எழுவாய் பயமிலை சமூகம்

அண்டை வீட்டான் பசித்திருக்க.. | எழுவாய் பயமிலை

Written by Administrator

 – அபூ ஷாமில் –

வித்தியாசமான ஒரு பெருநாளைக் கொண்டாடிவிட்டு சமூகம் ஓய்ந்து போயிருக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி ஷைத்தான்களும் மலக்குகளும் கூட குழம்பிப் போனதான போஸ்டுகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. வெறும் கற்பனைகளாக இருந்தாலும் சில சிந்திக்க வைப்பவை. தனது விலங்கு அவிழ்க்கப்பட்டு விட்டதா இல்லையா என்று ஷைத்தான் குழம்பினானாம். 29 இல் லைலதுல் கத்ர் என்றிருந்தால் நாங்கள் என்ன செய்வது என்று மலக்குகள் குழம்பினார்களாம். பெருநாளைக்கு லீவு கேட்ட ஒருவரிடம் எப்போது லீவு தேவை என்று கேட்டால் இரவில் தான் சொல்ல முடியும் என்று சொல்ல முஸ்லிமல்லாத அந்த நிறுவனத் தலைவரும் குழம்பினாராம். இத்தனை குழப்பங்களுக்கும் மத்தியில் ஒரு பெருநாள் ஓய்ந்து முடிந்திருக்கிறது.

சிலர் நோன்பு பிடித்தார்கள். சிலர் பெருநாள் கொண்டாடினார்கள். இன்னும் சிலர் நோன்பும் பிடிக்கவில்லை. பெருநாளும் கொண்டாடவில்லை. இப்படிப் பலவகையாக சமூகம் சின்னாபின்னப்பட்டது இந்தத் திருநாளில். பெருநாள் என்பது யாரும் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ கொண்டாடப்படக் கூடிய ஒன்றல்ல. அது மொத்த சமூகமும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடப்பட வேண்டிய நன்னாள்.

இஸ்லாத்தின் கடமைகள் எல்லாம் கூட்டாகச் செயற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது அது கூட்டாக இயங்குவதற்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஹஜ்  ஓரிடத்தில்  அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. நோன்பு குறித்த மாதத்தில் அனைவரும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் விரும்பிய வகையில் ஒருவர் ஷஃபானிலும் ஒருவர் ஷவ்வாலிலும் நோன்பு பிடிக்க முடியாது. இது இஸ்லாத்தின் முக்கியமான இன்னுமொரு போதனையுடன் தொடர்புபடுகிறது.

அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் வயிராறப் புசிப்பவன் உண்மை முஸ்லிமாக மாட்டான் என இறைதூதருடைய வழிகாட்டல் சொல்கிறது. ரமழானில் அனைவருமாகச் சேர்ந்து நோன்பிருப்பது இந்த வழிகாட்டலைப் பேணும் வகையில் அமைந்திருக்கிறது. அடுத்த வீட்டில் நோன்பிருக்கும் போது நான் எனது வீட்டில் விருந்து படைக்கக் கூடாது என்ற உணர்வை இந்த ரமழான் மாதம் தருகிறது. இப்படித்தான் சமூகமாக வாழ்வதற்குரிய பயிற்சியை ரமழான் நமக்குத் தந்தது.

இம்முறை சிலர் இந்தப் பயிற்சியினால் பலன் பெறவில்லை. பக்கத்து வீட்டான் நோன்பு பிடித்து பட்டினியில் வாடிக் கொண்டிருக்கும் போது, இடியப்பம், புட்டு, புரியாணி என அடுத்த வீட்டான் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த காட்சிகள் காண்பதற்குக் கஷ்டமானதாக இருந்தன. முந்திக் கொண்டு பெருநாள் கொண்டாடுகின்ற அவசரத்தில் குர்ஆன் ஸுன்னாவுடைய வாழ்க்கையை இவர்கள் கைகழுவி விட்டார்கள். இலங்கையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கண்ணியப்படுத்துகின்ற மாற்று மதத்தவர்கள் கூட நோன்பாளியின் முன்னால் சாப்பிடுவதைத் தவிர்ந்து கொள்வார்கள். ரமழானில் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் டீ கூடக் குடிக்கமாட்டார்கள். குர்ஆன் ஸுன்னாவுடைய வாழ்க்கை பற்றி இவர்கள் பேசாவிட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்கிறார்கள். அண்டை வீட்டான் என்பதில் அந்நியர்களையும் அடக்க முடியும் என்ற கருத்துப் பேசப்பட்டு வரும் வேளையில், அண்டை வீட்டு முஸ்லிமைப் பற்றிப் பொருட்படுத்தாமல் வாழுகின்ற ஒரு சமூகம் உருவாகி வருவதும், சமூகத்திலிருந்து வேறாகிச் செயற்படுவதற்கு முனைவதும் நல்ல சமிக்ஞைகளாக விளங்கவில்லை.

சமூக ஒழுங்குக்கு மாற்றமாகச் செயற்படுவது சில வேளைகளில் கிளர்ச்சி ஊட்டுவதாக அமையலாம். ஆனால் இதனூடாக சமூகக் கட்டுக் கோப்புக் குலையுமாக இருந்தால் அந்தக் கிளுகிளுப்பு இன்னொரு வகையான கிளர்ச்சிக்கு வழியமைப்பதாக அமைய முடியும். இது சமூகத்தை குழப்பி விட்டு கூத்துப் பார்ப்பதாகவே அமையும். சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவது கொலைக் குற்றத்தை விட மோசமானது என்று குர்ஆன் ஹதீஸ் வழிகாட்டல்கள் சொல்லுகின்றன. அந்த வகையில் சமூக ஒழுங்கை, சமூகக் கட்டமைப்பைக் குழப்பி விடுவது அந்தச் சமூகத்தையே கொலை செய்து விட்டதற்கு ஒப்பாகிறது.

சமூகமாக வாழ்வதன் ஒழுங்கு பற்றி சமூகத்தைப் பயிற்றுவிக்க வேண்டிய தேவையை இம்முறைய பெருநாள் உணர்த்தியிருக்கிறது. சமூகக் கட்டுக்கோப்பு, தலைமைக்குக் கட்டுப்படுதல், தலைமையுடன் எவ்வாறு நடந்து கொள்ளுதல், தலைமை தவறு விடும் போது என்ன செய்வது போன்ற பல சமூக செயற்பாடுகளில் சமூகத்தை வழிகாட்ட வேண்டிய தேவை இருப்பதை இந்தப் பெருநாள் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

எனவே எது சரி, எது பிழை என்பதற்கப்பால் சமூகமாகச் செயற்படும் விவகாரங்களில்  பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் ஒவ்வொரு ஜமாஅத்தும்  வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.

About the author

Administrator

Leave a Comment