உள்நாட்டு செய்திகள் சமூகம் சிறப்புக்கட்டுரைகள் வியாபாரம்

மல்வத்தை கடையெரிப்பு: கவனத்தை திசைதிருப்பும் முயற்சியா?

Written by Web Writer

மல்வத்தை கடையெரிப்பு: கவனத்தை திசை திருப்பும் முயற்சியா?
-மெய் விளம்பி-

சம்பவம்

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஹாரிய, மல்வத்த என்ற இடத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கடை கடந்த 1ஆம் திகதி ஞாயிறன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கண்டி, ஹன்தானையை சேர்ந்த நிஷான்த என்கின்ற சந்தேக நபர் கடந்த 2ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் கடை உரிமையாளர் 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர்கள் 4ஆம் திகதி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. திஹாரிய மல்வத்தை சிங்கள சகோதரர் ஒருவரது கட்டிடத்தை குத்தகைக்கு பெற்ற முஸ்லிம் ஒருவரின் கடையே தீயினால் எரியுண்டு சேதமடைந்துள்ளது. கடையில் கிட்டத்தட்ட 15 மில்லியன் பெறுமதியான பொருட்கள் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசாரணை

தீவைக்கப்பட்ட கடையினுள் இருந்து கேஸ் லைட்டர் ஒன்றும், அந்தக் கடைக்குப் பக்கத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கையடக்க தொலைபேசியொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. கையடக்கத் தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்ட இலக்கங்களை பரிசோதித்த பொலிஸார், தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அதிகாலை 5.30 மணியாகும் போதே கையடக்கத் தொலைபேசிக்கு சொந்தக்காரர் யாரென்பதை கண்டுபிடித்துள்ளனர். இவர் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்திய நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள், இந்த நபர் கண்டி, ஹன்தான பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டனர். கடந்த ஞாயிறன்று (01) மாலை வேளையில் ஹன்தான பிரதேசத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எனினும் கையடக்கத் தெலைபேசிக்கு சொந்தக்காரரது முகவரியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து ஹன்தானை, கண்டி நகர்ப் புறப்பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபர் நிஷான்த என்னும் பெயரையுடையவர் என்பதும் அவர் பழைய ஆடைகளை கொண்டு வந்து கண்டி லுஆடீயு கட்டிடத்தில் விற்பனை செய்து வருபவர் என்பதும் தெரிவந்துள்ளது. நிஷான்த காயமடைந்து வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியை அறிந்த பொலிஸார், முதலில் பேராதனை வைத்தியசாலையிலும் அதன் பின்னர் கண்டி வைத்தியசாலையிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஈற்றில் நிஷாந்த என்ற பெயரையுடைய ஒருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்டனர். இரு கை, கால்கள் உள்ளிட்ட முகப்பகுதி தீக்காயங்களுக்கு உட்பட்டிருப்பதையும், கை கால்களுக்கு பெண்டேஜ் போடப்பட்டுள்ளதையும் பொலிஸார் கண்ணுற்றுள்ளனர். உடனடியாக அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட முகவரியை உறுதியாக தெரிந்துகொள்ள முடியாமல் போயுள்ளது. பொலிஸாரின் இந்த தேடுதல் நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட செயல்

மறுநாள் (02) திங்கட்கிழமை காலையில் பொலிஸார் நிஷாந்தவின் மனைவியிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது நிஷாந்தவின் மனைவி பல்வேறு தடவைகளில் கடை உரிமையாளருடன் தொலைபேசியில் உரையாடியது தெரியவந்துள்ளது. நிஷாந்தவுக்கும் கடை உரிமையாளருக்குமிடையில் முன்பிருந்தே தொடர்புகள் இருந்து வந்திருப்பதை பொலிஸார் விசாரணையினூடாக அறிந்துள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் படி இதுவொரு திட்டமிடப்பட்ட செயல் என தெரியவந்திருப்பதாக நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திஹாரிய பள்ளிவாசலில் கடந்த 3ஆம் திகதி இரவு நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்தார். ஏப்ரல் 2ஆம் திகதி தீப்பற்றிய இடத்தில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மேற்கொண்ட தடய விசாரணைகளிலும் இதில் திட்டமிடப்பட்ட சதியொன்றிருப்பது உருதிப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளின் படி, இற்றைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிப்போன் செரமிக்ஸ் உரிமையாளரும் நிஷாந்த என்கின்ற நபரும் யக்கலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தித்துள்ளனர். நிஷாந்த முன்பிருந்தே வியாபார நோக்கில் யக்கலைப் பிரதேசத்திற்கு வந்து செல்பவராக இருந்துள்ளார். நிஷாந்தவுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளும் நிப்போன் செரமிக்ஸ் உரிமையாளர் ஆடை வியாபாரம் செய்வது குறித்தும் உரையாடியுள்ளார். இவ்வகையிலேயே இருவருக்கிடையிலுமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் கடந்த 29ஆம் திகதியும் இருவரும் சந்தித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், கடைக்கு தீயிட்ட நிஷாந்த என்கின்ற நபர் பஸ்ஸிலேயே திரும்பிச் சென்றுள்ளார். அத்தோடு ரதாவடுன்ன பகுதியில் கடையொன்றில் தவறவிட்டுச் சென்றிருந்த பணப்பையொன்றும் கண்டெடுக்கப்பட்டிருந்தது. இவர் பஸ்ஸில் பயணித்த நேரம், பணப்பை தவறிய நேரம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் ஒன்றோடொன்று தொடர்புபடுவதாலும், கடை உரிமையாளர் ஹூஸைன் என்பவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களை வைத்துப்பார்க்கும் போதும் இது திட்டமிடப்பட்ட சம்பவம் என்பது தெரிவதாகவும் நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிங்கள முஸ்லிம் பிரச்சினையை மூட்டுவதற்கு சிங்களவர் ஒருவர் கடைக்கு தீயிட்டார் என்பதற்கு எவ்வித ஆதாரங்களுமில்லை என்றும் இது தனிப்பட்ட தேவைகளுக்காக வேண்டி மேற்கொள்ளப்பட்டதொரு சம்பவமே என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏதாவதொரு இடத்தில் ஒருவர் ஒரு சம்பவத்தை செய்தால் அங்கு ஏதாவதொரு தடயத்தை விட்டுச்செல்வார் என்பது குற்றவியல் விஞ்ஞானத்தின் விதியாகும் என தெரிவிக்கும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, அனுபவமற்ற ஒருவர் பெற்றோல் ஊற்றி லைட்டரால் கொளுத்திய வேளையில் தனது உடம்பையே காயப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பொலிஸாரின் அவசரம்

மல்வத்தை கடையெறிப்புச் சம்பவத்தை மையமாக வைத்து பிரதேசத்தில் இனமோதலொன்று உருவாகக்கூடாது என்பதற்காக வேண்டியும், இந்தச் சம்பவம் பல்வேறு வடிவங்களில் உரையாடப்பட்டு வருவதை தடுப்பதற்காக வேண்டியும் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் கோரிக்கைக்கு அமைய, திஹாரிய பெரியபள்ளிவாசலில் நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் உண்மையைத் தெளிவுபடுத்தும் நிழக்வொன்று கடந்த 3ஆம் திகதி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு உரையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டே நாட்களில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை ஒரு கதை வடிவில் சொல்லிக்காண்பித்தார்.

கண்டி, திகன தாக்குதல் சம்பவங்களின் சந்தேக நபர்கள், சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கு இவ்வளவு வேகமாக முனைப்புக்காட்டியிருக்காத பாதுகாப்புத் தரப்பு இந்தச் சம்பவத்தில் படுவேகமாகச் செயற்பட்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கருத்தடை மாத்திரை என்றொன்று உலகிலேயே இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அம்பாறை காசிம் ஹோட்டலில் ஒரு குடிகாரன் தனக்கு வழங்கப்பட்ட உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டது எனக்கூறிய மறுகணமே அந்தப் பகுதியில் காடையர்கள் அத்துமீறிப் பிரவேசித்து கடைகளையும், பள்ளிவாசலையும் தாக்கினார்கள். இத்தனைக்கும் பொலிஸார் வெருமனே 500 மீற்றர் தூரத்திலேயே படுத்துக்கிடந்துள்ளனர். இதைக் கண்டும் காணாமலும் இருந்த பொலிஸார் மல்வத்தை கடையெறிப்பு விவகாரத்தில் தடல் புடலாகவே செயற்பட்டுள்ளது. உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம் தான். முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவர் சிங்கள சகோதரர் ஒருவருக்கு பணம்கொடுத்து தனது கடையை கொளுத்தி விடுமாறு கோரியுள்ளார் என்றே கதை பரவிக்கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தை மேலெழுப்புவதன் மூலம் கண்டியில் சிங்களத் தீவிரவாதக் குழுக்கள் அரங்கேற்றிய வன்முறைகளுக்கு பொறுப்புச் சொல்லக்கூடியவர்கள் மூடி மறைக்கப்படுகிறார்களோ என்றொரு அச்சம் பெரும்பான்மை முஸ்லிம்களுக்குள் வலுத்துள்ளது. கடை உரிமையாளர் கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார் என்ற கருத்தொன்றும் முன்வைக்கப்படுகிறது.

அப்படியென்றால் பொதுபல சேனா, கடை உரிமையாளருக்கு பணம்கொடுத்து நீயே உணது கடையைக் கொளுத்திக்கொள் எனக் கூறியிருக்கவும் வாய்ப்புல்லது தானே? அளுத்கமை இனவாதச் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது. அவர் கடன்தொல்லையின் காரணமாக ஒளிந்திருந்து விட்டு வெளியே வந்ததாக பின் செய்தி வெளியானது. இந்தச் சம்பவத்தை போன்று மல்வத்தை கடையெரிப்புச் சம்பவமும் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதத்தின் ஆரம்பப்பகுதியில் அம்பாறையில் துவங்கி திகன, தெல்தெனிய, அகுரணை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் பரவிய இனவாதத் தாக்குதல்கள் திஹாரிய போன்ற பிரதான நகரங்களிலும் இடம்பெறலாம் என்றொரு அச்சம் மக்களிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்தது. பிரதேச மக்கள் கூட்டாக இணைந்து பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதும் இந்தச் சம்பவங்கள் இடம்பெறாமைக்கு ஒரு காரணம் எனக் குறிப்பிடலாம்.

சமூகப் பொறுப்பு

நாட்டின் கொந்தளிப்பான நிலைiமையை சாதகமாகப்பயன்படுத்தி சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்படுகின்றவர்களும் உள்ளனர். அப்படியானதொரு சம்பவமாகவும் இது அமைந்திருக்கலாம். எதுஎப்படியிருப்பினும், பொலிஸாரின் வேகமும் விவேகமும் நாட்டில் இனிமேலும் இனவாதத் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருப்பதிலேயே ஒன்றுகுவிக்கப்படவேண்டியுள்ளது. முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விடயங்களில் அசிரத்தையாக இருந்துவிட்டு சில்லறைத்தனமான விடயங்களில் வீரர்களாக முனைவது பாதுகாப்பு என்ற விடயத்திற்கே அவமானமாகும். அத்துடன் இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது திஹாரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொலிஸ் அதிகாரியின் முன்னிலையில் கடையை கொளுத்தத் திட்டமிட்ட நபர் எமது பிரதேசத்தை சேர்ந்தவரல்ல, அவர் கல்எலிய பிரதேசத்தை சேர்ந்தவர் என சிலர் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதுபோன்ற கருத்துக்கள் குறித்து உண்மையில் நாம் கவலைப்பட வேண்டும். திஹாரிய என்றால் என்ன, கல்எலிய என்றால் என்ன? சம்பந்தப்பட்டவர் ஒரு முஸ்லிம். அவர் தவறிழைத்தால் தண்டனை பெற்றே ஆக வேண்டும். அதற்குள் ஏன் மற்றுமொரு முஸ்லிம் கிராமத்தை காட்டிக்கொடுக்க வேண்டும். முதலில் எமக்குள் ஒரு தனித்துவம் காணப்பட வேண்டும். பிரதேச ரீதியாக இப்படி ஆளுக்கொருவரை விரல் நீட்டிக்கொண்டிருந்தால் சமுதாயம் ஒருபோதும் உருப்படியாகாது.

About the author

Web Writer

Leave a Comment