எழுவாய் பயமிலை சமூகம்

அம்பலம் | எழுவாய் பயமிலை

Written by Web Writer

அம்பலம்

அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆட வேண்டும் என்று சொல்வார்கள். நான்கு சுவர்களுக்குள்ளால் தமது குறைகளை நிவர்த்தி செய்து விட்டு, பின்னர் சபையில் அரங்கேற்றும் போது பிசகின்றி தமது செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்குத் தான் இப்படிச் சொல்வார்கள். பொது மேடைக்கு வந்த பின்னர் தான் அறைக்குள் என்ன நடந்திருக்கும் என்பதை பொதுமக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

முஸ்லிம்கள் மீதான கண்டித் தாக்குதல்கள் எமது பள்ளிவாசல்கள் இவ்வளவு காலமும் என்ன செய்து வந்திருக்கின்றன என்பதனை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஐந்து நேரத் தொழுகைக்காக திறந்து மூடப்படும் ஒரு நிறுவனமாக, தத்தமது கொள்கைகளின் கிளைக் காரியாலயங்களாக மட்டுமே பள்ளிவாசல்கள் தொழிற்பட்டு வருகின்றன என்பதனை இந்தச் சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.

முஸ்லிம் சமூகம் தனது ஆரம்ப ஆளுகை மையமாக பள்ளிவாசல்களை போற்றி வருகிறது. தனிமனிதனது விவகாரங்கள் முதல் சமூக, அரசியல் விவகாரங்கள் வரை பள்ளிவாசலின் வழிகாட்டல் இருக்க வேண்டும் என்று அது ஆதங்கப்படுகிறது. தமது அனைத்து விவகாரங்களிலும் பள்ளிவாசலைச் சார்ந்து நிற்பதற்கும், பள்ளிவாசலின் வழிகாட்டலின் கீழ் செயற்படுவதற்கும் சமூகம் தயாராகத் தான் இருக்கின்றது.

ஆனாலும் இந்தத் தலைமைத்துவத்தையோ அல்லது வழிகாட்டியின் வகிபாகத்தையோ வகிக்கும் நிலையில் சமூகத்தின் முதல்நிலை ஆளுகை மையங்களான பள்ளிவாசல்கள் இல்லை என்பது அம்பலத்தில் வந்து ஆடும் போது தான் அம்பலமாகிறது. இனவாதிகளின் கண்டித் தாக்குதல்களின் போது சமூகம் தன்னால் வகுத்துக் கொண்ட கட்டுக்கோப்பை காப்பதற்கு பள்ளிவாசல்களின் தயவை நாடியபோது சில பள்ளிவாசல்கள் நடந்து கொண்ட விதம் இவ்வளவு காலமும் அறையில் என்ன பயிற்சியை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன, வாழுமிடங்கள் தாக்கப்படுகின்றன, வாகனங்கள் எரிக்கப்படுகின்றன, வாழ்வைக் கையில் பிடித்துக் கொண்டு பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் ஓடுகிறார்கள், இனவாத வெறியர்கள் கண்முன்னால் அத்துமீறுகிறார்கள், நாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என பல கேள்விகளுடன் பள்ளிவாசல்களை நாடியவர்களுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. இந்த நிலையில் தான் பள்ளிவாசல்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களின் சமூகக் கடப்பாடு அமைந்திருந்தது.

எமது கொள்கையைப் பாதுகாப்பதற்குத் தான் பள்ளிவாசல், அதனைத் தான் எங்களால் பாதுகாக்க முடியும், சமூகத்தைப் பாதுகாக்கின்ற விடயங்களில் எல்லாம் எங்களால் தலையிட முடியாது என்று சொல்லுகின்ற தோரணையில் தான் பள்ளிவாசல்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. பொதுவாக வர்த்தக நிலையங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வர்த்தக சம்மேளனங்களை அமைத்துக் கொள்வதுண்டு. பள்ளிவாசல்கள் பல தாக்கப்பட்ட பின்னராவது பள்ளிவாசல்கள் இணைந்து ஒரு பள்ளிவாசல் சம்மேளனத்தை சந்தர்ப்பத்தைக் கருத்தில் கொண்டேனும் உருவாக்கி சமூகத்தை வழிநடத்த முடியாமல் போனது ஏன் ? கட்டுப்படுவதற்கும் வழிப்படுவதற்கும் தயாராக இருந்த இளைஞர் சமூகத்தை இயக்குகின்ற தளமாக பள்ளிவாசல்கள் அமையப் பெறாமல் தடுத்தவர்கள் யார் ?

இனியும் திறந்து மூடப்படுகின்ற கொள்கைக் காரியாலயங்களாக மட்டும் பள்ளிவாசல்கள் இயங்குவதில் எந்தப் பயனுமில்லை. சமூகம் கட்டுப்படுவதற்குத் தயாராகி ஒரு வழிகாட்டலை வேண்டி நிற்கின்ற இந்தத் தருணத்திலாவது பள்ளிவாசல்கள் தமது சமூகப் பொறுப்பைச் செய்வதற்கு முன்வராவிட்டால் அந்நியன் தாக்கி ஒழிப்பதற்கு முன்னர் பள்ளிவாசல்கள் சமூகத்தின் ஆளுகை மையங்கள் என்ற பெறுமானத்தை விட்டு சமூகமே ஒதுக்கி விடும் நிலை ஏற்பட நேரிடும். இந்த இடத்தை சமூக நிறுவனங்களோ, அல்லது அரசாங்கத்தின் பொறிமுறைகளோ நிரப்பவும் கூடும்.

அந்தப் பாவத்தைச் செய்த பெரும் பேற்றை பள்ளிவாசல்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் செய்யாமல் இருப்பதில் இருந்து சமூகம் தான் காப்பாற்ற வேண்டும்.

About the author

Web Writer

Leave a Comment