அரசியல்

திகனை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில்  இழப்பீடுகள் வழங்கப்படவில்லை

Written by Administrator

இனரீதியான வன்முறைகளின் போது கடமையில் ஈடுபடுத்தப்படும் கலகம் அடக்கும் பொலிஸ் படையில் மூவினத்தினரும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்துள்ளோம். ஒரு சம்பவம் நடைபெற்ற உடனேயே பொலிசாரே அங்கு விரைய வேண்டி இருக்கிறது. பொலிஸாரினால் நிலைமையை கட்டாயப்படுத்த முடியாத போதே படையினர் வரவழைக்கப்படுகின்றனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட கடமைப்பட்டவர்கள் உடனடியாக செயல்பட்டிருந்தால் அம்பாறை, கண்டி இனக்கலவரங்களை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐ.நாவின் இடைக்கால வதிவிட பிரதிநிதி ரெரன்ஸ் டி. ஜோன்ஸ், இங்குள்ள ஐ.நா வின் நல்லிணக்கத்திற்கும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கீதா சப்ஹர்வால் சகிதம் அமைச்சர் ஹக்கீமை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் சந்தித்து யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

 இனவாத வன்செயல்களுக்கு துணைபோனதாக கூறப்பட்ட பொலிஸ் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போதும் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் வெறுப்பூட்டக்கூடிய பேச்சுக்களை தடைசெய்வதற்கான சட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பிலும் நிலைமாறுகால நீதிதொடர்பிலும் இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.

இலங்கையில் முன்னர் நீண்டகாலமாக அவசரகால சட்டம் நடைமுறையில் இருந்ததனால் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொறுப்பானவர்கள் பொதுவான சட்டங்களின் கீழ் செயற்படாமல் குறுக்கு வழிகளை கையாள்வதற்கு தொடர்ச்சியாக எத்தனித்து வருகின்றனர். இதனால் நீதியை நிலைநாட்டுவதில் தாமதமும் முறைகேடுகளும் ஏற்பட்டு வருகின்றன. துரதிஷ்டவசமாக தேசிய அரசினுள் நிலவுகின்ற முறுகல் நிலையின் காரணமாக ஸ்திரமற்ற தன்மை காணப்படுவதான ஒரு தோற்றப்பாடு உள்ளது.ஆயினும் முன்னைய அரசாங்கத்தைவிட இந்த ஆட்சியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அவதானிக்கப்படுகின்றது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னக்குடாவில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் இராணுவ ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்படும் விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் கூட வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் படையினரின் பிரசன்னம் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

மன்னார் சிலாவத்துறையின் நகர் பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம். திகனை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்ற குறை நீடித்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலைமாறு கால நீதி தொடர்பில் ஏற்கெனவே மியன்மார், இந்தோனேசியா,மாலைதீவு போன்ற நாடுகளில் பணிபுரிந்து நீண்ட அனுபவம் வாய்ந்த ஐ.நாவின் இடைக்கால வதிவிட பிரதிநிதி ரெரன்ஸ் டி.ஜோன்ஸ் மூன்று மாத காலம் இலங்கையில் தங்கியிருந்து இங்குள்ள களநிலவரம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி வருகின்றனர்.

About the author

Administrator

1 Comment

  • கண்டி மாவட்ட முஸ்லீம் ஓட்டு போட்டு உம்மை அமைச்சராகிய மக்களுக்கே உம்மால் செய்ய முடியவில்லை பின்னர் எதற்காக அமைச்சரா இருக்கிறீர் ? எந்த கட்சி வந்தாலும் அமைச்சராக முடிந்த உமக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக நல்லது செய்யமுடியவில்லையே இந்த கதை மறு தேர்தல் வரை கதைப்பீரோ …பணம் சம்பாதிக்கும் , தைரியம் சமூகத்திற்கு நல்லது செய்யவும் தேவை , சமூகத்துக்காக விஜயகாலவுக்கு உள்ள தைரியம் தேவை , முஸ்லீம் மக்கள் முட்டாள் தானே எப்படியும் ஒட்டு போடுவார்கள் அடுத்த முறை கோத்தாபே வறுவதனால் நீர் அங்குமிருப்பீர் .

Leave a Comment