ஆசிரியர் கருத்து

இனவாதம் கடந்த மனிதாபிமானத்தை நோக்கி..

Written by Administrator
Editorial : 396

பேரினவாதப் பயங்கரவாதத்தினால் இலங்கையின் இரண்டு சிறுபான்மைகளும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது இன்று வரை இலங்கையின் நற்பெயருக்கு களங்கமானதொரு விடயம். தமிழருக்கு எதிரான பேரினவாதத்தின் அடக்குமுறை 30 வருட கால யுத்தமாக நாட்டில் நீடித்தது. இப்பொழுது பேரினவாதத்தின் தீ அடுத்த சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் மீது பரவ ஆரம்பித்திருக்கிறது.

இந்த வகையில் இலங்கையின் இரண்டு சிறுபான்மைகளுக்கும் பொதுவான பிரச்சினைகள் பல காணப்படுகின்றன. யுத்த காலத்தில் இழக்கப்பட்ட காணிகள், மீள்குடியேற்றம், இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட காணிகள், வனஜீவராசிகள், தொல்பொருட்களுக்காக இழக்கப்பட்ட காணிகள் என இரு சமூகங்களுக்கும் பொதுவான பல பிரச்சினைகள் உள்ளன. தமிழ்ச் சமூகமோ, முஸ்லிம் சமூகமோ செறிவாக ஓரிடத்தில் வாழ முடியாதவாறு மேற்கொள்ளப்படும் எல்லை நிர்ணயங்கள், சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும்படியான தேர்தல் முறைகள் என பல சட்டரீதியான விடயங்களும் சிறுபான்மையினை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற பல பிரச்சினைகள் இரண்டு சமூகங்களும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் இரண்டு சமூகங்களும் இருகூறுகளாகப் பிரிந்து செயற்படுவது பேரினவாதிகளுக்கு நன்மையானதாக அமையுமே அன்றி இரண்டு சமூகங்களிலும் எதுவும் இதனால் நன்மையடையப் போவதில்லை. இந்த நிலைக்கு முக்கிய காரணம் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் இரு சமூகங்களும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமையாகும். அல்லது இந்த முக்கியமான விடயத்தை அரசியல்வாதிகளின் கைகளில் கொடுத்து விட்டமையாகும்.

இரண்டு சமூகங்களிலும் பெரும்பான்மையாக உள்ள நடுநிலைவாதிகள் மொழியால் பிணைத்துவிடப்பட்ட உறவை தொடர்வதில் ஆர்வமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் இடையில் குறுக்கிடுகின்ற அரசியல்வாதிகளின் பேரம் பேசுதல்கள் தான் இந்தத் தொப்புள் கொடி உறவை வளர விடாமல் தடுக்கின்றன. அரசியல்வாதிகளின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு சில வேளைகளில் ஊடகங்கள் துணை போகின்றன. இன்னும் சில வேளைகளில் சிவில் அமைப்புக்கள் கூஜா தூக்குகின்றன. தமது அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்கான சாதனமாக இந்த அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுக்கும் பொழுது அவர்கள் சார்பிலான ஊடகங்களும் சிவில் நிறுவனங்களும் இனவாதத்தை கக்கத் தொடங்குகின்றன.

இந்தப் போக்கினால் அரசியல்வாதிகள் இலாபமடைவார்களே தவிர அவர்கள் சார்ந்திருக்கும் சமூகங்கள் அழிவையே சுமப்பதற்குத் தயாராகின்றன. சமூகங்களின் சார்பில் அரசியலுக்கு வந்த போதிலும் சமூகத்தைப் பலிக்கடாவாக்கி தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் இந்த அரசியல்வாதிகளுக்குச் சோரம் போகாமல் இரண்டு சமூகங்களிலும் உள்ள சமூகப்பற்றுள்ள நடுநிலைவாதிகள் தமது சமூகங்களைப் பாதுகாக்க வேண்டும்.

இனவாத உணர்வுகள் ஒருபோதும் எந்த இனத்தையும் காப்பதற்குத் துணை புரிந்ததில்லை. இதனை விட இனவாதம் கடந்த மனிதாபமான உணர்வுகள் தான் உறவுகளைக் கட்டியெழுப்பியிருக்கின்றன. அந்த வகையில் இரண்டு சிறுபான்மைச் சமூகங்களும் அடுத்தவரது பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு நோக்குவது தான் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான சூத்திரமாக அமைய முடியும். அப்பொழுது தான் தமக்கிடையிலான பொதுவான பிரச்சினைகளை ஒன்றாக இணைந்து அணுக முடியும். அது தான் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கொண்டு வரும்.

About the author

Administrator

Leave a Comment