அரசியல் ஆசிரியர் கருத்து உள்நாட்டு செய்திகள் பிரதான செய்திகள்

நாட்டின் வளங்களை சூறையாடும் நாடு

Written by Web Writer

நாட்டின் வளங்களை சூறையாடும் நாடு

யுத்தத்தின் பின்னரான வடுக்களில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. இனியும் கிட்டிய எதிர்காலத்தில் மீள்வதற்கான சாத்தியமும் இல்லை என்பதனைத் தான் நாட்டின் நிகழ்வுகள் எதிர்வு கூறுகின்றன.

யுத்தத்தை வென்றவன் என்ற பெருமிதத்தில் யுத்தகாலத்தில் நாட்டுக்குத் தலைமை வகித்த மஹிந்த ராஜபக்ஷ கொள்ளையடித்ததாகக் கூறப்பட்ட எந்தச் சொத்துக்களும் மீளப்பெறப்படவில்லை. அது தொடர்பான கதையாடல்களும் தற்போது நடப்பதுமில்லை. இதனால் எகிறி உயர்ந்த வெளிநாட்டுப் படுகடன்களை மக்களே தமது தலைகளில் சுமந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமது அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்காக தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதச் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும் அது மொத்த நாட்டையும் மீண்டும் வெளிநாடுகளிடம் அடகு வைக்கும் நிலைக்கே தள்ளிவிடப்போகின்றன. முஸ்லிம் சமூகம் வியாபாரத்துறையில் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள் என்பதை வைத்து அந்த இனத்துக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் வீழ்ச்சி அடையப் போவது முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி இலங்கையின் வர்த்தகத் துறையும் தான் என்பதை இந்த இனவாதிகள் கவனத்தில் கொள்வதில்லை.

முஸ்லிம் சமூகத்தின் வர்த்தகம் வாங்கி விற்கும் சில்லறை வியாபாரமாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. இலங்கையின் உற்பத்திச் சமூகத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த வகையில் இலங்கையின் உற்பத்திச் சமூகத்தின் உற்பத்திகளை வாங்கி விற்கின்ற வியாபாரத்தைத் தான் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள். யாரும் விற்க முடியுமான அத்தியாவசியப் பொருட்களுக்கப்பால் எந்தப் பொருட்களையும் விற்பனை செய்ய முடியுமான ஆற்றல் முஸ்லிம் வியாபாரிகளிடம் இருப்பது மறுப்பதற்கில்லை. இந்த வகையில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுவதனூடாக இலங்கையின் ஒட்டு மொத்த வர்த்தகமும் பாதிக்கப்படுகிறது.

அத்தோடு தன்னிடமுள்ள திறமையினூடாக தன்னை வளர்த்துக் கொள்ளும் ஒரு சமூகத்தை கீழே தள்ளிவிட முனைவது முழு நாட்டினதும் வளர்ச்சியை கீழே தள்ளிவிடுவதற்கு ஒப்பானதாகவே கருத வேண்டியுள்ளது. தமது சீவனோபாயத்துக்காக வியாபாரம் செய்யும் மக்களது வாழ்வாதாரத்தினை அழித்தொழித்து அவர்களை நடுததெருவில் நிற்கச் செய்வதன் மூலம் நாட்டுக்குக் கிடைக்கப் போகின்ற நன்மை என்ன ? இந்த வகையில் இனவாதிகளின் இந்தச் செயற்பாடுகளை நாட்டின் அபிவிருத்தியை முடக்குவதற்கான உத்தியாகவே கருத வேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதன் ஊடாக அவர்களிடம் தொழிலுக்காக இணைந்திருந்த சிங்களக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. புத்தாண்டு களைகட்டும் இந்த வேளையில் இந்த வன்முறைகள் காரணமாக தமது தொழில்களை இழந்து தவிக்கும் பல சிங்களக் குடும்பங்கள் இந்த இனவாதிகளின் செயற்பாடுகளினால் பரிதவிக்கின்றன. எனவே தனி ஒரு இனத்தை இலக்காக வைத்து இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் அது இலங்கையின் எல்லா இனங்களிலும் பாதிப்புச் செலுத்துவதாகவே அமைகிறது.

எந்த வகையில் பார்த்தாலும் இனவாதிகளின் இந்த வன்முறைகள் ஒன்றுபட்டு முன்னேற நினைக்கும் ஒரு நாட்டை அழிவை நோக்கி இட்டுச் செல்வதாகவே அமைகின்றன. அந்த வகையில் நாட்டைக் குட்டிச் சுவராக்க முனையும் இந்த நாசகாரக் கும்பல்களுக்கு எதிராக முஸ்லிம்கள் மட்டுமன்றி நாட்டுப் பற்றுள்ள அனைத்து மக்களும் திரண்டெழ வேண்டும். இனவாதத்தின் கோர முகத்தை அனுபவத்தில் கண்ட ஒரு நாடு என்ற வகையில் எமது அடுத்த தலைமுறையும் இதுபோன்றதொரு அழிவை எதிர் கொள்வதற்கு தேசப்பற்றுள்ள மக்கள் இடமளிக்கக் கூடாது. இந்த அழிவுகளுக்கு பின்னாலிருந்து முண்டு கொடுக்கும் அரசியல்வாரிசுகளையும் நாட்டு மக்கள் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

About the author

Web Writer

Leave a Comment