ஆசிரியர் கருத்து

எல்லோரும் கொண்டாடுவோம்

Written by Administrator
Editoril: 395

இலங்கை முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றார்கள். உலகளாவிய முஸ்லிம் சமூகத்தினரோடு இரண்டறக் கலந்தவர்கள் என்ற வகையில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு நாட்டுடன் சுருங்கிப் போன ஒரு சமூகமல்ல என்பதை முஸ்லிம்களுடைய பெருநாட்கள் உணர்த்துகின்றன. பெருநாட்களினூடாக உலக முஸ்லிம்களுடன் இணையும் அதே நேரம் தாம் வாழுகின்ற நாட்டிலும் அவர்கள் ஏனைய சமூகங்களை விட்டும் வேறானவர்கள் என்ற உணர்வுகளைக் குறைக்கின்ற வகையில் இலங்கைச் சமூகத்தில் பெருநாளைக் கொண்டாடுகின்ற முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும்.

மனிதர்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட அல்குர்ஆன், முஸ்லிம்களால் மாத்திரமே பின்பற்றப்படும் நிலையிலிருந்து உலகப் பொதுமறையாக அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நிலை இன்றிருக்கிறது. அந்த வகையில் அல்குர்ஆனின் பல போதனைகள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமானதாகவன்றி முழு உலக மக்களாலும் பின்பற்றப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. அந்தப் போதனைகளை இன்னும் அந்தப் போதகைள் கிடைக்காதவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் இலங்கையில் ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாடப்படவிருக்கிறது. இலங்கையில் முஸ்லிம்கள் தனித்துவமான சமூகமாக இருந்தாலும் அவர்கள் தனித்தவர்கள் அல்ல. பல்லின இலங்கைச் சூழலில் எந்தச் சமூகமும் அப்படித் தனித்து வாழவும் முடியாது. ஒரே நாடு என்ற வகையில் ஒவ்வொரு சமூகத்தினதும் சுக துக்கங்கள் வேறுவேறாகப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கின்ற சூழலியே ஒவ்வொரு சமூகமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அண்மைக்காலங்களில் அதிகரித்திருக்கின்ற இயற்கை அனர்த்தங்களின் போதாயினும் சரி, நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளின் போதும் சரி எல்லா இனங்களும் சேர்ந்தே இந்தச் சவால்களை எதிர்கொள்கின்றன. துன்பங்களில் பங்கு கொள்கின்றன.

இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவை என்ற வகையில் துன்பங்களின் போது ஒன்றாய் அனுபவிப்பது போலவே இன்பங்களையும் இணைந்தே அனுபவிப்பதற்குப் பழக்கப்பட்டவர்கள் நம்மக்கள். உலக அளவிலான வெற்றிகளையும், உள்ளுரில் அடைகின்ற வெற்றிகளையும் சந்தோஷங்களையும் ஒன்றாகவே இணைந்து கொண்டாடிப் பழக்கப்பட்டவர்கள் நம்மக்கள். எல்லா இனத்தவர்களது விஷேட தினங்களையும் அனைவரும் அனுபவிக்கத்தக்க வகையில் விஷேட விடுமுறைகளை வழங்கியுள்ள நாடு நமது நாடு.

இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக பல்வேறு பண்டிகைகள் இலங்கையின் பல்லின சமூகத்தால் இணைந்து கொண்டாடப்படுகின்றன. ஈதுல் பித்ர் பெருநாளும் இந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோருடன் இணைந்தே வாழ்கிறார்கள். அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிராற உண்ணுபவன் முஸ்லிமல்ல என்ற நாயக வாக்குக்கு இணங்க, பெருநாள் கொண்டாட்டங்களின் போது அண்டை அயலவர்களையும் இணைத்துக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்.

ரமழானில் ஒன்று கூடுவதற்கான பல இப்தார்கள் நடந்தது போல, பெருநாள் தினத்தையும் சக இனங்களுடனும் ஒன்று கூடிக் களிப்பதற்கான பொழுதுகளாக மாற்றிக் கொள்ள முடியும். பெருநாள் விளையாட்டுப் போட்டிகள், பெருநாள் ஒன்று கூடல்களின்  போதெல்லாம் வேற்றுமைகளுக்கு அப்பால் நின்று செயற்படுவதற்கான வழிவகைகளை யோசிக்க முடியும்.

இன உணர்வுகள் கூர்மையடைந்திருக்கும் நிலையில் இன உணர்வுகளுக்கு அப்பால் நின்று இலங்கைச் சமூகத்தை ஒன்றுபடுத்துவதற்கு இலங்கை முஸ்லிம்களால் முடியும். அதற்காக இம்முறையை பெருநாளை நாட்டு மக்கள் எல்லோரும் கொண்டாடுவோம்.

ஈத் முபாரக் !

About the author

Administrator

Leave a Comment