சமூகம்

வைக்கோல் போரிலிருந்து தலைமைகள் இறங்க வேண்டிய காலம்

Written by Administrator

 – ஸலாஹுதீன் –

முஸ்லிம்கள் மீதான இனவாதிகளின் திகன தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களும் புனித நோன்பு மாதத்தை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். தாக்குதல்கள் நடந்து இன்றுடன் இரண்டு மாதங்களாகின்றன. இயல்பு நிலைக்குத் திரும்புவதில் அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிதைக்கப்பட்ட தமது வாழ்நாள் தேடல்கள், கட்டிக் காத்த வாழ்வாதாரங்கள், உடைமைகள், உடைமைகளையும் தகைமைகளையும் நிறுவுவதற்கான ஆதாரங்கள் என அவர்களது இழப்புக்கள் சொல்லொணாதவை.

முஸ்லிம்கள் தாக்கப்பட்ட உடனேயே ஏதோ வெள்ள நிவாரணம் வழங்கி விட்டு வருவதைப் போல் நினைத்துக் கொண்டு பலரும் களத்துக்கு விரைந்தனர். பாதிக்கப்பட்டோருக்கான உணவுப் பொதிகள், உலர் உணவுகள் வழங்கப்பட்டன. இது முஸ்லிம் சமூகத்தின் தன்மானம் சம்பந்தப்பட்ட விடயம், நஷ்டங்களை நாங்களே பகிர்ந்து கொள்கிறோம் என்று நாட்டுக்குச் செய்தி சொல்ல வேண்டும் என்பது போல முஸ்லிம் சமூகத்திடமிருந்தே நஷ்டஈட்டைச் சேகரித்து வழங்குவதற்கு உலமாக்கள் முன்வந்தனர். கும்புக்கந்துறை பள்ளவாசலுக்கு விஜயம் செய்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர், அரசாங்கத்தின் நஷ்டஈடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம், அளுத்கமைக்கு நஷ்டஈடு கிடைப்பதற்கே மூன்று வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டது என்று வேறு உசுப்பேத்தியிருக்கிறார்.

தற்பொழுது தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈடு வழங்குவதற்கு முன்வந்திருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களையும் கோரியிருந்தது. ஆனாலும் பாதிக்கப்பட்ட 20 பள்ளிவாசல்களில் 07 பள்ளிவாசல்களே இதுவரை நஷ்டஈட்டுக்காக விண்ணப்பித்திருப்பதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிகச் செயலாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்துள்ளார். அப்படியானால் களத்தில் இயங்குவதாகச் சொல்லிக் கொண்ட அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையின் கீழ் களத்தில் காளானாக முளைத்த Kandy Refief Cordinating Committee எனப்படுகின்ற KRCC தமக்குத் தேவையான ஒரே பணியான நிவாரணம் திரட்டும் வேலையில் ஈடுபட்டது. இதற்கப்பாலுள்ள சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பல துறைசார் நிறுவனங்கள் முன்வந்த போதும், விடயத்தை எங்களிடம் விட்டு விடுங்கள், தேவையான நிதியையும் தாருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அடுத்தவர்களையும் செயற்பட விடாமல் செய்தது தான் இவர்களுடைய சமூகப் பணி என்பது பள்ளிவாசலின் நஷ்டஈட்டைப் பெறுவதில் காட்டிய கரிசனை எடுத்துக் காட்டுகிறது. இது தொடர்பில் கண்டி மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் குறிப்பிடும் போது, நாங்கள் பள்ளிவாசல்களுக்கு அறிவித்தோம், பள்ளிவாசல்கள் கவனமெடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார். நாங்கள் ஒற்றுமைப் பிரகடனம் வெளியிட்டிருக்கிறோம், சமூகம் ஒற்றுமைப்படவில்லை என்று சொல்வது போல உள்ளது இது. தலைப்பிறை அறிவித்தால் நோன்பு பிடிப்பதைத் தவிர சமூகம் ஜம்மியதுல் உலமா சொன்னதையெல்லாம் எங்கே செய்திருக்கிறது ?

சமூகத்தில் உலமாக்களால் மட்டுமே செய்ய முடியுமான பணிகள் இருக்கின்றன. அவற்றில் ஏராளமானவை இன்னும் மீதமிருக்கின்றன. இவை தொடர்பிலான உலமா சபையின் நிலைப்பாடுகளை சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலமாக்களுக்குச் சம்பந்தமில்லாத துறைசார் நிபுணர்கள் செய்ய வேண்டிய வேலைகளில் உலமா சபை மூக்கை நுழைத்து, தங்களை ஏகபோகமாகக் காட்டிக் கொள்ள முனைகிறது. இதனால் சமூகத்தின் சிவில் நிறுவனங்களை செயற்பட விடாமல் முடக்கி விடுகின்ற அரும்பணியைத் தான் ஜம்இய்யதுல் உலமா செய்கின்றது. குறிப்பாக திகன பிரச்சினைகளின் போதும், ஏனைய சட்டரீதியாக அணுக வேண்டிய பிரச்சினைகளின் போதும் முஸ்லிம் சமூகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டநிறுவனங்களை அணுகி இருக்க முடியும். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் சட்டத்தரணி அலி சப்ரி போன்றோரெல்லாம் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தை இந்த விடயத்தில் இயக்கி இருக்க முடியும். பெயரளவில் முஸ்லிம் பெயர் தாங்கி இருப்பதுவே அன்றி, இவர்கள் இது தொடர்பில் எதுவுமே செய்யவில்லை என்பதை விட, அப்படி ஒரு அமைப்பு முஸ்லிம் சமூகத்துக்கென இருப்பதே சமூகத்துக்குத் தெரியவில்லை.

இப்படி ஜம்இய்யதுல் உலமாவே வைக்கோல் போரில் உட்கார்ந்து கொள்வதனால் சமூகத்தின் அசைவியக்கம் பாதிக்கப்பட்டிருப்பதைத் தான் பள்ளிவாசல்களின் நஷ்டஈடு விடயத்தில் காண முடிகிறது. இதனால் சமூகத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பல நிறுவனங்களும் பல்வேறு சக்திகளின் தேவைக்காக உழைக்க வேண்டிய நிலைதான் விளைவாகக் கிடைக்கிறது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, உலமாக்களின் தலைமையாக இருக்கும் வரைக்கும், அல்லது மார்க்க விடயங்களிலான தலைமையாக இருக்கும் வரைக்கும் அதனுடைய இருப்பை நியாயப்படுத்த முடியும். ஆனால் சமூகத்தின் தலைமையை அது சுமக்க நினைப்பதாக இருந்தால் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா அமைப்புக்களையும் இணைத்துத் தான் அந்த நிலையை அடைய வேண்டும். அல்லாத பட்சத்தில் சமூகத்தில் இருந்தே சமூகத்துக்கெதிராக வேலை செய்வதற்கு விலைக்கு வாங்கப்படும் நிறுவனங்கள் தோன்றவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இந்த நிலைமையில் இருந்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், உலமாக்கள் அல்லாத அடுத்தவர்களாலும் செய்ய முடியுமான சமூகப் பணிகள் இருக்கின்றன என்ற யதார்த்தத்தை உலமா சபை விளங்கிக் கொள்ள வேண்டும். வானத்துக்கு மேலாலும் பூமிக்குக் கீழாலும் உள்ள விடயங்களுக்கு அப்பால் இவை இரண்டுக்கும் இடையிலான விவகாரங்களில் பங்களிப்புச் செய்யக் கூடிய துறைசார்ந்தவர்களை உலமா சபை உள்வாங்க வேண்டும். தம்மிடம் இருக்கும் உலமாக்களை இதற்கெனத் தகுதிப் படுத்தி எடுக்கலாம் என்று காக்கைகளை கங்கையில் குளிப்பாட்டி எடுக்க நினைப்பது துன்யாவுக்குப் பொருந்தும் விடயமாக இல்லை.

உயிரிழந்தவர்கள், இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளிவாசல்கள் என படிப்படியாக அரசாங்கம் நஷ்டஈடு வழங்கும் பணியைத் தொடர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் சேத மதிப்பீடுகள் தான் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான முறையான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, உரிய இடங்களில் பேணப்படவும், உரிய இடங்களுக்கு நகர்த்தப்படவும் ஆவன செய்யப்பட வேண்டும். இதற்கென முன்வருகின்ற சமூக நிறுவனங்களை உலமா சபையின் கீழ் உள்வாங்கி நெறிப்படுத்த வேண்டியது உலமா சபையின் சமூகப்பணியாகும். தலைமை செயற்படுத்த வேண்டிய பணிகள் இத்துடன் முடிந்து விடவில்லை. ஓயாது உழைக்க வேண்டிய காலம் முன்னால் இருக்கிறது என்பதை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா கவனத்தில் கொள்ள வேண்டும்.

Image result for digana mosque

About the author

Administrator

Leave a Comment