சிறப்புக்கட்டுரைகள் வியாபாரம் ஷரீஆ

நிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Written by Web Writer

நிர்பந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளிற்காக வங்கிகளூடாக அரசு வழங்கும் சேவைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஷெய்க் இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்.

அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறதுநீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.”  (ஸுரத்துல் அன்ஆம் :119)

அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளுக்காக வேறு மார்க்கங்கள் இல்லாத பொழுது முஸ்லிம்கள் வங்கிகளூடாக வழங்கப்படும் சலுகைகளுடன் கூடிய அரச நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு சுய தொழில்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்ற சமூர்த்தி, ஜனசவிய, திவிநெகும போன்ற  உதவித் தொகைகள் அரச வங்கிகளூடாக வழங்கப்படுகின்றன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கும் அரச சலுகைகள் அரச மற்றும் தனியார்  வங்கிகளூடாக வழங்கப்படுகின்றன.

நுகர்வோர் சமுதாயமாக இருக்கும் நாம் உற்பத்தித் துறைகளை நோக்கி நகர்வதற்குரிய வழிவகைகளை முன்னுரிமைகள் அடிப்படையில் கண்டறிதல் கடமையாகும், இந்த நாட்டின் வரியிறுப்பாளர்கள் என்ற வகையில் உணவு உற்பத்தி  விவசாயம், கால்நடை வளர்ப்பு,  நண்ணீர்  மீன்வளர்ப்பு, கடற்தொழில், சிறு கைத்தொழில்கள், கிராமிய கைத்தொழில்கள், வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைகள், வர்த்தக பயிர்ச் செய்கைகள், ஏற்றுமதி இறக்குமதி தொழில் முயற்சிகள் என அரசினால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவர்களாவோம்.

மேற்கண்ட அரச சலுகைகள் பெறப்பட்டு செய்யப்படும் உணவு உற்பத்தி பொருளுற்பத்தி, மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ளும் நுகர்வோர் சமூகமாக மாத்திரம் நாம் இருக்கின்றோம், அது குறித்த சன்மார்க்க வரையறைகளையும் நாம் அறிந்திருத்தல் வேண்டும், எங்களுக்கு அடுத்தவர் உற்பத்தி செய்யும் பண்டங்கள் பொருட்களில் ஹராமான கலப்படங்கள் இருக்கக் கூடாது ஆனால் நாம் அவற்றை உற்பத்தி செய்வதில் பின்னிற்கின்றோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் அது சார்ந்த சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கும், அவர்களது வீடமைப்பு, காப்புறுதி மற்றும் தொழில் சார் நடவடிக்கைகளிற்கும் அரசினால் வங்கிகளினூடாக வழங்கப்படுகின்ற சலுகைகளையும் மாற்றீடுகள் இல்லாத நிலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

அதேபோன்றே அரச சேவையில் உள்ளோரிற்கான ஓய்வூதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், காப்புறுதிகள், மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு வழங்கப்படுகின்ற காப்புறுதிகள் என்பவற்றை வேறு மாற்றீடுகள் இல்லாத நிலையில் முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

அவ்வாறன நிறுவனங்களில் தொழில் புரிவதற்கான அனுமதியும் இத்தகைய அடிப்படையில் தான் எமது முன்னோர்களால் வழங்கப்பட்டு வந்தன.

என்றாலும், வேறு மார்க்கமே இல்லாத நிலையில் நிர்பந்தம் இருப்பதால் மாத்திரமே இவ்வாறான அனுமதி வழங்கப்படுகின்றது, அதேவேளை ஹலாலான மாற்றீடுகளை கண்டறிவதும், ஏற்படுத்துவதும், அறிமுகம் செய்வதும், அமுல் படுத்துவதும் சமூகத்தின் மீது விதிக்கப்படுகின்ற கூட்டு பொறுப்பும் கடமையுமாகும்.

உதாரணமாக, நாம் சிறுபான்மையினராக இருக்கின்ற நிலையில் யதார்த்தமான வட்டியில்லாத இலாப நஷ்டப் பங்கீடுகளை அடிப்படையாகக் கொண்ட நுண் நிதி கடனுதவிகளை பெற்றுத்தரக் கூடிய கிராமிய கூட்டுறவு வங்கிகளை அரச அனுமதியுடன் தோற்றுவித்துக் கொள்ளவும், ஹலாலான மாற்றீடுகளை ஏனைய சேவைகளுக்காக அறிமுகம் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளவும் நிறுவன ரீதியிலான  கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது சமூகத்தின் மீதுள்ள கூட்டுக் கடமையாகும்.

அவ்வாறான மாற்றீடுகள் குறித்து கடந்த காலங்களில் எமது இஸ்லாமிய நிறுவனங்களும் அமைப்புக்களும் தலைமைகளும் ஆய்வுகளை செய்து தீர்மானங்களை அமுலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறியுள்ளமையால் பல ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகள் கடல்கடந்து நிபுணத்துவங்கள் அற்ற பணிகளை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றமை பல ஹராமான சமூக பொருளாதார கலாசார சவால்களை தோற்றுவித்துள்ளமை பகிரங்க இரகசியமாகும்.

இன்று மஸ்ஜிதுகளில் கடமை புரியும் கதீப்மார்கள், முஅத்தின்கள், மதரசாக்களில் கடமைபுரியும் உலமாக்கள், முஅல்லிம்கள், உஸ்தாதுமார்கள் என எவருக்குமே ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேம இலாப நிதியம், ஓய்வூதியம், காப்புறுதிகள், தொழில்சார் சலுகைகள் உரிமைகள் இல்லாமைக்கு இந்த விவகாரமும் காரணமாகும்.

குறிப்பாக அரசினால் வழங்கப்படுகின்ற மேற்படி சேவைகளை அரச மற்றும் தனியார் வங்கிகளின் இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல் பிறிவுகளூடாக பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்கின்ற ஏற்பாடுகளை செய்து தருமாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள் கோரிக்கைகளை விடுப்பதோடு நல்லிணக்க அடிப்படையில் அவ்வாறான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

மாற்றீடுகள் இல்லாத நிலையில் கருப்புப் பணங்களை கையாளுவது, கடத்தல் முயற்சிகளில் ஈடுபடுவது, உண்டியல் வியாபாரம் செய்வது, பிரமிட் வியாபாரம் செய்வது, நம்பகமற்ற நிதி வர்த்தகத்தில் ஈடுபடுவது, அரச அனுமதியற்ற நிதி நிறுவனங்களை நிறுவன ரீதியில் நடத்துவது என்பன தவிர்க்கப் படல் வேண்டும்.

மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் தற்பொழுது அமுலில் உள்ள பாரம்பரிய வங்கித் தொழிற்பாடுகளை ஒத்த இஸ்லாமிய நிதி நிறுவனங்களின் தொழிற்பாடுகளும் இன்னும் ஆழமாக விரிவாக இஸ்லாமிய  நிதியியல் நிபுணர்களால் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

இலாப நஷ்டப் பங்கீட்டின் அடிபடையில் நிதி சேவைகளை வழங்குவதாக கூறுகின்ற இஸ்லாமிய நிதிநிறுவனங்கள் இலங்கையில் இவ்வாறான தொழில் முயற்சியாளர்களிற்கு கை கொடுக்கின்ற பொறிமுறைகளை இதுவரை அறிமுகப் படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் இலங்கையில் பல பாகங்களில் நிறுவன ரீதியிலான சகாத் பங்கீடு வெற்றிகரமாக அமுல் படுத்தப் பட்டு வருவதாலும், சில இடங்களில் மஸ்ஜித்களூடாக கர்ளுள் ஹஸன் நிதியுதவித் திட்டங்கள் அமுல் படுத்தப் பட்டு வருவதாலும் சமுதாயம் சில மாற்றீடுகளை நோக்கி நகர்வது திருப்தி தரும் விடயமாகும்.

அத்தியாவசிய தேவைகளிற்கான அவசரக் கடனுதவிகளை செய்வதற்கும் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான கடனுதவிகளை வழங்குவதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

இஸ்லாம் வழங்குகின்ற இவ்வாறான நிர்பந்த நிலை அனுமதிகளை துஷ்பிரயோகம் செய்வதும், வரம்பு மீறுவதும் பெரும் பாவங்களாகும், அவற்றையும் இயன்றவரை தவிர்ந்து  பொறுமை காப்பது ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மீகப் படித் தரங்களை பொறுத்து இறைநேசத்தை வென்று தருகின்ற தனிப்பட்ட விவகாரமாகும், தத்தமது மனச் சாட்சியுடனும் இரட்சகனுடனும் தொடர்பு பட்ட விடயமாகும்.

அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் இல்லாத பட்சத்தில் அவற்றை நாடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும், அத்தகைய மாற்றீடுகள் உள்ள நிலையில் முஸ்லிம்கள் ஆகுமாக்கப் படாத வழிமுறைகளை நாடுவதனை சமூகம் அழகிய வழிமுறைகளால் தடுத்து நிறுத்துவதும் விதியாக்கப் பட்டுள்ள கடமையாகும்.

விதிவிலக்குகளை நாம் விதிகளாக தாராளமாக கையாள முனைதல் வரம்பு மீறலாகும், அது ஹலாலை ஹராமக்குவதும், ஹராத்தை ஹலாலாக்குவதுமான பாரிய பெரும்பாவமாகும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் ஆழமாக மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு :

இவாறான விதிவிலக்குகள் சார்ந்த மார்க்கத் தீர்ப்புகளை இதுவரை காலமும் உலமாக்கள் தனிநபர்களது சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டே வழங்கியுள்ளனர், நிறுவன ரீதியாக தீர்ப்புக்களை பொதுவாக கூறுவதில் மிகவும் பேணுதலாக  அவதானமாக முன்னெச்செரிக்கையாக அவர்கள் நடந்து கொள்கின்றனர். 

நிர்பந்த நிலைகள் ஆளுக்கு ஆள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன, விதிவிலக்கான அனுமதிகள் ஒருபொழுதும் ஹராத்தை ஹலால் ஆக்குவதாக கொள்ளப் பட முடியாது.

என்னிடம் பலர் தனிப்பட்ட ரீதியில் கேட்கின்ற கேள்விகளிற்கு நான் கூறுகின்ற சில தீர்வுகளை மாத்திரமே இங்கு குறிப்பிட்டுள்ளேன், மேற்படி விடயங்களில் நிச்சயமாக முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன, அவற்றை நான் மதிக்கின்றேன், இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக கற்கவும் தயாராக இருக்கின்றேன், இயன்றவரை நம்பகமான உலமாக்களை அணுகி தனிப்பட்ட விவகாரங்கள் குறித்த வழிகாட்டலை பெற்றுக் கொள்வதோடு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பத்வா பிரிவை நாடுவதன் மூலம்  உங்களிற்கு தேவையான தெளிவுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.  

About the author

Web Writer

Leave a Comment