ஷரீஆ

உழ்ஹிய்யா ஒரு வணக்கம்; ஆறாவது கடமை அல்ல

Written by Administrator

 – முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி) –

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் ஹஜ் காலங்களில் நிறைவேற்றும் மிக முக்கிய வணக்கமான உழ்ஹிய்யா ஷரீஆ சட்டப்பரப்பில் எந்த அந்தஸ்தை பெற்றுள்ளது? அதன் இலக்குகள் யாது? அதனை நடைமுறைப்படுத்தும் போது கவனிக்க வேண்டிய வியங்கள் என்ன? பாரம்பரிய பிக்ஹில் உள்ள சிந்தனைகளை நாம் வாழும் காலத்திற்கு பரிமாற்றம் செய்யும் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகள் எப்படி அமைய வேண்டும்?

இந்த ஆக்கம் மேற்கூறிய வினாக்களுக்கு விடை தேடும் பரந்த ஒரு வாசிப்பாகவே அமைகிறது. உழ்ஹிய்யா வணக்கத்தை நடைமுறைப்படுத்த முனையும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அறிஞர்களின் வித்தியாசமான சிந்தனைகளை வாசகர்களின் கவனத்திற்கு திரட்டித் தந்துள்ளோம். பாரம்பரிய சிந்தனை சிறையில் இருந்து வெளியேறுவதற்கான வழியை தேடும் பயணத் தொடரில் இதுவொரு ஆரம்பமாக இருக்கட்டும்.

குறித்த ஒரு விடயம் மக்கள் வாழ்வுக்கான நடைமுறை வடிவத்தை எடுக்கும் போது காலம், இடம், சூழல், இயலுமை, பின்விளைவுகள் மற்றும் அது குறித்த ஷரீஆ இலக்குகள் யாது என்பது பற்றிய அறிவும் தெளிவும் கட்டாயம் தேவை. இத்தகைய பின்புலங்களோடு பாரம்பரிய கருவூலங்களில் உள்ள தீர்ப்புக்களை அணுகுவது சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வியல் ஒழுங்கிற்கு பொருத்தமான தீர்வுகளை பெறுவதற்கு வழியமைக்கலாம்.

அந்த வகையில்,இந்த ஆய்வு உழ்ஹிய்யா பற்றிய அறிஞர்களின் வித்தியாசமான சிந்தனைகள் குறித்து ஒரு ஆழமான வாசிப்பாகும். இலங்கை சூழலில் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கான மிகப் பொருத்தமான சிந்தனை தெரிவை நோக்கி நகர்வதற்கு இந்த ஆக்கம் உதவியாக அமையும் என நம்புகின்றோம்.

உழ்ஹிய்யா கொடுப்பது ஏன்?

உழ்ஹிய்யாவின் இலக்குகள், அதனால் அடையப் பெறவேண்டிய நோக்கங்கள் யாது என்பதனை அல்-குர்ஆனும் சுன்னாவும் மிகவும் தெளிவாகவே கூறியுள்ளன. அவற்றுள் முக்கியமான சில அடைவுகளைபின்வருமாறு அடையாளப்படுத்தலாம்

இறைபயம் எனும் தக்வாவை வளர்ப்பது உழ்ஹிய்யாவின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். இறைவனின் கண்காணிப்பில் சதாவும் இருப்பதாக உணர்வதும், எந்த நிலையிலும் அல்லாஹ் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற வழிப்புணர்வோடு வாழ்வதுதான் தக்வாவாகும்.அந்த மனோநிலையை வளர்ப்பது உழ்ஹிய்யாவின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும்.

எனவே இறைச்சியையோ இரத்தத்தையோ அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை. உள்ளத்தில் உள்ள தூய்மையான உணர்வின் முதிர்ச்சிக்கே அல்லாஹ் கூலி வழங்குகின்றான். உள்ளத்தின் இந்த முதிர்ச்சி நிலையை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் பார்க்க முடியாது.
உழ்ஹிய்யா செல்வம் சார்ந்த ஒரு வணக்கமாகும். எனவே ஒரு அடியான் தான் உழைத்து சம்பாதித்த செல்வத்தைஇறை கட்டளைக்கு அடிபணிந்து அல்லாஹ்வுக்காக செலவழிப்பதன் மூலம் அவனுக்குமுற்றுமுழுதாக சரணடைவதைஅல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.

வசதியுள்ளவர்கள் செய்யும் இந்த வணக்கம் இறைவன் தந்த செல்வத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே குர்பான் கொடுப்பது இறைவன் தந்த அருள்களுக்கு நன்றி சொல்வதாகும்.

மகிழ்ச்சிக்குரிய ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் எல்லோரும் சந்தோசமாக உண்டு, களித்து கொண்டாடி மகிழ வேண்டும் என்பதே இறைவழிகாட்டலாக அமைந்துள்ளது.
எனவே அந்ததிருநாளில் தன் குடும்பம், உற்றார் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், தேவையுடையவர்கள் அனைவரினதும் அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து அதனை பூர்த்தி செய்யும் கூட்டுப் பொறுப்புஉழ்ஹிய்யா வணக்கத்தின் பிராதான நோக்கங்களில் ஒன்றாகும்.ஊருசனம் கொண்டாடி மகிழும் அந்த நாளில் எந்த உள்ளமும் வாடி நிற்கக் கூடாது என்பதே உழ்ஹிய்யாவின் பிராதன நோக்கமாக அமைந்துள்ளது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது அன்பு மகன் இஸ்மயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்பட்டு அறுத்துப் பலியிட முற்பட்டபோது அல்லாஹ் தன்னிடமிருந்து ஜிப்ரீல் (அலை) மூலம் ஒரு செம்மறியாட்டை வழங்கி அவருக்கு அருள் புரிந்தான். அது அல்லாஹ்வின் கருணையின் வெளிப்பாடாகும். இறைகட்டளைக்காக மகனை அறுக்க முற்பட்ட தியாகச் செம்மலின் அர்ப்ண சிந்தனையை மறுமை நாள் மட்டும் நினைவு கூர்வது உழ்ஹிய்யாவின் இன்னொரு பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.தன்னிடமுள்ள அனைத்தையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்யும் அர்ப்பண சிந்தனை வாழ்வின் அடிப்படையாக அமைவதையே இந்த நோக்கம் சுட்டுகிறது.

எனவே இப்ராஹீம் (அலை) அவர்களது தியாக வாழ்வை நினைவு கூர்வதும், எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வதும், உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை அகற்றுவதற்கு பயிற்சி எடுப்பதும், பெருநாள் தினங்களில் எல்லோரும் பசியாறி சந்தோசமாக வாழ்வதற்கு வழியமைப்பதும் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் அடையப் பெறும் முக்கியமானசில நோக்ககங்களாகும்.

உழ்ஹிய்யா என்றால் என்ன?

துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறைவதற்குள் வசதிபடைத்தவர்கள் தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் இறை திருப்தியை நாடி தியாக உணர்வோடு ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு ‘குர்பான்’ அல்லது உழ்ஹிய்யா எனப்படும். இது ஒரு சுன்னத்தான வணக்கமாகும்.இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

உழ்ஹிய்யா ஆறாவது கடமை அல்ல

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு ஷரீஆ வழங்கியுள்ள சட்ட அந்தஸ்து யாதுஎன்பதை அறிந்திருப்பது மிக முக்கியமாகும். அது வசதி படைத்த ஒருவருக்;கு தவிர்க்க முடியாத கட்டாயக் கடமையா? அல்லதுவிரும்பிச் செய்யும் சுன்னத்தான ஒரு அமலா? வசதியிருந்தும் அதனை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் குற்றமாகுமா? இவை குறித்து தெளிவான விளக்கம் இல்லாவிட்டால் சமூக தளத்தில் பாரதூரமான தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தேசிய நல்லிணக்கத்தையே பாதிக்கும் அளவிற்கு அதன் தாக்கம் பாய்ந்து செல்லும். எனவே ஷரீஆ சட்டப்பரப்பில் அதன் அந்தஸ்தை சரிவர புரிந்து கொள்வது தார்மீகக் கடமையாகும்.

உழ்ஹிய்யா என்பது கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய (வாஜிபான) ஒரு வணக்கம் என என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.இக்கருத்தை இமாம் அபூஹனீபா (ரஹ்), இமாம் நகஈ, இமாம் முஹம்மத், இமாம் அவ்ஸாஈ இமாம் இப்னு தைமியா ஆகியோர் கூறியுள்ளனர். அவ்வாறேஇமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் இரண்டு அபிப்பிராயங்களில் ஒரு கருத்தும் மாலிக் மத்ஹபின் ஒரு சாராரின் கருத்தும் உழ்ஹிய்யா வாஜிப் என்ற சிந்தனைக்கு வலுச் சேர்க்கின்றது. ‘நீர் அவனுக்காகவே தொழுது பலியிடுவீராக!’ என்றஅல்-குர்ஆன் வசனம்இதற்கு ஆதாரமாக அமைகிறது.

மேலும்;; வாஜிப் என்ற சிந்தனையை கொண்டிருப்பவர்கள் பின்வரும் இரண்டு ஹதீஸ்களையும் தமக்கு ஆதாரமாக கூறுவர்.

ஜுன்துப் இப்னு சுஃப்யான் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;: ‘துல்ஹஜ் 10வது நாளில் நான் நபி (ஸல்) அவர்களுடன்; இருந்தேன். அப்போது அவர்கள்,’பெருநாள் தொழுவதற்கு முன்பே குர்பானிக்கான பிராணியை அறுத்துவிட்டவர் அதற்கு பதிலாக வேறொன்றை தொழுகைக்குப் பின் அறுக்கட்டும் என்றும் அறுக்காமல் இருப்பவர் தொழுகை முடிந்தவுடன் அறுக்கட்டும்;’ என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் ‘யார் வசதியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ அவர் நமது தொழுகை நடைபெறும் இடத்தை நெருங்கவும் வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார்கள். (அஹம்த், இப்னுமாஜா)

இந்த சிந்தனைக்கு மாற்றமாக இமாம் ஷாபிஈ, இமாம் ஸவ்ரி, இமாம் ஸயீத் இப்னு முஸைய்யப்,இமாம் மாலிக் மற்றும் ஹம்பலி மத்ஹபின் பெரும்பான்மையான அறிஞர்கள் உழ்ஹிய்யா என்பது முக்கியமான சுன்னா என்ற கருத்தை கூறியுள்ளனர்.பொதுவாக நபித்தோழர்களின் சிந்தனையும் உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னா என்ற தரத்தில் உள்ள வணக்கமாகும் என்பதே.எனவே பொரும்பான்மையான அறிஞர்களின் அபிப்பிராயம் உழ்ஹிய்யா கட்டாயக் கடமை அல்ல.

‘துல் ஹஜ் முதல் பத்தில் நுழைந்துள்ள ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால்…) என ஆரம்பிக்கும் ஹதீஸ்ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.இந்த ஹதீஸ் தெளிவாகவே விருப்பமுள்ள ஒருவர் செய்யக் கூடிய ஒரு வணக்கமாகவே உழ்ஹிய்யாவை நபிகளார் அறிமுகம் செய்துள்ளார்கள். அது கட்டாயக் கடமை என்ற கருத்து இருந்திருப்பின் மக்கள் விருப்பத் தெரிவுக்குரிய ஒரு விடயமாக அதனை நபி (ஸல்) கூறியிருக்கமாட்டார்கள்.

ஸஹாபாக்கள் வாழ்வில் உழ்ஹிய்யா

உழ்ஹிய்யா என்பது சமூக நலன் சார்ந்த மற்றும் இறையச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வணக்கவழிபாடாகும். இருந்தும் ஸஹாபாக்கள் அதனை கட்டாயக் கடமையாக புரிந்து கௌ;ளவில்லை. மாறாக சுன்னத்தான ஒரு அமலாகவே பார்த்தனர்.மக்கள் அதனை ஆறாவது கடமையாக நோக்கக் கூடாது என்பதில் அபூபக்கர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும் மிகக் கவனமாக செயற்பட்டார்கள். எனவே அவர்கள் இருவரும் துல்ஹஜ் மாதத்தின் விசேட சிறப்புக்குரிய வணக்கமான அறுத்துப் பலியிடும் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றவில்லை என்பதே வரலாறாகும்.(இப்னு கதீர் 4ஃ646, ஸுப்லுஸ்ஸலாம் 4ஃ91)

நபித்தோழர்களில் பலர் உழ்ஹிய்யாகொடுப்பதை பொது மக்கள் கடமையான வணக்கம் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காக அதனை நிறைவேற்றாமல் வாழ்ந்து வந்துள்ளார்கள் என இமாம் ஷாதிபி பதிவுசெய்துள்ளார்கள்.(இஃதிஸாம் 8ஃ91)

இக்ரிமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இரண்டு திர்ஹம்களை என்னிடம் தந்து இறைச்சி வாங்கி வருமாறு பணித்தார்கள். வரும் வழியில் இது என்ன? என யாரேனும் வினவினால்; இது இப்னு அப்பாஸின் உழ்ஹிய்யா என சொல்லுமாறு என்னிடம் கூறினார்கள். (பிதாயாதுல் முஜ்தஹித் 1ஃ464) இப்னு அப்பாஸின் பார்வையில் உழ்ஹிய்யா ஒரு கடமை அல்ல. எனவே இறைச்சியை வாங்கி தர்மம் செய்து விட்டு இதுதான் எனது உழ்ஹிய்யா எனக் கூறியுள்ளார்கள்.

பிலால் (ரழி) அவர்கள் ஒரு சேவலை அறுத்து உழ்ஹிய்யா கொடுத்தார்கள் என பல அறிவிப்புகள் காணப்படுகின்றன. இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் தனக்கு வசதிகள் இருந்தும் மக்கள் உழ்ஹிய்யா கொடுப்பதை கடமை என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக குர்பான் கொடுப்பதை வேண்டுமென்றே தவிர்ந்து கொண்டார்கள்.(இஃதிஸாம் 8ஃ91)

சட்ட வசனங்கள் தரும் அர்த்தங்களை நபித்தோழர்களின் புரிதல்களுடன் விளங்குவது சட்டங்களின் தராதரங்களை விளங்கிக் கொள்வதற்கு உதவியாக அமைகிறது.இங்கு ஸஹாபாக்கள் உழ்ஹிய்யா ஒரு கடமையல்ல என்பதை வித்தியாசமான முறையில் புரிய வைத்துள்ளார்கள். முதலிரண்டு கலீபாக்களும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றாமல் தவிர்ந்து கொண்டதனூடாகஅது கடமையல்ல என்பதை விளக்கியுள்ளார்கள்.

குர்பானுக்கு அறுத்துப் பலியிடுவது ஏற்றமானது என்பதை இப்னு அப்பாஸ் ரழி) அவர்கள் அறியாதவரல்ல. இருந்தும் அவர் அறுத்துப்பலியிடாமல் அறுக்கப்பட்ட மிருகத்தின் ஒரு பகுதியை வாங்கி இது எனது உழ்ஹிய்யா என கூறுவதன் மூலம் உழ்ஹிய்யாவை ஆறாவது கடமையாக கருதிவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்;துள்ளார்கள்.

பிலால் ரழி அவர்கள்ஒரு சேவலை உழ்ஹிய்யா கொடுத்து விட்டு அது தான் எனது உழ்ஹிய்யா என்று கூறிய அறிவிப்பும் உழ்ஹிய்யா கட்டாயக் கடமையல்ல என்பதையே விளக்க முனைந்துள்ளார்கள்.

மேற்குறித்த உழ்ஹிய்யா பற்றிய சட்ட அந்தஸ்தை புரிந்து கொள்ளாததன் விளைவாகவே இன்று நம்மில் பலர் கடன்பட்டாவது குர்பான் கொடுப்பதற்குபோட்டி போடுகின்றனர். ஊருக்கு ஊர் கூட்டுக் குர்பான் என்ற திட்டமும் இந்த புரிதலில் ஏற்பட்ட கோளாராகவே பார்க்க முடியும்.

பலர் தவனை அடிப்படையில் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை கௌ;வனவு செய்து வாழும் போது அந்த தவனைகளுக்கான கட்டணங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் உழ்ஹிய்யாவை ஆறாவது கடமை போல் செய்யத் துணிகின்றனர். அப்படி உழ்ஹிய்யா கொடுப்பது கூடாது என்பதே ஷரீஆவின் பார்வையாகும்.

கூட்டுக் குர்பான் திட்டம்

ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லாது ஒட்டகத்தையோ உழ்ஹிய்யா கொடுக்கலாம்.அதிலும் கருத்து வேறுபாடு உண்டு. மாலிக் இமாம் அவர்கள் கூட்டு குர்பான் கொடுப்பது ஆகாது என்றே தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். பெரும்பான்மை அறிஞர்கள் அந்த சிந்தனைக்கு உடன்படவில்லை.

நபி ஸல் அவாகள் தனது மனைவி மக்களுக்காக என்று தெளிவான வார்த்தைகளை சொல்லி ஒரு ஆட்டை மாத்திரமே அறுத்து குர்பான் கொடுத்தார்கள். குர்பான் கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத அனைத்து உம்மத்தினருக்காகவும் நபி (ஸல் அவர்கள் ஒரேயொரு ஆட்டை மாத்திரம் தான் குர்பான் கொடுத்தார்கள். (இர்வாஉல் கலீல்-அல்பானி4ஃ349) தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளுக்காக ஒரு ஆட்டை மாத்திரம் உழ்ஹிய்யா கொடுப்பதுதான் ஸஹாபாக்களினதும் பொதுவான வழமையாக காணப்பட்டது.

எனவே, உழ்ஹிய்யா என்ற வணக்கம்,கூட்டுக் குர்பான் என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து பணம் சேகரித்து செய்யப்படும் உழ்ஹிய்யா திட்டமாக மாற்றப்படுவது சுன்னாவிற்கு புறம்பானதே.இதில் மாறுபாட்ட கருத்துக் கொள்வதற்கு இடம்பாடுண்டு.

ஆனால் ஒரு வணக்கத்தின் சட்ட அந்தஸ்தை மிகைப்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்றல்ல. ஸஹாபாக்கள் தனித்தனியாக உழ்ஹிய்யா கொடுப்பதையே மக்கள் அதனை வாஜிப் என்ற சட்ட அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடாது என்பதற்காக தவிர்ந்து கொண்டார்கள் என்பதை ஏலவே புரிந்து கொண்டோம்.

பிராணியின் வயது

உழ்ஹிய்யாவிற்காக தேர்ந்தெடுக்கும் மிருகம் ஒட்டகமாயின் ஐந்து வயது நிறம்பியதாகவும், மாடு அல்லது வெள்ளாடு எனின் இரண்டு வயது நிரம்பியதாகவும், செம்மறிஆடாக இருந்தால் ஒரு வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் எனவும் சில அறிவிப்புக்களின் படி செம்மறியாடாக இருந்தால் ஆறுமாதம் பூர்த்தியானதாக இருந்தாலும் அறுத்துப் பலியிடுவதற்கு ஆகுமானதே எனவும் ஸஹீஹான ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.

இந்த வயதெல்லையை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்திருப்பதன் நோக்கம் குர்பானிக்காக அறுக்கப்படும் மிருகம் தரமானதாக அதிகமான இறைச்சியைகொண்டதாக இருக்க வேண்டும் என்பதே. எனவே மிகச்சரியாக அதன் வயதை கணிப்பதில் நுணுக்கமான கவனம் செலுத்துவதை விட தேவைக்கு ஏற்ற வகையில் இறைச்சியை தரும் வளர்ச்சியை பெற்றுள்ளதா என்பதையே நோக்க வேண்டும். நவீன காலத்தில் குறைந்த வயதில் கூடிய இறைச்சியை தரும் மிருகங்களை வளர்க்கும் தொழில்நுட்பம் இருப்பதன் காரணமாக இப்படி சிந்திப்பது தவறல்ல.

உழ்ஹிய்யாவிற்கான பிராணிகள்
குர்பானுக்குரியகால்நடைகள் என்பது ஆடு மாடு ஒட்டகம் என்பதில் அறிஞர்கள் மத்தியில் உடன்பாடான கருத்து நிலவுகிறது.எனினும் ஆரம்ப காலம் தொட்டு சில அறிஞர்கள் மான் மற்றும் மரை அறுத்துப் பலியிடுவது ஆகுமான பிராணிகள் என்ற கருத்தை குறிப்பிட்டுள்ளனர். (பிதாயதுல் முஜ்தஹித் 2ஃ193) இது தவிர ஏனைய பிராணிகளை உழ்ஹிய்;யா என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்த முடியாது என்பதே பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும்.

எனினும் அறுக்கப்படும் பிராணிகள் குறித்து ஷரீஆ சட்டப்பரப்பில் வித்தியாசமான சிந்தனைகள் நிலவுவதை அவதானிக்க முடிகிறது.

உழ்ஹிய்யாகொடுப்பதற்கு வசதியற்றவர்கள் குர்பான் கொடுப்பதாக எண்ணிக்கொண்டு கோழி,சேவலை அறுப்பதுவிரும்பத்தக்கதல்லஎன்பதே ஹனபி மத்ஹபின் கருத்தாகும். (பதாவா ஆலம்கீர-சுருக்க நூல் ப:332) இங்கு ஹனபி மத்ஹபின் சிந்தனை வித்தியாகசமாகவே உள்ளது. கூடாது என்று அவர்கள் கூறவில்லை.

இமாம் இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள்உழ்ஹிய்யா பிராணிகள் விடயத்தில் மிகவும் விரிந்த சிந்தனை கொண்டவராக பார்க்கப்படுகிறார். எந்த மிருகங்களின் இறைச்சியை சாப்பிடுவதுஷரீஆவில் ஆகுமாக்கப்பட்டிருக்கின்றதோ அந்தப் பிராணிகள் யாவும் உழ்ஹிய்யா கொடுக்கப்பதற்கு ஆகுமானதே என்பது இப்னு ஹஸமின் கருத்தாகும்.

அத்துடன் கோழி, சேவல் போன்ற ஏனைய சாப்பிடுவதற்கு ஹலாலான பறவை இனங்கள் யாவும் உழ்ஹிய்யா பிராணியாக அறுத்துப் பலியிடுவதற்கு ஆகுமானது என்றும் அவற்றில் சுவையான, இறைச்சியுள்ள, பெறுமதியானவற்றை அறுத்துப் பலியிடுவதேமிகவும் சிறந்தது என்றும்; இமாம் இப்னு ஹஸம் கூறுகிறார். (முஹல்லா3ஃ13)

இமாம் இன்னு ஹஸம் அவர்கள் தமது சிந்தனைக்கு ஏற்கனவே கூறப்பட்;ட பிலால் (ரழி) அவர்களின் அறிவிப்பையும் இப்னு அப்பாஸ் (ரழி) நடைமுறையையும் ஆதாரமாக எடுத்துள்ளார்.

இந்த சிந்தனை உள்வாங்கிய சில இஸ்லாமிய அறிஞர்கள் விரும்பிய பிராணியை உழ்ஹிய்யாவாக அறுக்கலாம்என தீர்ப்பு வழங்கியதால் அது ஒரு புரளியாக தோற்றம் பெற்றது. எகிப்திலும் துருக்கியிலும் அறிஞர்கள் மத்தியில் இது குறித்து பாரிய சர்ச்சையொன்று நிலவியதை உடகங்கள் வாயிலாக நாம் அறிய முடிந்தது.இந்த சிந்தனைப் போக்கு பிழையானது என்பதை எகிப்து நாட்டின் உத்தியோகபூர்வ பத்வாசபை தீர்ப்பு வெளியிட்டது. துருக்கியில் இந்த தீர்ப்பை வழங்கிய இஸ்லாமிய அறிஞரின் நிலைப்பாட்டடை கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்களும் மிக அழகான முறையில் மறுத்துள்ளார்கள்.

உண்மையில் அல்குர்ஆன் சூரா ஹஜ் 28ம் வசனத்தில்:’அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கால்நடைகளில் இருந்து அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிடுகிறான்’ என்று கூறுவதன் மூலம் ஆடு, மாடு, ஒட்டகம் என்பதே அறுத்துப்பலியிடுவதற்கான பிராணிகள் என்பதை தெளிவாக சுட்டுகின்றன. விதிவிலக்காக மான், மரை இரண்டையும் உழ்ஹிய்யாவுக்குரிய பிராணியாக அறுக்க முடியும் என ஆரம்பகால அறிஞர்கள் கூறியுள்ளனர்.

எனவே இப்னு அப்பாஸ் ரழி அவர்களும் பிலால் ரழி அவர்களும் கட்டாயக் கடமையான ஒரு வணக்கமல்ல என்பதை காட்டுவதற்காக நடைமுறைப்படுத்திய உதாரணங்களை வைத்து அனைத்துப் பிராணிகளையும் உழ்ஹிய்யா பிராணிகளாக எடுப்பது உசிதமானதல்ல. இஸ்லாமிய சட்டப்பாரம்பரியத்தில் இத்தகைய அபிப்பிராயங்களை அசாதாரண சிந்தனைகளாகவே நோக்குவதுண்டு.

உழ்ஹிய்யாவிற்கு பதிலாக அதன் பெறுமதியை கொடுத்தல்.

உழ்ஹியாவை பொருத்த வரை அதனது பெறுமதியை கொடுப்பதைப் பார்க்கிலும் அதனை அறுத்துப் பலியிடுவதே மிகவும் சிறந்தது என அநேகமான அறிஞர்கள் கருதுகின்றனர்.

இங்கு யாரும் பெறுமதியை கொடுப்பது கூடாது என்று கூறவில்லை. அறுத்துப் பலியிடுவது சிறப்பானது என்ற கருத்தைதான் முன்வைத்துள்ளார்கள்.
ஏற்கனவே குறிப்பட்டது போல இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் அறுப்பு கடமையில்லை என்ற கருத்தை கொண்டதனால்தான் காசுக்கு இறைச்சியை வாங்கி உழ்ஹிய்யா கொடுத்தார்கள். எனவே பணப் பெறுமதியை கொடுப்பதும் ஆகும் என்ற கருத்தை அதிலிருந்து எடுக்க முடியும்.

பெறுமதியை கொடுக்காது உழ்ஹியாவை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியவர்கள் அனைவரும் அறுத்துப் பலியிடும் சுன்னா இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நியாயத்தைத்தான் முன்வைத்துள்ளார்கள்.

இது குறித்த கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்களின் அபிப்பிராயம் சற்று வித்தியாசமாக உள்ளது. உயிருடன் இருந்து இக்கடமையை நிறைவேற்றுபவர்கள் அறுப்பது சிறந்தது என்றும்ஆனால் மரணித்த ஒருவருக்கு பகரமாக உழ்ஹிய்யா கொடுக்கும் போது பெறுமதியை கொடுப்பதே சிறந்தது என்றும்அவர் கூறுகிறார்.

நாம் சிறுபான்மையாக வாழும் போது எமது நாட்டின் சட்ட திட்டங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளதாலும் ஜீவகாருண்யம் பற்றி கூடுதலாக பேசுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பதாலும் சில நிபந்தனைகளுடன் பெறுமதியை கொடுப்பதற்கான முடிவை தெரிவு செய்வது மிகப் பொருத்தமானதாக அமையலாம்

நாம் வாழும் காலத்தில் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற அதன் பெறுமதியை தர்மமாகக் கொடுப்பது உழ்ஹிய்யாவின் இலக்குகளை அடைவதற்கு போதுமாயின் அதனை அனுமதிக்கலாம். அதனால் அறுத்துப் பலியிடும் சுன்னா இல்லாமல் போகாது. காரணம் இது ஒரு காலத்தின் தேவை மட்டுமே. நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களும் இதனை பின்பற்ற வேண்டிய அவசியமும் கிடையாது. மிகுந்த கெடுபிடியுள்ள பிரதேசங்சளில் மாத்திரம் பெறுமதியை கொடுப்பதற்கான நடைமுறைய அமுல்படுத்தலாம். இது குறித்து தலைமைத்துவமே மிகுந்த கரிசனை எடுக்க வேண்டும்.

உழ்ஹிய்யாவின் பெறுமதியை கொண்டு சிரியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவுவது சிறந்த வணக்கமாகும் என அங்குள்ள அறிஞர்கள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். அசாதாரண ஒரு சூழ்நிலையில் உழ்ஹிய்யா தொடர்பாக எப்படி சிந்திப்பது என்பதற்கு சிரியா நாட்டின் உலமா சபை ஒரு முன்னுதாரணமாகும். அவர்கள் உழ்ஹிய்யாவின் பெறுமதியை சிரியா மக்களின் துயர் துடைப்பதற்காக ஸதகா செய்வது உழ்ஹியாகடமையை நிறைவேற்றுவதை விட பெறுமதியானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு ஹஜ் காலத்தில் அறுத்துப் பலியிடும் மாமிசத்தை வெளியே கொண்டு போக முடியாது என இறுக்கமான சட்டம் காணப்பட்டது.அதன் விளைவாக புனித மக்கா நகரமே துர்நாற்றம் எடுத்தது. சுற்றுச் சூழல் மாசடைந்து ஆரோக்கியம் பாதிப்படைய ஆரம்பித்த போதுதான் பொருத்தமான தீர்ப்பு கிடைத்தது. இன்று ஹஜ் காலத்தின் உழ்ஹிய்யா இறைச்சி உலக மக்கள் யாவரும் பயணடையும் பாரிய திட்டமாக மாறியுள்ளது.

கால மாற்றங்கள் நிர்ப்பந்தங்களை தரும் போது மனிதன் இன்னொரு தீர்வை நோக்கி தள்ளப்படுகின்றான். சட்டத்தின் வரம்புகளை மீறாமல் பாரம்பரிய சிந்தனை சிறையிலிருந்து வெளியேறுவது காலத்தின் தேவையாகும். உழ்ஹிய்யாவின் பிரதான இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் தேவையான பிராந்தியங்களில் பெறுமதியை கொடுப்பது சிறந்ததாயின் அந்த தீர்மானத்தை தெரிவு செய்வது நன்மைகளையே கொண்டுவரும்.நிபந்தனைகளுடன் அந்த தெரிவு அமுலுக்கு வந்தால் நிச்சயமாகஇஸ்லாமிய சிந்தனையை முன்வைப்பதற்கு புதிய வாயில்கள் திறக்கப்படலாம்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் முகாம்களில் பட்டினியால் சாகும் போதும், சிரியா மக்கள் இருப்பிடமில்லாமல் ஐரோப்பிய நகரங்களில் நாதியற்றவர்களாக திரியும்போதும், பல நாடுகளில் முஸ்லிம்கள் வறுமைiயால் வாடும் போதும் உழ்ஹிய்யாவிற்கு முதலுரிமை வழங்காமல் அந்தப் பணத்தை வறுமைக்கு தருமாறு பல சட்ட அறிஞர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். இது காலத்தின் தேவையை உணர்ந்து நபிலான ஒரு வணக்கத்தை நிறைவேற்ற முன்பு கடமையை செய்ய வேண்டும் என்ற நபிகளாரின் வழிகாட்டல்களை மிகக் கவனமாக உள்வாங்கியதால் பிறந்த தீர்மானங்களாகும்.இன்று இலங்கையிலும் இப்படி சிந்திக்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது.

முஸ்லிம் அல்லாதாருக்கு உழ்ஹிய்யா பங்கை வழங்குதல்

குர்பான் இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுப்பது சம்பந்தமாக அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கு உழ்ஹியாவின் இறைச்சியையோ அதன் தோலையோ கொடுப்பது விரும்பத்தக்கது அல்ல என்ற கருத்தை கூறியுள்ளார்கள். இமாம் லைஸ் அவர்கள்அதே சிந்தனையை கொண்டிருந்தாலும் சமைத்த உணவாக கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஷாபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் நவவி அவர்கள் ‘எமது மத்ஹபில் உழ்ஹியா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பங்கு வைக்கலாம்’ என்றே பதிவு செய்துள்ளார். அவ்வாறே இமாம் இப்னு குதாமா அவர்கள் காபிருக்கு உழ்ஹியாவிலிருந்து பங்கு கொடுக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டுள்ளார். (முஃனி-9ஃ450)

இது குறித்து ஒரு முக்கியமான விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது போராட்டங்கள் நிகழாத சமாதான சூழலில் வாழும் வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை ஒரு முஸ்லிம் திருமணம் முடிப்பதற்கான அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. அப்படியான திருமணங்கள் நடைபெற்றால் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பும் உறவும் இருக்கவே செய்யும். எனவே அவர்களுக்குஉழ்ஹிய்யா கொடுப்பது ஒரு சகஜமான விடயமாகவே பார்க்கப்படும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நோன்பு காலங்களில் நிறைவேற்றும் கடமையான ஸகாதுல் பித்ர் மற்றும் உழ்ஹிய்யா இறைச்சியை கொடுக்கலாம் என்ற சிந்தனையை முன்வைத்வர்களில் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள், அப்துல்லா இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி), உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்), இமாம் ஸுஹ்ரி (ரஹ்), இமாம் இன்னு ஸீரீன் (ரஹ்), இமாம் ஹஸனுல்பஸரி, இமாம் அபூஹனீபா உட்டபட ஹனபி மத்ஹப் அறிஞர்கள் என பலரை அடையாளம் காணமுடிகிறது. இவர்களுடைய அபிப்பிராயப்படி உழ்ஹிய்யா இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்குவது ஆகுமானதே.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (றழி) அவர்கள் தனது வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து தனது அயல் வீட்டாரான யூதனுக்கு கொடுத்தீர்களா என்று பல தடைவ கேட்டார்கள். ஏன் இப்படி அலட்டிக் கொள்கின்றீர்கள் என்று அவரிடம் அவருடைய பணியாள் வினவும் அளவிற்கு அயல்வீட்டு யூதனுக்கு பங்கு கொடுப்பதில் கவனம் எடுத்தார்கள் என்ற செய்தியைஇமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளர்கள். திர்மிதியில் பதிவாகியுள்ள இந்த அறிவிப்புஸஹீஹானது என ஷெய்க் அல்பானி (ரஹ்)குறிப்பிட்டுள்ளார்.

இந்த வகையில் உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம் அல்லாதாருக்கு பங்கு கொடுக்கலாம் என்ற சிந்தனையை இலங்கையிலும் தெரிவு செய்வதற்கான இடம்பாடு ஷரீஆ சட்டப்பரப்பில் தாராளமாகவே உள்ளது. சகவாழ்வுக்கான மிகுந்த தேவையுடன் வாழும் நாம் முஸ்லிம் அல்லாத அயலவர்கள், கலப்பு திருமணம் வழியாக வந்த உறவினர்கள்,இன, மத வேறுபாடின்றி தேவையுடையவர்களாக இருப்பவர்கள் என அனைவருக்கும் உழ்ஹிய்யா இறைச்சியை தாராளமாக கொடுக்கலாம் என்பதை ஷரீஆ தடுக்கவில்லை.

உழ்ஹிய்யா ஒரு வணக்கம். அதன் இறைச்சியை பங்கீடு செய்தல் இன்னொரு செயற்பாடு. எனவே பங்கு வைத்தல் என்பது தேவைகளுக்கு ஏற்பவே நோக்கப்பட வேண்டும். அதற்கு தேவையில்லாத நிபந்தனைகளை நாமே விதியாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

நவீன காலத்தில் இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் மற்றும் அல்-அஸ்ஹர் பத்வா சபை உறுப்பினர்களும் இது குறித்து பேசும் போது: எம்முடன் போராடாத காபிர்களுக்கும் கைதிகளுக்கும் மற்றும் எம்மிடம் அபயம் பெற்றோருக்கும் உழ்ஹிய்யாவை கொடுக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதுவும் அவர்கள் ஏழைகளாக, நெருங்கிய உறவினரகளாக, அயலவராக, பணியாட்களாக இருப்பின் அவர்களை முற்படுத்துவது சிறப்பானது என்பதுடன் அவர்களது உள்ளங்களை பிணைக்கும் நோக்குடனும் நல்லுறவை பேணுவதற்காகவும் இதுவே மேலானதாகும் என்றும் கூறியுள்ளனர்.

தலைமுடி மற்றும் நகம் களையாதிருத்தல் தொடர்பாக:

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு நாடிய ஒருவர் துல் ஹஜ் மாதம் முதல் தினத்திலிருந்து உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் வரை முடிகளை நீக்காமல், நகங்களை களையாமல் இருப்பது சுன்னத் ஆகும். ‘உங்களில் உழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ள ஒருவர் துல்ஹஜ் மாதத்திற்குரிய பிறையை கண்டுவிட்டால் அவர் தனது முடி, நகங்களை களைவதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்ளட்டும் என நபி ஸல் அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்)
இந்த ஹதீஸ் சொல்லும் கருத்தைஎவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் அறிஞர்கள் மத்தியில் மூன்று வகையான சிந்தனைகளை அவதானிக்கலாம்.

1) குர்பான் கொடுக்க நாடியவர் அதை கொடுக்கும் வரை முடிகளையும், நகங்களையும் களைவது ஹராம். இந்த கருத்தை இமாம் அஹ்மத், ஸஈத் பின் முஸய்யப், இஸ்ஹாக் போன்ற அறஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2) முடி மற்றும் நகம் கலைவது ஹராம் அல்ல. ஆனால் அது மக்ரூஹ். அதாவது விரும்பத்தகாத ஒரு செயல் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இமாம் அஹ்மத் அவர்கள் ஹராம் என்ற கருத்தை கூறியிருந்தாலும் அவருடைய இன்னொரு கருத்து மக்ரூஹ் என்பதாகும். இவ்வாறே இமாம் மாலிக் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
3) ஹராமும் அல்ல மக்ரூஹும் அல்ல. குர்பான் கொடுக்க நாடியவர் சாதாரண ஒருவரைப் போல் உடலுறவு கொள்ளலாம், முடி வெட்டலாம், நகங்களை களையலாம். இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும்.

இமாம்களுக்கு மத்தியில் இத்தகைய வித்தியாசமான சிந்தனைகள் தோன்றுவதற்கான காரணம் என்ன?

உழ்ஹிய்யா கொடுப்பதற்கு நிய்யத்து வைத்த ஒருவர் பேண வேண்டிய கருமங்களை அறிவித்த உம்மு ஸலமா (ரழி) அவர்களின் ஹதீஸுக்கு மாற்றமான கருத்தினை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறும் ஹதீஸ் சொல்லுகிறது.

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நபியவர்கள் குர்பான் கொடுப்பதற்காக தெரிவு செய்த பிராணிக்காக அதன் கழுத்தில் அடையளமாக போடும் கயிற்றை நான் தான் எனது கைகளால் தயார் செய்து கொடுப்பேன். அதனை ரஸுல் (ஸல்) அவர்கள் குர்பானுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்தக் காலப்பகுதியில் இஹ்ராம் தரித்த ஒருவர் பேண வேண்டிய எந்த விடயத்தையும் இறைதூதர் (ஸல்) பேணுவதில்லை.’ (புகாரி முஸ்லிம்)

இந்த ஹதீஸின் படி குர்பான் கொடுப்பவர் முடி, நகம் களையலாம். உடலுறவு கொள்ளலாம். ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ இஹ்ராம் கட்டியவர் எதனை செய்யக்க கூடாதோ அந்த விடயங்களை உழ்ஹிய்யா கொடுப்பவரோ அவரது குடும்பமோ பின்பற்ற தேவையில்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.

உம்மு ஸலமா (ரழி) அறிவிக்கும் ஹதீஸை விட ஆயிஷா ரழி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை மிகவும் பலமானது என்றும் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறியுள்ள ஹதீஸ் நபிகளாரின் கூற்றல்ல, மாற்றமாக அது அவருடைய மனைவியான உம்மு ஸலமாவின் செய்தி எனவும் ஹதீஸ் கலை வல்லுனர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர்.

எனவே தான் இமாம்கள் இது குறித்து வித்தியாசமான பத்வாக்களை கொடுத்துள்ளனர்.நிலைமை இப்படி இருக்கும் போது குர்பான் கொடுக்க நிய்யத் வைத்துள்ள ஒருவர் முடிகளை கலைவது பற்றியோ நகங்களை அகற்றுவது பற்றியோ அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
குர்பான் கொடுக்க நாடிய ஒருவர் விரும்பினால் முடி, நகம் களையாமல் பேணுதாலாக இருக்கலாம். அதற்கு மாற்றமாகவும் இருக்கலாம். அது உழ்ஹிய்யா என்ற வணக்கத்தால் கிடைக்கும் நன்மைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

உழ்ஹிய்யா எனும் சுன்னத்தான அமல் செய்ய நாடிய ஒருவர் ஹராமான பாவத்துக்கு ஆளாகும் படி சுன்னா வழிவகுக்காது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உழ்ஹிய்யாவுக்கு மிகவும் சிறந்த பிராணி எது?
உழ்ஹிய்யாவுக்கான கால்நடைகளில் எது மிகவும் சிறந்தது என்ற விடயத்திலும் இமாம்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

ஷாபி, ஹன்பலி, ழாஹிரி மத்ஹப்களின் கருத்துப் படி உழ்ஹிய்யா கொடுப்பதற்கு மிகவும் சிறந்தபிராணி ஒட்டகமாகும். அதற்கு அடுத்ததாக சிறந்த பிராணி மாடு என்றும் அதனையடுத்து சிறந்தது ஆடு என்றும் அபிப்பிராயப்பட்டுள்ளனர். இதே கருத்தை மாலிக் மத்ஹபிலும் சிலர் கூறியுள்ளனர்.

மாலிக் மத்ஹபின் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து ஆட்டை குர்பான் கொடுப்பது தான் மிகவும் சிறந்ததாகும். மாலிக் மத்ஹபைச் சேர்ந்த இமாம் அல்-கரசி அவர்கள் பொதுவாக உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளில் ஆடு மாத்திரமே முதன்மைபடுத்த முடியுமான சிறப்புக்குரிய பிராணியாகும் என கருத்துத் தெரிவித்துள்ளார். (ஷரஹுல் கரசி 3ஃ38)

நல்ல சதை இறைச்சியை அதிகமாக கொண்ட பிராணியே அறுத்துப் பலியிடுவதற்கு மிகவும் சிறந்ததாகும் என்றும் அவ்வாறே ஏழுபேர் சேர்ந்து ஒரு மாட்டை கொடுப்பதை விட ஆட்டை உழ்ஹிய்யா கொடுப்பதே மிகவும் மேலானது என்றும் இமாம் அபூஹனீபா அபிப்பிராயப்பட்டுள்ளார்.

நபி (ஸல்) அவர்கள் குர்பான் கொடுப்பதற்காக ஆடுகளையே தெரிவு செய்துள்ளார்கள் என்ற ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துப்படி உழ்ஹிய்யாவுக்கான கால்நடைகளில் ஆட்டை அறுத்துப் பலியிடுவதே மிகவும் சிறந்தது என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இலங்கை சூழலில் ஆட்டை அறுப்பது தான் மிகவும் பொருத்தமானது என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயம் அல்ல. நபிகளாரின் செயலை வெளிப்படையாகவே பின்பற்றுதல் என்ற வகையிலும் குர்பானுக்காக ஆட்டை முற்படுத்துவது ஒரு சுன்னா என்ற பார்வையிலும் இலங்கை மக்கள் ஆட்டை தெரிவு செய்வது தார்மீகக் கடமையாகும். சகோதர இனங்களின் மனங்களை புண்படுத்தாமல் எமது வணக்கவழிபாடுகளை செய்வதற்கு ஷரீஆ விரிந்து தரும்போது அதனை பின்பற்றுவது சுன்னா என்பதற்கு அப்பால் அந்த தெரிவு ஒரு நல்ல பண்பாடு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை பார்த்த விடயங்களின் மையக் கருத்துக்களை சுருக்கமாக சொல்வதாயின்:
உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னாவாகும். இதனை நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கமைய, சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.

பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவதில் எமது கவனம் இருக்க வேண்டும். அது உயர்ந்த பண்பாடு என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். பிரதேச சூழலுக்கு ஏற்ப மஹல்லாவாசிகள் பொது மஷுராவின் அடிப்படையில் உழ்ஹிய்யா விடயங்களை முன்னெடுப்பதற்கு தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் வழிகாட்ட வேண்டும்.குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதில் பரந்த மனதுடன் செயற்படுவதற்கு ஷரீஆ சட்டம் இடம் தந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

இஸ்லாமிய சட்டப்பரப்பில் ‘சுன்னா முஅக்கதா’ என்ற தரத்தில் வைத்து நோக்க வேண்டிய உழ்ஹிய்யா வணக்கததை வாஜிபான வணக்கத்திற்குரிய அந்தஸ்தை கொடுப்பது ஷரீஆவின் பார்வையில் பிழையான புரிதலாகும். உழ்ஹிய்யாவிற்கு உரிய அந்தஸ்தை கொடுப்பதுடன் இலங்கை சூழலில் அந்த வணக்கத்தை நடைமுறைப்படுத்தும் போது அறிஞர்களின் வித்தியாசமான கருத்துக்களை அருளாகக் கொண்டு பெருத்தமான தெரிவுகளைமுற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

About the author

Administrator

Leave a Comment