சமூகம் சிறப்புக்கட்டுரைகள் தகவல் களம்

பொதுத்தளத்தில் செயற்படுவதற்கான 25 வருட இக்ரஃ முன்மாதிரி

Written by Web Writer

பொதுத்தளத்தில் செயற்படுவதற்கான 25 வருட இக்ரஃ முன்மாதிரி

-இஸ்பஹான் சாப்தீன்-

இக்ரஃ இஸ்லாமிய சங்கம் (Iqra Islamic Committee) என்பது குவைத் நாட்டில் இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதானமான ஒரு அமைப்பாகும். தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்களுக்காக வேண்டி 1992 ஆம் ஆண்டு இந்த சங்கம் குவைத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

மார்க்க உணர்வுள்ள சில சகோதரர்கள் ஒன்று சேர்ந்து அப்போது இந்தச் சங்கத்தை தொடங்கினார்கள். குவைத் City யில் இருந்த சில சகோதரர்களை வைத்து ஆரம்பமாக ஒரு வகுப்பு (Class) வடிவத்தில் செயற்பாடுகள் துவங்கி வைக்கப்பட்டன. 1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், குவைத்தில் உள்ள IPC (Islamic Presentation Committee) என்ற நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் ஆதரவுடன் இந்த IIC இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான பணியை விஸ்தரித்தது.

IPC முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் புதிதாக இஸ்லாத்திற்கு மீள்திரும்பியோருக்கும் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனம். அந்தவகையில், இலங்கை முஸ்லிம்களுக்காக வேண்டி தொண்டர்களாக பணிபுரியும் பலரை IIC இணைத்துக் கொண்டது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கென்று எந்தவித தஃவா செயற்பாடுகளும் இருக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டு முஸ்லிம்களும் இதனுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இலங்கையிலிருந்து அஷ்ஷெய்க் M.R.M.முனாஸ் போன்றவர்கள் குவைத்துக்கு வந்து இந்தச் செயற்பாட்டை நிறுவனமயப்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் இக்ரஃ இஸ்லாமிய சங்கம் என்ற பெயரில் ஒரு நிறுவனமாக இது இயங்க ஆரம்பித்தது. பிறகு இந்தச் சங்கம் தமிழ்மொழியில் குத்பா ஓதுவதற்கான அனுமதியை குவைத் அரசிடமிருந்து பெற்றுக் கொண்டது. குவைத் அவ்காப் அமைச்சின் அனுசரனையின் கீழ் தமிழில் குத்பா ஓதுவதற்கான பள்ளிவாயலும் கிடைக்கப் பெற்றது. அந்தப் பள்ளிவாயலில் தொடர்ந்தும் வெள்ளிக் கிழமைகளில் குத்பா பிரசங்கமும் மற்றும் பல நிகழ்ச்சிகளும்; பரவலாகச் செய்யப்பட்டன.

இந்த சங்கத்தின் பிரதானமான நோக்கங்கங்கள்.

1. இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்குஉழைத்தல்.

2. சமூக சேவைகளை மேற்கொள்ளல்.

3. குவைத்திலுள்ள சமூக சேவை நிறுவனங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தல்.

குவைத் போன்ற ஒரு வெளிநாட்டில் வேலை செய்வதனால் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை சாராமல்,குறிப்பிட்ட ஒரு ஜமாத்தை சாராமல் பணி செய்ய வேண்டிய ஒரு தேவையுள்ளது. எனவே, நடுநிலைச் சிந்தனையை உள்வாங்கிய சகோதரர்கள் சேர்ந்து ஒருகுறிப்பிட்ட இயக்க, ஜமாஅத் வட்டத்துக்குள் அல்லாமல் பொதுவான ஒரு தளத்தில் செயற்படுகிறார்கள்.

அதேநேரம், இந்நிறுவனம் குவைத்தில் அவ்காப் அமைச்சின் கீழ் முராகபதுல் ஜாலியாத் (வெளிநாட்டுப் பணியாட்களை கண்காணிக்கும் பிரிவு) பிரிவு வெள்ளிக் கிழமைகளில் அந்தந்த மொழிகளைப் பயன்படுத்தி குத்பா ஓதுவதற்காக வேண்டி பள்ளிவாயல்களை வழங்கியுள்ளது. அதேநேரம் தகுதியான கதீப்மார்களுக்கு குவைத்தின் ஒழுங்கு வரையறைகளுக்கு ஏற்ப குத்பா ஓதுவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.

அந்தவகையில் தற்போது இலங்கை முஸ்லிம்களுக்காக இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் கீழ் நான்கு பள்ளிவாயல்கள் உள்ளன. அந்த நான்கு பள்ளிவாயல்களுக்கும் என கதீப்மார்களும் உள்ளனர்.

இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் நிருவாக கட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதில் பல கல்லூரிகளில் இருந்து வெளியாகியவர்கள், துறைசார்ந்தவர்கள் எனப் பலரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இலங்கை இஸ்லாமிய கலாசாலைகளில் இருந்து வெளியாகியவர்கள், குவைத் பல்கலைக் கழகத்தில் கற்றவர்கள் எனப் பலரும் உள்ளனர். பொதுத்தளத்தில் பணிபுரிவதற்கு இந்த நிர்வாக முறை சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. இக்ரஃ வின் தனித்துவமாக இது பேணப்படுகிறது.

இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் வருகை தரும் உலமாக்கள் அவர்கள் எந்த அமைப்பு சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குஉரையாற்ற இடம் வழங்கப்படுகிறது. தப்லீஃ ஜமாத், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅதுஸ் ஸலாமா என்று எந்த அமைப்பைச் சேர்ந்த ஆலிம்களைக் கொண்டும் சமூகம் பயன்பெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்கிறது.

இந்த வகையில் வளைகுடாவில் உள்ள எந்த ஒரு நாடும் வழங்காத சலுகையை குவைத் நாடு வழங்கியுள்ளது. தனித்துவமாக இயங்கக் கூடிய அனுமதியை அது வழங்கியுள்ளது. இதனால், 2012 ஆம் ஆண்டு இக்ரஃவின் 20 ஆவது நிறைவாண்டுக்கென ஏற்பாடு செயயப்பட்ட விழாவில் குவைத் மக்களுக்கும் அரசுக்கும் நன்றி செலுத்துவதே நோக்காக இருந்தது. அவ்விழாவுக்கு இலங்கையில் இருந்து அஷ்ஷெய்க் ரவுப் ஸெய்ன், அப்போதைய நீதி அமைச்சராக இருந்த ரவுப் ஹகீம் போன்றவர்களை குவைத் அவ்காப் அனுசரனையுடன் வரவழைத்து அவ்விழாவை இக்ரஃ கொண்டாடியது.

2017 ஆம் ஆண்டுடன் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்திற்கு 25 வருடங்கள் பூர்த்தியாகிறது. அந்தவகையில் அவ்காப் அமைச்சுடன் இணைந்து அவர்களது அனுசரனையுடன் 2018 மார்ச் மாதம் 23 ஆம் திகதி 25ஆம் ஆண்டு நிறைவு விழாவை ‘சுக்ரன் அஹ்லல் குவைத்’ (குவைத் மக்களுக்கு நன்றி செலுத்துதல்) என்ற தொனிப்பொருளில் இக்ரஃ ஏற்பாடு செய்துள்ளது.

இந் நிகழ்வு குவைத்தில் உள்ள மஸ்ஜிதுல் கபீரில் (Grand Mosque) நடைபெறவுள்ளது. அதற்கான சிறப்பு விருந்தினர்களாக ஷேக் யூசுப் முப்தி, இலங்கை முஸ்லிம் கலாச்சார விவகார அமைச்சர் அப்துல் ஹலீம், முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் மலிக், அமைச்சரின் ஆலோசகர் அஷ்ஷெய்க் முயினுத்தீன் மற்றும் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் முனாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்விழா மூன்று முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளது.

1. இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்தை வாழ்வொழுங்கை பிரதிபலிக்கக் கூடிய வகையில் ஒருகண்காட்சி.
2. இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் 25 வருட நிறைவு நினைவிதழ் வெளியீடு. இதற்கென இலங்கையில் உள்ள பல்வேறு அமைப்புகள், ஜமாஅத்துகள் தமது வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருக்கிறார்கள்.
3. குவைத் அவ்காப் அமைச்சின் அனுசரணையுடன் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள்.

இக்ரஃ வின் முன்னாள் தலைவராக அஷ்ஷெய்க் முனாஸ் அவர்கள் இருந்துள்ளார்கள். தற்போது அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் மன்ஸுர் அவர்கள் தலைவராக உள்ளார். புதிய நிருவாகத்தில் 13 பேர் உள்ளனர்.

25 வருட நிறைவைக் கொண்டாடவுள்ள குவைத் – இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் மன்ஸுர் அவர்களை மீள்பார்வை சந்தித்த போது, ”வெளிநாடுகளில் இருக்கக் கூடிய இலங்கை வாழ் முஸ்லிம்கள் பொதுவாக தமக்கிடையிலான பேதங்களை மறந்து அதாவது மத்ஹப், இயக்கம், ஜமாஅத் என்ற பேதங்களை மறந்து அவர்கள் ஒரு குடைக்குக் கீழால் உழைக்க வேண்டிய பாரிய தேவையுள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கு ஒரு முன்மாதிரி அமைப்பாக நாம் இக்ரஃவை அறிமுகப்படுத்துகிறோம்.

பொதுவாக இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் குவைத்துக்கு வருகின்ற எல்லாஅறிஞர்களும் இக்ரஃ இஸ்லாமிய சங்கத்தை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். அது சம்பந்தமாக அவர்கள் சொல்லியும் இருக்கிறார்கள். எனவே, இன்னும் இப்படியான இந்த வேலைத்திட்டத்தை வளர்க்க விரும்புகிறோம். நாம் எமது நிருவாக சபையைக் கூட நவீன இஸ்லாமிய சிந்தனையை நடுநிலை சிந்தனையைக் கொண்டவர்களைக் கொண்டே உருவாக்கியுள்ளோம்.

இப்படியான தேவை எல்லா மட்டங்களிலும் உள்ளது. பேதங்களை மறந்து ஒரு பொதுத்தளத்தை உருவாக்கி பணிபுரிவதில் நாம் ஒரு முன்மாதிரியாக செயற்படுகிறோம். இதற்கு உலமாக்கள் சாட்சியாகஉள்ளனர்” என்று இக்ரஃ வின் 25 வருட நிறைவு தின விழாவுக்கான தனது செய்தியை அவர் முன்வைத்தார்.

About the author

Web Writer

1 Comment

Leave a Comment