Features சிறப்புக்கட்டுரைகள்

கொழும்பு – மாலபே இலகு ரக ரயில் சேவை இவ்வருட இறுதியில்

Written by Web Writer

விலை மதிக்க முடியாதவற்றுக்கு விலையே கிடையாது. அந்த வகையில் நேரம் எங்களுக்கு அதிகம் பெருமதியானதாகும். காரணம் கடந்த சென்ற நேரத்தை மீளப் பெற முடியாமையே. அன்றாடம் பயணங்களுக்கு அதிக நேரம் செலவாகிறது. நகரிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் காணப்படுகின்றது. குறிப்பாக பத்தரமுல்லை, பொரளை, தெமடகொடை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது. அப்படியான சந்தர்ப்பங்களில் பயண நேரங்களில் அதிகமான அளவு நேரம் பாதையில் தரிப்பதிலேயே கடந்து விடுகிறது.

கொழும்பு, இலங்கையின் பிரதான வாணிப நகரமாக இருப்பதாலும் முக்கிய கேந்திர நிலையமாக காணப்படுவதாலும் கொழும்பு நகருக்குள் அன்றாடம் சுமார் 2 இலட்சம் வாகனங்கள் நுழைகின்றன.

இதனால் 1980 களில் கொழும்பு நகருக்குள் மணிக்கு 40-60 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற வாகனங்கள் இன்று வாகன நெரிசல் காரணமாக மணிக்கு 5 கிலோமீட்டர் வேகம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், செயல்திறன் மிக்க பொது போக்குவரத்து சேவை ஒன்றின் தேவை வெகுவாக உணரப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு தீர்வாக (Light Rail Transit (LRT) System) இலகு ரக ரயில் சேவை ஒன்றை ஆரம்பிக்க மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தகுந்த வழிகாட்டல்களை வழங்குதல் ஆய்வறிக்கையை தயாரித்தலை கொரியா நாட்டு நிறுவனமான செங் யங் இன்ஜினியரிங் Seo Young Engineering நிறுவனம் மேற்கொள்கிறது.

இலகு ரக ரயில் சேவை என்றால் கேபிள் கார் முறைக்கு நிகரான மின் சக்தியால் இயங்கும் பிரதான பொதுப் பாதையுடன் இணைந்ததான ரயில் போக்குவரத்து வலைப்பிண்ணலாகும்.
இந்த ரயில் போக்குவரத்து சேவைக்காக பிரதான பொதுப் பாதைக்கு மேலால் மேம்பாலம் போன்ற இலகு ரக ரயில் பாதை அமைக்கப்படும்.

சாதாரண ரயில் வண்டி போல் அல்லாமல் இந்த வகை இலகு ரக ரயில் வண்டிகள் அதிக நெருக்கமான வலைவுகளிலும் மேடான பாதைகளிலும் பயணிக்க வசதியாக காணப்படுகின்றது.

இலகு ரக ரயில் போக்குவரத்து சேவை செயல்திட்டத்தின் கீழ் 7 இலகு ரக ரயில் சேவைச் சுற்றுக்களை செயற்படுத்தவுள்ளது. அதன்படி,

  1. கொள்ளுபிடி, பம்பலப்பிட்டி, பொரளை, யூனியன் ப்லேஸ் ஊடாக மருதானை (15 Km)
  2. புரக்கோட்டை, மருதானை, மட்டக்குளி, பேளியகொடை (11.5 Km)
  3. தெமடகொடை, பொரளை, கிருளபனை, ஹெவ்லொக் டவுன் ஊடாக பம்பலப்பிட்டி (10 Km)
  4. பொரளை – பத்தரமுல்ல (10 Km)
  5. பத்தரமுல்ல, கொட்டாவ ஊடாக மாலபே (9.6 Km)
  6. மாலபே – கடுவலை (6 Km)
  7. பேலியகோடை, களனிய, கிரிபத்கொடை, மஹர ஊடாக கடவதை (10 Km)

என்ற வகையில் 7 சுற்று வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மாலபயில் இருந்து புரக்கோட்டை வரையிலான இலகு ரக ரயில் சேவையை இதன் முதல் கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் புரக்கோட்டையில் இருந்து மேல் மாகாண போக்குவரத்து மத்திய நிலையம், சென்.ஜோசப் வித்தியாலயம், தேசிய வைத்திய சாலை, பொரளை, கொட்டாவ வீதி, வெலிகடை, ராஜகிரிய, செத்சிரிபாய, பத்தரமுல்ல, பாலமிதுன, ரொபட் குணவர்தன மாவத்தை, லும்பினி விகாரை, தலாஹேன, மாலம்பே ஊடாக மாலபே IT Park வரை பயணிக்கும்.

இந்த சுற்றுப் பாதையில் 16 தரிப்பு நிலையங்கள் காணப்படுவதோடு ஒவ்வொரு தரிப்பு நிலையங்களிலும் 30 செக்கன்கள் தரித்து நிற்கும்.

இரு வழிப்பாதைகளாக நிர்மாணிக்கப்படும் இந்தப் பாதையில் கொழும்பில் இருந்து மாலபைக்கு செல்வதற்கு செலவாகும் நேரம் 27 நிமிடங்கள் ஆகும். தமது பயணத்துக்கு வசதியாக ஒரு நாளைக்கோ அல்லது ஒரு மாத காலத்துக்கோ பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம் தமது கையடக்க தொலைபேசி மூலமாகவும் பயண முன்பதிவுகளை செய்து கொள்ளவும் முடியும்.

பயணிகள் போக்குவரத்துக்கு என்ஜினுடன் நான்கு பெட்டிகள் கொண்ட ரயில் போடப்படவுள்ளது

ஒரு பெட்டியில் 165 பேருக்கு பயணம் செய்ய முடியும்.

எதிர்வரும் வருடங்களில் அந்த பெட்டிகளை 6 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதோடு அதன்படி ஒரு மணி நேரத்தில் ஒரு திசையில் 30 000 பயணிகளை ஏற்றிச் செல்லவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆகும் போது இந்த ரயில் சேவையை ஹோமாகமை, ஹொரனை, மீரிகமை ஆகிய பிரதேசங்களுக்கும் விஸ்தரிப்பது இச் செயல்திட்டத்தின் நோக்கமாகும்.

மாலபே – கொழும்பு இலகு ரயில் பாதை அமைக்க 1.4 பில்லியன் டொலர் செலவாவதோடு முழு பாதை தொகுதிகளையும் நிர்மாணிக்க 6 பில்லியன் டொலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஜைக்கா ( Japan International co- operation Agency – JICA) நிறுவனம் மூலம் இதற்கான பண உதவி வழங்கப்படுவதோடு இதற்கான வட்டி விகிதம் (0.1%) ஆகும். கடனை மீளச் செலுத்த 40 வருட காலம் பெறப்பட்டுள்ளது. அதே போல் கடன் தொகையை செலுத்த 10 வருட அணுசரனைக் காலத்தை வழங்கவும் குறித்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. புரக்கோட்டை – மாலபை இலகு ரயில் பாதையை நிர்மாணிக்க இம்முறை வரவுசெலவுத்திட்டத்திலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலீ சம்பிக ரணவக அவர்கள் 1860 இல் பிரித்தானியர் இலங்கை ரயில் சேவையை ஆரம்பித்ததன் பிறகு இந்நாட்டு போக்குவரத்து துறையில் ஏற்படும் பிரதான ஒரு புரட்சி இதுவாகும் எனத் தெரிவிக்கிறார்.

புரக்கோட்டை – மாலபே இலகு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டால் பயணிகளுக்கு கிடைக்கும் வசதிகள் அதிகம். இதன் திட்ட இயக்குனர் சமிந்த ஆரியதாச அவர்கள் இதில் பயணம் செய்வோருக்கு நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என சுட்டிக் காட்டுகிறார்.

ரயில் நிலையம் ஒன்றில் இருந்து இலகு ரக ரயில் வண்டியில் ஏறும் ஒருவருக்கு தமது பயண எல்லையை அடையும் நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
அதன்படி, இலகு ரக ரயில் வண்டியில் கொழும்பு – மாலம்ப பயணத்துக்கு 27 நிமிடங்கள் செல்லுமாயின் காலை 7 மணிக்கு மாலபயில் ஏறும் ஒருவருக்கு 7.27 ஆகும் போது புரக்கோட்டையை அடைய முடியும்.

அதேநேரம் பிரதான பொதுப் பாதையுடன் ஒப்பிடும் போது இலகு ரயில் வண்டி மிகவும் பாதுகாப்பானதாகும். வீதி விபத்துக்களும் குறைவடையும்.

மிகவும் சுகமான பயணத்திற்காக இது குளிரூட்டப்பட்டுமுள்ளது. தமது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள சொந்த வாகனத்தை பயன்படுத்தும் ஒருவருக்கு அதன் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கு குறிப்பிடத்தக்க அளவு பணம் செலவு செய்ய நேரிடும்.

இலகு ரக ரயில் சேவையை பயன்படுத்துவதன் மூலம் மிகவும் குறைந்த செலவில் விரைவாக தமது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது பயணிகளுக்கு கிடைக்கும் மற்றொரு பயனாகும்.

அதிகாலை 4.30 தொடக்கம் இரவு 11.30 வரை இயங்கும் இந்த இலகு ரக ரயில் சேவைகள் மூலம் கிடைக்கும் மற்றுமொரு பயன்தான் மக்கள் அதிகம் பயணம் செய்யும் நேரங்களில் ஒவ்வொரு 3 அல்லது 3 1/2 நிமிடங்களுக்கு ஒரு முறை இலகு ரக ரயில் பயணிப்பதாகும்.

பிரதான வீதி எப்போதும் இரைச்சல் நிறைந்த இடமாகும். அதனால் பொது போக்குவரத்து சேவையின் மூலமோ அல்லது சொந்த வாகனத்திலோ பிரதான வீதியில் பயணம் செய்யும் ஒரு பயணி மன அழுத்தத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

இப்படியான ஒரு சேவையை பயன்படுத்தும் ஒருவர் அப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாக மாட்டார். அதேவேளை மின் சக்தியால் இயங்கும் இலகு ரக ரயிலில் இருந்து புகை வெளியாகாததால் வளி மாசடைதலும் ஏற்படாது. பயணிகளின் ஆரோக்கியத்திற்கு இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

அதேபோல் park & Ride திட்டத்தின் கீழ் வீட்டில் இருந்து தமது சொந்த வாகனத்தில் ரயில் நிலையத்திற்கு வருபவர் தமது வாகனத்தை அங்கு தரித்து வைப்பதற்கு தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தொழிலுக்குச் சென்று திரும்பி வரும்வரை தமது வாகனத்தை பாதுகாப்பாக அங்கு தரித்து வைப்பதற்கான வசதி உங்களுக்கு உள்ளது.

இந்த செயல்திட்டத்தின் கீழ் இலகு ரயில் நிலைய சுற்று வட்டாரத்தையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வியாபார நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களும் அதனை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்படுவதால் ரயில் நிலையத்தில் இருந்து வீடு செல்லும் போதே தமது தேவைகளை உடன் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருப்பதாக சமிந்த ஆரியதாச அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

www.clr.lk இணையத்தின் மூலம் இந்த செயல்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களைப் உங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையின் போக்குவரத்து துறையின் புதிய புரட்சியான இலகு ரக ரயில் போக்குவரத்து வலைப்பிண்ணலுக்கான வேலைகளை இவ்வருடம் டிசம்பர் மாதமளவில் ஆரம்பிக்க மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

சிங்களத்தில் : நதீரா அமரசிங்க

தமிழில் : இஸ்பஹான் சாப்தீன்

About the author

Web Writer

Leave a Comment