நாடுவது நலம்

ஆர். பிரேமதாச: சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர்

Written by Administrator

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

மே தினம் மற்றும் உழைக்கும் மக்கள் குறித்து பேசுகின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆர். பிரேமதாசவின் பெயரை மறந்துவிட முடியாது. மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலுக்கு பலியானார். இந்தச் சம்பவம் 1993 மே மாதம் 01 ஆம் திகதி நடைபெற்றது.

வறுமையொழிப்பு, வறிய மக்களை சொத்துள்ள மக்களாக மாற்றுதல் போன்ற சிறந்த பதங்களை எமது அரசியல் டிக்ஷனரிக்கு அறிமுகப்படுத்திய தலைவர் ஆர். பிரேமதாச ஆவார். இந்தப் பதங்களின் அர்த்தத்தை யதார்தமாக்கும் நிஜத் தேவையோடு, மின்னல் வேகப் பயணத்தை துவங்கிய தலைவரும் அவரே. எமது சமூகத்தில் உள்ள வறிய மக்கள் தொடர்பில் அவரிடம் ஒரு கனவு, குறிக்கோள் காணப்பட்டது. இதனை வெல்லும் பயணத்தில் அவர் பல்வேறு தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டார். அஞ்சா நெஞ்சம் படைத்தவராய் அவற்றை வென்று முன்னகர்ந்தார்.

இலங்கை சமூகத்தின் எதிர்காலம் குறித்து ஆர். பிரேமதாசவிடம் காணப்பட்ட கனவினை நினைவுகூறும் போது, அமெரிக்க சமூகத்திற்குள் சுதந்திரம், சமத்துவத் மற்றும் மனித உரிமைகளுக்காக வேண்டி போராடிய மாடின் லூதர் கிங்கின் ‘என்னிடம் ஒரு கனவு உள்ளது’ (I have a dream) என்கின்ற புகழ்பெற்ற உரை என் நினைவுக்கு வருகின்றது. 1963ஆம் ஆண்டு வொஷிங்டனின் லிங்கன் சதுக்கத்தில் சுமார் 2 லட்சத்து 50,000 மக்கள் முன்பாக அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகளை குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

‘நான் கனவு காண்கிறேன். அநீதி, அடக்குமுறை, கொந்தளிப்பால் பாதிக்கப்பப்பட்டுள்ள மிசிசிபி பிராந்தியம் அமைதி, நியாயத்தின் பசுமை பூமியாக மாறும் தினம் குறித்து நான் கனவு காண்கிறேன். எமது சமூகத்தின் உயர் அந்தஸ்து மக்களை கீழ்ப்படுத்தவும், அடித்தட்டு மக்களை உயர்நிலைப்படுத்தவும், கரடுமுரடான இடங்களை சமப்படுத்துவதற்கும் முடியுமாகின்ற தினம் குறித்தும் நான் கனவு காண்கிறேன். ஜோர்ஜிய அடிமைகளது பிள்ளைகள் மற்றும் ஜோர்ஜிய முதலாளிகளது பிள்ளைகளுடன் ஒற்றுமையாக ஒரு மேசையைச் சூழ அமர்ந்துகொண்டு ஒற்றுமையாக பேசும் நாள் குறித்து நான் கனவு காண்கிறேன். எனது 4 சிறிய குழந்தைகள் தொடர்பிலும், அவர்களின் நடத்தை பிரகாரம் முடிவுகள் எடுக்கும் சமுதாயம் உருப்பெரும் தினம் குறித்தும் நான் கனவு காண்கிறேன்’

உண்மையில் மார்டின் லூதர் கிங்கின் கனவினதும் ஆர். பிரேமதாசவின் கனவினதும் அடிப்படை மற்றும் மூலங்கள் வெவ்வேறல்ல, ஒன்றாகும். ஆர் பிரேமதாசவின் தேர்தல் பிரசார மேடைகள் அனைத்திலும் மார்டின் லூதர் கிங்கின் கனவினை நான் மேற்கோள் காட்டிப் பேசியுள்ளேன். ஆர். பிரேமதாசவினை ஜனாதிபதிப் பதவியில் அமர்த்துவதன் மூலம் எமது சமூகம் குறித்து எம்மிடம் காணப்பட்ட கனவினை நிஜப்படுத்திக்கொள்வதே எமது குறிக்கோளாக காணப்பட்டது.

பிரேமதாச தனது முதலாவது அமைச்சரவையை தெரிவுசெய்யும் போது அவர் முன்னர் பொறுப்பாக இருந்த வீடமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சுப் பதவியை எனக்கு வழங்கினார். நான் பதவிப்பிரமானம் செய்துகொண்ட பின்னர், ஜனாதிபதி செயலகத்திலுள்ள அவரது அலுவலகத்திற்கு என்னை அழைத்த ஜனாதிபதி பிரேமதாச, என்னிடம் தெரிவித்த விடயங்கள் எனக்கு ஒருபோதும் மறப்பதில்லை. ‘உங்களுக்குத் தெரியுமா கிடைத்திருக்கும் அமைச்சு எதுவென்பது’? நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். ‘எனது அமைச்சை உங்களுக்கு தந்திருக்கிறேன்’ என சிரித்துக் கொண்டு கூறினார். வீடமைப்பு அமைச்சராக குரே அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். நான் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தேன்.

‘முதலில் வருவது மஹியங்கன கம் உதாவ. அமைச்சர்கள் எவரும் கால் பதிக்காத கிராமங்கள் அங்குள்ளன. இம்தியாஸ்! எனக்கு அர்ப்பணிப்பு முக்கியம். அப்பகுதி மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு உயரிய பட்ச சேவையை செய்ய வேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்’ இந்த வசனங்கள் அவரது ஆள் மனதிலிருந்து வருபவை என்பதை நான் அறிந்து கொண்டேன். பிரேமதாச நினைவுக்கு வரும் வேளைகளில் இந்த வசனங்கள் என் செவிப்பறையில் மோதுவதை என்னால் உணர முடிகிறது. ஓலைக் குடிசையில், களிமண்ணால் வேயப்பட்ட வீட்டில், பலகை வீட்டில், சேரிப்புற வீட்டில், மழையில் நனையும் வீட்டில், சரியான முறையில் தூங்கவும் முடியாத வீட்டில் வசிக்கும் பிள்ளைகள் குடும்பங்களின் நிலை குறித்து கடுமையாக கவலைப்பட்ட தலைவரே ஆர். பிரேமதாச. இந்த வறிய மக்கள் குறித்து தனது முதன்மை அவதானத்தை செலுத்திய தலைவரும் இவரே. தொடர் வீட்டுத் திட்டம், ஒரு லட்சம் வீடு, 10 லட்சம் வீடு, 15 லட்சம் வீடு மற்றும் சர்வதேச வீடமைப்பு வருடம் போன்ற கருத்திட்டங்களை ஏழை மக்களின் கண்ணீரைப் போக்க அவர் அறிமுகப்படுத்தினார்.

தொடரும்…

About the author

Administrator

Leave a Comment