அரசியல்

திகன – இன்னும் கிடைக்காத நீதி!?

Written by Administrator

 – ரவூப் ஸய்ன் –

  • முழுயான நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை
  • அரசியல்வாதிகளின் 30 நாள் காலக்கெடு முடிந்துவிட்டது
  • விசாரணை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை

இழுத்தடிப்பு அரசியலுக்கு தெற்காசிய நாடுகளின் அரசாங்கங்கள் பிரபலமானவை. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட காட்சியை இந்தியத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புச் செய்தன. இந்துத்துவ கரசேவகர்கள் 400 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்தப் பள்ளிவாயலை விதம் விதமாக உடைத்து நொறுக்கும் காட்சிகளில் குற்றவாளிகள் யார் என்பது முழு இந்தியாவுக்குமே தெரிய வந்தது.

ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு காங்கிரஸ் அரசாங்கம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்தது. இந்திய நீதித்துத் துறை வினோதம்; 18 ஆண்டுகளின் பின்னர் விசாரணை அறிக்கை வெளிவந்தது. அப்படி வெளிவந்தும் எந்தக் குற்றவாளியும் (உண்மையான பின்னணிச் சூத்திரதாரிகள்) இதுவரை தண்டிக்கப்படவுமில்லை.

வன்முறையின் தீவிரமும் மக்கள் அதன் மீது கொண்டிருந்த கோபாவேசமும் 18 ஆண்டுகளில் தணிந்து விடும் என்ற கணிப்பீட்டில்தான் நீதித்துறை செயல்பட்டது. அதன் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர்தான் இன்று இந்தியப் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி என்பது வேறு கதை. சட்டம் என்ற இருட்டறையில் நீதி தேவதை குறட்டை விட்டும் உறங்கும் இந்தக் காட்சி நமது நாட்டுக்கும் நன்கு பொருந்துகிறது.

திகன இனவெறியாட்டத்தின்போது கடைகளைக் கொள்ளையடித்து, பள்ளிவாயல்களுக்குத் தீயிட்டு, மௌலவிமார்களை அதிரடிப் படையினர் வெளியே இழுத்து வரும் காட்சிகள் இஇகூங இல் பதிவாகியுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமித் சிங்க என்பவனின் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டும் துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகத் துறை பேச்சாளர் அப்போது கூறிவந்தார்.

சுமார் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், எவரும் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளியாய் அறிவிக்கப்படவில்லை. தண்டனைத் தீர்ப்புக்களும் வழங்கப்படவில்லை. அமித் சிங் அனுதாரபுரச் சிறையில் உள்ளதாகவும் விசாரணைகள் இன்னும் தொடர்வதாகவும் கைதுசெய்யப்பட்டோரில் குற்றத்தை சான்றுப்படுத்தும் சாட்சிகள் இல்லாதவர்கள் விடுதலையாகி வருவதாகவும் கூறப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக இவற்றை நோக்கும்போது பாபரி மஸ்ஜித் விசாரணைக் குழுவே நினைவுக்கு வருகின்றது.

குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படாவிட்டால் மீளவும் இதே குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளதென்ற உண்மையை அனைவரும் அறிவோம். இன்னொரு புறம் இனவெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு தருவோம் என்று நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் வாய் பிளந்த பிரதமர் “அஞ்சு பத்தைக்” கொடுத்து சமாளித்து விடலாம் என்பதுபோல ஒரு கோடிப் பெறுமதியான கடையை இழந்த முஸ்லிமுக்கு 50,000 கொடுக்குமாறு அதிரடி உத்தரவு போட்டு விட்டு அமைதியாகி விட்டார்.

2020 இல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் வரை திகன இனவெறியாட்டத்தை அரசியல்வாதிகள் இழுத்துச் செல்வார்கள் என்பதில் மண்ணளவும் சந்தேகமில்லை. 2015 தேர்தலுக்கு அளுத்கமை கலவரம் துருப்புச் சீட்டாக இருந்தது போல், 2020 தேர்தலில் திகன எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் சிங்களக் காடையர்களால் தாக்கியழிக்கப்பட்ட, எரியூட்டப்பட்ட பள்ளிவாயல்களும் மத்ரஸாக்களும் புகை கவிழ்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன. எதுவும் முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை. இப்பிரதேசத்தில் இயங்கும் முஸ்லிம் நிறுவனங்களும் பிரதேசவாதிகளும் இது குறித்து அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று அங்கலாய்க்கின்றனர். அரசாங்கமோ மூன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையை மீளமைத்து மீளமைத்து காலத்தை ஓட்டி வருகின்றது.

உலகச் சந்தையில் பெற்றோலியத்தின் விலை குறைவடைந்துள்ள ஒரு தருணத்தில் இலங்கையில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரிய சப்பாத்தை அணிந்திருக்கும் நிதியமைச்சர் மங்கள இரு மாதங்களுக்கு ஒரு முறை பெற்றோலிய விலை மீள்பரிசீலிக்கப்படும் என்று ஆறுதல் வேறு சொல்கிறார்.

சமையல் எரிவாயுவின் விலையும் சுமார் 250 ரூவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி என்று கூறப்படுகின்ற அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கிய ஒரே சலுகை இந்த 250 ரூபாதான். தற்போது அதனையும் பின்வாங்கிக் கொண்டுள்ளது. ஊழல் பெருச்சாளிகளும் இலஞ்சம் வாங்குபவர்களும் செய்யும் குற்றங்களுக்கு மக்கள் பச்சாதாபப்பட வேண்டியுள்ளது.

ஸ்திரமில்லாத அரசாங்கத்தைத் தக்கவைக்க மக்களைப் பிழியும் இந்த மோசமான கலாசாரத்தில் நீடித்த சமாதானத்தையோ சகவாழ்வையோ குறித்து சிந்திப்பதற்கு ஜனாதிபதிக்கோ அமைச்சர்களுக்கோ நேரம் இருக்காது. அதை இன்றைய திகன பிரச்சினையில் தெளிவாகக் காண்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் சட்டப் பிரச்சினை இருப்பதாக ஒரு புதிய விவாதம் மேற்கிளம்பியிருக்கிறது. இனவெறியாட்டம் நிகழ்ந்த போது பாராளுமன்றக் கட்டடத்தில் கட்டாந் தரையில் உட்கார்ந்து ஆட்சேபம் தெரிவித்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை நாம் நினைவுபடுத்த வேண்டியதில்லை.

இம்முறை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் சமையத் தலைவர்களுக்கும் விடுக்கப்பட்ட அம்மணமான விமர்சனங்களும் கண்டனங்களும் கொஞ்சம் அவர்களை சூடுகொள்ள வைத்துள்ளது என்றுதான் மக்கள் நம்பினார்கள். அவர்கள் அரசாங்கத்திற்கு 30 நாள் காலக்கெடு விதித்தபோது முஸ்லிம்கள் உற்சாகமடைந்தார்கள். ஆனால், எல்லாமே அரசியல் கபட நாடகம் என்பது இப்போது வெளிச்சமாகியுள்ளது. மட்டுமன்றி நமது தலைவர்கள் சூடு சொறணை அற்றவர்கள்தான் என்பதும் தெளிவாகியுள்ளது.

இத்தனைக்கும் மத்தியில் அமைதியாக இருங்கள் என்று மக்களை அமைதிப்படுத்தி, அழிவை அதிகப்படுத்திய தலைவர்களையும் காணவில்லை. ரிஷாத் முதல் ஹக்கீம் வரை பதவி மோகம் பிடித்தலையும் தலைவர்களும் தமது கையாலாகாத் தனத்தைக் காட்டிவிட்டனர். களத்திற்குச் சென்று அறிக்கையிட்டவர்கள் அமைதியாகிவிட்டார்கள். காலக்கெடு விதித்த முஸ்லிம் தலைவர்கள் வாய்பொத்தி இருக்கிறார்கள். மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் மறக்கும் முஸ்லிம் சமூகம் 60 நாட்கள் கடந்த நிலையில் இதுபோன்ற அனர்த்தங்களை மறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியமானது.

அரசாங்கத்தில் அட்டை போன்று ஒட்டிக் கொண்டிருந்தால்தான் தமது சுகபோகமும் சுகண்டியும் நீடிக்கும் என்பதை கணித்து வைத்துள்ள இவர்கள், எல்லாவற்றையும் அடக்கி வாசிக்கின்றனர். ஹக்கீம் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்தபோதே காலி கிந்தோட்டைக் கலவரம் நிகழ்ந்தது. அப்போது “நான் அமைச்சராக இருக்க வெட்கப்படுகிறேன்” என்று உணர்ச்சி ததும்பக் கூறிய அவர் வெட்கமில்லாமலேயே அமைச்சரவையில் நீடித்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், யாரும் விட்டு வைக்கப்பட மாட்டார்கள் என்று ரணில் கூறிய வார்த்தைகள்தான் அன்றைய நாட்களில் தமிழ் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாகியது.

திகன வெறியாட்டத்தில் இதே ரணில், இதே வாக்குறுதியைத்தான் வழங்கினார். ஆனால், முஸ்லிம்களைக் கொல்ல வந்தவனுக்கும் இனவெறியாட்டத்தில் கொல்லப்பட்ட சிங்களவனுக்கும் ரணில் அரசு நஷ்டஈடு வழங்கியது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. இன்று சட்டத்திலும் நீதித் துறையிலும் நாம் நம்பிக்கையிழக்கிறோம் என்கிறார் அமைச்சர் ஹக்கீம்.

திகன கலவரத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் “நான் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று அறிக்கை விட்டார். அம்பாறைக்குச் சென்ற அமைச்சர் ரிஷாத் பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அனைத்தும் நிகழ்ந்தது என்று அரசாங்கத்தை கடுமையாகச் சாடினார். ஆனால், இன்று இவர்கள் எல்லோரும் அதே அரசாங்கத்தில் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர். சுகண்டியோடும் சுகபோகத்தோடும் உல்லாசமாக உலா வருகின்றனர்.

சமூகத்தின் இருப்புக்காக தமது பதவியை துறக்கும் அளவுக்கு இவர்கள் ஒன்றும் பெரிய தியாகிகள் அல்லர். ஆயினும், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாய் இவர்கள் இருக்கத் திராணியற்றவர்கள் என்பதை பலமுறை நிறுவிவிட்டார்கள். போராடப் போனவன் புறமுதுகு காட்டி ஓடிவந்தது போல் உரிமைப் போராட்டம் நடத்தச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அநியாயம் செய்கின்ற அரசாங்கத்தின் பக்கம் நின்றே முஸ்லிம்களுக்காக தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று கையை விரித்து தன் கையாலாகத் தனத்தைக் காட்டி விட்டார். இது ஹக்கீமுக்கு மட்டுமன்றி ரிஷாத் மற்றும் பைசர் முஸ்தபா போன்ற அமைச்சர்களுக்கும் பொருந்தும்.

கடந்த வாரம் அம்பாறை, கண்டி சம்பவங்கள் தொடர்பாக ஓர் அமைச்சராகவும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாகவும் பாராளுமன்றத்தில் றவூப் ஹக்கீம் ஆற்றிய உரையைப் பாருங்கள்.

“அம்பாறை, கண்டி சம்பவங்களைப் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு விடயத்தில் பாரிய நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. சொத்துக்களுக்கு உறுதியில்லாத காரணத்தினால் நஷ்டஈடு வழங்குவதில் சில பிரச்சினைகள் தோன்றியுள்ளன. முழுமையாக தீக்கிரையாக்கப்பட்ட இடங்களில் முஸ்லிம்கள் தமது சொத்துக்களை சான்றுப்படுத்துவது எப்படி” என்று கேள்வியெழுப்பினார் அவர்.

தான் அங்கம் வகிக்கும் அரசாங்கம் என்ற வகையிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையிலிருந்து தான் காப்பாற்றிய பிரதமர் என்ற வகையிலும் தனது பேரம் பேசும் ஆற்றலையும் அரசியல் ‘சாணக்கியத்தையும்’ கையாண்டு, அமைச்சரவையிலுள்ள சக அமைச்சருடன் பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினையை பாராளுமன்றத்தில் ‘உரிமைக் குரலாக’ முழங்கும் இத்தகைய தானைத் தளபதிகள்தான் நமது அரசியல் தலைவர்கள் என்பது குறித்து நாம் வெட்கப்பட வேண்டும்.

எல்லாம் பற்றி எரிந்து விட்டது என்பதற்கு கடைகளும் பள்ளிகளும் சாட்சியாக இருக்க, அதற்கு உறுதிகளைக் கோருவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு இந்த அமைச்சருக்கு உண்டு. அதை விடுத்து தலைவர்கள் என்போரும் சமூகத்தோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதை நாம் எவ்வாறு ஒப்புக்கொள்வது.

நல்லாட்சியைக் கொண்டு வருவோம். தேசிய இனப் பிரச்சினைக்கு நிலைத்த தீர்வு காண்போம் என்று மைத்திரியும் ரணிலும் சந்திரிக்காவும் ஏன் சம்பிக்கவும் உட்கார்ந்திருந்த மேடையில் முழங்கிய ஹக்கீம் இன்று என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.

“ஜனாதிபதியின் உரையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அணுகுமுறையைக் கூறும் விடயத்தில் ஒரு நழுவல் போக்கு கடைப்பிடிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. ஓரிரு இடங்களில் மாத்திரமே சிறுபான்மை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் சமவுரிமை, கலாசாரம் தொடர்பில் இங்கு பேசப்பட்டதே ஒழிய வேறு எதுவுமே அவரது உரையில் முன்மொழியப்படவில்லை. தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கத்தில் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் நானும் பிரதமர், எதிர்கட்சித் தலைவர் உட்பட பலரும் உள்ளோம். குழு என்ற வகையில் 78 தடவைகள் நாம் சந்தித்துப் பேசியுள்ளோம். தற்போது அந்த வழிநடத்தல் குழுவின் எதிர்காலம் என்ன என்பது சந்தேகத்திற்கு இடமானது. இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையைச் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம்” என்றார் ஹக்கீம்.

இப்போது இலங்கையில் தடுமாறுவது நல்லாட்சி அரசாங்கம் மட்டுமல்ல. முஸ்லிம் அரசியல்வாதிகளும்தான் என்பதை அமைச்சர் ஹக்கீமின் இந்த உரை வெளிப்படுத்துகின்றது.

முஸ்லிம்களின் கூட்டங்களில் தமிழில் உரையாற்றும் போது இந்தத் தலைவர்கள் வீறாப்புப் பேசுகிறார்கள். வீராவேசம் போடுகின்றனர். ஆனால், அரசாங்கத்தை அழுத்துவதிலோ மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப பேரம் பேசுவதிலோ ஒதுங்கியிருக்கிறார்கள். கிந்தோட்டை முதல் திகனை வரை இவர்களிடமிருந்து சமூகம் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

2009 ரமழானில் முஸ்லிம்கள் இரவு வேளைகளில் கிரீஸ் பூதங்களை எதிர்கொண்டார்கள். இப்போது எந்த வேளையிலும் தமக்கெதிராக இனவெறிப் பூதங்கள் வெளிவரலாம் என்று அஞ்சுகிறார்கள். அரசியல் சந்தர்ப்பவாதிகளாலும் அரைகுறை ஆலிம்களாலும் பந்தாடப்படும் முஸ்லிம்களின் தலைவிதி இந்த ரமழானில் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளாதிருக்கப் பிரார்த்திப்போமாக!

About the author

Administrator

Leave a Comment