ஆசிரியர் கருத்து

பொறுப்பான ஊடகவியலாளர்கள் தொடர்பில் சமூகத்துக்கும் பொறுப்பிருக்கிறது

Written by Administrator
Editorial : 397

ஊடகங்கள் ஆட்சி நடத்தும் இன்றைய சூழலில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் செயற்படும் ஊடகங்கள் பெரும் ஆரவாரத்துடன் கொடி கட்டிப் பறக்கும் நிலை இருப்பது கவலையைத் தருகிறது. அரசியல்வாதிகளுக்கும் ஊழல் பேர்வழிகளுக்கும் கூஜா தூக்கும் வக்காலத்து ஊடகவியல் தான் இன்று பல ஊடகவியலாளர்கள் பின்பற்றும் வழிமுறையாக உள்ளது. தெரிந்து கொண்டே மக்களை தவறாக வழிநடத்துகின்ற இந்த வகையான ஊடகவியலாளர்களினால் நாடே கொள்ளையடிக்கப்படுகிறது. இனவாதத்தை கருவியாகப் பயன்படுத்தும் பல ஊடகவியலாளர்களின் ஆதிக்கம், இன்று நாட்டை இனரீதியான கூறுகளாகப் பிரித்து வைத்திருக்கிறது. பொறுப்புணர்வு, பக்கச்சார்பின்மை, உண்மையை வெளிப்படுத்தல் போன்ற ஊடகவியலின் பண்பாடுகளை பணத்துக்காக விற்றுப் பிழைக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு மத்தியில், சமூகப் பொறுப்புணர்வையூட்டி நாட்டிலே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுகின்ற உண்மையான ஊடகவியலாளர்கள் அரிதாகவே கிடைக்கப் பெறுகிறார்கள்.

அப்படியான அரியதொரு ஊடகவியலாளராகத் தான் சாமர லக்ஷான் குமார காணப்பட்டார். ரஸ பத்திரிகையை ஸ்தாபித்தது முதல் இனநல்லிணக்கத்துக்கான ஆக்கபூர்வமான வெளிப்பாடுகளை தனது பத்திரிகையூடாக வெளிக்கொணர்வதில் சாமர அரும்பணியாற்றினார். இனவாதத்தை தமது மூலதனமாகப் பாவித்துச் செயற்படும் பெரும்பாலான பத்திரிகைகளுக்கு மத்தியில் இனவாதத்துக்கெதிரான பிரச்சாரமொன்றை முன்னெடுப்பதற்கு அவர் தனது பத்திரிகையைப் பயன்படுத்தினார். இந்த மனிதநேய ஊடகப் பணி,  ஏரிக்கரை வெளியீடான சிலுமின பத்திரிகையிலும் ஆசிரியராகப் பணிபுரியும் அளவுக்கு அவரை உயர்த்தியது. தமது சுய முன்னேற்றங்களுக்காக அரசியல்வாதிகளதும் இனவாதிகளதும் வால்பிடிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முன்னிலையில் நேர்மையாக, தூய்மையாக சமூக நலனை நோக்காகக் கொண்டு உழைப்பதன் மூலமும் உயர்ந்து நிற்க முடியும் என்பதை அவர் தனது குறுகிய வாழ்நாளில் எடுத்துக் காட்டினார். இந்த நிலையில் அவர் வழியில் நின்று உழைக்கின்ற ஊடகவியலாளர் அணியொன்றைத் தயார்படுத்துவது அவருக்குச் செய்கின்ற காணிக்கையாக அமைய முடியும்.

தமது சுயலாபங்களே மேலோங்க வேண்டுமென்ற உணர்வில் செயற்படுபவர்களுக்கு மத்தியில் நேர்மையான ஊடகப் பணி புரிவது என்பது சிரம சாத்தியமானது என்பதை டெய்லி சிலோன் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் ஆசிக் நசார்தீன் மீது மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது. குரலற்ற சமூகத்தின் குரலாகச் செயற்படுகின்ற ஊடகங்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டிக்கத்தக்கதாகும். மக்கள் தமது பொறுப்பினைச் சரிவரச் செய்வதனூடாக ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதற்கு உதவ வேண்டும். அடாவடித் தனங்கள், வன்முறைகளுடாக ஊடகங்களை அடக்க முனைகின்ற போது தான் ஊடகவியலாளர்கள் தமது நடுநிலைமையை இழக்கின்றனர். சாமர லக்ஷான் குமார போன்ற பொறுப்பான ஊடகவியலாளர்களை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு சமூகத்துக்கும் இருக்கிறது.

About the author

Administrator

Leave a Comment