நாடுவது நலம்

வறிய மக்களுக்கு உதவும் பண்பாட்டை கைக்கொள்வோம்

Written by Web Writer

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

இந்தியா சிறந்ததொரு வரலாற்றை கொண்ட நாடு. சிறப்பான மனிதர்கள் வாழ்ந்த நாடு. இந்தியா தொடர்பில் பேசும் போது மகா காலிதாஸ், மிகப்பெரும் அறிஞரான கபீர், புத்தபெருமான், அஹிம்சையை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தி, அசோகச் சக்கரவர்த்தி, சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சியின் முன்மாதிரியை உலகிற்கு வழங்கிய பெரிய அக்பர் போன்றோரின் நினைவுகள் என் மனதில் உதிக்கின்றன.

மகாபாரதம், இராமாயணம், பகவத் கீதை, மதங்கள், பல்வகைமை போன்றவற்றை பாரதத்தின் உரிமைகளாக வரிசைப்படுத்தலாம். இந்தியா இன்று பொருளாதார ரீதியில் பலம்பொருந்திய நாடாக உள்ள போதிலும் வறுமை, பெண்கள் மீதான பாலியல் தொந்தரவு, சாதியக்கொடுமை போன்ற அம்சங்களும் அங்கு உச்ச நிலையில் காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

இப்படியிருந்தும் கடந்த தினம் இந்தியாவின் ஹைதராபாத்தில் ஒருவர் மேற்கொண்ட மிகப்பெரும் பணியை இணையத்தில் நான் பார்வையிட்டேன். இதுபோன்ற விடயங்கள் உலகின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற முடியும் என்ற போதிலும் இந்தச் சிறிய சம்பவம் குறித்து உங்களுடன் கருத்துக்களை பறிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தச் சிறிய மனிதர் ஹைதராபாத்தில் வசிக்கின்றார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் 5 வருடங்களாக ஹைதராபாத் பாலமொன்றுக்கு கீழால் பசியால் வாடும் மனிதர்களுக்கு நாளாந்தம் உணவு வழங்கி வருகின்றார். இவர் 4ஆவது வயதில் தனது தந்தையை இழந்துள்ளார். அன்று முதல் இவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேண்டி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

சிறு பராயம் முதல் இவர் பசியின் கொடுமையை அனுபவித்துள்ளார். இவர் பல நாட்கள் பசியால் வாடிய சந்தர்ப்பங்களும் உள்ளன. ‘மகனே! நீ படித்துக்கொண்டிரு, நான் ஏதாவதொன்றை சாப்பிட எடுத்து வருகின்றேன்’ அவரது தாயார் இரவு வேளையில் கூறிய வார்த்தைகளை அவர் நினைவுகூர்கிறார். இவருக்கு 12 வயது இருக்கும் போது ஆடை தைக்கும் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறார். அப்போது அவர் 1ரூபாவை சம்பளமாக பெற்றார். தற்பொழுது இவர் வீடு கட்டும் தொழிலைச் செய்து வருகின்றார்.

இவர் பெறுகின்ற சம்பளத்தில் அதிக தொகையை வறியவர்களுக்கு உணவு வழங்குவதற்காக செலவு செய்கின்றார். ‘பசியால் வாடும் மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. உங்களுக்கு முடிந்தால் சமைத்துக் கொடுங்கள். அந்த உணவை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வறிய மக்களுக்கு கொடுக்க நான் ஆசைப்படுகின்றேன்’ அவர் தனது மனைவிக்கு கூறிய வார்த்தைகளே இது.

இவரது மனைவி இவருக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறார். ‘இது சிறந்ததொரு விடயம். நாம் அப்படியே செய்வோம்’ என்று இவரது தாயாரும் மனைவியும் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் பதிலளித்துள்ளனர். இவர் தனது பணியை ஆரம்பித்தார். மக்கள் நினைத்தார்கள் இந்தப் பணி ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் என்று. ஆனால் இந்தப் பணி முற்றுப்பெறவில்லை. அன்றாடம் அவர் இந்த விடயத்தை செய்துவந்தார்.

‘இந்தப் பணியை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்ற யோசனைகளோ ஆயத்தங்களோ என்னிடம் இருக்கவில்லை. இது செய்யப்பட வேண்டிய விடயம். என்னால் முடிந்தவற்றை செய்கின்றேன்’ என்னும் தேவையும் ஈடுபாடும் மாத்திரமே அவரிடம் காணப்பட்டது.
‘ஏழை மக்களின் பசியை போக்க எனக்கு உதவி செய்யுமாறு நான் கடவுளை பிராரத்தனை செய்தேன். எனக்கு கடவுளின் உதவி கிடைத்தது. நான் தொடர்ந்து இந்தப் பணியை செய்து வருகின்றேன்’

ஒரு நாடும், அந்த நாட்டிலுள்ள சமூகமும் ஆட்சிபீடமும் மேற்கொள்ள வேண்டிய பணியை இந்த நபர் தனியாக மேற்கொண்டு வருகின்றார். ஒரு தனிநபர் தனது இரு கரங்களாலும் மக்களின் பசியைப் போக்கி வருகின்றார். ஒரு நாட்டின் செழிப்பு, அந்த நாட்டினுடைய ஆயுத பலத்திலோ, சொத்து செல்வத்திலோ காணப்படுவதில்லை. அங்கு வறுமையிலும் பசியாலும் வாடுகின்ற மக்களை கவனித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சியிலேயே காணப்டுவதாக ஒரு கருத்து உள்ளது.

இந்தப் பெருமானங்களை நாம் எமது சமூகத்திலும், ஆட்சியாளர்களிடத்திலும் அன்று அவதானித்தோம். எமது சமூகத்தை போசிக்கும் மதங்கள் எமக்கு இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. பசியை உணர்வுபூர்வமாக அனுவிக்கும் ரமழான் மாதத்தையும் நாம் கடந்துள்ளோம். இந்தப் பின்புலத்தில் இணையதளத்தில் நான் பார்வையிட்ட இந்தச் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

 
 
Image result for helping poor

About the author

Web Writer

Leave a Comment