எழுவாய் பயமிலை சமூகம்

தலைமைக்கு இல்லாத தலை

Written by Web Writer

தலைமைக்கு இல்லாத தலை

எழுவாய், பயமிலை

பள்ளிவாசல்களின் சுதந்திர தினம் தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய ரீதியான ஒரு தலைமை நிலையம் இருக்க வேண்டும். அப்போது தான் இது சாத்தியமாகும் என்று
தெரிவித்தார்.

இது தான் சமூகத்தின் உண்மையான ஆதங்கம் என்று நினைக்கிறேன். சமூகம் இன்று தான் எதிர்நோக்குகின்ற அன்றாட விடயங்களில் வழிகாட்டுவதற்கான தலைமை யொன்று இன்றித் தவிக்கிறது. பெரும்பாலான அதனது விவகாரங்கள் தொடர்பில் பேச்சு வரும் போதெல்லாம் யாரிடம் போய்ச் சொல்ல என்று ஏக்கத்துடன் மௌனித்துப் போகிறது. இந்த விரக்தி நிலை தான் அரசியல் விவகாரங்களிலும் மார்க்க விவகாரங்களிலும் சமூகமாகச் சிந்திக்காமல் தான்தோன்றித் தனமாகச் சிந்திப்பதற்கு மக்களைத் தூண்டியிருக்கிறது.

சமூகத்தின் உடனடி ஆளுகை மையமான பள்ளிவாசல்கள் பல்வேறு ஆக்கிரமிப்புச் சக்திகளினாலும் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளிவாசல் என்று சொல்லப்படுபவை எல்லாம் அரசியல் கட்சிகளின் கிளைக் காரியாலயங்கள் போல ஏதோ ஒரு கொள்கையின் கிளைக்
காரியாலயமாகவே தொழிற்படுகின் றன. எப்படி ஒரு கட்சியின் கிளைக் காரியாலயத்தில் இன்னொரு கட்சி செயற்பட முடியாதோ அதேபோலத் தான் கொள்கைகளின் கிளைக் காரியாலயங்களிலும் மாற்றுக் கொள்கை உடையவர் களின் நிலைமை. இதனால் ஒரே ஊரில் அவரவர்க்கென பல கட்சிக் காரியாலயங்கள் இருப்பது போலவே பள்ளிவாசல்கள் என்ற பெயரில் பல கொள்கைக் காரியாலயங்கள் ஊர்களிலே இருக்கின்றன.

இவற்றை சகலரும் சமமாக மதிக்கப்படுகின்ற, சகலருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுகின்ற இஸ்லாம் காட்டித் தந்த பள்ளி வாசல்களாக உருமாற்றும் வேலை சமூகத்திலே இன்னும் எஞ்சியிருக்கின்றது. இந்த இலக்கை நோக்கி பள்ளிவாசல்களை வழிநடத்துவதற்கான ஒரு தலைமை முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் இருக்க வேண்டும் என்பதைத் தான் சமூகம் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறது.

இந்தப் பணியை யார் செய்வது ? இலங்கை முஸ்லிம்களின் தலைமையாகக் கருதப்பட்டு வந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதனது 90 வருட கால ஆயுளில் இந்தப் பணியை இதுவரை செய்யவில்லை. ஒற்றுமைப் பிரகடனம் என்றதொரு வெற்றுப் பிரகடனத்தை வெளியிட்டு அதனுடன் தனது கடமை முடிந்து விட்டது என்று அது சுருண்டு படுத்து விட்டது. இத்துப் போன அந்தப் பிரகடனத்துக்கு உயிரூட்டி அதனை நடைமுறைப்படுத்துவற்கு
ஆவனவற்றைச் செய்ய வேண்டிய பணியை அது செய்யவில்லை.

பள்ளிவாசல் ஒன்று எப்படி இயங்க வேண்டும், எந்தெந்த நோக்கங்களை அது அடைய வேண்டும், என்னென்ன விடயங்களை அது செய்ய வேண்டும், சமூகத்தின் வளர்ச்சிக்கு அதனுடைய பங்களிப்பு என்ன என எதுவுமே எங்குமே பதியப்பட்டதாக இல்லை. குறிப்பாகச் சொல்லப்
போனால் ஒரு பள்ளிவாசலிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்ற எந்தக் கடமைப்பாடும் (Mandate) பள்ளிவாசல்களுக்கு குறித்துக் கொடுக்கப்படவில்லை. இப்படிக் குறித்துக் கொடுக்கப்படாததன் காரணமாகத் தான் ஒவ்வொரு பள்ளிவாசல்களும் குறித்த காலப்பகுதியில் பள்ளிவாசலை ஆட்சி செய்கின்ற குறித்த கொள்கையினரின் தேவைக்கேற்றாற்போல வக்பு சபையின் தேவைக்காக யாப்பினை வரைந்து, பின்னர் அதனை வைத்த இடமும் தெரியாமல் மறந்து, தம்மிஷ்டப்படி பள்ளிவாசலை நடத்திச் செல்கின்றனர்.

இந்த இடத்தில் தான் பள்ளிவாசல்களிடமிருந்து சமூகக் கடமை ஒதுக்கித் தள்ளப்படுகின்றது. இதுதான் பள்ளிவாசல்கள் பலவாகப் பெருகியிருந்தும் சமூகத்தின் நிலையில் மாற்றமெதுவும் வராமலிருப்பதற்கு, அல்லது இருக்கின்ற நிலையை விட சமூகம் வீழ்ச்சியடைந்து போவதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த நிலையில் இருந்து பள்ளிவாசல்களை தூக்கி விடுவதற்கான ஒரு மத்திய தலைமை ஒன்றைத் தான் சமூகம் எதிர்ப்பார்ப்பது மக்களுடைய கருத்துக்களில் இருந்து தெரிகிறது. 90 வருடங்களிலும் ஜம்மியதுல் உலமா இந்தப் பணியைச் செய்யவில்லை. 90 வருடங்களுக்குப் பிறது அது வேறு பாதை யில் பயணிக்கவும் தொடங்கியிருக்கிறது. பாடசாலைகளுக்கு கட்டடம் அமைத்துக் கொடுத்தல், தொண்டர் ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரியர்களுக்கு குவாட்டர்ஸ் கட்டிக் கொடுத்தல், வெள்ள நிவாரணம் வழங்குதல் என அதனுடைய பணி விஸ்தரித்துச் செல்லும் நிலையில், சமூகத்தின் மார்க்கத் தேவையான
பள்ளிவாசல்களை இஸ்லாமிய மயப்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதற்கு உலமா சபைக்கு நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் கிளைக் காரியாலங்களாகத் தொழிற்படு கின்ற நிறுவனங்களை ஒருமுகப்படுத்தப்பட்ட நோக்கில் இயங்கு கின்ற பள்ளிவாசல்களாக மாற்ற வேண்டிய தேவையை சமூகம் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறது. இதற்கென ஒரு தலைமை நிலையத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. எந்தப் பள்ளிவாசலும் தன்னுடைய பணியைச் செய்ய வில்லை என்று விரல் நீட்ட முடியாமல் இருப்பதற்குக் காரணம், அது எந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்ற குறிப்பான விடயங்கள் இல்லாமைதான். ஊர்களிலே கொள்கைகளுக் காக மலிந்திருக்கின்ற இவ்வாறான பள்ளிவாசல்களுக்கு மத்தியில் இஸ்லாத்துக்கென ஒரு பொதுவான பள்ளிவாசலை அமைத்து அவற்றை நாடு முழுவதிலுமுள்ள அதுபோன்ற பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைத்து ஒரு நெட்வேர்க்கை உருவாக்கிச் செயற்பட வேண்டியிருக்கிறது. அதற்கு பள்ளிவாசல்களுக்கான மத்திய தலம் ஒன்றை உருவாக்க வேண்டிய
தேவை இருக்கிறது.

ஊர்களிலே பள்ளிவாசல்கள் என்ற பெயரில் இருக்கின்றவைகள் தான் ஊருக்கான தலைமையாக இருக்கின்றன. அந்தத் தலைமைகளையெல்லாம் இணைக்கக் கூடிய ஒரு தலை இல்லாமல் தான் சமூகம் எனும் உடம்பு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

About the author

Web Writer

Leave a Comment