– ரவூப் ஸய்ன் –
பண்பாட்டுச் சமூகவியல் (Cultural Sociology) மேலைநாட்டு அறிவுப் புலங்களில் பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthro pology) எனவும் படிமலர்ச்சி பெற்றுள்ளது. சில மேலைத்தேய நாடுகளில் சமூகவியலும் பண்பாட்டு மானுடவியலும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்ஸ் போவாஸ் (1930) எட்வர்ட் டெய்லர் (1871) மலினோஸ்கி (1944) ரேய்மன் வில்லி யம்ஸ் போன்ற சமூகவியலாளர்களும் பண்பாட்டு மானுடவியலாளர்களும் பல்வேறு அர்த்தங்களில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். பண்பாடு குறித்து நிலவும் வரைவிலக்கண வாதங்களிலும் அதன் ஏற்புடமையிலும் இறங்குவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.

19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பயன்படுத்தப்பட்ட ‘மிருவாடி’ என அழைக்கப்படும் முஸ்லிம்களின் பாதணி
எட்வர்ட் டெய்லர் தரும் மரபார்ந்த, நாம் அனைவரும் சமூக வழக்கில் பண்பாடு பற்றிப் புரிந்து வைத்துள்ள வரண்முறை களோடு முஸ்லிம் சமூகப் பண்பாட்டை நோக்குவது பொருந்தும். அந்த வகையில் நம்பிக்கை, வழக்கம், உணவுமுறை (Food Habit) ஒழுக்க நெறிகள், பழக்கங்கள் (Habits), ஆடைமுறை (Dressing) மற்றும் உல்லாச ஓய்வு முறை (Entertainment) ஆகியன அடங்கிய தொகுதியே பண்பாடு என்ற அர்த்தத்திலேயே இக்கட்டுரையில் ‘பண்பாடு’ என்ற பதம் பயன்படுத்தப் படுகின்றது. இப்பின்னணியில் வரலாற் றின் பேறாகவும் (Legacy of History) அடையாளத்தின் குறியீடாகவும் (Symbol of Identity) பண்பாடு இங்கு பார்க்கப் படுகின்றது.
இலங்கையில் சிலவகை உணவு களை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்களே. காலவோட்டத்தில் அந்த உணவு வகையால் முஸ்லிம்கள் பிரபலம் பெற்றனர். சுவையாக சமைக்கக் கூடியவர்கள் என்ற ஒரு பொதுக் கருத்து முஸ் லிம் அல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் குறித்து நிலவி வருகின்றது. வரலாறும் இதற்கு சாட்சியாக உள்ளது.
ஸ்ரீ விக்ரம இராஜசிங்கனின் ஆட்சிக் காலத்தில் அவனது சமையலறையில் அரச விருந்தினைத் தயார் செய்கின்றவர் களாக முஸ்லிம்கள்தான் இருந்துள்ளனர். முஸ்லிம்கள் நாயக்க மன்னர்களுக்கு விசுவாசமாய் இருந்தனர் என்பதன் பேறாக மாத்திரம் இது அமையவில்லை. முஸ்லிம் சமையல்காரர்களின் சுவை யான உணவும் அவர்களைக் கவர்ந்துள்ளது.
இலங்கை முஸ்லிம் உணவுப் பண்பாட்டில் ‘புரியாணி’ என்ற வகையீட்டை அறிமுகம் செய்தவர்களும் அதில் பிரபல்யமான வர்களும் முஸ்லிம்களே. முஸ்லிம் சமூகவியலில் ‘புரியாணி’ இன்றுவரை ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றது. இலங்கை முஸ் லிம்கள் குறித்து ஆய்வு செய்த இந்தியச் சமூக வியலாளர் ஒருவர் இலங்கை முஸ் லிம்கள் குறித்து தனது நூலில் ‘இலங்கை முஸ்லிம்கள் என்போர் இவர்கள்தான்’ என்று தனக்குக் கூறப்பட்ட வாக்கியத் தைப் பின்வருமாறு எழுதுகிறார்.
முஸ்லிம்களால் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புரியாணி
”The Sri Lankan Muslims Who are Eating Buriyani & Voting U.N.P.” கடந்த பல தசாப்தங்களாக தென்னிலங்கை முஸ்லிம்களின் திருமண வீடுகளில் விருந்தினர்களுக்கான பிரதான உணவாக புரியாணியே பரிமாறப்படுகின்றது. தெவிட்டா சுவை கொண்ட புரியாணியின் கலவைகள் பல்வகைப்பட்டவை. கோழி, மாட்டிறைச்சி, இறால், முட்டை என ருசியான மாமிசங்கள் மசாலாக்களுடன் இணைக்கப்படுகின்றன. சிங்கள மக்களின் திருமண வைபவங்களில் காய்கறிகளும் கருவாட்டுக் கறியும் பரிமாறப்படுவதை சமீபத்திலேயே நான் அறிந்தேன். அந்தத் தகவல் ஆச்சரியமாய் இருப்பினும் கிராமப் புறங்களில் ஏன் சில நகர்ப் புறங்களிலும் அதுவே உண்மையாகும்.
முஸ்லிம்கள் திருமண வைபவங்க ளில் மட்டுமன்றி புதுமணத் தம்பதியின ருக்கான விருந்து, வீடு குடி புகுதல் விருந்து, சம்பிர தாயத்திலுள்ள குர்ஆன் ஹதம் நிகழ்ச்சி போன்ற பல்வேறு வைபவங்களிலும் புரியாணி பகிர்வதை அவதானிக்கலாம். முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியத்தை இத்தகைய உணவு முறைகள் மோசமாகப் பாதித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், அது புரியாணிக் கலாச்சாரத்தில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் ஆனால் வாக்குத் தர மாட்டார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கூட்டத்தில் மிகப் பகிரங்கமாகக் கூறியமை இங்கு நினைவுகூறத்தக்கது.
நாட்டில் முஸ்லிம் அல்லாத சமூகங்களைக் கவர்வதற்கான கருவியாகவும் இந்த புரியாணி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் எளிதில் மறந்து விடக் கூடாது. 1990களின் தொடக்கத்தில் இலங்கை முஸ்லிம்களின் உணவுப் பண்பாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘கொத்து’ என அழைக்கப்படும் மற்றொரு உணவு வகையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது இப்போது இலங்கையிலுள்ள ஏனைய எல்லா சமூகங்களின் ஹோட்டல்களிலும் தயாரிக்கப்படுகின்றது.
ஆனால், இதன் மூல பிதாக்கள் முஸ்லிம்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. கோதுமை ரொட்டிகளை துண்டுகளாக்கி அதில் சுவை நிறைந்த சொதியையும் மசாலாக்களையும் குறிப்பிட்ட அளவில் சேர்த்து முட்டை மற்றும் மாட்டிறைச்சித் துண்டுகளைச் சேர்த்து ஒரு கலவையாக் குவதன் மூலம் இந்த வகை உணவு தயா ரிக்கப்படுகின்றது. இரண்டு இரும்புத் தகடுகளால் இந்தக்கலவை கொத்தப்படு வதனால் இன்று வரை இது ‘கொத்து’ என்று வழங்கப்படுகின்றது.
ஹோட்டல் சமையற்காரர்களில் கொத்தைத் தயாரிப்பதில் சிறப்புத் தேர்ச்சியுள்ளவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மசாலாவை எந்தெந்த அளவிற்குச் சேர்க்க வேண்டுமென்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். சில வேளை அவர்களின் ‘கொத்து’ ஓசை நயங்களோடு ஓர் சங்கீத அலையாக வெளிப்படுவதுமுண்டு.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம். ஒருவர் இசைக்குழுவில் இணைவதற்கான நேர்முகப் பரீட்சையொன்றில் கலந்து கொண்ட வேளை இசைத்துறையில் உங்களுக்கு எவ்வளவு கால அனுபவம் உள்ளதென்று கேட்கப்பட்டதற்கு, ஒரு ஹோட்டலில் 06 மாதங்கள் ‘கொத்தியிருக்கின்றேன்’ என அவர் தனது இசையனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இன்று ரொட்டிக் கொத்தில் ஆரம்பித்த இந்த உணவு இடியப்பக் கொத்தாகவும், நூடில்ஸ் கொத்தாகவும் விரிவடைந்திருக்கின்றது.
‘வட்டிலப்பம்’ எனப்படும் இனிப்புச் சுவை கொண்ட மற்றொரு உணவும் முஸ்லிம் உணவுப் பண்பாட்டில் பிரிக்க முடியாத கூறாகும். அச்சாறு, மாசிச் சம்பலுக்கு உள்ள மரியாதை இந்த வட்டிலப்பத்திற்கும் உண்டு. முஸ்லிம்கள் போன்று இலங்கையில் வட்டிலப்பத்தை சுவைபடத் தயாரிக்கக் கூடிய எவரும் இல்லை எனும் அளவுக்கு முஸ்லிம்கள் வட்டிலப்பம் தயாரிப்பதில் வல்ல வர்கள். முஸ்லிம்களின் உணவுப் பழக்கத்தில் கொழுப்பும், உப்பும் அதீதமாகப் பயன்படுத்தப்படுவதால் முஸ்லிம் சமூகத்தின் ஆரோக்கியத்தை அது வெகுவாகப் பாதித்து வருகின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடங்களில் இரவு உணவகங் கள் உருவாகியுள்ளன. கிழக்கு மாகாணத் தில் காத்தான் குடி, அட்டாளைச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களிலும் மலைநாட்டில் அக்குரணை போன்ற பகுதிகளிலும் இவ்வாறான உணவகங்கள் இயங்குகின் றன. குடும்பங் களாக அல்லது நண்பர் கள் குழுவாக சேர்ந்து அங்கு உணவருந் தும் ஒரு புதிய பழக்கம் உருவாகி வரு கின்றது. இவ்வுணவகங்களில் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போன்று டாம்பீகமாகவும் புறக் கவர்ச்சியோடும் இயங்குகின்றன. வேறு சில பாரம்பரிய பழமைவாதப் பண்புகளோடு அதன் தோற்றத்தை பேணுவதோடு சுவையான உணவு வகைகளைப் பரிமாறுகின்றன.
முஸ்லிம்களின் ஆடை.
கடந்த 20 ஆண்டு கால இடைவெளியில் இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பு புரட்சிகரமான மாற்றங்களை உள்வாங்கி வந்திருக்கின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்று வந்த பெண்கள் மாத்திரமே பர்தா அணியும் வழக்கம் கொண்டிருந்தனர். 1990களுக்கு முன்னர் இவ்வாறான ஓர் நிலையே காணப்பட்டது. இன்று முஸ்லிம் பெண்களின் ஆடை பர்தா, நிகாப், அபாயா என பல்வேறு பரிமாணங்களைப் பெற் றுள்ளது. உலகளவில் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியின் அடையாளமாகவே இவை பார்க்கப்படுகின்றன.
உள்ளூர் சமூகத்திற்கு அரபு இஸ்லாமிய நாடுகளுடன் ஏற்பட்ட உறவுகளும் இதற்குப் பின்னணியில் உள்ளன. தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றோர் மற்றும் அறபு-இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கச் சென்றோர் மூலம் அறபு இஸ்லாமிய நாடுகளுடனான தொடர்புகள் வலுவடைந்துள்ளன.
தற்போது இலங்கை முஸ்லிம்களி டையே பல்வேறு வகையான மோஸ்தர் களில் இந்த ஆடைப் பயன்பாடு உள்ளது. டுபாய், சவூதி, கட்டார் போன்ற நாடு களிலிருந்து இறக்குமதியாகும் மோஸ்தர் களுக்கான கிராக்கி அதிகமாக உள்ளது. குளிரூட்டப்பட்ட, கவர்ச்சியான விற்பனை நிலையங்கள் இவற்றை வெளி நாடுகளிலிருந்து தருவித்து விநியோகம் செய்கின்றன. அவற்றின் விலைகளும் தரத்துக்கேற்ப வேறுபடுகின்றன. ஒரு ஹபாயா 2500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இவை கண்ணைக் கவரும் வண்ண வேலைப்பாடுகளுடனும் ஜரிகை அலங்காரங்களுடனும் தயாரிக்கப்படுகின்றன.
சமீப காலமாக முஸ்லிம் பெண்கள் அணியும் இந்த ஹபாயா குறித்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. சில பெண்கள் அணியும் ஹபாயாக்கள் அவற்றின் நோக்கத்தை நிறைவுசெய்யவில்லை எனவும் மிகக் கவர்ச்சிகர மானவை எனவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் 95% ஆன ஹபாயாக்கள் கறுப்பு நிறமானவை. கறுப்பிலிருந்து வேறு நிறங்களுக்கு மாற வேண்டும் எனவும் இலங்கைச் சூழலுக்கு கறுப்பு நிறம் பொருத்தமற்றது எனவும் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
நிகாப் குறித்து பல்வேறு அபிப்பிரா யங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவுகின்றன. முகத்தை முற்றாக மூடு வது ஒரு நபிவழி என சிலர் வாதிக் கின்ற போதிலும் வேறு சிலர் அது ஒரு பழக்கம் எனவும் ஒரு மார்க்க விவகாரம் அல்ல எனவும் வாதாடுகின்றனர். இந்த வாத விவாதங்களுக்கு அப்பால் சமீப கால இலங்கையில் தோன்றியுள்ள சில தீவிரவாத இயக்கங்கள், இஸ்லாமிய தீவிர வாதத்தின் அடையாளமாக இதனைச் சுட்டிக்காட்டுகின்றன. உலகின் சில நாடுகளில் நிகாப் அதிகார பூர்வமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு இலங்கையிலும் அது தடை செய்யப்பட வேண்டும் என இந்த இயக்கங்கள் கோரி வருகின்றன.
இலங்கையின் பிரதான ஊடகங்கள் இலங்கையில் அவர்கள் கூறும் ‘இஸ்லா மியத் தீவிரவாதம்’ வளர்ந்து வருவதற்கு ஆதார மாக நிகாபை முன்னிறுத்துவ தோடு நின்றுவிடவில்லை. இஸ்லாம் போதிக்கும் பெண் அடிமைத்தனத்தின் குறியீடாகவும் அதனை அடையாளப் படுத்துகின்றனர். கடந்த சில ஆண்டு களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தி லுள்ள காத்தான்குடி குறித்து இந்தியா விலிருந்து வரும் The Hindu பத்திரிகை யில் ராமச்சந்திரன் என்பவர் எழுதிய Islamic Fundamentalism Grows Fast in eastern sri Lanka எனும் கட்டுரையில் காத்தான்குடியில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் பெண்கள் அணிந்துள்ள நிகாபை பிரதான பேசுபொருளாக ஆக்கியிருந்தார்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையில் வேகமாக பரவி வருவதாக வாதிக்கும் அவர் அதற்கான தெளிவான ஆதாரமாக நிகாபை முன்னிறுத்துகின்றார். இவ்வாறு நிகாப் குறித்து எதிரும் புதிருமான விவாதங்கள் இலங்கைச் சூழலில் நிலவுகின்றன.
முஸ்லிம் ஆண்கள் மத்தியிலும் பல்வேறு விதமான ஆடைகள் நடை முறையில் உள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சாரமும் சேட்டும் தொப்பியும் அணிந்த முஸ்லிம்களை வரலாற்று நூல் களில் காணக் கிடைக்கின்றது. இன்றும் வெளிநாடுகளுடன் ஏற்பட்ட தொடர்பாடல் மற்றும் அறபு மத்ரஸாக்களின் கல்வி முறை என்பவற்றால் ஆண்களின் ஆடைக் கலாசாரத்திலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
டி சேர்ட்டும் டினிம் காட்சட்டையும் அணியும் இளைஞர் கூட்டம் உள்ள போதும் பாகிஸ்தான் பாணியிலான பஞ்சாபி உடைகளையும் மத்திய கிழக்கு பாணியிலான தோப்புகளை (ஜுப்பா) அணியும் போக்கு அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் பாரம்பரிய அறபு மத்ரஸாக்களின் கற்ற ஆலிம்கள், படிக்கும் காலத்திலும் பட்டம் பெற்றும் வெளியேறிய பின்னர் இத்தகைய தோப்புகளை அணியும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மார்க்கக் கல்வி பெறச் சென்றவர்களில் பலர் ஜுப்பா அணியும் வழக்கம் கொண்டுள்ள அதே வேளை, சிலர் பஞ்சாபி ஆடைகளை அணிவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கும் மேலாக, தப்லீக் ஜமாஅத் சார்ந்தவர்கள் தஃவா பணியில் ஈடுபடும் காலங்களில் மட்டுமன்றி, பொதுவாக எல்லாக் காலத்திற்கும் உரிய ஆடையாக ஜுப்பாவை தெரிவுசெய்துள்ளனர். இவ்வாறு லுங்கி, பஞ்சாபி, அறபுலக ஜுப்பா என பல்வேறு விதமான ஆடை கள் புழக்கத்தில் உள்ளன. பெண்கள் அணியும் அபாயாக்கள் போன்று ஜுப்பாக்களும் பல்வேறு தரத்திலும் பல்வேறு மோஸ்தர்களிலும் உள்ளன. அதற்கேற்ப அவற்றின் விலைகளும் வேறுபட்டுள்ளன.
ஆக, இலங்கை முஸ்லிம்களுக்கென்றே ஒரு தனித்துவமான ஆடை பாரம்பரியமொன்று உள்ளதா? எமது பண்பாட்டுச் சமூகவியலில் இது குறித்த ஒரு ஆய்வு இன்று அவசியமாகியுள்ளது. முஸ்லிம்களின் உடை மாற்றம் குறித்து முஸ்லிமல்லாதவர்கள் சந்தேகங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வரும் இத்தருணத்தில், முஸ்லிம் சமூக விஞ்ஞானிகளுக்கு முன்னாலுள்ள ஒரு முக்கிய பணியாக இதனைக் கொள்ளலாம்.