அரசியல் உள்நாட்டு செய்திகள் சிறப்புக்கட்டுரைகள்

உதட்டிலிருக்கும் லிப்ஸ்ரிக் போன்றதா தேசிய நல்லிணக்கம்?

Written by Web Writer

உதட்டிலிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ போன்றதா தேசிய நல்லிணக்கம்?

அதிரன்

பெண்கள் தங்கள் உதட்டில் பூசியிருக்கும் ‘லிப்ஸ்ரிக்’ அழியாமல், கழராமல் உணவு உண்பதைப் போலவும் நளினமாகப் பேசுவதையும் போன்ற கதையாகத்தான் நமது நாட்டின் தேசிய நல்லிணக்கம் என்கிற செயல்பாடு இருக்கிறது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ‘சமாதானப் புறா’ என்று புகழப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க (தலைவி: தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்) எனப் பலர் இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றனர்.

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையின் முன்னெடுப்பே நாட்டுக்குத் தேவை என்ற வகையில், அமைச்சுகள் சார்ந்தும் அமைப்புகள் சார்ந்தும் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இவற்றினால் முழுமையானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கை இருக்கிறதா,  இது நிறைவுக்கு வருமா என்பதுதான் சந்தேகம்.

இந்த நாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதையும் ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் கடைபிடிக்கப்படுவதையும், ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்வதையும் நிதர்சனமாகப் பார்க்கும் ஒருவர், இன, மத, மொழி, சமூக, அரசியல், பொருளாதார காரணிகளால் வரலாற்று ரீதியாக பல்வேறு பிரிவுகள் தேசிய வாழ்விலிருந்து புறந்தள்ளப்பட்டுள்ளன என்பதையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். எனவே, தேசிய நல்லிணக்கத்தினூடாக சகவாழ்வுக்கு முன்னோடியாக, மும்மொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது தேசியக் கொள்கையாக நமது நாட்டில் கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வுகள், யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான தொழில் உபகரணங்களை வழங்கி மிகக் குறைந்த நிதியுதவிகளை வழங்குதல், கலாசார நிகழ்வுகளை நடத்துதல், புகைப்படக் கண்காட்சிகள், போட்டிகளை நடத்துதல் என்று பட்டியல் நீண்டு செல்கின்றது.

தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சால் தேசிய நல்லிணக்கத்தை பாடசாலையில் இருந்து ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தைக் கடந்த வருடத்தில் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். நாட்டில் மூன்று மொழிப் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இருந்தாலும், 1948ஆம் ஆண்டு பிரித்தானியரிடமிருந்து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களால் தமது உரிமைகளுக்காக நடத்தப்பட்ட ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், சிங்களம் மட்டும் சட்டம் அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகள், அஹிம்சை ரீதியான சத்தியாக்கிரகங்கள், போராட்டங்கள் எதுவும் பயனற்றுப் போன கதைகள் தான் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வெலிக்கடைக் கலவரம், 83ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் இவையெல்லாம் இலங்கை நாட்டில் வடுக்களாக இருந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அஹிம்சை ரீதியான போராட்டங்களின் தோல்வி காரணமாக தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், அதன் பின்னர் உருவான ஆயுத ரீதியான போர் ஏற்படுத்திவிட்ட உயிர்கள், சொத்துகள், உடைமைகள் போன்ற அழிவுகள் எண்ணிலடங்காதவை.

கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தனி மனிதனால் கூட, அதன் பாதிப்பிலிருந்து வெளிவந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு, சில மாதங்கள் அல்லது வருடங்கள் எடுக்கும்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருக்கும் அனைவரும் யுத்தத்துக்குள்ளேயே வாழ்ந்து துன்பப்பட்டு முடித்தவர்கள். இவர்களின் வலி சாதாரணமாக எழுத்தில் முடிந்து விடாது. இந்த நிலையில்தான் நமது நாட்டின் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

2017ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கையின்படியே முன்னெடுக்கப்படும். நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை, ஆலோசனைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் மனோ கணேசனும் கூட்டாகச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை நாட்டில், பல்வேறு இனத்தவர், இரண்டு மொழி பேசுபவர், வடக்கு, கிழக்கு மலையகம், ஏனைய மாகாணம் என்று வித்தியாசமான கலாசாரத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சாதி, மத பேதங்கள், நாட்டின் அழகு அம்சங்களும் மகிழ்வுக்குமானதாகும்.

ஆயினும் இந்த நாட்டின் பண்பாடு, கலாசார விடயங்களில் ஏற்பட்ட குழப்பம், ஆதிக்கம் நாட்டை ஒரு குழப்பம் நிறைந்ததாக மாற்றிவிட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது வெளிநாட்டவரின் ஆட்சியென்று சொல்லமுடியும்.

தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் உணரப்பட்டாலும், நமது நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் புரிந்துணர்வும் இதுவரையில் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. கடந்த மாதத்தில் நடைபெற்ற அம்பாறைச் சம்பவம், அதன் பின்னர் ஏற்பட்ட கண்டிச் சம்பவம் ஆகியன மனிதர்களின் மனங்களில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதனையே காட்டி நிற்கின்றன.

பாடசாலை மாணவர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் எதிர்கால சந்ததியினருக்கானது என்ற வகையில்தான் முன்னெடுக்கப்படுகின்றன. நாமெல்லாம் சிந்திப்பது போன்று நம்முடைய காலத்தை இழந்து விட்டோம் பிள்ளைகளாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று நீண்ட பெரு மூச்சை விட்டுவிட்டு சிரமப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு ஏற்படுத்தப்படும் நல்லிணக்கம் எதிர்கால சந்ததிக்கானதாகவே இருக்கும். அதற்குப் பெயர் நல்லிணக்கமேயில்லை என்ற வாதங்கள் வேறு இருக்கின்றன.

நிரந்தரமாக இருக்க வேண்டியதை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரம் என்ற பெயரில் ஏதோ என்பதுபோன்று நடத்தி முடிப்பதற்கு தான் பிறந்ததிலிருந்து எந்த வொரு பிரச்சினையையும், இழப்பையும் சந்திக்காதவர்கள் வேண்டுமென்றால் துணியலாம். நடத்தலாம். ஆனால், நினைவுக்கு அறிவு எட்டிய காலம் முதல் துப்பாக்கிச் சூட்டையும், இடப்பெயர்வுகளையும், இடைத்தங்கல்களையும், உயிர் இழப்புக்களையும், இரத்தத்தையும், தசையையும் பார்த்துக், கடந்து வந்தவர்களுக்கு எவ்வாறு இந்த ஒரு வாரங்கள் எல்லாம் பயன்படும்.

வாழ்வையே இழந்தவனுக்கு வயிற்றுக்குச் சாப்பாட்டையும், உடுக்க உடையையும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று படத்தைப் பிடித்து, பூச்சாண்டி காட்டுவதில் எந்தப்பயனுமில்லை.

வெறுமனே அரசியல்வாதிகளாலும், அரசியல் கட்சிகளாலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கும் தீர்வைக் கண்டுவிட்டுடோம் என்று வெளிப் பூச்சுக்குக் காட்டப்படும் விரிப்புக்குத்தான் இந்த தொட்டும் தொடாமல் பட்டும்படாமல் என்பதனைவிடவும், பெண்கள் உதட்டுக்கு லிப்ஸ்ரிக் எனும் உதட்டுச்சாயம் பூசுதலை உவமானப்படுத்த முடியும்.

நிலைமாறுகால நீதி தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள், விவாத அரங்குகள், பொதுநிகழ்வுகள் மற்றும் ஆய்வுகள் மூலமாக ஏற்படுத்தப்படுகின்ற நிரந்தரமான மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளே இப்போதைய தேவையாகும். அரசியல், பால்நிலை, சமூக அபிவிருத்தி என்பவையெல்லாம் அடிப்படையனாதாக கட்டமைக்கப்படவேண்டும்.

தற்போது சமகால விவகாரங்களாகக் கவனத்திற்கு உட்படுத்தப்படுகின்ற நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயன்முறையைச் சரியான வகையில் கவனத்திற் கொண்டு சமூகவிழிப்புணர்வையும் தெளிவுபடுத்தல்களையும் வழங்குதல் இதில் முதன்மையானதே.

போருக்குப் பிற்பட்ட காலத்தில் இளையோரின் பங்குபற்றலை நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச் செயன்முறை பலராலும் முன்னெடுக்கப்பட்டாலும் அதன் ஆளத்தை உணர்ந்ததாகவோ நல்லிணக்கச் செயன்முறையில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவதற்கான பொறிமுறைகளைக் கொண்டதாகவோ எதுவும் நடைபெற்றுவிடவில்லை.

வயிற்றுப்பிழைப்பா தேசியப்பிரச்சினையா என்கிற நிலையில் இருப்பவர்களுக்கு முதலில் எது என்பது தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அல்லது நிறைவேற்றப்பட்டதன் பின்தான் முடிவுக்கு வரமுடியும்.

அரசியல், ஜனநாயகம் மற்றும் நிலைமாறுகால நீதியின் தொடர்ப்பின் நிறைவேற்றம் நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், தர்க்கரீதியிலான சிந்தனையை வளர்த்தெடுத்தலும் பரஸ்பரம் பழையவை மறத்தலும், ஒருங்கிணைந்த நடவடிக்கையும் தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் என்று நம்பலாம்.

About the author

Web Writer

Leave a Comment