இலக்கியம்

நூல்: டியூனீசியாவில் அரசியல் இஸ்லாம்: அந்நஹ்ழாவின் வரலாறு

Written by Administrator

– ஸகி பவுஸ் (நளீமி) –

அன்னா வூல்பின் நூல் தொடர்பான உரையாடல்

Image result for political islam in tunisiaஅன்னா வூல்பினுடைய ‘டியூனீசியாவில் அரசியல் இஸ்லாம்: அந்நஹ்ழாவின் வரலாறு’ என்ற இந்த நூல் மிக சுவாரஷ்யமானது. ஓரே முச்சில் வாசித்து முடித்து விட்டேன். வெறுமனே கோட்பாடுகளைப் பேசும் புத்தகங்களை விட, அத்தகைய கோட்பாடுகளுடைய வளர்ச்சிக் கட்டங்களையும், அதன் பின்னால் தொழிற்பட்ட வரலாற்று நிகழ்வுகளையும் உள்ளடக்கிய புத்தகங்கள் எப்போதும் சிறப்பானவை. கவர்ச்சியானவை. விடயதானம் தொடர்பான முழுமையான தெளிவை வழங்கும் ஆற்றல் மிக்கவை. மட்டுமன்றி, ஒரு சிந்தனைப் பள்ளியினுடைய பல உள்ளக இயங்கியல்களை அதற்கூடாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மறுபுறம், இன்று மிகவும் தீவிரமான கலந்துரையாடலுக்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய இயக்கமான அந்நஹ்ழாவின் வரலாற்றை அன்னா வூல்ப் தொகுத்திருக்கிறார்.

துனீசிய இஸ்லாமிய இயக்கத்தின் வரலாற்றை முழுமையாகப் பேசும் முதலாவது நூல் இதுவாகும் என தனது முன்னுரையில் அவர் கூறுகிறார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினுடைய வெளியீட்டகம் (Oxford University Press) இதனை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே , 1998 வது ஆண்டு ‘ராஷித் அல் கன்னூஷி ஓர் ஜனநாயக இஸ்லாமியவாதி’ என்ற நூலை கலாநிதி அஸாம் தமீமி தொகுத்திருந்தார். அது ஷெய்க் கன்னூஷியுடைய அரசியல் சிந்தனைகளின் தொகுப்பாகும். அதனையும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே வெளியிட்டது. ஆரம்பத்தில், அஸாம் தமீமியின் நூலை அன்னா வூல்பினுடை இந்த நூல் பூரணப்படுத்துவது போல் தென்படுகிறது. ஆனால், அஸாம் தமீமியின் பிரதான பல விவாதங்களை அன்னா வூல்பினுடைய நூல் மறுதலிக்கிறது. மேலும், ராஷித் அல் கன்னூஷி தொடர்பான அஸாம் தமீமி முன்வைக்கும் மொத்தமான பார்வையை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்புத்தகத்தில் வூல்ப் விரிவாக விவாதிக்கிறார்.

இந்தப் புத்தகத்தினுடைய மையக் கருத்தாடல் ஒரு முக்கியமான கேள்வியைச் சூழ நகர்ந்து செல்வதனை அவதானித்தேன். அதாவது, அந்நஹ்ழாவும் , அதன் ஆளுமைகளும் மற்றும் அவர்களது நிலைப்பாடுகளும் ஓரு கோட்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டவையா? அல்லது துனுசியாவினுடைய சமூக மற்றும் அரசியல் களம் அவ்வப்போது தோற்றுவிக்கும் அரசியல் யதார்த்தங்களின் பின்புலத்தில் ‘நலன்களை’ மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலைப்பாடுகளும், தீர்மானங்களுமா? என்பதுதான் இந்நூலின் மையக் கருத்தாடலை தீர்மானிக்கும் கேள்வியாகும். கடந்த நான்கு தசாப்த்த கால அந்நஹ்ழா இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சியை பகுப்பாய்வு செய்வதற்கூடாக, மேற்சொன்ன கேள்விக்கான விடையை தேடிச் செல்கிறார் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அன்னா வூல்ப்.

இன்னொரு வசனத்தில் சொன்னால், அந்நஹ்ழா இயக்கத்தின் மையப் புள்ளியான கன்னூசி ஓர் அரசியல் தத்துவியளாளரா அல்லது ஓரு யதார்த்தவாத அரசியல்வாதியா? என்பதுதான் அவரது தேடலின் சுருக்கமாகும். இந்த ஆய்வின் முடிவில் , எப்போதும் அந்நஹ்ழா தனது வரலாற்றில் தனது கருத்தியல் கூறுகளை விட அல்லது தான் சார்ந்துள்ள கோட்பாடுகளை விட அரசியல் சமூக யதார்த்தங்களுக்கே தீர்மானமெடுத்தல் பொறிமுறையில் அதிக இடமும் , முக்கியத்துவமும் கொடுத்து வந்திருக்கிறது என்று சொல்கிறார். அதாவது, சிக்கலான சமூக-யதார்த்தங்களை எப்படிக் கவனமாக கடந்து செல்ல முடியும் என்பதே அந்நஹ்ழாவின் உளவியலாக தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது என்கிறார் வூல்ப். இந்தப் பின்னணியில் ராஷித் அல் கன்னூஷியை ஒரு அரசியல் கோட்பாட்டாளர் என்று அடையாப்படுத்துவதனை விட, அவர் ஓர் யதார்த்தவாத அரசியல்வாதி என்ற வட்டத்திற்குல் மட்டுமே அடக்கி விட முடியும் என அவர் வாதிக்கிறார். இந்த இடத்திலேயே அஸாம் தமீமியின் ஆய்வு முடிவுகளுடன் அவர் முரண்பட்டுச் செல்கிறார்.

இவை போக, முஸ்லிம் உலகில் தொழிற்படும் இஸ்லாமிய இயக்கங்களில் மிகவும் உள்ளகப் பிளவுகளைக் கொண்ட இயக்கம் ‘அந்நஹ்ழா’ என்பதும் அவரது இன்னொரு ஆய்வு முடிவாகும். குறிப்பாக, அந்நஹ்ழா இஸ்லாமிய இயக்கம் முகம் கொடுத்த ஒவ்வொரு சவால்களின் போதும் அதனை எதிர்கொள்வதற்காக அந்நஹ்ழாவின் தலைமைபீடம் எடுத்த ஒவ்வொரு தீர்மானங்கள், அவ்வியக்கத்தினுடைய பலமான முன்னணி உறுப்பினர்களை இயக்கத்தை விட்டும் வெளியேறச் செய்திருக்கின்றன. அதாவது, உள்ளக முரண்பாடுகளை முகாமை செய்யும் விடயத்தில் அந்நஹ்ழாவின் தலைமைபீடம் தொடர்ந்தும் தோல்வியடைந்து வந்திருக்கிறது என்கிறார் வூல்ப்.

குறிப்பாக, எகிப்திய இஹ்வான்களுடான கருத்தியல் சார்ந்த உறவு, அரசியல் இயக்கமா ? சமூக இயக்கமா? என்ற தீர்மானம் , பென் அலியுடன் உடன்பட்டுச் செல்வதா அல்லது எதிர்த்துச் செல்வதா? சட்டயாப்பை வரையும் விடயத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் நவீன சிந்தனைகளை அணுகும் கன்னூஷியின் முறையியல் போன்ற தலைப்புகள் இயக்கத்திற்குல் விவாதிக்கப்பட்ட தருணங்களிலெல்லாம், அவை பாரிய பிளவுகளை இயக்கத்திற்குல் ஏற்படுத்தியதாக வூல்ப் கூறுகிறார்.அது தொடர்பாக இந்நூல் விரிவாக உரையாடுகின்றன.

மட்டுமன்றி, கன்னூஷியின் சிந்தனைப் போக்குகளுடன் உடன்பட்டு வாராதவர்களை அல்லது அதனுடன் முரண்பட்டுக் கொள்பவர்களை கவனமாக ஒதுக்கி வைக்கும் இயல்பும், பொறிமுறையும் இயக்கத்திற்குல் காணப்படுகிறது என்பது சில முன்னணி செயற்பாட்டாளர்கள் நூலாசிரியருடனான நேர்காணல்களில் முறைப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். குறிப்பாக, தீர்மானமெடுத்தல் செயற்பாட்டில் மாற்றுக் கருத்துகளை ஓரம் கட்டுவதற்காக ராஷித் அல் கன்னூஷியின் பிரபல்யத்தை அவர் சார்பு இயக்க உறுப்பினர்;கள் ‘Leverage’ ஆக பயன்படுத்திக் கொள்ளும் கலாசாரமொன்று தோற்றம் பெற்று வருவதாகவும் வேறு சில அந்நஹ்ழா உறுப்பினர்கள் கூறியதாக நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இவை போக, அந்நஹ்ழா இயக்கத்தை முகாமை செய்வதில் பென் அலியின் கொள்கைகளின் கொடூரங்களையும், துனீசிய மதச்சார்பின்மைiயின் இரும்புக் கரம் ஓர் பாரம்பரிய இஸ்லாமிய சமூகத்தை எவ்வாறு கலாச்சாரக் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தியது என்பதனையும் நூல் பக்கசார்பின்றிப் பேசுகிறது. அதனைப் பாராட்டியாக வேண்டும்.

இறுதியாக, இந்நூலின் ஆய்வு முடிவுகளுடன் முழுமையாக உடன்பட முடியாது. ஏனெனில், சில நிகழ்வுகளுக்கு நூலாசிரியர் விளக்கமளிக்கும் முறையானது, நிறைய கோளாருகளைக் கொண்டதாகும். மட்டுமன்றி, பல தகவல்களை நூலாசிரியர் புரிந்து கொண்டுள்ள விதத்திலும் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், இந்நூல் முன்வைக்கும் பேசுபொருளின் பின்புலத்தில் இஸ்லாமிய இயக்கங்களின் இயங்கியல் தொடர்பான புரிதலொன்றுக்கு வரமுடியுமாக இருக்கும் என நினைக்கிறேன். அதாவது, இஸ்லாமியவாதம் என்பதும், இஸ்லாமிய இயக்கங்கள் என்பதும் பலரும் நினைப்பது போல் ஒரு ‘Accomplished Ideological Project’ ‘ (திட்டவட்டமான கொள்கை கோட்பாடுகள் , அடிப்படைகளுடன் நகரும் செயற்திட்டம்) அல்ல. கருத்தியல்கள் அலை மோதும் தளத்தில் இஸ்லாமியவாதம் என்பதனையொரு முழுமையான சிந்தனைச் சட்டகமாக இஸ்லாமிய இயக்கங்கள் முன்வைத்த போதிலும் கூட, உள்ளாலிருந்து பார்க்கும் போது அதன் வடிவம் வித்தியாசமானது. அதாவது, யதார்த்தமான உலகில் ஊடாட்டம் செய்யும் போது இஸ்லாமிய இயக்கங்களும் தமது சிந்தனைக் சட்டகத்தை மாற்றியமைத்து வந்திருக்கிறார்கள்;. நிறைய விடை தெரியாத கேள்விகளுடன் தான் அவர்களும் நகர்கிறார்கள். ஓட்டுமொத்தமாக நோக்கும் போது, இஸ்லாமிய இயக்கத்தின் சிந்தனைக் கட்டமைப்பில் யதார்த்த உலகம் நியாயமாக செல்வாக்குச் செலுத்தி வந்திருக்கிறது. அந்நஹ்ழாவின் வரலாற்று வளர்ச்சியில் அந்த உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனைய இஸ்லாமிய இயக்கங்களும் இதற்கு விதிவிலக்க இருக்க முடியாது.

அடுத்து, ராஷித் அல் கன்னூஷி தொடர்பான நூலாசிரியர் வூல்பின் புரிதலுடன் நான் முரண்படுகிறேன். ராஷித் கன்னூசி ஓரு அரசியல் கோட்பாட்டாளர்; தாம். ஆனால், யதார்த்த உலகுடன் மோதிக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் தனது புரிதலை விரிவுபடுத்திச் சென்றிருக்கிறார். இஸ்லாமிய இயக்கம், இஸ்லாமியவாதம் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தினுடைய இலக்குகள் போன்ற விடயங்களில் அவரது பார்வைக் கோணம் விரிவடைந்து வந்திருக்கிறது. அத்தகைய நிலைமாற்றங்களை ‘கருத்தியலை விட யதார்த்த அரசியலை முற்படுத்தல்’ என்று புரிந்து கொள்ள முடியாது. வூல்பின் புரிதல் அவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை விட, கடந்த மூன்று தசாப்த்த காலமாக ராஷித் அல் கன்னூஷி தனது நகர்வுகளை வெறுமனே நகர்வுகளாக மட்டுமே முன்வைக்காமல், இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் புதிய கோட்பாடுப் பக்கங்களாகவே அதனை அவர் முன்வைத்திருக்கிறார்.

இன்னொரு வசனத்தில் சொன்னால், யதார்த்த உலகுடனான உரையாடலில் அவர் தனது தத்துவப் பார்வையை அகலப்படுத்திக் கொண்டிருக்கிறார் எனலாம்.

இஸ்லாமிய இயக்கம் என்றால் என்ன? என்பது தொடர்பாக அவர் கொண்டிருக்கின்றன புரிதல் அதற்கொரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், அவரது புரிதலில் இஸ்லாமிய இயக்கம் என்பது காலத்தின் குழந்தை மட்டுமே. குறிப்பிட்டதொரு கால சமூக சூழல் ‘இஸ்லாமிய இயக்கம்’ என்ற வடிவத்திற்கு வித்திட்டது என்கிறார் கன்னூஷி. எனவே, இயல்பாகவே மாறும் கால சூழல் அதன் அடிப்படைகளை கிளைம்சங்களாகவும், இதுவரை விவாதிக்கப்படாத விடயங்களை புதிய விவாதப் பொருளாகவும் மாற்றியமைத்து விடுவது யதார்த்தமானது என்பதே அவரது ஆழமான புரிதலாகும், சமீபத்தில் அவர் ‘பொரின் அப்யாஸ்’ சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இது குறித்து விரிவாகப் பேசியிருந்தார். மொத்தத்தில், அன்னா வூல்பின் ஆய்வு இஸ்லாமிய இயக்கமொன்றின் உள்ளக இயங்கு தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் நல்லதொரு தொகுப்பாக கருத முடியும்.

About the author

Administrator

Leave a Comment