நேர்காணல்

முஸ்லிம் சமுதாயம் இழந்துவிட்ட ஹிஜ்ரி கலண்டரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்து முஸ்லிம் சமூகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

Written by Administrator

M.N அஹமது ஸாஹிபு, தமிழ்நாடு காயல்பட்டினத்தை பிறப்பிடமாக கொண்டவர். கனிணித்துறையில் இளமாணிப் பட்டத்தையும் (Bachelor Degree (Bsc)) in Computer Science) அரசியல் விஞ்ஞானத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் (Master Degree (M.A) in Political Science) பூர்த்திசெய்துள்ள இவர், சட்டத்துறையிலும் (Bachelor Degree (LLB) in Law) கற்று பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஹிஜ்ரி கலண்டரை பின்பற்றியும், பிரச்சாரம் செய்தும் வருகின்ற அஹமது சாஹிபு அவர்கள், தற்போதுவரை ஹிஜ்ரி கமிட்டியின் ஷூரா கவுன்ஸில் மற்றும் அதன் ஆய்வுக்குழுவின் உறுப்பினராக உள்ளார். சவுதி அரேபியாவின் உலமாக்கள் சபையிலும், King Abdul Azwwz City for Science and Technology – KACST இன் அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியிலும் இடம்பெற்ற ஹிஜ்ரி கலண்டர் பற்றிய கலந்துரையாடலில் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் இவர் பங்கெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘முஸ்லிம் சமுதாயம் இழந்துவிட்ட ஹிஜ்ரி கலண்டரை மீண்டும் புனர்நிர்மானம் செய்து முஸ்லிம் சமூகத்திடம் சமர்ப்பிப்பதே நமது பிரதான நோக்கம்’

M.N அஹமது ஸாஹிபுஹிஜ்ரி கமிட்டியின் ஷூரா கவுன்ஸில் மற்றும் ஆய்வுக்குழு உறுப்பினர் (ஜாக் – இந்தியா)

பிறைக் கலண்டரை உருவாக்கியதன் பிண்ணனியும் நோக்கமும் என்ன?

அல்குர்ஆனின் பல வசனங்களையும், இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறையையும் நாங்கள் ஆய்வு செய்து பார்க்கும் வேளையில், ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்வியல் நடைமுறையும் துல்லியமான ஒரு கலண்டர் ஒழுங்கின் (ஊயடநனெயச ளுலளவநஅ) அடிப்படையில் அமையப் பெற்றுள்ளதை அறிகிறோம்.

உதாரணமாக ரமழான் நோன்பின் துவக்கம், இருபெருநாட்கள், ஹஜ் மற்றும், ஆஷூரா நோன்பு, ஒவ்வொரு மாதமும் வெண்மை நாட்களின் மூன்று நோன்புகள், அரஃபா நோன்பு, அனைத்துச் சந்திரமாதங்களையும் ஆரம்பித்தல், புனித மாதங்களை சரியாக ஆரம்பித்தல், இத்தாவின் மாதக்கணக்கு போன்ற வணக்கங்கள் அனைத்தும் சந்திரனை மையமாக வைத்து குறித்த திகதிகளில் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும். மேற்படி வணக்கங்களைத் துல்லியமான சந்திரக் கலண்டரின்படி அமைந்த சரியான நாளில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இட்டுள்ளான்.

ஆனால் இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒருநாளுக்கு மூன்று திகதிகளும், ஒரு திகதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக்கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்ற, துல்லியமான, குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இதை கீழ்க்காணும் அல்குர்ஆனின் வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

‘பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு திகதிகளுக்காகவும் இன்னும் ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன’. அல்குர்ஆன் (2:189)

‘ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான்’. (அல்குர்ஆன் 10:5)

‘சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற கணக்கின்படியே இருக்கின்றன (அல்குர்ஆன் 55:5,6:96)

‘உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளையைப் போல் ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தி இருக்கின்றோம்’ (அல்குர்ஆன் 36:39)

‘வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும்’. (அல்குர்ஆன் 9 : 36)

இன்னும் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும், நடப்பு மாதம் எப்போது முடிவடையும்? என்பதை முற்கூட்டியே அறிந்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளதை பல ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

மேலும் இரண்டாவது கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில், இஸ்லாமிய நாட்காட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து அன்றைய ஸஹாபாக்களின் ஏகோபித்த (இஜ்மாவுஸ் ஸஹாபா) முடிவு அறிவிக்கப்பட்டது. அதாவது அல்லாஹ் நமக்கருளிய சந்திர நாட்காட்டியைக் கொண்டே ஆண்டுகளை எண்ணிக் கணக்கிட வேண்டும் என்றும் ஹிஜ்ரி நாட்காட்டியுடைய ஆண்டின் துவக்கம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணத்திலிருந்து (ர்தைசi நுசய) ஆரம்பிக்கப் படவேண்டும் என்றும் நபித்தோழர்களால் வரையறுக்கப்பட்டது.

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட எமது இஸ்லாமிய ஹிஜ்ரி கலண்டர்தான் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது. இஸ்லாமிய நாட்காட்டியுடைய மாதத்தை அவரவர்கள் சுய விருப்பப்படி மாற்றி அமைப்பது இறை நிராகரிப்பு என்றும் அல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளான் (9:37). சந்திரனின் படித்தரங்களை மையமாக வைத்து, ஒரு மாதத்தின் நாட்கள் 29 அல்லது 30 ஆகக் கொண்டதே ஹிஜ்ரி கலண்டர். நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படியும், விஞ்ஞான அடிப்படையிலும் மேற்படி நாட்கள் மிகத் துல்லியமாக அமைந்துள்ளது.

இன்று உலகில் புலக்கத்திலுள்ள கிறிஸ்தவக் கலண்டரில் இடம்பெற்றுள்ள மாதங்களுக்கும்,
அம்மாதங்களிலுள்ள நாட்களின் எண்ணிக்கைக்கும், குர்ஆன் கூறும் சந்திரனின் படித்தரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக முஸ்லிம்கள் மூன்று வௌ;வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வௌ;வேறு நாட்களில் தனித் தனியாக பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்கி குர்ஆன் சுன்னா ஒளியில் சரியான தினத்தில் நமது அமல்களை அமைத்துக் கொள்ள துல்லியமான சந்திர நாட்காட்டி மூலம் சரியானத் தீர்வைச் சொல்கிறோம். முஸ்லிம் சமுதாயம் இழந்துவிட்ட ஹிஜ்ரி கலண்டர் எனும் இஸ்லாம் கூறும் துல்லியமான சந்திர நாட்காட்டியை மீண்டும் புனர்நிர்மானம் செய்து முஸ்லிம் சமூகத்திடம் சமர்ப்பிப்பதே நமது பிரதான நோக்கம் ஆகும்.

பிறை கலண்டரை எப்படி உருவாக்கினீர்கள்?

‘பிறைகளை வல்ல அல்லாஹ் திகதிகளுக்காக ஏற்படுத்தியுள்ளான்’ என்றும் ‘அவை உங்கள் மீது மறைக்கப்படும் போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : இப்னு ஹூசைமா (1789), முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306))

தற்போதைய விஞ்ஞான முன்னேற்றத்தின் வாயிலாக பிறைகள் பற்றித் துல்லியமாகக் கணக்கீடு செய்ய முடிந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்குர்ஆன் வசனம் (10:5) வலியுறுத்துவது போல பல ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் அறிய முடிந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்.

பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத் தோராயமாக அறிந்து கொள்வதை விடத் துல்லியமான கணக்கீட்டின் படி ஒப்பிட்டு பார்த்துப் பின்பற்றுவதை நம் மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக கணக்கிடுவதை வலியுறுத்தியும் ஆர்வ மூட்டியும் இருப்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அறிவியல் ரீதியாக சந்திரனின் ஒரு மாத சுழற்சியை 8 முக்கிய நிலைகளாக பிரித்துள்ளார்கள்.

1. சந்திரனின் ஒளி பூமிக்கு வராது மறைக்கப்படும் நிலை (New Moon – Geocentric Conjuction)
2. வளர்பிறைகளின் நிலை (Waxing Crescents)
3. முதல் கால் பகுதி நிலை (First Quarter)
4. முழு நிலவை எதிர் நோக்கி வளரும் நிலை (Waxing Gibbous)
5. முழு நிலவு நிலை (Full Moon)
6. தேய்பிறையை எதிர் நோக்கித் தேயும் நிலை (Warning Gibbous)
7. கடைசி கால் பகுதி நிலை (Last Quarter)
8. தேய் பிறைகளின் நிலை (Warning Crescents)

சந்திரனின் மேற்கூறிய அனைத்து நிலைகளையும் துல்லியமாக கணக்கிட்டு அறிந்து கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது – அல்ஹம்துலில்லாஹ். அதன் அடிப்படையில்தான் நமது ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் அமைந்துள்ளன. முதலில் பிறைகளை பற்றிய கீழ்க்காணும் அடிப்படையான விஷயங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட படித்தரங்களைஃவடிவநிலைகளைக் கொண்ட பிறைகளை நாம் தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அவ்வாறு வரும் வேளையில், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் இறைவசனம் (36:39) கூறும் ‘உர்ஜூனில் கதீம்’ – உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள் எனில், அந்த மாதத்தின் 28-ஆம் நாள் அன்று ‘உர்ஜூனில் கதீம்’ ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில் காட்சியளிக்கும்.

‘உர்ஜூஃனில் கதீம்’ என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்த நாள் புவிமையசங்கம (Geocentric Conjuction Day) தினமாகும். சங்கமம் என்பது ஒவ்வொரு சந்திர மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு தளத்தில் (அல்லது ஒரே நேர்கோட்டில்) தவறாமல் சங்கமிக்கும் தினமாகும். அந்த புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjuction Day) தேய்பிறை அல்லது வளர்பிறையை பொதுவாக பார்க்க முடியாதவாறு புறக்கண்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் ‘கும்மிய’, ‘உஃமிய’, ‘கபி(f)ய’, ‘க(g)ம்மிய’, ‘ஹஃபிய்ய’, ‘குபிய’ அல்லது ‘கும்ம’ வுடைய நாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேற்சொன்ன கும்மவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குத் திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும். இதுவே முதல் நாளுடைய சந்திரனின் படித்தரமாகும். முதல் நாளுக்குரிய அந்தப் பிறை, அந்த முதல் நாளின் பாதிப் பகுதியை (சுமாராக 12 மணிநேரங்களைக்) கடந்து விட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.

இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ் – மக்களுக்குத் திகதிகளை காட்டும் (Calendar for Mankind) என்ற ஒரு சொல்லை வைத்து இந்த உம்மத்திற்கு வலியுறுத்தியதாகும். மேற்கூறிய விபரங்களை நாம் குர்ஆனிலும், பழங்கால குர்ஆன் விரிவுரைகளில் காணலாம்.

சூரியன், சந்திரன், மற்றும் பூமி ஆகிய மூன்றும் சங்கமிக்கும் அமாவாசை என்னும் புவிமைய சங்கம நாள்தான் ஒரு மாதத்தின் இறுதிநாள் ஆகும். அந்த நாளில்தான் பிறையானது புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் நாள். மாதத்தின் முதல் நாளில் சந்திரன் சூரியனை பின்தொடர்ந்து வரும்.

‘அவன் சந்திரனின் ஒளியை வேறுபடுகின்றவாறு ஏற்படுத்தியுள்ளான் சில சமயங்களில் சந்திரனின் ஒளி முழுமை அடைகின்ற வரை அதிகரிக்கின்றது. பிறகு சந்திரனின் ஒளி முற்றிலுமாக மறைகின்ற வரை அது தேய ஆரம்பிக்கின்றது. இந்த நிலையே கடந்துசென்ற மாதங்களையும் வருடங்களையும் குறிக்கின்றது’ என்று அல்-குர்ஆனின் 71:16 வசனத்திற்கான தஃப்ஸீர் இப்னு கதீரின் விளக்கம் தெளிவுபடுத்துவதை காணலாம்.

‘மேலும் சந்திர மாதத்தின் முதல்நாளில், பிறையானது சூரியன் உதித்த பின்னர் சற்று தாமதித்து கிழக்கில் உதிக்கும். அந்த முதல் நாளில், சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்னரே அந்தப்பிறை நம் புறக்கண்களுக்கு காட்சி அளிக்கும்’ என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆக நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற இறை வசனங்களின் அடிப்படையிலும், நபி (ஸல்) அவர்களிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், விஞ்ஞானத்தின் துணை கொண்டுமே நாம் ஹிஜ்ரி நாட்காட்டியை உருவாக்கியுள்ளோம்.

உங்களின் கலண்டருக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு உள்ளதா?

இவ்வுலகில் வாழும் மனிதர்களில் பெரும்பான்மையோர் இறை நிராகரிப்பாளர்களாக வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் மட்டும்தான் என்ற பேருண்மையை உலகின் ‘பெரும்பான்மையான மக்கள்’ இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், வல்ல அல்லாஹ் இவ்வுலகின் இரட்சகன் இல்லை என்று ஆகிவிடாது. இன்னும் இலங்கையிலும், இந்தியாவிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்வதால், இஸ்லாம் சத்தியமான மார்க்கம் இல்லை என்று நாம் புரிந்து கொள்வோமா என்ன? பெரும்பான்மைக்கு மார்க்கத்தில் ஒரு போதும் முக்கியத்துவம் தரப்படவில்லை. எனவே ‘பெரும்பான்மை மக்களின் ஆதரவு’ என்பது உண்மையையும், சத்தியத்தியத்தையும் உரசிப்பார்க்கும் உரைகல்லும் அல்ல.

‘பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் பொய்யான கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் என்று அல்குர்ஆன் (6:116) நம்மை எச்சரிக்கிறது.

பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் துவங்க வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும்? என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை பல ஹதீஸ்களை வாயிலாக விளக்கியும் இருக்கிறோம். இன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக் கணக்கை குறிப்பிட்ட (இஜ்மாவுஸ் ஸஹாபா) விஷயத்தில் திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் வரலாற்று ஆதாரங்களின் மூலம் மக்களிடம் சமர்ப்பித்துள்ளோம். மூத்த தாபியீன்களும், முற்கால குர்ஆன் விரிவுரையாளர்களும் பிறை கணக்கீட்டை வலியுறுத்தியுள்ளதை சமூகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.

இன்னும் பிறைகளைக் கணக்கிடத்தான் வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களைகூட பகிரங்கமாக அறியத் தந்துள்ளோம். இந்நிலையில் சந்திரனின் ஓட்டத்தையும், சந்திரக் கலண்டரின் அடிப்படைகளையும் விளங்கிடாதவர்களே எமது ஹிஜ்ரி கலண்டரை நிராகரிப்பார்கள். சத்தியத்தை விளங்கிப் பின்பற்றிட வேண்டும் என்ற வேட்கையில் உள்ள கனிசமானோர் ஹிஜ்ரி கமிட்டியின் பிறை ஆய்வுகளிலுள்ள நியாயத்தையும், நேர்மையையும் தற்போது புரிந்து வருகிறார்கள்.

பல ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வரும் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின்
அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும். ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கம தினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர். மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால் பகுதி நாள் என்று நாம் கலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா? என்பதையும் ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து வருகிறார்கள். அது போல கடந்த கால வரலாற்று நிகழ்வுகளின் திகதிகள் எமது சந்திர நாட்காட்டியின் திகதிகள் சரிவரப் பொருந்திப் போகின்றதா? என்பதை பின்னோக்கிச் சென்று கணக்கிட்டு அதன் துல்லியத்தை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

சர்வதேசப் பிறை, சவுதி தேசப் பிறை, தமிழ் மாநிலப் பிறை மற்றும் இலங்கையின் தேசியப்பிறை போன்ற அனைத்து பிறை நிலைப்பாடுகளும், பிறந்த பிறையை மேற்குத் திசையில் அது மறையும் போது புறக்கண்களால் பார்த்த பின்னர்தான், புதிய மாதத்தைத் தொடங்க வேண்டும் என்ற தவறான கொள்கையின் மூலம் உருவாக்கப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் மார்க்க அடிப்படையற்ற தவறான பிறை நிலைப்பாடுகள்தான் என்பதை நிதானத்தோடும், விருப்பு வெறுப்பின்றியும் சிந்தித்தால் விளங்கும்.

பிறை மாதத்தை ஆரம்பிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படலாம். ஓரிடத்தில் கண்ட பிறையை முழு முஸ்லிம் சமூகமும் செயற்படுத்தியது என்பதை கடந்த 1400 வருட காலங்களில் காண்பதற்கில்லை. இரவு பகல் மாறிமாறி வருவதால் முழு உலகிற்குமான சந்திரக் கலண்டரை உருவாக்கிவிட முடியாது என அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. இது குறித்த உங்களது நிலைப்பாட்டை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

இரவு பகல் மாறிமாறி வருவதால் முழு உலகிற்குமான சந்திரக் கலண்டரை உருவாக்கிவிட முடியாது என்ற சிந்தனை பிழையானதாகும். 24 மணிநேரங்கள் கொண்ட ஒரு முழுமையான நாள் என்பதில் பொதுவாக ஒரு பகலும், ஒரு இரவும் உள்ளடங்கியிருக்கும். அந்த ஒரு நாள் என்பதற்கு ஒரேயொரு திகதிதான் இருக்க முடியும். அதாவது ஜூன் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை என்றால் உலகில் ஜூன் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகத்தான் இருக்கும். அல்லாமல் ஜூன் 1ஆம் திகதி என்ற அந்த முழுமையான நாள் வியாழக்கிழமையாகவோ, சனிக்கிழமையாகவோ இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. இந்த அடிப்படையை நாங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இதேபோலதான் ஹிஜ்ரி கலண்டர் படி, ஷவ்வால் 1ஆம் வியாழக்கிழமை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஷவ்வால் 1ஆம் நாள் என்பது 24 மணிநேரங்கள் கொண்ட வியாழக்கிழமை என்ற ஒரு முழுமையான நாளைக் குறிக்கும். அந்த நாளின் காலைப் பொழுதில் நாம் அனைவரும் நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழ வேண்டும்.

யவ்முல் ஜூம்ஆ என்ற 24 மணி நேரங்கள் கொண்ட வெள்ளிக்கிழமை அன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களும் எவ்வாறு ஜூம்ஆ தொழுகையை தொழுது முடித்து விடுகிறார்களோ, அதுபோல் ஷவ்வால் முதல் நாள் என்ற அந்த ஒற்றை நாளுக்குள் நோன்புப் பெருநாள் தொழுகையையும் தொழுதுவிட முடியும்.

இரவு பகல் மாறிமாறி வருவதால் முழு உலகிற்குமான கலண்டரை உருவாக்கிட இயலாது என்ற கூற்று உண்மையானால் தற்போது புலக்கத்திலுள்ள கிறிஸ்தவக் கலண்டரையும் யாரும் பின்பற்றக் கூடாது.

உங்கள் கலண்டர் இலங்கைக்கும் பொருந்தி வருமா? இதை ஆசிய நாடுகளுக்கான பொதுக்காலண்டராக ஆக்கும் நோக்கம் உள்ளதா?

சந்திரனையும், அதன் மன்ஜிலால் அமைந்த நாட்காட்டியையும் வல்ல அல்லாஹ் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்காக ஏற்படுத்தியுள்ளான். எனவே ஹிஜ்ரி நாட்காட்டியானது ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கோ, ஒரு நகரத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ சொந்தமானது அல்ல. இது சர்வதேச மக்களுக்காக இறைவனால் வழங்கப்பட்டுள்ள ஒரு நாட்காட்டி முறை. சர்வதேச நாள் (Universal Day) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் (UTC- Coordinated Universal Time) ஆகியவற்றின் அடிப்படையில்தான் எமது ஹிஜ்ரி நாட்காட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என வாரத்திலுள்ள ஒவ்வொரு சர்வதேச நாளுக்கும் ஒரு பிறை படித்தரத்தை அல்லாஹ் வழங்கியுள்ளதை நாம் கலண்டரில் அச்சிட்டுள்ளோம்.

புவிமைய சங்கமம் (New Moon – Geocentric Conjuction), முதல் கால் பகுதி நிலை (First Quarter), முழு நிலவு நிலை (Full Moon), இறுதி கால் பகுதி நிலை (Last Quarter) என்று பிறைப் படித்தரங்கள் உலக நேரத்தில் (UT- Universl Time), உலக நாளுக்குரிய (Universal Day) திகதியில் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறிப்பிட்ட ஒரு நாட்டின் நேரத்தை (Local Time) கணக்கிட்டு ஹிஜ்ரி நாட்காட்டி அமைக்கப்படவில்லை. அதுபோல ஒரு நகரத்தில் பிறை எப்போது உதிக்கும்? எந்த நேரத்தில் மறையும் என்ற விபரங்களின் அடிப்படையில் ஒரு சர்வதேச ஹிஜ்ரி நாட்காட்டியின் திகதிகளை அமைக்கவும் முடியாது. ஹிஜ்ரி கலண்டர் சம்பந்தமான இந்த அடிப்படையான விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே எமது ஹிஜ்ரி கலண்டர் இலங்கைக்கும் சாலப் பொருந்தி வரும். எமது விளக்கங்களை படித்துக் கொண்டிருக்கும் மீள்பார்வை பத்திரிக்கையில் வாசகர்கர்களும் எமது ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றுவதற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

நேர்காணல் : ஹெட்டி ரம்சி

About the author

Administrator

Leave a Comment