்திருந்த பள்ளிவாசல்கள்  மீண்டும் ஊர்களைக் கட்டியெழுப்புவதற்கான மத்திய தலங்களாக இந்த அனர்த்தங்களின் பின்னர் மாறியிருக்கின்றன. ஊர்ப்பாதுகாப்பு தொடர்பான விடயங்களை கலந்துரையாடும் நிலையமாக, ஊருக்கான நிவாரணங்கள் வழங்கும், சேகரிக்கும் கஜானாவாக, ஊரின் தகவல்களைத் திரட்டும் தகவல் மையமாக தற்போது பள்ளிவாசல்கள் பல இடங்களில் இயங்குகின்றன. பள்ளிவாசல்களை மையப்படுத்திய செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. நெருக்கடிகள் தான் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்குப் போதுமான உரம் என்ற வகையில், இந்த நெருக்கடியான சூழலை சமூகத்தின் ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மிகுந்த விலை கொடுத்து கிடைக்கப் பெற்றுள்ள இந்த வாய்ப்பைத் தவற விட்டுவிடக் கூடாது.

அடுத்த அனர்த்தத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து, நம்மைப் பலப்படுத்திக் கொள்வோம்.

About the author

Web Writer

Leave a Comment