சமூகம் ஷரீஆ

தீக்கரையாகும் சொத்துக்கள் மீதான காப்புறுதி தவக்குளுக்கு முரண் அல்ல.

Written by Web Writer

தீக்கரையாகும் சொத்துக்கள் மீதான காப்புறுதி தவக்குளுக்கு முரண் அல்ல.

முஹம்மத் பகீஹுத்தீன்

இன்சூரன்ஸ் எனும் காப்புறுதி முறைமை அடிப்படையில் இஸ்லாம் வரவேற்கின்ற ஆகுமான ஒரு விடயமாகும். இது கழா கதர் எனும் விதியை நம்புதல் என்ற கேட்பாட்டுடன் முரன்படுவதில்லை. அவ்வாறே காப்புறுதி தவக்குளுக்கு முரணான ஒரு செயற்பாடும் அல்ல.

பொதுவாக மனித வாழ்கையில் மனங்கவரும் விடயங்கள் நிகழ்வது போலவே வெறுப்புக்குரிய நிழக்ழ்வுகளும் நடைபெறும். ஒரு முஸ்லிம் இரு நிலைகளையும் திருப்தியோடு எதிர்கொள்வான்.

விருப்பத்துக்குரியதாக இருந்தால் இறைவன் ஏற்பாடான விதியை முழுமையான மனத் திருப்தியுடன் ஏற்று நன்றியுடையவனாக இருப்பான்.

வெறுப்புக்குரிய விடயமாக இருந்தாலும் விதியை திருப்தியோடு ஏற்றுக் கொள்வதுடன் மிகுந்த பொறுமையுடன் கவலைகளை மிகைத்து வாழ்வான்.

ஆனால் வெறுப்புக்குரிய நிகழ்வுகளின் போது திருப்தியுடன் ஏற்று வாழும் முஸ்லிம் அதன் விளைவுகளை தவிர்ப்பதற்கும் அல்லது குறைப்பதற்கும் கண்டிப்பாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவான். விரும்பத்தகாத அந்த நிகழ்வு ஏன் வந்தது என்றும் இனி வராமல் தவிர்க்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிந்திப்பான். இது விதிக்கு முரண்படுவதல்ல என்பது தெளிவு.

உதாரணமாக வறுமையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதனை ஒழிப்பதற்கு போராடுவது இயல்பு. பொருளாதார நெருக்கடி, அல்லது, விபத்து விரும்பத்தகாத நிகழ்வுகள். அதன் தீய விளைவுகளை எதிர்த்துப் போராடுமாறே இஸ்லாம் தூண்டுகிறது. இந்த வாழ்கைப் போராட்டத்தை மனித இயல்பு பிழையாக காணுவதில்லை.

இந்த வகையில் ஆயுள் காப்புறுதி, சொத்துக்களையும் உடமைகளையும் காப்புறுதி செய்வது போன்ற அனைத்துவகையான காப்புறதி வகைகளும் இழப்புக்களை குறைப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.

இது நவீன காலத்தில் பரவலாக காணப்படும் இழப்பீடு நடவடிக்கையாக உள்ளது. இதனை அடிப்படையில் இஸ்லாம் தடைசெய்ய வில்லை. பதிலாக இத்தகைய தற்காப்பு சிந்தனையை தூண்டியுள்ளது.

இன்று வழக்கில் உள்ள காப்புறுதி என்பது ஒரு தனி மனிதன் அல்லது நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் எதிர்காலத்தில் நிகழலாம் என்று கருதும் இழப்பை தவிர்ந்து கொள்வதற்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை காப்புறுதிக் கம்பணிக்கு வழங்குவதன் ஊடாக குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்புக்கள் வரும்போது கம்பணி அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று செய்து கொள்ளும் இரு தரப்பு உடன்படிக்கையாகும். இது இஸ்லாமிய சட்டத்தில் எந்த விதத்திலும் தடை செய்யப்பட ஒன்றல்ல.

இந்த ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவது விதிக்கு முரணும் அல்ல தவக்குளுக்கு முரணும் அல்ல. குறித்த கம்பணி மீது நம்பிக்கை வைத்தல் என்ற குருட்டு நம்பிக்கையும் அல்ல.

காப்புறுதி செய்தாலும் செய்யாவிட்டாலும் இறைவன் ஏற்பாட்டால் நடப்பதை யாரும் தடுக்க முடியாது. அனைத்தும் இறை நாட்டப்படியே நடக்கிறது என்பது முஸ்லிமின் விசுவாசமாகும்.

எனவே காப்புறுதி ஒழுங்கு அந்த நம்பிக்கைக்கு எதிரானது அல்ல. விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது நஷ்டங்களை தவிற்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கு பரஸ்பர உதவி என்ற வகையில் காப்புறதிக் கம்பணி இணக்கம் கண்ட ஒப்பந்தத்தின் படி நஷ்டத்திற்கு இழப்பீடு தருகிறது. இது ஷரீஆ அங்கீகாரம் பெற்ற கூட்டுப் பராமரிப்பு முறையாகும்.

உதாரணமாக சுத்தம், சுகாதராம், சூழல் பராமரிப்பு போன்ற வழிமுறைகள் மனிதனுக்கு நோய் நோடிகளின்றி வாழ்வதற்கான தற்காப்பு வழிகளாகவே இஸ்லாம் அறிமுகம் செய்துள்ளது.

இருந்தும் நோய்கள் வரத்தான் செய்கின்றன. அப்படி நோய் வருவது அல்லாஹ்வின் ஏற்பாடு. அதனை கதர் என்று திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளும் மனிதன் நோய்க்கு மருந்து எடுக்காமல் இருப்பதில்லை. அதற்கு தகுந்த வைத்தியரை நாடிச் செல்வது இயல்பானதே. இதன் பொருள் வைத்தியர் மீது நம்பிக்கை வைப்பது அல்ல.

அவ்வாறே வீட்டை கட்டிவிட்டு வாயிற்காப்பாளர் நியமிப்பது அல்லது தற்காலத்தில் cctv கெமராக்களை பொருத்துவது தவக்குளுக்கு முரணானது என யாரும் யோசிப்பதில்லை.

காரணம் தவக்குள் என்பது முடியுமான அனைத்து மனித முயற்சிகளையும் எடுத்ததன் பின்னர் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதாகும். இவ்வாறுதான் தவக்குள் வைக்க வேண்டும் என நபிகளார் நடைமுறையில் காட்டித் தந்துள்ளார்கள்.

முதலில் ஒட்டகத்தை கட்டு பின்னர் அல்லாஹ்விடம் தவக்குள் வை என இறை தூதர் (ஸல்) வழிகாட்டியுள்ளார்கள். அவ்வாறே நபிகளார் (ஸல்) அவர்கள் பத்ர் யுத்தத்தின் போது முடியுமான சகல முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் இறைவனிடம் மன்றாடினார்கள்.

பொதுவாக காப்புறுதி முறைகளுள் ஆயுள் காப்புறுதி குறித்து பிழையான புரிதல் காரணமாக அதனை கடுமையாக தடுக்கும் சிந்தனை பரவலாக உள்ளது.

உண்மையில் ஆயுள் காப்புறுதி என்பது கழா கதருக்கு முரணான ஒரு ஒப்பந்தமன்று. காப்புறுதியால் விதியை வெல்லவும் முடியாது ஆயுளை கூட்டவும் முடியாது. ஒரு ஆத்மாவின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் முடிவடைந்தால் மரணத்தை அது சுவைத்தே தீரும். இது எமது ஈமானாகும்.

இங்கு ஆயுள் காப்புறுதி என்பது மரணித்வரின் பொறுப்பில் வாழும் வாரிசுகளின் கஷ்டங்களை நீக்குவதற்கும் குறைப்பதற்கும் செய்து கொள்ளும் ஒப்பந்தமாகும்.

ஒப்பந்தத்தின் படி மரணித்தவரின் இழப்பீட்டுப் பங்கை பெறுவதற்கு நம்பிக்கையாளராக நியமிக்கப்பட்டவர் இறந்தவரின் வாரிசுகளுக்கு உரிய முறையில் காப்பீட்டின் மூலம் பெற்ற தொகையை பிரித்துக் கொடுப்பார். இதனைத்தான் ஆயள் காப்புறுதி என்பர். இந்த முறையும் இஸ்லாம் அங்கீகரித்த இழப்பீட்டு முறையாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஸஈத் பின் வக்காஸ் (ரழி) அவர்களுக்கு உபதேசம் செய்த போது ‘உனது பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும்படி வாழவிட்டுப் போவதை விட வசதியானவர்களாக விட்டுச் செல்லுதல் சிறந்ததாகும்’ என்று கூறிய ஹதீஸ் புகாரியில் பதிவாகியுள்ளது.

இங்கு பிரச்சினை யாதெனில் நடைமுறையில் உள்ள பராம்பரிய காப்புறுதி கம்பணிகளில் காப்புறுதி செய்வதாகும்.

இது குறித்து அறிஞர்களிடையே மூன்று நிலைப்பாடுகள் உள்ளன. அனைத்து வகையான பாரம்பரிய காப்புறுதி வகைகளும் ஹராம் ஆகும் என பல அறிஞர்கள் கூறுவர். இந்த நிலைப்பாட்டில் உள்ள அறிஞர்கள் தான் அதிகம்.

இன்னும் சிலர் நிர்ப்பந்த சூழ்நிலையில் அனுமதி வழங்கியுள்ளனர். ஹராம் என்று கூறிய பலரும் இலங்கை போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் நிர்ப்பந்த சூழல்நிலை என்ற விதிக்கமைய பாரம்பரிய காப்புறுதி கம்பணிகளில் இழப்பீடுகளை பெறுவதற்காக ஒப்பந்தம் செய்வதை ஆகும் என்றே கூறியுள்ளனர். இலங்கையின் இன்றைய சூழலில் காப்புறுதி ‘சமூக தேவை’ என்ற நிலைக்கு மாறியுள்ளதால் அது ஆகும் என்பதில் முரண்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

முன்றாவது சாரார் பாரம்பரிய காப்புறுதி ஒழுங்கு அனுமதிக்கப்பட்டதே என்பதை அழுத்தமாக கூறியுள்ளனர். இந்தக் கருத்து தற்காக சூழலில் இலங்கைக்கு பொருத்தமான கருத்தாகும்.

இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கும் தகாபுல் காப்புறுதி அமைப்பையே தற்காலத்தில் பெரும்பான்மையான அறிஞர்கள் ஆகும் என்றும் அதற்கான பூரண விளக்கங்களையும் வழங்கிவருகின்றனர். தகாபுல் காப்புறுதி ஒழுங்குமுறை காலத்தின் தேவையை நிவர்த்தி செய்யும் அளவிற்கு இலங்கையில் வியாபிக்க வில்லை. அதேவேளை பாரம்பரிய காப்புறுதி ஒழுங்கில் பங்கு கொள்வது இன்றைய போராட்ட உக்தியாகவும் பேணப்பட வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையில் தகாபுல் முறை காப்புறுதி நாட்டின் எட்டுத்திக்கிலும் பரவலாக அறிமுகம் இல்லாத நிலை காணப்படுகிறது. முஸ்லிம்களின் சொத்துக்களை அழிக்க வேண்டும் என்ற இனவாதிகளின் திட்டமிட்ட நாசகாரச் செயற்படுகளை எதிர்த்து போராடும் ஒரு உக்தியாக பாராம்பரிய காப்புறுதியை தெரிவு செய்வது காலத்தின் தேவையாகும். அது ஹராம் என்ற வட்டத்தில் வைத்து நோக்குபவர்களும் குறிப்பிட்ட போர்க்கால சூழலில் ஆகும் என்று திறந்து கொடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைவதை உணர்த்துவதற்கும் இழப்பீட்டில் நாட்டு மக்கள் யாவரும் பங்கெடுக்கும் வாய்பு ஏற்படுவதால் அவர்களாகவே நாசகார செயல்களை தவிற்பதற்கும் ஏதுவாக அமையலாம்.

முஸ்லிம்களின் சொத்துக்கள் இனவாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கையால் தீக்கரையாகும் போது உடனே உதவுகின்ற மனிதாபிமான உள்ளங்களை பாராட்டுகின்றோம்.

நாட்டின் நாலாபாகங்களிலும் சிதறி வாழும் முஸ்லிம் குடும்பங்கள் அநேகமாக கைக்கும் வாய்க்குமான நிலையில் தான் வாழ்கின்றனர். விலைவாசி அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் கல்வி, மருந்து, போக்குவரத்து, பிள்ளைவளர்ப்பு, பல்வகை வரிச்சுமைகள் என பல பொருளாதார சுமைகளுடன் வாழும் மக்கள் காப்புறுதிக்காக ஒரு பங்கை ஒதுக்குவது என்பது எதிர்ப்பர்க்க முடியாத ஒன்று.

எனவே சூழ்நிலையை கருத்திற் கொண்டு முஸ்லிம்களின் சொத்துக்களை காப்புறுதி செய்வதற்காக நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் அல்லது இழப்புகளின் போது சேரும் நிதியிலிருந்தும் இழப்பீடுகளை வழங்கும் அதே நேரம் பாரம்பரிய காப்புறுதியும் செய்து கொடுப்பது காலத்தின் தேவையாகும். இது இன்று பரவிவரும் இனவாதிற்கு எதிரான போராட்ட உக்தியுமாகும். ஷரீஆவின் பார்வையில் ஹராம் என்ற கருத்தில் இருப்பவர்களும் இந்தக் காலத்தில் மாத்திரம் தடுக்கப்பட்டதை திறந்து கொடுப்பது குர்ஆனிய சிந்தனைக்கு முரண் அல்ல.

பாரம்பரிய காப்புறுதி ஒழுங்கு சமூகத் தேவை நிமித்தம் ஆகும் என்ற கருத்தை உள்வாங்கும் போது பிரச்சினையே கிடையாது. இது குறித்து கலாநிதி நயீம் அவர்கள் எழுதிய ஆய்வு காத்திரமானது. அவருடைய ஆக்கத்திலிருந்து சில பகுதிகளை கீழே தருகின்றேன்.

காப்புறுதியை ஆகுமானது என்போர் தமது கருத்துக்கு பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்:

1. காப்புறுதி ஒரு புதிய ஒப்பந்த முறைமை. வணக்க வழிபாடுகள் போல அல்லாது, உடன்படிக்கைகளில் புதிய ஒப்பந்த முறைமைகள் ஆகுமானது என்பது ழாஹிரி மத்ஹப் தவிர்ந்த ஏனைய அறிஞர்கள் ஏகோபித்து ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய சட்ட அடிப்படையாகும். ஆகவே இது குர்ஆனிலோ சுன்னாவிலோ இல்லாத புதிய ஒப்பந்த முறைமை என்ற அடிப்படையில் இது ஹராமானதாக கருதப்பட முடியாது. இன்னும் இதன் மூலம் சமூக பொது நலன் பாதுகாக்கப்படுகின்றது. புதிய ஒப்பந்த வடிவங்கள் இஸ்லாம் தடைசெய்துள்ள வட்டி, தீங்கு, செல்லுபடியற்ற நிபந்தனைகள் என்பவற்றிலிருந்து நீங்கியிருப்பின் அவை ஆகுமான உடண்படிக்கையாக கருதப்படும்.

2. இது பாதுகாப்புக்காக ஒருவரை கூலிக்கு அமர்த்துவது போன்றதாகும். ஏனைய பௌதீக ரீதியாக உழைப்பு போன்றதொரு தொழில் அல்ல இது. பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவதன் மூலம் பாதுகாக்கப்படுவோருக்கு, நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படும் அபாயங்களில் இருந்து பாதுகாப்புணர்வையும் மன அமைதியையும் வழங்குகின்றார். அதற்காக கூலி வழங்கப்படுகின்றது. காப்புறுதியிலும் இது போன்று நிகழலாம் என எதிர்பார்க்கப்படும் அபாயங்களில் இருந்து பாதுகாப்பையும், அது குறித்த மனநிம்மதியையும் பெற்றுக் கொண்டு தவணை முறையில் அதற்கு கூலி கொடுக்கப்படுகின்றது. ஆகவே காப்புறுதி பாதுகாப்புக்காக ஒருவரை அல்லது கம்பனியை கூலிக்கு அமர்த்துவது போன்றதாகும்.

இந்த ஆதாரத்துகு எதிராக, சடரீதியற்ற, மானிசீக விடயங்களை விற்பது ஆகுமானதல்ல என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. (பில்தாஜி, உகூத் அல் தஃமீன், ப 132.)

பாதுகாப்பு வழங்குதல் வெறுமனே மானுசீகமான விடயம் மாத்திரமல்ல. திடீரென நடை பெரும் அத்துமீறல்கள், தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து அவற்றை முறியடிக்க வேண்டும். ஆனால் இத்தகைய அத்து மீறல்களும் தாக்குதல்களும் நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம்.
இஸ்லாமிய சட்டத்தில் இன்னும் பல மானுசீக அம்சங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, புத்தகங்களின் பதிப்புரிமை, வியாபார நற்பெயர் (Goodwill) என்பன விற்பனை செய்யப்பட முடியும் என முஃதமர் இஸ்லாமியின் பிக்ஃ மனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது. (சஞ்சிகை, முஃதமர் இஸ்லாமியின் பிக்ஃ மனறம், இதழ் 5, பக் 2581, தீர்மானம் 5.) இது போன்றே பாதுகாப்பு வழங்குவதும் ஆகுமானதாகும்.

3. காப்புறுதி தவறுதலாக நடக்கும் கொலைக்கான நஷ்டஈடு (தியத்) எனற விடயத்துடன் ஒப்பீடு (கியாஸ்) செய்யப்படுகிறது. அதாவது, நபி (ஸல்) தவறுதலாக நடைபெறும் கொலைக்கான தீர்வாக அதற்கான நஷ்டஈட்டை கொலையாளியின் கோத்திரமோ, குடும்பமோ அல்லது இரத்த உறவு பந்தங்களோ (ஆகிலா) வழங்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியமை ஸஹீஹான அறிவிப்புகளில் வந்துள்ளது. இது குறிப்பிட்ட கொலையாளியின் நலன் மற்றும் பரஸ்பர உதவி என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்வாகும். இத்தகைய ஒரு முறைமை குறித்த ஒப்பந்தம் மூலமாக நடைபெறுவதே தற்போதய காப்புறுதி முறைமையாகும். தவறுதலாக கொலைசெய்தவருக்கு ஏற்பட்ட தீங்கை தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் விதித்த நலன், விரிவான வகையில் ஒப்பந்தம், பரஸ்பர கொடுக்கல் வாங்கல் மூலமாக நடைமுறைப்படுத்துவதும் பெரும் நலனாகவே இருக்கின்றது என முஸ்தபா அல் ஸர்கா அவர்கள் வாதிக்கின்றார்கள்.

இதன் மூலம் கொலையாளிக்கு ஏற்பட்ட துன்பமொன்று பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் நீக்கப்படுவது போன்று காப்புறுதி செய்தவரின் துன்பமும் நீக்கப்படுகின்றது.

4. காப்புறுதி முறைமை ஓய்வூதிய சம்பளத்துடன் ஒப்பீடு (கியஸ்) செய்யப்படுகின்றது. ஓய்வூதியத்தில் தொழிலாளர்களின் சம்பளத்தில் சிறிய தொகைப்பணத்தை மாதாந்தம் ஒதுக்கப்பட்டு வருகின்றது. எந்தளவு தொகை செலுத்தப்படுகிறது, எந்தக் காலம் வரை செலுத்தப்படும்? என்பன போன்ற அம்சங்கள் அறியப்படாமல், ஓய்வூதியம் பெரும் தொகை செலுத்திய தொகைக்கு அதிகமாகவோ குறைவாகவோ அமைய முடியும். இதனை பொது நலனை அடிப்படையாக கருதி சட்ட அறிஞர்கள் ஆகுமானது என தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். (அல் கரதாகி, அல் தஃமீன் அல் இஸ்லாமி, பக் 30.) ஆகவே ஓய்வூதியம் ஆகுமானது எனின் காப்புறுதியும் ஆகுமானதாகவே கருதப்பட வேண்டும்.

5. பொது நலன் (மஸ்லஹா ஆம்மா) காப்புறுதி மூலம் பாதுகாக்கப்படுகின்றது. இது இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கும் அடிப்படைகளில் ஒன்றாகும். வியாபாரத்துக்கு கிடைக்கும் பாதுகாப்பு உத்தரவாதமானது செல்வத்தைப் பாதுகாகும் வழிமுறையாகும்.

6. காப்புறுதி நவீன கால வியாபாரத்தில் அத்தியவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. ‘அத்தியவசியங்கள் தடுக்கப்பட்டவற்றை ஆகுமாக்கும்’ என்ற இஸ்லாமிய சட்ட விதிக்கமைய காப்புறுதியின்றி பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபடுவது அபாயமான நிலையாகும். (அபுல் பழ்ல் ஹானி, அல் தஃமீன் வ அன்வாஉஹூ அல் முஆஸரா, தருல் அஸமா, திமஷ்க், 2009, பக் 85.)

7. காப்புறுதியானது கூலி கொடுத்து அடமானம் வைப்பது போன்றதாகும். அடமானம் தொலைந்து அல்லது அழிந்து போனால் அதற்கு உத்தரவாதம் கிடைக்கின்றது. அபாயங்களில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு தொகைப்பணம் அறவிடப்படுகிறது. (ஸஃதி அபூ ஜைப், அல் தஃமீன் பைன அல் ஹழரி வ அல் இபாஹா, தாருல் பிக்ரி, திமஷ்க், ஹி1403, பக் 62-65.)

இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற முக்கியமான சவால்களில் ஒன்று, அவர்களது வியாபார தளங்களையும் உடமைகளையும் பெரும்பான்மை சமூகத்தின் இன, மத தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதாகும். அண்மைக்கால தாக்குதல்களில் பல கோடி நஷ்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம்கள் அவர்களது சொத்துக்களையும் உடமைகளையும் பாதுகாப்பது இஸ்லாமிய ஷரீஆவின் ஐம்பெரும் இலக்குகளில் ஒன்றாகவும், அவற்றைப்பாதுகாப்பது அத்தியவசியமானதாகவும் கருதப்படுவதனால், இந்த சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம்கள் தமது வியாபார சொத்துக்களை காப்புறுதி செய்வதன் மூலம் பாதுகாத்துக் கொள்வது மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஆகுமான காரியமாக கருதப்பட முடிகின்றது.

மேற் கூரிய ஆய்வினை கலாநிதி நயீம் அவர்கள் பாரம்பரிய காப்புறுதி ஒழுங்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் ஈடுபடலாம் என்பதை விளக்கியள்ளார். அவருடைய முழுமையான ஆக்கம் இணைய தளத்தில் உலாவருகிறது.

உண்மையில் பாரம்பரிய காப்புறுதி முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி இஸ்லாமிய தகாபுல் ஒழுங்கை இஸ்லாமிய அறிஞர்கள் அறிமுகம் செய்துள்ளார்கள். அறபுலகிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் அந்த தகாபுல் முறைமை காணப்படுகிறது.

இந்த ஆய்வின் நோக்கம் காப்புறுதி சிந்தனை குறித்து மக்களை விழுப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

இன்று வரை, பல தடவைகள் கோடிக்கணக்கான சொத்துக்கள் தீக்கரையாகியும் கூட அவற்றுக்கான காப்புறுதி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படையில் இன்னும் காணப்பட வில்லை.

அதற்க பிரதான காரணம் காப்புறுதி என்பது குர்ஆனிய சிந்தனைக்கு முரணான ஒரு நடடிவக்கை என்று பிழையாக விளங்கியிருப்பதாகும்.

அவ்வாறே அநேகமான முஸ்லிம் சகோதரர்கள் தவக்குள் என்ற சிந்தனையை பிழையாக பிரயோகித்து வருவதும் காப்புறுதி செய்வதை விட்டும் அவர்களை தூரமாக்கியுள்ளது.

இழப்புக்களை தவிர்ப்பதற்கு முயற்சிப்பது என்பது இஸ்லத்தின் மூலவேர்களில் உள்ளதாகும். சொத்துக்களையும் உயிர்களையும் மார்க்கத்தையும் மானத்தையும் பரம்பரையையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அல்குர்ஆன் ஷரீஆ சட்டங்களை வகுத்து தந்துள்ளது.

இந்த உண்மைகளை புரிந்து காலத்தின் தேவையை முதன்மைபடுத்தி முஸ்லிம்களின் சொத்துக்களை காப்புறுதி செய்வதற்கு நிதி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற சிந்தனையை தூண்டுவதும் அதற்கு இஸ்லாமிய ஷரீஆ சட்ட அங்கீகாரம் இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவதுமே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

About the author

Web Writer

Leave a Comment