சமூகம்

வீழ்வது வெட்கமல்ல; வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்

Written by Administrator

 – அனஸ் அப்பாஸ் –

திகன, ரஜவெல்ல, கும்புக்கந்துர, பலகொல்ல, பல்லேகல பஸார், அக்குரணை, அம்பதென்ன, தெல்தெனிய, மெனிக்ஹின்ன, கட்டுகஸ்தொட்டை என நீளும் அண்மைய இனவாதத் தாக்குதல் பட்டியல் இலங்கையை மட்டுமன்றி, சர்வதேசத்திலும் சலசலப்புக்களை தோற்றுவித்து வருகின்றது. அளுத்கம தாக்குதலுடன் நிறைவுபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இனவாத கோரம் கிந்தோட்டையையும் பதம் பார்த்தது. கிந்தோட்டை ஏற்படுத்திய வடுக்கள் ஆற முன்னரே அம்பாறையில் கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை எனும் வதந்தியை ஏற்படுத்தி மீண்டும் இனவாத தாக்குதலுக்கு ரிப்பன் வெட்டப்பட்டது. இதனை மெருகேற்றியது மதுபோதையில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் நிகழ்த்திய திகன சிங்கள சகோதரரின் கொலை.

“மகாசொஹோன்” படையணியாக அமித் வீரசிங்க என்ற நபர் உருவாக்கிய பௌத்த மத காப்பு மற்றும் சிங்கள வர்த்தக மேம்பாட்டுக் குழு இத் தாக்குதல்களை முன்னின்று நடாத்தியதாகக் கூறி போலீசார் அவரை பரிவாரங்களுடன் கைது செய்தது. முகநூல் மூலம் நச்சுக் கருத்துக்களை தொடர்ந்து உமிழ்ந்ததாகவும் இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் இவரது உத்தியோகபூர்வ “மகாசொஹோன்” அலுவலகம் ஒன்றும் திகனையில் பகிரங்கமாக இயங்கி வந்துள்ளது.

அரசாங்கம் இவற்றை கட்டுப்படுத்துவதாக சில நியாயங்களை முன்வைக்கின்றது. இழப்பீடுகளை அறிவிக்கின்றது. அரசியல் ரீதியான அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக இன்னொருவர் மீது அல்லது ஒரு குறித்த கட்சி மீது சேறுபூசும் சந்தர்ப்பவாத நிகழ்வாக சிலர் இதனை பயன்படுத்தும் நிலையில், கடந்தகால அனுபவங்களுடன் ஒப்பிட்டு எதிர்கால திட்டமிடலை மேற்கொள்ளும் நிதான நிலையில் இங்கு பெரும்பாலானோர் இருப்பதாகத் தெரியவில்லை.

தாக்குதல் நடைபெற்ற இடங்களின் கள ஆய்வை மேற்கொண்டதில் பாதிக்கப்பட்ட மக்களிடம் காணப்பட்ட சில மனப்பதிவுகளை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

 1. காவல் நிலையத்தில் பலர் தமது சொத்து இழப்புக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை. பொலிசார் மிக நன்றாக அறிந்த இழப்புக்களை ஏன் அவர்களிடம் மீண்டும்போய் கூற வேண்டும் என்கின்றனர் சிலர்.
 2. ஜம்இய்யத்துல் உலமா தலைமையிலான நிவாரண ஒருங்கிணைப்புக் குழு (RCC) பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பள்ளிவாயல்களில் தகவல் திரட்டல் மையங்களை அமைத்துள்ளது. இதன்மூலம் நிவாரண முகாமை, இழப்பு விபரம் மேற்கொள்ளப்பட்டுவருவதால் இதில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
 3. தமது வீடுகளையும், வர்த்தக மையங்களையும் பாதுகாப்பதாக கூறி பொலிசார் தம்மை வெளியாகக் கூறியதன் பின்னரே தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இத்தாக்குதல்களுக்கு துணை போன கசப்பான உண்மையையும் மக்கள் தெரிவித்தனர்.
 4. பௌத்த மக்களின் வர்த்தக நிலையங்களோ, பௌத்த மக்களின் வீடுகளோ தாக்குதலுக்கு உள்ளாகாதவாறு உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியுடனே இவ் இனவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
 5. தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் பௌத்த நபர்கள் சுதந்திரமாக இன்றும் ஊரில் சுற்றித் திரிவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதில் பௌத்த வர்த்தகர்களும் அடங்குவர். இதற்கான தெளிவான CCTV ஆதாரங்களையும் தெரிவிக்கின்றனர்.
 6. தாக்குதல் நடாத்தும் பிரதேச எல்லையை ஏற்கனவே பௌத்த கொடிகளை ஊரெங்கும் பறக்கவிட்டு தாக்குதல் கள தயார் நிலையை உறுதிசெய்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.
 7. (பௌத்தர்கள் செறிவாக வாழும்) வெளி ஊர்களில் இருந்து பெரும்பாலான தாக்குதல்தாரிகள் வருகை தந்துள்ளனர். இது சுமார் 4000 பேர் அளவில் இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
 8. “முகங்களை மூடிக்கொண்டு தாக்குதல் நடாத்துங்கள்” என்று இராணுவ அதிகாரி ஒருவர் முகநூலில் வெளியிட்ட செய்தியொன்றும் பதிவாகியுள்ளதுடன், தாக்குதலின்போது விரைவாக தாக்கிவிட்டு செல்லுமாறு சில இராணுவ அதிகாரிகள் பணித்ததாகவும், பல இராணுவ அதிகாரிகள் தாக்குதல்களின்போது அமைதியாக அவதானித்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
 9. தாக்குதல் தொடர்பாக பொலிசாருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டும், மேல் இடத்து உத்தரவுக்காக காத்திருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கூறியிருக்கின்றார்.
 10. பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்குகள் தொடர்பாக நல்ல அபிப்ராயம் கூறப்பட்டபோதும், பௌத்த இளைஞர்கள் தொடர்பில் சந்தேகம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு இது ஒரு திட்டமிட்ட இனவாத செயற்பாடு என்பதை கள நிலவரங்கள் உறுதி செய்கின்றன. “தெல்தெனியவில் இருந்து 17 KM தொலைவில் இருக்கும் திகனை பிரதேசத்திற்கு (முகநூல் நேரடி ஒளிபரப்புடன்) ஊர்வலமாக வருகை தரும் இனவாத சக்தியை முன்னறிவித்தல் கிடைத்தும் தடுக்காத பாதுகாப்புத் துறை மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது?” என்கிற ஏக்கம் பலரை ஆட்கொண்டிருந்ததை கண்டோம். இவ்வாறான பாதக செயல்கள் இத்துடன் முற்றுப்பெறுமா என்று கேட்டால் யாரும் “இல்லை” என்றே பதில் கூறும் கடப்பாட்டை உருவாக்கியிருக்கிறது அதிகரிக்கும் இனவாத அலை. இந்நிலையில் தீர்வுகளைத் தேடும் பயணத்தில் சமூகம் கவனக் குவிப்பு செய்கின்றது.

 • CCTV கெமராக்களை பொருத்துதல்.
 • பிரதேச மட்ட சமாதான குழுக்களை அமைத்தல்.
 • இஸ்லாம் அங்கீகரித்த அனர்த்த காப்புறுதி செய்தல்.
 • சமூகத்துக்கான தலைவர்களை உருவாக்குதல்.
 • சமூகத்துக்காக குரல்கொடுக்கும் ஒரு தொலைக்காட்சி (மீடியா) உருவாக்கம்
 • இறைவனுடனான தொடர்புகளை அதிகரித்தல்.
 • அரச துறைகளில் சிறுபான்மையின் பிரதிநிதித்துவத்தை கூட்டல்.
 • வாழ்க்கை விழுமியங்களை, பண்பாடுகளை, சகவாழ்வை பேணல்.
 • போதைப்பொருட்களை தவிர்த்தல்.

என தீர்வுகளும் பலவாறாக பட்டியலிடப்படுகின்றது.

பல இனவாத அனுபவங்களைக் கடந்தும் இதுவரை முறையான சமூக பாதுகாப்பு பொறிமுறைளில்’ உயர்மட்டங்கள் கரிசனை காடுகின்றதா என்பதற்கு திருப்தியான பதில்கள் இல்லை. தனது கடைக்குள் முஸ்லிம் அயலவர்களை தஞ்சம் கொடுத்து பாதுகாத்த கண்டிய சிங்கள சகோதரியின் முன்மாதிரியையும், ஆனமடுவையில் தாக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தக நிலையத்தை மீள கட்டியெழுப்பிய பௌத்த மக்களின் முன்மாதிரியையும் தாண்டி, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையை இனவாதத்திலிருந்து பாதுகாக்கும்  செயன்முறை வழிகாட்டல்களை வழங்கும் பொறுப்பை நாம் யாரிடம் கொடுப்பது?

 

About the author

Administrator

Leave a Comment