நேர்காணல்

வாகன விபத்து கூட இனக் கலவரமாக மாறும் நிலை

Written by Administrator

அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் அவர்கள் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகாமத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை மாத்/மீயெல்ல அல்மினா மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை பேருவலை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திலும் கற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் குவைட் கேம்ப்ஸ் நிறுவனத்தில் (Camps Institute) மோதல் முகாமைத்துவம் (Conflict Management) தொடர்பில் டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக சமூக நல்லிணக்கம், சகவாழ்வு குறித்த பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், தற்பொழுது தேசிய சூறா சபையின் வளவாளராகவும், இஸ்லாமிய கற்கைகள் நிலையத்தின் (Centre for Islamic Studies) வெளிக்களப் பிரிவு ஆலோசகராகவும், “புனருதய” அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். முஸ்லிம் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆழ்ந்த புலமையும் திறமையும் உள்ள முனீர் முலப்பர் அவர்கள் பெரும்பான்மைச் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாம் குறித்து தெளிவுகளை வழங்குவதில் மிக முக்கியமான ஒருவராகவும் கருதப்படுகின்றார். இவர் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

‘முஸ்லிம் சமூகத் தலைமைகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப்பதிவுகளை இன்னும் அதிகரிக்கும் வகையில் உள்ளன’
அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் – (வளவாளர், தேசிய சூறா சபை, நிறைவேற்றுக்குழு உறுப்பினர், புனருதய)

சகவாழ்வு குறித்த கதையாடல் சமூகத்தில் இன்று மிக முக்கிய பேசுபொருளாகக் காணப்படுகிறது. நாட்டில் இன நல்லுறவு சிறந்த முறையில் காணப்பட்ட போதிலும் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில சம்பவங்களாலும் இனவாதிகளின் செயற்பாடுகளாலும் எமக்கு மத்தியிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதை காண முடிகிறது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இன்று ஒவ்வொரு சமூகத்தையும் சார்ந்த இளைஞர்கள் தங்களுக்குள்ளால் தனிமைப்பட்டு வாழ்கிறார்கள். திகன சம்பவத்தை அவதானிக்கும் போது 16 – 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதில் தொடர்புபட்டுள்ளார்கள். பெரும்பாலும் இந்த நாட்டில் முதிர்ந்தவர்களை மையப்படுத்திய சகவாழ்வு நிகழ்ச்சிகளே அதிகமாக நடாத்தப்படுகின்றன. ஆனால் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்கும் வகையிலான சகவாழ்வு நிகழ்ச்சித் திட்டங்களை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். தற்பொழுது சகவாழ்வு தொடர்பில் உயர் மட்ட ரீதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதேநேரம் இளைஞர்கள் மத்தியிலும் இது போன்ற உரையாடல்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். சமூக வளைதளங்களில் அதிக பரீட்சயமுடையவர்கள் இளைஞர்கள் என்பதால் இன நல்லுறவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பல விடயங்கள் இவர்களால் பகிரப்படுகின்றன. முஸ்லிம் சமூகம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் அதிக வெறுப்புணர்வு காணப்படுவதாக என்னுடன் உரையாடிய சில சிங்களப் பாடசாலை அதிபர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அரசியல்வாதிகள் இனவாதத்தை கீழ்மட்ட சமூகத்திலேயே ஊட்டியுள்ளனர். எனவே ஒரு சில மாநாடுகளை கூட்டுவதன் மூலம் அல்லது தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சில நிகழ்ச்சிகளை செய்வதினூடாக மாத்திரம் சகவாழ்வு உருப்பெறாது. அத்துடன் முஸ்லிம் சமூகத்திற்குள்ளாலும் இது விடயம் குறித்து பரந்ததொரு உரையாடல் இடம்பெற வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்குள் என்னென்ன விடயங்கள் சகவாழ்வுக்கு பாதிப்பாக காணப்படுகின்றன? இது குறித்து உங்களது அவதானத்தை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

பெரும்பான்மைச் சமூகத்துடன் நான் உரையாடுபவன் என்ற அடிப்படையில் அவர்கள் எம்மிடம் தெரிவிக்கின்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக திகன சம்பவத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் ‘முஸ்லிம்கள் வீதி ஒழுங்குகளை சரியாக பின்பற்றுவதில்லை’ என்கின்ற கருத்தை பிரதேசத்தை சேர்ந்த தலைமை பிக்கு ஒருவர் முன்வைத்தார். இதேநேரம் திகன பிரதேசத்தில் விஜயமொன்றை மேற்கொண்ட போது அங்குள்ள சில விகாரைகளைச் சேர்ந்த பிக்குகள் ‘ஆரம்ப காலத்திலிருந்த முஸ்லிம் சமூகம் ஏதோ ஒருவகையில் எங்களோடு தொடர்புகளை பேணுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

ஆனால் தற்பொழுது உங்களுடைய மார்க்க ரீதியான தடைகளோ தெரியவில்லை, எங்களோடு உறவாடுவதற்கான தடைகள் இருப்பதை நாம் காண்கிறோம்’ எனத் தெரிவித்தார்கள். எமது மார்க்கத்திலும் கூட அடுத்த சமூகத்துடன் தொடர்புபடக்கூடாது என்ற அளவிலேயே பத்வாக்களும் சொல்லப்பட்டுள்ளன. பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்த நல்ல மனிதர்கள் எழுதிய புத்தகங்களிலும் கூட முஸ்லிம்கள் வியாபார நோக்கத்துக்காக மாத்திரமே ஏனைய சமூகங்களுடனான உறவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள் என்கின்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஹலால் விவகாரம், எமது ஆடைகள், நகர்ப்புறக் காணிகளில் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள் போன்ற அம்சங்கள் பெரும்பான்மைச் சமூகத்திற்குள் எங்களை வெறுப்பூட்டுவதற்கான காரணிகளாக எடுக்கப்படுகின்றன.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது அதிகம் குரல் கொடுக்கிறார்கள் இல்லை. முஸ்லிம்களுக்கென்று பிரச்சினைகள் வரும் போது மாத்திரமே அதிகம் பேசியும் எழுதியும் வருகிறார்கள். நாட்டை பாதிக்கின்ற விடயங்களை அரசியல்வாதிகள் மேற்கொள்கின்ற போதும் கூட நாங்கள் அமைதியான போக்கையே கடைபிடிக்கின்றோம். தேசிய ரீதியான அமைப்புக்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இந்த நாட்டை பாதிக்கக்கூடிய விடயங்களுக்கு எதிராக செயற்படுகின்ற தேசிய அமைப்புக்களில் நாம் இணைந்து பணியாற்றுகின்ற போதே அவர்கள் எம்மைப் பற்றி உணர்வார்கள். முஸ்லிம்கள் நாட்டுப் பற்றற்றவர்கள் என்கின்றதொரு குற்றச்சாட்டும் மாற்று மதத்தவர்களிடம் காணப்படுகிறது. சண்முகா இந்துக் கல்லூரியில் அபாயா பிரச்சியை உருப்பெற்ற போது வேகமான எழுதிய நாம் இந்த நாட்டை பாதிக்கும் வகையிலான சர்வதேச உடன்படிக்கைகள், அல்லது நாட்டு வளங்களை விற்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் போது அவற்றை பிழையான விடயங்களாகப் பார்ப்பதில்லை. அவை குறித்துப் பேசுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை. கண்டும் காணாமலும் இருந்து வருகிறோம்.

இந்த நிலைமைகளை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?

இலங்கையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு சமூகமும் அவரவர் சமூகத்தை தனிமைப்படுத்தியே வளர்க்கின்றார்கள். கல்வி ரீதியில் நோக்கினால் முஸ்லிம்களுக்கென தனியான பாடசாலை, சிங்களவர்களுக்கென தனியான பாடசாலைகள் உள்ளன. எந்தெந்த பாடசாலைகளில் கற்றாலும் இறுதியில் பல்கலைக்கழகத்தில் சகல சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் ஒன்றாக இணைந்தே கற்க வேண்டிய தேவை உள்ளது. எனவே ஒவ்வொருக்குமான மத நம்பிக்கை அவரவர் குடும்பத்திலிருந்து உறுதியாக வழங்கப்பட்டால் அந்தப் பிள்ளை எந்தப் பாடசாலையில் யாரோடு கற்றாலும் அவருக்கு அவரது நம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதேநேரம் அந்த நபருக்கு ஏனைய சமூகங்களோடு சுமுகமாக வாழவும் முடிகின்றது. அத்தோடு தேசிய ஊடகங்கள் எனும் போது அந்தத் தேசத்தில் வாழக்கூடிய எல்லா மக்களுக்கும் சமமான சந்தர்ப்பங்களை கொடுக் வேண்டும்.

அந்தந்த சமூகங்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று தேசிய ஊடகங்களில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே வழங்கப்படுகிறது. அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சபாநாயகரிடம் தேசிய ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு சமமான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற தேவை வலியுறுத்தப்பட்டது. இதுதவிர முஸ்லிம்களது இளவயது திருமணம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் எம்முடைய உண்மையான நிலைப்பாட்டை பௌத்த சமூகத்திற்கு சொல்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோன்று முஸ்லிம்கள் வைத்தியத் துறையில் சில பிழையான முடிவுகளை எடுத்து வருவதை பௌத்த சமூகம் நுணுக்கமாக அவதானித்து வருகின்றது. முஸ்லிம் சமூகம் என்ற விகையில் இது குறித்து எமது தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்காவிட்டால் சில போது கிட்டிய எதிர்காலத்தில் அடிப்படைவாதப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் ஆயுதம் வைத்திருக்கிறார்கள், சூழ்ச்சி செய்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்த சிலரிடம் காணப்பட்டது. CIS நிறுவனத்தின் ஏற்பாட்டில் Welcome to Mosque நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்தோம். மாற்று மத சகோதரர்கள் பள்ளிவாசல்களுக்கு வந்து பார்வையிட்டார்கள். அவர்களது சந்தேகங்களுக்கான தெளிவுகளை பெற்றுக்கொண்டார்கள். இப்படியான நிகழ்ச்சிகள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது எம்மவர்கள் மத்தியில் குடிகொண்டிருக்கும் பிழையான மனப்பதிவுகள் நீங்கிவிடும் என்கின்ற கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள். இவ்வாறு அவர்களது சந்தேகங்களை போக்கும் நிகழ்ச்சித் திட்டங்களே பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது.

அளுத்கம, திகன சம்பவங்களைத் தொடர்ந்து எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதா?

இடைப்பட்ட காலங்கள் மீண்டாலும் கூட மீண்டும் அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நாடு எரிமலைக்கு மேலால் இருப்பது போலவே தென்படுகிறது என பௌத்த சகோதரர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். உண்மையில் சிறிய சம்பவங்கள் கூட இந்நாட்டில் இனக்கலவரங்களை கொண்டு வரும் அளவுக்கு அவர்களது உள்ளங்களில் இனவாதம் விதைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்கள் கூட இந்த நாட்டில் இனக்கலவரங்களை ஏற்படுத்தி விடுமா என்ற அச்சம் என்னிடம் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டியுள்ளது. இனவன்முறைகள் ஏற்படுகின்ற போது மாத்திரமே முஸ்லிம்கள் அதைப் பற்றி அதிகம் பேசுவார்கள். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து குறைந்தளவிலான உரையாடல்களே இடம்பெறுகின்றன.

முஸ்லிம் சமூகத் தலைமைகளின் செயற்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

சிலபோது முஸ்லிம் சமூகத் தலைமைகளின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தை பற்றிய பிழையான மனப்பதிவுகளை இன்னும் அதிகரித்து விடுவதாகவே உள்ளன. உதாரணமாக அண்மையில் இடம்பெற்ற பிறை விவகாரத்தை குறிப்பிட முடியும். முஸ்லிம் சமூகத் தலைமைகள் இந்நாட்டில் பெரும்பான்மைச் சமூகத்தின் உயர்மட்ட, சாதாரண, அடிமட்ட மக்களுடனான உறவுகளை எந்தளவுக்கு பேணி வருகின்றார்கள் என்கின்ற கேள்வி உள்ளது. சமூகத் தலைமைகள் அவர்கள் வாழும் சூழலில் உள்ள ஏனைய சமூகங்களை பற்றி எந்தளவுக்கு விளங்கியிருக்கிறார்கள்? இதன் மூலமே அவர்களுடனான உரையாடல்களை ஆரம்பிக்க முடிகின்றது என உமர் (ரழி) அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பொதுவாக உலமாக்கள் என்ற அடிப்படையிலும் கூட ஏனைய சமூகங்களுடனான உறவுகள் அதிகதிகம் காணப்பட வேண்டும்.

இறுதியாக நீங்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கூற விரும்பும் செய்தி என்ன?

எமக்கு முடியுமான எல்லா வழிமுறைகளை பயன்படுத்தி இந்ந நாட்டு மக்களின் மனங்களில் உள்ள இனவாதம் சார்ந்த சிந்தனைகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். பெருநாள் தினங்கள் மற்றும் ஏனைய விஷேட நிகழ்வுகளின் போது முஸ்லிம்கள் தாம் வாழும் பிரதேசத்திலுள்ள ஏனைய மதத்தவர்களையும் அழைத்து அழகியதொரு சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும். ஷரீஆ அனுமதித்த, இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத வகையில் மாற்று மதத்தவர்களுடனான உறவுகளை வளர்ப்பதற்கான வாயில்கள் என்ன என்பது குறித்து நாம் சிந்தித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியை நான் முஸ்லிம் சமூகத்திற்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

Image may contain: 3 people, people standing
Image may contain: 2 people
Image may contain: Ash Sheik Muneer Mulaffer
Image may contain: 6 people, including Ash Sheik Muneer Mulaffer
Image may contain: 3 people, including Ash Sheik Muneer Mulaffer, outdoor
Image may contain: Ash Sheik Muneer Mulaffer

About the author

Administrator

Leave a Comment