நாடுவது நலம்

நக்பா: பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பிரார்த்திப்போம்

Written by Administrator

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

பலஸ்தீன் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மே 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் நக்பா தினம் அல்லது பலஸ்தீனத்தின் துக்க தினத்தினையொட்டி உலகம் பூராகவும் ஒத்துழைப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பலஸ்தீன மக்கள் எதிர்கொண்ட துயரத்தின் துவக்க தினமாகவே மே 15 ஆம் திகதி உலகம் பூராகவும் நோக்கப்படுகிறது. அதற்கு முன்பிருந்தே அதற்கான செயற்பாடுகள் நடந்தேறிய போதும் துயரத்தின் உத்தியோகபூர்வ துவக்க தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

இது இலட்சக் கணக்கான பலஸ்தீன மக்கள் தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நாள் ஆகும். அவர்கள் பிறந்த பூமியிலும் அதற்கு வெளியிலும் அகதிகளாக்கப்பட்ட தினம் ஆகும்.  இலட்சக் கணக்கான பாலஸ்தீன மக்களின் உயிர்கள் அநியாயமாக பறித்தெடுக்கப்பட்ட தினம் ஆகும். அவர்களது உயிர்கள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட தினம் ஆகும். அவர்களுக்கு துன்பம், துயரம், மனவேதனை மற்றும் அவர்களது வாழ்க்கையின் இருள்சூழ்ந்த காலகட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினம் ஆகும். இலட்சக் கணக்கான பலஸ்தீன அகதிகள் போன்றே காஸாவின் எல்லைகளில் சுதந்திரத்திற்காக போராடுகின்ற ஆயிரக் கணக்கான பலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்கு பாலஸ்தீன பூமியானது வெறுமனே வெற்றுக் காணித் துண்டு அல்ல. அவர்களது போராட்டமானது இதுவரை அதற்காக உயிர்நீத்தவர்களுக்காகவும் எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பலஸ்தீன மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் ஒரு நியாயமான விடுதலைப் போராட்டம் ஆகும்.

இப் போராட்டத்தினை அவர்கள் எழுபது வருடங்களாக தாங்கிக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஓர் அதிசயம் ஆகும். உலக மக்களின் விருப்பத்திற்கும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கும் எதிராக (Veto) வீட்டோ அதிகாரம் பலஸ்தீன பூமியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு கிடைக்கின்றது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதுவித மதிப்பும் அளிக்கப்படாது உலகின் அதியுயர் ஆயுத பலத்தின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்து வருகிறது.

ஒருசில நாடுகளில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் தலைவர்கள் தமது நாட்டின் பெரும்பான்மையினரின் பேராதரவைப் பெறுவதற்கு அழுத்தத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்ட மக்கள் எழுச்சிக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். ஆயினும் பதவிக்கு வந்த பின்னர் அதிகார மற்றும் பலம் ஆகியவற்றிற்கு முன்னாள் பயனற்றவர்களாக மாறி அடக்குமுறை மற்றும் அழுத்தம் ஆகியவற்றைப் பிரயோகிக்கும் சக்திகளின் கையாட்களாக மாறுவதனை இன்று நாம் உலகின் ஒருசில பகுதிகளில் காண்கின்றோம்.

சில அரசியல் தலைவர்கள் முதற்தர சொகுசு விமானப் பிரயாணங்கள், ஐந்துநட்சத்திர சுற்றுப்பயணங்கள் என்பவற்றுக்காக தனது சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்து கூட்டத்தோடு வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிடைக்கப்பெறும் அழைப்பினை ஏற்று உன்னதமான கொள்கைக்கான தமது அர்ப்பணிப்பினைத் தாரை வார்க்கின்றார்கள். அன்று காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த எமது நாட்டை விடுவிப்பதற்கான முயற்சியின் போது ஏகாதிபத்தியவாதிகள் எமது சமூகத்தின் மத்தியில் இன, மத, சாதி போன்றே மேல்நாடு, கீழ்நாடு என பாகுபாடு ஏற்படுத்தியமை எனது நினைவுக்கு வருகிறது. அதே போல் இன்று மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் பலஸ்தீனர்களிடையிலும் தந்திரமாக பாகுபாட்டினை உருவாக்கி அதனூடாக அவர்களது ஆதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சியை நாம் இன்று தொடர்ச்சியாக காண்கின்றோம்.

ஆயினும் தனது இலட்சியத்தைத் தளரவிடாமல் இன்றுவரை தமது தாய்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தினை தொடர்ச்சியாக அவர்கள் முன்னெடுத்துச் செல்வதை நாம் பார்க்கின்றோம். இப் பேரவலம் தொடர்பாக உரியவாறு அணுகப்பட்டு நியாயம் வழங்கப்படும் வரை மத்தியகிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரத் தன்மை மற்றும் அமைதியானதோர் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதற்கு முடியாதுள்ளது.

காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இலங்கையர்களான நாம் சுதந்திரம் பெற்று இந்த வருடத்துடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. பலஸ்தீன மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கும் இந்த ஆண்டில் எழுபது வருடங்கள் பூர்த்தியடைகிறது. தமது வாசஸ்தலங்களின் திறவுகோல்களைக் கையில் ஏந்தியவாறு தாய்நாட்டின் சுதந்திரத்திற்கான பிரார்த்தனைகளுடன் எழுபது ஆண்டுகளாக நீண்டகால சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியுள்ள பாலஸ்தீனர்களுக்கு உலகவாழ் மக்களின் விருப்பத்துடன் இணைந்து இத்தினத்தில் நாம் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம்.

About the author

Administrator

Leave a Comment