ஆசிரியர் கருத்து

மனித நாகரிகத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும்

Written by Administrator
Editorial 394

காஸாவில் இதுவரை 80 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமது நாடு அந்நியர்களால் ஆக்கிரமிப்பதனை எதிர்த்த நிராயுதபாணி மக்களே இங்கு அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றி இஸ்ரேலின் எல்லையை விஸ்தரித்தமைக்கு எதிராக பலஸ்தீன மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன்போதே இவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகளும் வான்வழித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 2000 க்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் இதனால் காயங்களுக்குள்ளாகி இருக்கின்றனர்.

யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவதற்காக பலஸ்தீன் நாட்டிலிருந்த 700,000 க்கும் மேற்பட்ட மக்களைத் துரத்தியடித்த நக்பா தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை அனுஷ்டித்துக் கொண்டிருந்த வேளையிலேயே அம்மக்களுக்கு இந்தப் பேரிடி விழுந்திருக்கிறது. படிப்படியாகத் துண்டாடப்பட்ட பலஸ்தீன பூமிக்குச் சொந்தமானதென ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தையும் ஆக்கிரமிக்கும் வகையிலேயே அமெரிக்கா டெல் அவிவில் இருந்த தனது தூதரகத்தை கிழக்கு ஜெரூஸலமுக்கு மாற்றியது.

உலக நியதிகள் அனைத்தையும் மீறுகின்ற அநியாயமானதொரு செயற்பாடாகவே உலகம் முழுவதும் இதனைக் கருதுகின்ற போதும் அமெரிக்கா இந்த அடாவடித் தனங்களைப் புரிந்திருப்பதன் மூலம் நீதி,நியாயங்களை காலில் போட்டு மிதித்திருக்கிறது. உண்மையில் இது மனித நாகரிகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகும். இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை உலகெங்கும் பரப்புவதே அமெரிக்காவை ஏற்றுக் கொண்ட நாடுகள் செய்கின்ற வேலையாகும்.

அந்த வகையில் தான் இலங்கை அரசாங்கமும் இந்த அநியாயத்துக்கு எதிராக குரலெழுப்பாது மௌனித்து வருகிறது. அகிம்சையையும் அமைதியையும் போதிக்கும் பௌத்த தர்மத்துக்கு அரசியல் யாப்பில் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று யாப்பு வரைபவர்கள் எவருமே, காஸாவில் நடைபெறும் கொடூரமான படுகொலைகளை கண்டும் காணாமல் இருப்பது அகிம்சை நாட்டின் பிரஜைகளை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. அநியாயமும் அநீதியும் எங்கு நடந்தாலும் அதற்கெதிராகக் குரலெழுப்பவும் முடியாத நிலைக்கு இலங்கை அரசாங்கம் இழிவடைந்திருப்பது அப்பட்டமான அடிமைத்தனமாகும்.

கூட்டரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற கொள்கையில்லாத வெளிநாட்டுக் கொள்கையே இதற்குக் காரணமாகும். நாட்டு மக்கள் நாட்டுத் தலைமைகளிடம் எதிர்பார்ப்பது இறைமையுள்ள அரசைப் பாதுகாப்பதாகும். அந்த வகையில் தனது நட்பு நாடொன்றுக்கு அநியாயம் நடக்கும் போது அதற்கெதிராகக் குரல் கொடுக்கின்ற தார்மீகக் கடமையைச் செய்வதற்கு வேறெந்த நாட்டினதும் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இறையாண்மையுள்ள ஒரு நாட்டுக்குப் பொருத்தமானதல்ல.

நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு பதவியேற்றதில் இருந்து இந்த அரசாங்கம் அநியாயமிழைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் மக்கள் தொடர்பில் ஓரவஞ்சனையுடனேயே நடந்து கொள்கிறது. அங்கு அநியாயமாகப் படுகொலை செய்யப்படுகின்ற பச்சிளம் பாலகர்கள், அப்பாவிகள்,பெண்கள் தொடர்பில் கவலை தெரிவிப்பதற்குக் கூட அது பயப்படுகிறது. இந்த நிலையில் இன,மத வேறுபாடுகளைத் தாண்டி அரசின் மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அழுத்தங்கள் பல்வேறு தரப்புக்களிடமும் இருந்து வெளிப்படுத்தப்படுவது முக்கியமானதாகும்.

About the author

Administrator

Leave a Comment