Uncategorized அரசியல் உள்நாட்டு செய்திகள் பிரதான செய்திகள்

எழும்பத் தூண்டுவதற்கு வாக்களித்தவர்களும் எலும்புத் துண்டுகளுக்கு வாக்களித்தவர்களும்

Written by Web Writer

எழும்பத் தூண்டுவதற்கு வாக்களித்தவர்களும் எலும்புத் துண்டுகளுக்கு வாக்களித்தவர்களும்
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் வெளிவந்து கொண்டிருக்கும் மயிர்கூச்செறியும் அலசல்கள் இது வரை நடந்து முடிந்திருக்கலாம். அல்லது கடந்த காலங்களில் போராட்டங்கள் நடத்தியவர்கள் எல்லாம் தத்தமது போராட்டங்கள் பற்றி ஞாபகிக்கும் போதெல்லாம், தேர்தல் முடிவுகளுக்கு இதுதான் காரணம் என்று சாக்குச் சொல்வதற்காக அவ்வப்போது தேர்தல் முடிவுகள் மீளவும் அசை போடப்படலாம். எவ்வாறாயினும் போதுமான அளவுக்கு தேர்தல் முடிவுகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது அமைச்சரவை மாற்றம் என்ற வெளிப்படுத்தல் ஊடாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.
இறுதியாக ஒரு அலசல். வகுப்பிலே விஷமத்தனம் புரியும் சக மாணவன் தொடர்பில், நெருங்கிப் பழகும் பள்ளித் தோழன் ஒருவன், அவனுடன் சகவாசம் வைத்துக் கொள்ளாதே, அவன் மிக மோசமானவன் என்று எச்சரித்தானாம். இவனும் அதனை நம்பி அன்று முதல் அவனிடமிருந்து விலகி இவனுடன் சகவாசம் வைத்துக் கொண்டானாம். போகப் போக இவனுக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று உணர்ந்து கொண்டதோடு, அவன் மோசமானவன் என்பதை இவன் நம்புமளவுக்கு அவன் எந்தவிதமான சான்றுகளையும் இவனுக்குக் காட்டவுமில்லையாம். ஏமாந்துபோன அவன் தருணம் பார்த்துக் காத்திருந்து, உரிய வேளை வந்ததும் இவனை ஏமாற்றி விட்டு மீண்டும் அவனுடனேயே சேர்ந்து கொண்டானாம்.
நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் தீர்ப்பு இப்படித்தான் அமைந்திருக்கிறது. ஊழல்தான் முன்னைய தலைவரை மாற்றுவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்பட்ட போதும் இந்த ஆட்சியில் அது இதுவரை நிரூபணமாக்கப்படவில்லை என்பதோடு, இந்த ஆட்சியும் அதற்கு விதிவிலக்காக நடந்து கொள்ளவுமில்லை. இது தான் மக்களின் தீர்ப்புக்கு காரணம் என்று  சிலர் சொல்கிறார்கள்.
கடந்த மூன்று வருடங்களில் எதனையும் புதிய ஆட்சி செயது காட்டவில்லை என்பதும் 100 நாள் வேலைத் திட்டமே இன்னும் பூர்த்தியாக்கப்படாமல் தொடர்கிறது என்பதும் இன்னொரு தரப்பு       சொல்லும் நியாயம்.
அரசியலமைப்பு மாற்றத்துக்கு ஆதரவு தாருங்கள் என்று தேர்தலின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மக்கள் தமது எதிரிடையான ஆணையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்கிறது இன்னொரு தரப்பு.
எது எப்படிப்போனாலும் பெரும்பான்மை வாக்காளர்கள் இந்தத் தேர்தலின் ஊடாக அரசாங்கத்தின் மீதான தமது அதிருப்தியை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்குச் செவிசாய்த்து தம்மைத் திருத்திக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழர்களுடைய தேர்தல் வெளிப்பாடும் தெளிவாக இருக்கிறது. தமது பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வினைப் பெற்றுத் தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை காலமும் காட்டிக் கொண்டு வந்த இலவம் பழத்தை நம்பி இனியும் காத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைப் பாட்டை அவர்கள் தேர்தல் முடிவுகள் ஊடாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 38 சபைகள் கிடைத்துள்ள போதிலும் வடக்கில் ஒரு சபையிலும் கிழக்கில் ஒரு சபையிலுமாக இரண்டே சபைகளில் மாத்திரமே தனித்து ஆட்சியமைக்கும் வகையிலான பலத்தைப் பெற்றிருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து நல்லாட்சி அரசாங்கத்துக்கு நிபந்தனை யற்ற ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. இதன் மூலம் புதிய அரசியலமைப்பை வரைந்து தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என தமிழ் மக்களுக்கு மனப்பால் ஊட்டியது. அதுவரை மக்களைப் பொறுமையாக இருக்கும்படியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியை தலைமையாகக் கொண்ட கூட்டமைப்பு வேண்டியது.
ஆனாலும் அரசாங்கத்துடன் இணை ந்து தேனிலவு கொண்டாடியதைத் தவிர இந்த மூன்று வருட காலப்பகுதியிலும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை என்பதற்கான அதிருப்தியை மக்கள் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மக்களது ஆணையை மதித்து தமது தவறுகளை சரிசெய்து நடந்து கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருப்பதோடு, தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை விரைவுபடுத்தும் நோக்கிலான கலந்துரையாடல்களிலும் முன்னரை விட காத்திரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது.
மலையகத்தைப் பொறுத்தவரையிலும் புதிய தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் தமது செய்தியை தேர்தலினூடாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மைத்திரி தரப்பின் தயவால் வாக்குக் கேட்டு, பின்னர் மஹிந்த தரப்புக்கு மாறுவதாகத் தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அடுத்த தரப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. நுவரெலியா மாவட்டத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை புதிதாக உருவாக்குவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி வெற்றி கண்டது. ஆனால் தேர்தலின் போது மக்கள் கூடுதலான வாக்குகளை மஹிந்த தரப்புக்கே வழங்கியிருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இணைந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி 24 வட்டாரங்களை வென்ற போதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 20 வட்டாரங்களை வென்றெடுக்கும் அளவுக்கு மக்களது வாக்களிப்பு அமைந்திருந்தது. அரசாங்கத்துடன் இணைந்து பிரதேச சபை வெல்வது என்பதும் மக்களின் வாக்கை வெல்வது என்பதும் வேறு வேறு விடயங்கள் என்பதனை மக்கள் இந்தக் கூட்டணிக்கு உணர்த்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிணைமுறி விவகாரமும் ஊழியர் சேமலாப நிதி விவகாரமும் அவர்களுடன் இணைந்து போட்டியிட்டதால் தமக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்திருந்தார்.
மொத்தமாகப் பார்க்கும் போது நாட்டு மக்கள் அனைவரும் தெளிவானதொரு செய்தியை வழங்கும் நோக்கிலேயே இந்த முறை தேர்தலைப்  பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் எந்தச் செய்தியைச் சொல்வதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்தியிருப்பார்கள்? சாய்ந்தமருது சுயேச்சைக் குழுவின் தேர்தல் நிலைப்பாடு தவிர்ந்த வேறெந்த நோக்கமும் முஸ்லிம் வாக்காளனுக்கு இருந்திருக்குமா? அல்லது “ஒக்கொம யன்னே தேவாலே, மமத் யன்னே ஏவாலே”’ என கூட்டத்தோடு ஆமீன் சொல்லிவிட்டு வந்திருப்பானா?
கடந்த தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்காததனால் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை வெல்வதற்கும் அதே முஸ்லிம் வாக்குகள் தான் காரணமாகியிருக்கின்றன. முஸ்லிம்களின் கணிசமான வாக்குகள் மொட்டுச் சின்னத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அதிலும் விஷேடமாக அளுத்கமவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்காக நாட்டின் கிழக்கு முதல் அனைத்துத் தரப்பினரும் திரண்டு மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்த போதிலும் இம்முறை பாதிக்கப்பட்ட பேருவல பிரதேசத்தில் மஹிந்த சார்பில் முஸ்லிம்கள் போட்டியிட்டு மஹிந்தவை வெல்ல வைத்திருக்கிறார் கள்.
வடக்குடன் கிழக்கு இணைக்கப் படக்கூடாது என்ற கருத்தில் உள்ள கிழக்கு மாகாண மக்கள், வடக்குடன் கிழக்கு இணைவதில் சார்பு நிலைப்பாட்டையுடைய முஸ்லிம் காங்கிரஸுக்கு பெருவாரியான வாக்குகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமது நிலங்கள் அரசாங்கத்தால் பறித்தெடுக்கப்பட்டபோது அதனை மீட்டுத்தர முடியாமல் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்த அமைச்சர் ரிஷாதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் பெருமளவு வாக்குகளை அள்ளி வழங்கி யிருக்கிறார்கள்.
முஸ்லிம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலின் ஊடாகச் சொல்ல வருவது என்ன? கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைய வேண்டும் என்று அவர்கள் சொல்கி றார்களா? முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து வாக்குக் கேட்ட ஐக்கிய தேசியக் கட்சி சிறப்பானது என்று சொல்ல வருகிறார்களா? கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிகள் சூறையாடப்பட்ட போதும், மாயக்கல்லி மலையில் சிலை வைத்து அடாவடித்தனம் புரிந்த போதும், வனஜீவராசிகளுக்கென முஸ்லிம்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்ட போதும் எதுவுமே பேசாது அமைதியாய் இருந்ததுதான் கிழக்கின் அரசியல் கட்சிகள் தமக்குச் செய்த மெத்தப் பெரிய உபகாரம் என்று சொல்ல வருகிறார்களா?
மன்னார் முசலிப் பிரதேச சபையின் மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்களின் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசு சுருட்டிக் கொண்டபோது தமது அமைச்சர் மெத்தனமாக இருந்தது தான் சரி, எங்களுடைய காணிகள் எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்ல வருகிறார்களா? முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இன்னும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் மீள்குடியேற்றம் தொடர்பாக எதுவுமே செய்யாமல் விட்டது எவ்வளவு பெரிய நன்மை என்று மக்கள் நினைத்துவிட்டார்களா ?
முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் வழங்கப்பட்டதை வைத்துப் பார்க்கின்ற போது இந்த முடிவுகளுக்குத் தான் வர வேண்டியிருக்கிறது. தேர்தலில் ஆசனங்கள் குறைந்த கையோடு, அமைச்சர் ரவூம் ஹக்கீம் இந்தத் தேர்தல் முறையால் தமது கட்சிக்குப் பாதிப்பிருக்கிறது என்று ஜனாதிபதியிடம் முறையிட்டாரே தவிர அப்போதாவது அவரைச் சமூகத்தின் பக்கம் நினைக்கத் தேவையில்லை என்ற நிலைக்கு ஆளாக்கி விட்டது முஸ்லிம் சமூகத்தின் வாக்காளர்கள்தான்.
வட்டாரப் பிரிப்பினால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படப் போகிறது என்று தெரிந்தும், கலப்புத் தேர்தல் முறையின் விகிதாசாரத்தினால் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறையப் போகிறது என்று தெரிந்தும் அவர்கள் பாராளுமன்றத்தில் தேர்தல் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது, சாரத்தைத் தான் அவிழ்த்து விட்டாலும் இந்த மானங்கெட்டவர்கள் தமக்கு வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கையில்தான்.
மொத்தத்தில் இந்தக் கருத்தைத்தான் முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தல் செய்தியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். சமூகம் எக்கேடு கெட்டாலும் தனக்குக் கிடைக்கின்ற மூவாயிரமோ, ஆயிரமோ நோட்டுக்களுக்கு வாலாட்ட வேண்டிய நன்றியுள்ள பிராணியாக அவர்கள் தம்மை இனம் காட்டியிருக்கிறார்கள்.
வெள்ளத்தில் அள்ளிச் செல்லப்படும் இந்தச் சருகுகளை குறைந்த பட்சம் நாணல்களாகவாவது மாற்ற வேண்டும். வாக்காளன் மாறாத வரை வாக்குறுதி அளித்து ஏமாற்றுபவர்கள் மாறப் போவ தில்லை.

About the author

Web Writer

Leave a Comment