Youth இலக்கியம் சமூகம்

பல பரிணாமங்களில் இலக்கியத் துறையில் உச்சம்தொட்ட கவிஞர் அஸ்மின்

Written by Administrator

 – அனஸ் அப்பாஸ் –

இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராக 1983 மே மாதம் 02 இல் பிறந்தார். இவர் பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.

சிறு வயது முதலே இவர் இலக்கிய ஆர்வளரான அஸ்மினின் “என்ன தவம் செய்தாயோ” என்ற முதல் கவிதை 25-03-2000 ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.

இவர் மரபுக் கவிதை எழுதிவரும் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பல பரிணாமங்களில் பிரகாசித்தவர். கவிதைத் துறையில் ஜனாதிபதி விருது (2001), அகஸ்தியர் விருது (2011), கலைமுத்து விருது (2011), கலைத்தீபம் விருது (2011) கவிவித்தகன்(2015) என இருபதுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் (2010,2011) பெற்றுள்ளார்.

விஜய் ஆண்டனியின் இசையில் வெளிவந்த நான் திரைப்படத்திற்காகத் தப்பெல்லாம் தப்பே இல்லை… என்ற பாடலை எழுதியதுமுதல் தென்னிந்திய சினிமாத்துறையும், சர்வதேச தமிழ் உலகும் இவரை நோக்கி திரும்பிப் பார்த்தது. சுமார் 50 வருடங்களுக்குப் பின் தமிழ் சினிமாவுக்கு பாடல் எழுதிய இலங்கையர் என்ற பெருமை இதனால் அவருக்கு கிடைத்துள்ளது. பாடலாசிரியர் ஒருவரை அறிமுகம் செய்யும் நோக்கோடு அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் வழங்கப்பட்ட கதைச்சூழலுக்கும் இசைக்கும் ஏற்பப் பாடல் எழுதி அதில் 20,000 போட்டியாளர்களுக்குள் முதலாமிடம் பெற்று நான் திரைப்படத்தில் பாடல் எழுதுவதில் ஆரம்பித்து, இன்று பல இந்தியத் திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுதி வருகின்றார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பற்றி இவர் இயற்றிய “வானே இடிந்ததம்மா” பாடல் வரிகள் இணையத்தில் பத்து மில்லியனுக்கு அதிகமானோரின் பார்வைகளை ஈர்த்ததுடன், தமிழக முதல்வராக பரிந்துரைக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழியின் கரங்களால் புகழ்பெற்ற போயஸ்காடன் இல்லத்தில் வைத்து கௌரவிக்கப்பட காரணமாக அமைந்தது.

2000 களில் பொத்துவில் பிரதேசத்தை மையமாக கொண்டு வெளிவந்த தேடல் எனும் கலை, இலக்கியச் சிற்றிதழின் முதன்மை ஆசிரியராகவும் சுடர் ஒளி வார வெளியீட்டின் கவிதைப் பகுதி ஆசிரியராகவும் பணிபுரிந்த இவர் உணர்வுகள் என்ற பகுதியில் ஈழநிலா என்ற புனைபெயரில் ஈழத்தின் இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர்கள் குறித்துத் தனது மனப்பதிவுகளை எழுதி வந்துள்ளார். 55 கிழமைகளாக இவரது பத்திகள் வெளிவந்துள்ளன.

மேலும்,

2002 ஆம் ஆண்டு “விடைதேடும் வினாக்கள்”

2003 ஆம் ஆண்டு “விடியலின் ராகங்கள்”

இந்திய புகழ்பெற்ற கவிஞர் வைரமுத்துவின் வாழ்த்துரையுடன் 2013 ஆம் ஆண்டு “பாம்புகள் குளிக்கும் நதி” ஆகிய நூல்களை இதுவரை வெளியிட்ட இவர், அடுத்து,

 • ஈழநிலாவின் உணர்வுகள (பத்தி எழுத்து நூல்)
 • நிலவு உறங்கும் டயறி (சிறுகதை நூல்)
 • தட்டாதே திறந்து கிடக்கிறது (கவிதை)
 • நான் பிறந்த கதை
 • கவிஞர் அஸ்மின் பாடல்கள்

ஆகிய நூல்களை வெளியிடவும் உத்தேசித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியின் சகோதர அலைவரிசையான வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தற்போது கடமையாற்றும் இவர் தொலைக்காட்சித் துறையில் பல சர்வதேச பயிற்சிகளை பூர்த்தி செய்துள்ளதுடன், வசந்தம் தொலைக்காட்சியில் இவர் தயாரிக்கும் “தூவானம்” கலை இலக்கிய – சஞ்சிகை நிகழ்ச்சி தேசிய தொலைக்காட்சி விருது வழங்கல் நிகழ்வில் மூன்றுமுறை விருது வென்றுள்ளது.

இவருக்கு இதுவரை கிடைத்த அங்கீகார விருதுகள், கௌரவங்கள் வருமாறு,

 • மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் முதலாவது நினைவு நாளை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு -(ஜனாதிபதி விருது). இந்த விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 09.16 அன்று வழங்கப்பட்டது.
 • பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2002
 • பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு (தங்கப்பதக்கம்)-2003
 • அகில இலங்கை இந்து மாமன்றம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய சொல்லோவிய போட்டியில் சிறப்புப் பரிசு.2003
 • விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2003
 • பிரான்ஸ் மகாகவி பாரதியார் மன்றம் சர்வதேச ரீதியாக நடாத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2007
 • சக்தி தொலைக்காட்சியினால் அகில இலங்கை மட்டத்தில் நடத்தப்பட்ட ‘இசைஇளவரசர்கள்’போட்டி நிகழ்ச்சியில் பாடலாசிரியருக்கான அங்கீகாரம்.-2008
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ‘வியர்வையின் ஓவியம்’ கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு.-(சிறந்த பாடலாசிரியர் விருது)-2010
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ‘வியர்வையின் ஓவியம்’ கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் இரண்டாம் பரிசு.- 2010
 • இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்சங்கம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2010
 • ‘லங்கா’ பத்திரிகை நிறுவனத்தின் புதிய சிறகுகள்-2011 கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு-2011
 • கண்டி கலை இலக்கிய இரசிகர் மன்றமும்அகிலம் அறிவியல் சஞ்சிகையும் இணைந்து நடத்திய அகில இலங்கை மட்ட கவிதைப்போட்டியில் சிறப்பு பரிசு-2011
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ‘வியர்வையின் ஓவியம்’ கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு – சிறந்த பாடலாசிரியர் விருது -2011
 • மலேசியாவில் 2011 இல் நடைபெற்ற 6வது உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்டு கவிதை பாடினார். மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணன் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.
 • இலங்கை ‘தடாகம்’ கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 6.2011 அன்று பொன்னாடை போர்த்தப்பட்டுஅகஸ்தியர் விருதும் கலைத்தீபம் பட்டமும் வழங்கப்பட்டன.
 • லக்ஸ்டோஊடக அமைப்பினால் கலை, இலக்கிய, ஊடகத்துறையில் ஆற்றிவரும் பணிக்காக 6.2011 அன்று ‘தங்கப்பதக்கம்’ வழங்கப்பட்டு கலைமுத்து பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டார்.
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ‘வியர்வையின் ஓவியம்’ கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் மூன்றாம் பரிசு – 2012
 • இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் ‘வியர்வையின் ஓவியம்’ கலை நிகழ்வை முன்னிட்டு அகில மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் முதலாம் பரிசு – 2013
  • பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூலுக்காக கவிஞர் எஸ்.பீ.பாலமுருகன் பேனா கலை இலக்கிய விருது சிறப்பு சான்றிதழ் – 2014
  • உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் கலை இலக்கிய பண்பாட்டு பெருவிழாவில் கௌரவிப்பு.

தரம் – 9 இல் கற்கும் காலத்தில் கவிதை ஊடாக தனது எழுத்துலக பயணத்தை ஆரம்பித்த கவிஞர் அஸ்மின் இரண்டு தசாப்த காலமாக தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றி வரும் பங்களிப்பு மகத்தானது. பல பரிணாமங்களில் வெளிப்படும் இவரது ஆக்கங்களுக்கு இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கின்றமைக்கான மந்திரம் அவரது “படைப்பின் தரம்” என்றால் மிகையாகாது.

About the author

Administrator

Leave a Comment