ஆசிரியர் கருத்து

கறுப்பு மாதங்கள் தொடரக் கூடாது

Written by Administrator
Editorial | 399

இலங்கையின் இன முரண்பாடுகளுக்குள்ளால் கறுப்பு மாதங்கள் விஷேட அடையாளங்களைப் பெறும் குறிகாட்டிகளாக மாறி வருகின்றன. 1983 ஜூலையில் தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாதத் தாக்குதல்கள் மயிர்க்கூச்செறியச் செய்பவை. தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ஒரு சிங்களச் சொல்லை உச்சரிக்கத் தெரியாமல் போன ஒரே விடயத்துக்காக தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டார்கள். கொதிக்கின்ற தார்ப் பீப்பாக்களில் உயிருடன் போட்டு அமிழ்த்தப்பட்டார்கள். ஈவிரக்கமின்றி மனிதத் தன்மையே வெட்கித் தலைகுனிகின்ற அளவுக்கு பேயாட்டம் ஆடி ஓர் இனத்துக்கு எதிரான தமது வஞ்சினத்தைத் தீர்த்துக் கொண்டது சிங்களப் பேரினவாதம். 35 வருடங்கள் தாண்டியும் ஆறாத வடுவாக இலங்கையின் இனத்துவ வரலாற்றில் கறுப்பு ஜூலை ஞாபகிக்கப்படுகிறது.

அதேபோல அடுத்து வருகின்ற ஓகஸ்ட் மாதமும் இலங்கையின் இனத்துவ வரலாற்றில் கறைபடிந்த மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. காத்தான்குடிப் படுகொலைகளை ஞாபகப்படுத்தும் ஷுஹதாக்கள் தினம் முஸ்லிம் சமூகத்தால் இந்த ஓகஸ்ட் மாதத்திலேயே நினைவுகூரப்படுகிறது. இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிராயுதபாணி அப்பாவிகள் மீது தமிழரின் விடுதலைக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொண்ட குழுவினர், சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டு துடிதுடிக்கக் கொன்ற கொடூரம், உலகில் எந்தப் பயங்கரவாத அமைப்புமே செய்யாத ஈனமற்ற கொடுமையாகப் பதியப்பட்டிருக்கிறது. இங்கும் முஸ்லிம் என்ற இனத்துவ அடையாளத்தைச் சுமந்திருந்ததுவே தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இந்த அடாவடித்தனத்தைப் புரிவதற்குக் காரணமாக இருந்தது.

இதுபோலவே சிங்கள இனவாதிகள்  முஸ்லிம் சமூகத்தின் மீது அளுத்கமையில் கட்டவிழ்த்து விட்ட காடைத்தனமும் அமைகிறது. கறுப்பு ஜூன் என முஸ்லிம் சமூகம் குறிப்பிட்டு ஞாபகப்படுத்தும் அளவுக்கு இந்தச் சம்பவமும் இலங்கையின் இனத்துவ வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்திலும் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணமே குறித்த இனத்தின் மீதான தாக்குதலைத் தூண்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

பௌர்ணமி வெளிச்சத்துடன் மாதங்களை அடையாளப்படுத்துகின்ற ஒரு நாட்டில் இப்படி வருடத்தின் எல்லா மாதங்களும் கறுப்பானதாக மாற்றப்பட்டுக் கொண்டு வருவது நாகரீகமான உலகுக்குப் பொருத்தமானதல்ல. பெரும்பான்மை என்ற அடையாளம் கிடைத்தவர்கள் எல்லாம் தம்மை விட எண்ணிக்கையில் குறைந்ததனால் சிறுபான்மையாகிய ஒரு சமூகத்தின் மீது அத்துமீறுகின்ற காட்டுமிராண்டித் தனம் மனித குலத்துக்குரிய பண்பாடல்ல. தன்னைவிடப் பலவீனமானதை வேட்டையாடி தனது வாழ்க்கை வசதிகளை அமைத்துக் கொள்ளும் சிங்கங்களதும் புலிகளதும் காட்டு தர்பார் நியாயம் மனிதர்களும் மனிதமும் வாழும் நாடுகளுக்கு உகந்ததல்ல.

இந்த வகையில் தனது இனம் மட்டுமே என்ற குறுகிய வட்டத்திலிருந்து சகல சமூகங்களும் விடுபடுவது தான் எல்லா இனங்களுக்கும் பொதுவான இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தாரக மந்திரமாக அமைய முடியும். தமிழினத்தின் மீது சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கான நஷ்டஈட்டை முழுத் தேசமும் சேர்ந்து தான் சுமக்கின்றது. அதேபோல சிங்கள இனவாதிகள் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா நஷ்டஈடுகளையும் முழுத் தேசமும் சேர்ந்தே சுமக்கிறது.

இந்த வகையில் இனமேலாதிக்க உணர்வை நிறுவுவதற்கான தளமாக நமது தேசத்தைப் பயன்படுத்தும் போதெல்லாம் நாடு பின்னோக்கி இழுபட்டுச் செல்கிறது என்பதுவே நிதர்சனமாய்த் தெரிகிறது. தனது இனத்தின் பாதிப்பை ஞாபகிக்கும் எந்த இனமும், தான் அதற்கு அருகதை தானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாய சூழலிலேயே நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன வெறியும் இன மேலாதிக்க உணர்வும் ஒழியும் வரை இலங்கை சுதந்திரக் காற்றை நுகரப் போவதில்லை.

About the author

Administrator

Leave a Comment