நாடுவது நலம்

சர்வதேச ரீதியில் தனிமைப்பட்டிருக்கும் அமெரிக்கா

Written by Administrator

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

இந்நாட்களில் இஸ்ரேல் காஸா எல்லையில் பலஸ்தீன மக்கள் பூர்வீக நிலத்திற்காக வேண்டி மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலான மக்கள் காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். எந்தவொரு இஸ்ரேல் இனத்தவனும் கொல்லப்படவில்லை.

காஸா மற்றும் மேற்குக் கரையில் ஆர்ப்பாட்டம் செய்கின்ற பலஸ்தீன் மக்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறு கிரேக்கம் ஐ.நா சபையில் தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது. அளவுக்கு மீறிய வகையில் அதிகாரத்தை பயன்படுத்த இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை கண்டிப்பதும் இந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மாத்திரமே எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட 10 நாடுகள் பாதுகாப்பு சபையில் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. பிரித்தானியா, போலந்து, எத்தியோப்பியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தன. அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மாத்திரமல்லாமல், இந்தத் தீர்மானத்தை தடுப்பதற்கு வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தியது.

இந்தத் தீர்மானம் நிறைவேற வேண்டுமானால் 9 வாக்குகள் அளிக்கப்பட வேண்டும். 10 வாக்குகள் கிடைத்தன. 9 வாக்குகள் அளிக்கப்பட்டாலும் கூட ஒரு நாடு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினால் இந்தத் தீர்மானம் நிறைவேறாது. எனவே அமெரிக்காவின் நிறைவேற்று அதிகாரத்திற்கு மத்தியில் இந்தத் தீர்மானமும் நிறைவேறாமல் போயுள்ளது. எனினும் இராஜதந்திர ரீதியில் அமெரிக்கா உலக நாடுகளின் முன்பாக தனிமைப்பட்டிருப்பது இந்தத் தீர்மானத்தின் மூலம் நிரூபனமாகியுள்ளது.

பலஸ்தீன் தூதுவர் ரியாடிஷ் மன்சூர் ஐ.நா சபையில் ‘எவரும் சட்டத்திற்கு மேலாக இல்லை என்கின்ற செய்தி இந்தத் தீர்மானத்திற்கு கிடைத்த ஆதரவின் மூலம் உலகிற்கு சொல்லப்பட்டுள்ளது. நீதிக்கு மரியாதை செலுத்தாமல் அதிகாரத்திற்கு தலைசாய்ப்பதை நிராகரிப்பதாக இந்தத் தீர்மானம் எமக்கு உணர்த்தியுள்ளது’ என தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர் டெனீ டெனன் ‘பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவை நிராகரித்திருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டார்.

எப்படியிருப்பினும் பலஸ்தீன் – இஸ்ரேல் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்பின் செயற்பாடுகளால் அமெரிக்கா ஐ.நா பாதுகாப்புச் சபையில் தொடர்ந்தும் தனிமைப்படுவது இன்னுமின்னும் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு கொண்டுசெல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சர்வதேச ரீதியில் பலத்த விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உட்பட்டுள்ளது. அமெரிக்காவின் நடுநிலை பேணும் பண்பு மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன் தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா மாத்திரம் எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையில் பொதுவாக எப்பொழுதும் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் தோழமை நாடுகள் கூட இம்முறை அமெரிக்காவை தனிமைப்படுத்தியிருப்பது விளங்குகிறது. நீதி, நியாயத்தினை நோக்கி இந்நாடுகள் முன்வந்திருப்பது விளங்குகிறது. இது மகிழ்ச்சிகரமானதொரு விடயமாகும்.

இலங்கை எப்பொழுதும் பிரியாமல் நிற்கும் கொள்கையை பின்பற்றியதொரு நாடாகும். 1951இல் டட்லி சேனாநாயக்க தலையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மேற்கு முகாம்களில் நிலவிய எதிர்ப்பை கவனத்திற்கொள்ளாமல் சீனாவுடன் அரிசி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. இது இலங்கையின் பிளவுறாக் கொள்கைக்கு எடுத்துக்காட்டாகும்.

1950 மற்றும் 60 தசாப்தங்களில் SEATO அமைப்பு மற்றும் ASEAN அமைப்புக்களில் இணையாமல் இருப்பதற்கு அப்போதைய ஐ.தே.க அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானமும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தென் ஆபிரிக்கா தொடர்பிலும் இலங்கை பிரிந்து நிற்காத கொள்கையை பின்பற்றியது. தென்ஆபிரிக்காவின் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது.

சிறியதாயினும் பெரியதாகினும் நாட்டின் அபிமானத்தை காத்து, சரியான விடயங்களுக்காக முன்நிற்கும் பலத்தை பிளவுறாத கொள்கையின் மூலம் கிடைத்துள்ளதை பொறுப்புவாய்ந்தவர்கள் மறந்துவிடக்கூடாது.

About the author

Administrator

Leave a Comment