நேர்காணல்

முரண்பாடுகளை தவிர்த்து உடன்பாட்டுடன் செயற்படுகின்ற போதே உண்மையான இணக்கப்பாட்டை அடைய முடியும்

Written by Administrator

“தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தை அவதானிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் தேசிய சகவாழ்வு சங்கங்கள் (National Co-existence Society) நிறுவப்பட்டுள்ளன. தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துவதே இந்தச் சங்கங்களின் நோக்கமாகும். இலங்கையில் சுமார் 14,000 கிராம சேவகப் பிரிவுகள் காணப்படுகின்றன. தற்பொழுது 8000 இற்கும் மேற்பட்ட சகவாழ்வு சங்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.”
– செய்யித் அலி ஸாஹிர் மௌலானா
பிரதியமைச்சர் – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சுப் பதவி தற்பொழுது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வமைச்சினூடாக நீங்கள் முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகளை குறிப்பிட முடியுமா?

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஆரம்பத்தில் இவ்வமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பில் இருந்தது. மக்கள் மத்தியில் வெறுமனே போதனை செய்யும் அமைச்சாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் மக்கள் மனதை வென்றெடுக்க வேண்டுமெனில் அவர்களது தேவைகளுக்கு முன்னுரிமையளித்து, அவர்களுக்கு தேவையான கல்வி, கலாசார, சுகாதார, வாழ்வாதார விடயங்களில் ஒட்டுமொத்த கவனமும் செலுத்தப்பட வேண்டும். ஒரு அபிவிருத்தி சார்ந்த அமைச்சாக இது மாற்றப்பட்டால் தான் உண்மையான நல்லிணக்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல முடியும். இவ்வாறான திட்டங்களை உள்ளடக்கிய அமைச்சாக தற்பொழுது எம்மிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. இதனை துரித கதியில் அமுலாக்கம் செய்து, உள்ள10ராட்சி, மாகாண, தேசிய ரீதியாக காணப்படுகின்ற அபிவிருத்திகள் மக்களுக்கு நேரடியாக செல்லும் நோக்கில் இப்பணியை ஆரம்பிக்கவுள்ளோம். மக்கள் எந்த அங்கீகாரத்திற்காக வேண்டி எமக்கு வாக்களித்தார்களோ அவற்றுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதே எமது தலையாய கடமையாகும்.

இன நல்லுறவைக் கட்டியெழுப்புவது தொடர்பான அமைச்சின் திட்டங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

இன நல்லுறவை கட்டியெழுப்புவது தொடர்பில் நாம் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். கொள்கை அபிவிருத்திப் பிரிவின் கீழான நிகழ்ச்சித் திட்டங்கள், சகவாழ்வு பிரிவினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி திட்டங்கள், நிர்வாகப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் என அமைச்சு மூன்று வழிமுறைகளில் தம் பணியை முன்னெடுத்து வருகின்றது. கொள்கை அபிவிருத்திப் பிரிவின் கீழ், கொள்கை தொடர்பான நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், வசதியளித்தல் மற்றும் மீளாய்வுசெய்தல், உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தினை நடாத்துதல், மும்மொழி பெயர் பலகைகளை தாபிப்பதற்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர் குழுவினருக்காக அரச கரும மொழிக்கொள்கை மற்றும் சகவாழ்வு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடல் செயலமர்வினை நடாத்துதல், சகவாழ்வு சங்கத்தினை பதிவுசெய்தல் மற்றும் அதனை இயங்கச் செய்வதற்குரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

சகவாழ்வு பிரிவின் கீழ், ஓரங்கட்டப்பட்ட மக்கள் குழுக்களை வலுப்படுத்தல், அத்தியாவசிய சட்ட ஆவணங்களை வழங்குவதற்காக பிரதேச செயலாளர் மட்டத்தில் நடமாடும் சேவைகளை நடாத்தல், ஓரங்கட்டப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களை வலுவூட்டல், இலங்கையில் வாழும் ஓரங்கட்டப்பட்ட பல்வேறு இனக் குழுக்களை வலுப்படுத்தல், சகவாழ்வை மேம்படுத்த வெகுஜன ஊடகங்களை பயன்படுத்தல், வெகுஜன ஊடகங்கள் ஊடாக சகவாழ்வை மேம்படுத்துவதற்கான வானொலி நிகழ்ச்சித்திட்டங்கள் (சுபாரதி மற்றும் விடியும் வேளை) சகவாழ்வு குறுந்திரைப்பட விழாவை நடாத்தல், (கையடக்க தொலைபேசி குறுந்திரைப்படங்கள்) சகவாழ்வு மேம்படுத்தல் ஸ்டிக்கர் நிகழ்ச்சித்திட்டம், திரையரங்குகளில் சகவாழ்வு செய்திகளை காட்சிப்படுத்தல், சகவாழ்வு தொடர்பாக வீதி நாடகங்களை நடாத்துதல், சகவாழ்வை மேம்படுத்துவதற்காக கலைஞர்கள், சமய தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களைக் உள்ளடக்கிய சபையொன்றை தாபித்தல், நாடுபூராகவும் உள்ள பங்காளர்களுடன் கலந்துரையாடலை நடாத்தல போன்ற நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று நிர்வாகப் பிரிவின் கீழ், அறிவு, திறன்கள் மற்றும் மனப்பான்மை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், பட்டப் பின்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்வான்மை சார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம், மாவட்ட மற்றும் மாகாண நிலையங்களை தாபித்தல், அகலவத்தை பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடத்தை பெற்றுக்கொடுத்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சகவாழ்வைக் கட்டியெழுப்பும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தினாலும் கூட அளுத்கம, திகன போன்ற சம்பவங்களால் அவை கேள்விக்குறியாகி விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு அமைச்சு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

தேசிய சகவாழ்வு என்பது அமைச்சின் ஒரு பகுதியாகும். தேசிய சகவாழ்வு என்பது சமாதான சகவாழ்வு ஆகும். நாட்டில் எப்பாகத்திலேனும் ஏதாவது சிறிய தவறொன்று நடக்கும் பட்சத்தில் மிகவும் கவனமான முறையில் உடடியாக அவதானிக்கப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டம் உரிய முறையில் அமுலாக வேண்டும். இதற்காக வேண்டி ஒவ்வொரு பிரதேச ரீதியிலும் தேசிய மட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டிருக்கும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தை அவதானிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் தேசிய சகவாழ்வு சங்கங்கள் (யேவழையெட ஊழ நுஒளைவநவெ ளுழஉநைவல) நிறுவப்பட்டுள்ளன. தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துவதே இந்தச் சங்கங்களின் நோக்கமாகும். இலங்கையில் சுமார் 14,000 கிராம சேவகப் பிரிவுகள் காணப்படுகின்றன. தற்பொழுது 8000 இற்கும் மேற்பட்ட சகவாழ்வு சங்கங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திகன, அளுத்கம போன்ற பகுதிகளில் இந்நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சங்கங்களுக்கு தேவையான நிதி ஒழுங்குகளை செய்துள்ளோம். இதன் மூலம் பிரதேச ரீதியாக ஏற்படக்கூடிய இன மோதலை ஆரம்பத்திலேயே தணிக்க முடிகின்றது.

இதுதவிர, மாவட்ட செயலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு அதிகாரி ஒருவர் எமது அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர நாட்டிலுள்ள 334 பிரதேச செயலகங்களில் 200இற்கு மேற்பட்ட பிரதேச செயலகங்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகளையும் நியமிக்கவுள்ளோம். தற்பொழுது இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளன. நாட்டில் இனிமேலும் அளுத்கம, திகன போன்ற பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நாம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்தத் திட்டங்கள் எந்தளவு வெற்றியளித்திருக்கிறது?

நான் இவ்வமைச்சை பெறுப்பேற்று ஒன்றரை மாதங்களாகின்றன. இந்தக் காலப்பகுதிக்குள் வடகிழக்கிற்கு 6 அம்சத் திட்டமொன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அமைச்சரவை அனுமதிகளையும் பெற்று வீதிகளை நிர்மாணிப்பதற்கான கேள்விப்பத்திரங்களை கோரி, ஒப்பந்தக்காரர்களிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல இன மக்களுக்கும் பிரயோசமளிக்கும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை நாம் துரித கதியில் முன்னெடுத்துள்ளோம். இது போன்று மாவட்ட அடிப்படையில் அரசாங்க அதிபர்களினூடாகவும், பிரதேச செயலகங்களினூடாகவும், மாகாண அதிகாரிகளினூடாகவும் எமது அமைச்சுக்கூடாக அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல், மேற்பார்வை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எமது செயற்பாடுகளை அமுல்படுத்தும் யந்திரம் துரித இயங்குநிலைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு விவசாயம் சார்ந்த பொருளாதார அபிவிருத்திக்குரிய அம்சங்களும், கடல் நீர் நிலைகளுக்கான அபிவிருத்திகளும் மக்களது வாழ்வாதாரத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.

சகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் மொழி எவ்வளவு தூரம் பாதிப்புச் செலுத்துகிறது?

மொழிகள் மூலமும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக வேண்டி எமது அமைச்சின் கீழ் அரச கரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழி ஆணைக்குழு, தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் போன்றன தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொழிக்கொள்கை அமுலாக்கம் இடம்பெற்று வருகிறது. அரச கரும மொழி அமுலாக்கம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் பல்வேறு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை யதார்த்தபூர்வமான முறையில் அமுல்படுத்துவதற்கு நாம் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 18ஃ2009 சுற்று நிருபத்தின் படி, ஒரு பிரதேச செயலகத்தின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் விண்ணப்பங்கள் மும்மொழியிலும் காணப்பட வேண்டும் என்றொரு விதிமுறை உள்ளது. அல்லது ஒருவர் வேண்டும் மொழியில் அந்த ஆவணம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட வேண்டும்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் மும்மொழிக் கொள்கையை முற்றாக செயற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மும்மொழி அகராதியொன்றும் வடிவமைக்கப்பட்டு, அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல அம்சங்களையும் உள்ளடக்கிய அடிப்படையில் சகவாழ்வை கட்டியெழுப்பும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நிரந்தர சமாதானத்தை நிலைநிறுத்திக்கொள்வது தொடர்பில் நீங்கள் நாட்டு மக்களுக்கு கூற விரும்பும் ஆலோசணைகள் என்ன?

நான் எப்போதும் சமாதானத்திற்காக வேண்டி செயற்பட்டவன் என்ற வகையில் இவ்வமைச்சு எனக்கு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் பொறுமையுடனும் சகிப்புத்தன்மை விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்கின்ற கருத்தையே அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்தியுள்ளது. நாம் முழு உலகிற்குமான உதாரண புருஷர்களாக மாற வேண்டும். முரண்பாடுகளை தவிர்த்து உடன்பாட்டுடன் நாம் செயற்படுகின்ற போதே உண்மையான இனக்கப்;பாட்டை எல்லா மட்டத்திலும் உள்வாங்கலாம். இன மத பேதமற்ற வகையில் சகலருக்கும் சகலதும் கிடைக்க வேண்டும். நாம் சிறந்த முறையில் வாழ்வதற்கு எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறோமோ அவையனைத்தும் சகல மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். இன, மத, மொழி ரீதியான எவ்வித ஏற்றத்தாழ்வுகளையும் பின்பற்றக் கூடாது. அதேநேரம் எம்மிடம் காழ்புணர்ச்சிகளும் இருக்க கூடாது. இவற்றை கடைபிடிக்கும் போதே அடுத்த தலைமுறையும் இவற்றை பேணி நாட்டில் நிரந்தர சகவாழ்வுக்காக முன்நிற்பார்கள்.

நேர்காணல்: ஹெட்டி ரம்சி

About the author

Administrator

Leave a Comment