Editorial | 398
உலகில் மிகவும் பெறுமதியானது மனிதனது உயிரும் மானமும். இதனால் தான் ஒரு மனிதனைக் கொல்வது முழு சமுதாயத்தையும் கொல்வதற்கு ஒப்பானது என்று சொல்லப்படுகிறது. மனிதனது உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தான் அனைத்துச் செயற்பாடுகளும் குறியாக இருக்கின்றன. தாய்லாந்திலே குகைக்குள் சிக்கிய 13 மனித உயிர்களையும் காப்பாற்றுவதற்கு உலகமே ஒன்று திரண்டு போராடியதை விதந்து போற்றாதார் யாருமிருக்க முடியாது.
வர்த்தக மயமான சமகாலச் சூழலில் தமது வருமானத்துக்காக உயிர்களைக் கொத்துக் கொத்தாகக் காவு கொள்கின்ற செயற்பாடுகளும் அதற்குப் பின்னால் இருந்து உழைக்கின்ற பண முதலைகளும் சுதந்திரமாகச் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமாக போதைப் பொருள் பாவனையைப் பரவலாக்கும் செயற்பாடு ராஜ்யம் அமைத்துத் தொழிற்படுகின்றது.
போதைப் பொருட்கள் மனித வாழ்வை நாசம் செய்யக் கூடியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. போதை ஏறிய நிலையிலேயே கொலைகள் உட்பட பல நாசகாரச் செயல்கள் நடந்தேறி வருவதை அண்மைக்காலத் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. போதையினால் சீரழிகின்ற குடும்பங்களையும், வீதிக்கு வரும் சிறுவர்களையும் சமூக அவலங்களையும் அவதானிக்கும் எவரும் போதைப் பொருட்களுக்கு எதிராக கடும் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளமாட்டார்கள்.
இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்குத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்க பிரகடனமாக அமைந்திருக்கிறது. போதைப் பொருள் பாவனையினால் காவு கொள்ளப்படுகின்ற பல நூற்றுக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்காக, நாசகாரச் செயலில் ஈடுபடுகின்றவர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்குவதற்கு உரிய அதிகார பீடங்கள் முன்வராதவரையில் போதைப் பொருள் பாவனையினால் கொல்லப்படும் பெறுமதிமிக்க மனித உயிர்களைப் பாதுகாக்க முடியாது. இந்த வகையில் ஜனாதிபதியின் தீர்மானம் வரவேற்கத்தக்கதே.
இலங்கையில் இவ்வாறான தண்டனைகள் அமுல்படுத்தப்படுவது இதுதான் முதல் முறையல்ல. ஏற்கனவே இருந்த சட்டம் தான் மீண்டும் அமுலுக்கு வருகிறது. இருந்தாலும் நாட்டில் நடக்காதது ஏதோ நடந்துவிட்டது போல சிலர் ஆர்ப்பரிக்கின்றார்கள். மரண தண்டனை அமுலில் இல்லாத காலங்களில் கூட வெள்ளை வானில் மரண தண்டனை வழங்குவதை பல அரசாங்கள் மௌனமாக அங்கீகரித்து வந்தன. பாதாள உலகை அழிப்பதற்காக பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைச் சுட்டுக் கொன்று மரண தண்டனை வழங்குவதும் எமது நாட்டுக்குப் புதியதல்ல. அந்த வகையில் கூப்பாடு போட்டுத் தடுப்பவர்கள் எந்த நிலைப்பாட்டில் இருந்து இதனை எதிர்க்கிறார்கள் என்பது தேடிப்பார்க்கப்பட வேண்டும்.
இதற்கு முன்னரும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதற்கு தயாரான வேளைகளில் சர்வதேச நாடுகள் சிலவற்றின் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது. இம்முறையும் அதேவிதமான அழுத்தங்கள் இந்தத் தீர்ப்பில் தாக்கம் செலுத்தி வருகின்றன. மரண தண்டனைத் தீர்மானத்தைக் கைவிடுமாறு அவை அரசாங்கத்தைக் கோரி வருகின்றன. இந்த இடத்தில் இந்தக் கோரிக்கையை விடுப்பதற்கு சொல்லப்படுகின்ற இந்த சர்வதேச நாடுகளுக்கு இருக்கும் தார்மீக உரிமை பற்றியும் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
ஈராக்கிலே பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதியையே போலியான குற்றச் சாட்டில் தூக்கில் போட்டுக் கொன்று விட்டு அந்த நாட்டையே தமக்கிடையே பங்கிட்டுக் கொள்ளும் அராஜகத்தை இலங்கையில் தூக்குத் தண்டனை கூடாது என்று கூறும் நாடுகள் அரங்கேற்றின. அதேநேரம் பலஸ்தீனின் அப்பாவி உயிர்களை பேரழிவு ஆயுதங்கள் மூலம் அநியாயமாகக் கொன்று குவிக்கும் இஸ்ரேலை இதே நாடுகள் குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. எனவே நீதி நியாயத்தை நிலைநாட்டுவதற்கு சொல்லப்படுகின்ற இந்த சர்வதேச நாடுகளின் தயவை எதிர்பார்த்திராமல் நாட்டுக்குத் தேவையான சட்டத்தை நிலைநாட்டி மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் துணிச்சலுடன் முன்வர வேண்டும்.