Features சமூகம் பெண்கள்

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்த அறிக்கை; ஒழித்து விளையாடும் பொறுப்பாளர்கள்

Written by Administrator

Image result for mmda sri lanka protest

– மாலிக் பத்ரி –

முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்ஸூப் தலைமையிலான குழுவின் அறிக்கை  நீதியமைச்சர் தலதா அதுகோரலவிடம் கையளிக்கப்பட்டு ஆறுமாதங்களின் பின்னர் நீதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகிச் சென்ற உறுப்பினர்களைக் கொண்ட அணியின் அறிக்கையும் மாற்று ஆலோசனைகளோடு கையளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் அரசியல்வாதிகளை அழைத்து சலீம் மர்ஸூப் தலைமையிலான குழுவின் அறிக்கை குறித்தும் அதில் உள்ளடங்கியுள்ள ஷரீஆவுக்கு மாற்றமான அம்சங்கள் குறித்தும் விளக்கமளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பான சந்திப்பொன்று நடைபெற்ற போதும், அதில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகம் தரவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஜம்இய்யாவின் இம்முயற்சியை பெண்ணுரிமை இயக்கங்கள் கண்டித்து வருவதோடு, ஊடகவியலாளர் சந்திப்புக்களையும் நடத்தி வருகின்றன. “உங்கள் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அநீதி இழைத்து விட வேண்டாம்” என்ற சுலோகத்தைத் தாங்கிய ஆர்ப்பாட்டமொன்றை சமீபத்தில் பாராளுமன்றத்திற்கு முன்பாக இவ்வியக்கங்கள் நடத்தின.

விவாக-விவாகரத்து திருத்த அறிக்கை விவகாரத்தை நோக்கும்போது ஏதோ அது ஜம்இய்யாவிற்கும் பெண்ணிலைவாத இயக்கங்களுக்கும் இடையிலான விவாதப் பொருள் போன்றே பொது மக்கள் பரப்பில் காட்சி தருகின்றது. காரணம், பெண்ணிலைவாத இயக்கங்களின் தேவைக்காக மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகவே அது காட்டப்பட்டு வந்துள்ளது.

ஒல்லாந்தர் காலத்தில் (1715 – 1785) கவர்னர் வில்லியம் போல்க் என்பவரால் இந்தோனேசியாவின் கிழக்கு டச்சுக் கம்பனியின் மையமாக விளங்கிய பதேவியாவிலிருந்து தருவிக்கப்பட்டதே இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் ஆரம்பமாகும். பிரித்தானியர் காலத்தில் மாற்றங் களுக்கு உட்பட்ட இச்சட்டம் 1926 இலிருந்து நடைமுறையிலுள்ளது. அவ்வப்போது சிற்சில திருத்தங்கள் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

உண்மையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களும் திருத்தங்களும் அவசியம் என்பதற்கான நியா யங்கள் ஏராளம். காழி நீதிமன்றக் கட்டமைப்பு  நீதியை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலையில் இல்லை. காழி நீதிபதிகளுக்கான தகுதிகள், காழி நியமனம், காழி நீதிமன்ற நடை முறைகள், பெண்கள் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகள் என காழி நீதிமன்ற முறை; கட்டமைப்பு மாற்றமொன்றுக்கு உட்படுத்த வேண்டிய நியாயப்பாடுகள் பல உள்ளன.

அதேபோன்று திருமண வயது, பலதார மணம், கைக்கூலி, பிள்ளைத் தாபரிப்பு, தலாக், பிள்ளைகளின் பாதுகாப்பு போன்ற இன்னோ ரன்ன விடயங்களில் பல்வேறு மாற்றங்களும் திருத்தங்களும் அவசியமாகின்றன. பல்வேறு சீர்குலைவுகளை எதிர்கொண்டுள்ள காழி நீதிமன்ற நடைமுறைகளும் அங்கு விசாரணைக்கு வரும் சிக்கலான வழக்குகளும் விவாக-விவாக ரத்துச் சட்டத்தில் உடனடி மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தி நிற்கின்றன.

குறிப்பாக, திருமண வயது மற்றும் பலதார மணம் குறித்து, நிலவும் சட்டத்திலுள்ள ஓட்டை களை பலர் மோசமாக துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்பதற்கு களரீதியாக மேற்கொள் ளப்பட்ட ஆய்வு வழியாக பல உதாரணங்களை முன்வைக்கலாம்.

கடந்த கால் நூற்றாண்டு கால இடைவெளியில், காழி நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் பலதார மணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் தனியாள் கற்கைச் சம்பவங்கள் (ஞிச்ண்ஞு குtதஞீடிஞுண்) ஏரா ளமாக உள்ளன. ஆக, முஸ்லிம் விவாக-விவாகரத் துச் சட்டத்தில் திருத்தம் அவசியம் என்பது கால் நூற்றாண்டுக்கு முன்னரேயே உணரப்பட்டு விட் டது. ஆனால், இதிலுள்ள சங்கடம் என்னவெனில், இந்த உண்மையை சமூகவெளிக்கு முதலில் கொண்டு வந்தவர்கள் பெண்ணுரிமைச் செயற்பாட் டாளர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

வாய்ப்புக்கேடாக பெண்ணுரிமைச் செயற்பாட் டாளர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து பொதுவாக நிலவும் ஐயத்தை வைத்துக் கொண்டு ஜம்இய் யாவோ பாரம்பரிய உலமாக்களோ திருத்தத்தை எதிர்த்து நிற்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாற்றங்கள் வேண்டுமா என்பதை திறந்த மனதோடும் இதய சுத்தியோடும் ஆராய்ந்து பார்த் திருந்தால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இழுபறியும் ஒழித்து விளையாடுதலும் இடம்பெற் றிருக்காது.

“பெண்ணிலைவாதிகளின் தேவைக்காக எங்கள் மூதாதையர்களால் எமக்கென வகுத்தளிக்கப்பட்ட ஷரீஆவின் அடிப்படையிலான முஸ்லிம் தனியார்  சட்டம் கைநழுவிச் செல்லப் போகின்றது. இஸ்லாமிய இயக்கங்களே வந்து காப்பாற்றுங்கள்” என்பது போல ஜம்இய்யா புரளி கிளப்புவதன் மூலம் பிரச்சினையின் மையத்தைக் காணத் தவறுகின்றது.

2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் நியமிக்கப்பட்ட சலீம் மர்ஸூபின் தலைமையிலான சிபாரிசுக் குழு கடந்த 9 ஆண்டுகளாக முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட் டம் குறித்து ஆராய்ந்து வந்தது. சட்டத்தில் பிரச்சினைக்குரிய அம்சங்களை இனங்கண்டது. ஜம்இய் யாவுடனும் பல்வேறு அமர்வுகளை நடத்தி ஆலோ சனைகளைப் பெற்றது.

இஸ்லாமிய பிக்ஹை விரிந்த கண்ணோட்டத்தில் நோக்கி ஷரீஆவின் நோக்கங்களையும் சமூகத்தின் நலன்களையும் அடிப்படையாக வைத்து தேவையான திருத்தங்களை ஓர் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. துரதிஷ்டவசமாக ரிஸ்வி முப்தி தலைமையில் சிபாரிசுக் குழுவின் அரைவாசிப் பேர் விலகிச் சென்று தமது பங்கிற்கு ஒரு மாற்று அறிக்கையை தயாரித்துள்ளனர்.

பன்மைப் பாங்கான இலங்கையில் அறுதிச் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இது போன்ற தனியார் சட்டமொன்று வாய்த்திருப்பது மிகப் பெரும் வரப் பிரசாதமாகும். ஏனெனில், இலங்கையின் தேசிய அரசியலமைப்புச் சட்டத் திற்கு முரண்பட்ட வகையிலான அம்சங்கள் கூட முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ளபோதும் மிக    நீண்ட தூரம் இச்சட்டம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இப்போது முஸ்லிம் சமூகத்தின் நலன் களை முன்னிறுத்தியே திருத்தமும் மாற்றமுமே சமூகத்தால் வேண்டப்படுகின்றது.

நடைமுறையிலுள்ள விவாக-விவாகரத்துச் சட் டம் நூறு வீத ஷரீஆவின் அடிப்படையில் அமைந்த தல்ல. ஏனெனில், கைக்கூலி போன்றன அதில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விவாக-விவாகரத்துச் சட்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றம் அல்-குர்ஆன் சுன்னாவை மாற்றுவதற்கு ஒப்பானது என்று தவறான பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அது தேவையான திருத்தங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரமாகும். மீண்டும் ஒரு நூற்றாண்டுக்கு சமூகத்தைப் பின்நோக்கித் தள்ளும் பிற்போக்குத் தனமாகும்.

9 ஆண்டுகள் ஜம்இய்யாவுடன் அமர்ந்து பேசியதன் பின்னர் மீண்டும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதற்கு என்ன இருக்கின்றது? காலத்திற்கும் சமூகத்திற்கும் அவசியமான திருத்தங்களை ஷரீஆவின் வரையறைக்குள் மேற்கொள்வதை ஏன் ஜம்இய்யா எதிர்த்து நிற்கின்றது?

விளப்பமற்ற சில அரசியல்வாதிகள் மற்றும் சில சிரேஷ்ட சட்டத்தரணிகள் தமது “ஆழ்ந்த சமூக அக்கறையை” வெளிக்காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்ப மாக இன்றைய சூழலை கையாள்வது போலவே தெரிகிறது. எகுக வரிச் சலுகைக்காகவே அரசாங்கம் தனியார் சட்டத்தை மாற்றப் போவதாக கடந்த காலத்தில் சிலர் காட்டுக் கூச்சல் போட்டனர். அடிநுனி தெரியாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இந்த முல்லாத் தனம் முட்டாள்தனமானது என்பது இப்போது புரிகிறதல்லவா?.

தற்போது அரசாங்கம் எகுக வரிச் சலுகையைப் பெற்று விட்டது. அப்படியானால் புரளி கிளப்பியர் வர்களும் வதந்தி பரப்பியவர்களும் இப்போது என்ன சொல்லப் போகின்றார்கள்?

முஸ்லிம் விவாக-விவாகரத்துச் சட்டத்தில் மாற் றம் வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மா னிப்பது நியூயோர்க்கிலுள்ள உலக வங்கியோ சர்வ தேச நாணய நிதியமோ கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகமோ அல்ல. நாம்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். நடைமுறையை ஆராயும் எவரும் மாற்றமும் திருத்தமும் காட்டாயம் என்ற முடிவுக்கு வருவார்கள். இதுதான் கடந்த 25 ஆண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஷரீஆ, பிக்ஹ், கானூன் ஆகிய மூன்றையும் இலங்கைச் சூழலில் பழமைவாதத்தில் ஊறிப் போனவர்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இதனால் தான் எடுத்ததற்கெல்லாம் ஷரீஆ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மாற்றம் அல்லது திருத்தம் என்பதற்கு குறுக்கே நிற்பதற்கு ஷரீஆ இவர்களுக்கு ஒரு கேடயம்.

அல்லாஹ் இறக்கிய குர்ஆனும் அவனது தூதரது ஸுன்னாவுமே ஷரீஆவாகும். அது ஒருபோதுமே மாறுவதில்லை. யாராலும் அதை மாற்றவும் முடி யாது. ஷரீஆ குறித்த இறைவனின் பிரதிநிதியான மனிதன் கொள்ளும் புரிதலே பிக்ஹ் எனப்படு கின்றது. ஷரீஆ காலத்தாலோ இடத்தாலோ மாற்ற வடைதில்லை. ஆனால், பிக்ஹ் மாற்றமடைகிறது. இதனால்தான் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலப் பிரிவில் 400 இற்கும் மேற்பட்ட பிக்ஹ் மத்ஹபுகள் காணப்பட்டன. பின்னர் அவை        செல்வாக்கிழந்து நான்காகச் சுருங்கியது என்கி றார் 20 ஆம் நூற்றாண்டின் சட்டமேதை கலாநிதி முஸ்தபா அஹ்மத் ஸர்கா.

குறிப்பிட்ட ஒரு ஆட்சிப் பரப்பில் ஓர் அரசாங்கம் தனக்குக் கீழேயுள்ள சிவில் சமூகத்தை குழப்பமின்றி ஆள்வதற்கு நடைமுறைப்படுத்தும் பிரத்தியேக சட்டமே கானூன் எனப்படுகிறது. இம்மூன்றுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற் படாமல் ஷரீஆவின் நோக்கங்களையும் சமூகத் தின் நலன்களையும் கருத்திற் கொண்டு நாம் வாழும் காலம், சூழ்நிலை என்பவற்றுக்கு ஏற்ப பிக்ஹில் திருத்தம் கொண்டு வருவது ஒன்றும் பிரச்சினைக்குரியதல்ல.

தனியார் சட்டத்தில் கைவைத்தால் காலப் போக்கில் அது இல்லாமல் போய்விடும் என்று தேவையற்ற புரளியை இங்கு யாரும் கிளப்ப வேண்டியதில்லை. இது அறிவுபூர்மற்ற பயம் அல்ல. மாறாக, அறியாமை. கைவைத்துத் திருத் தாவிட்டால்தான் அது காணாமல் போகும் அபா யம் உள்ளது. ஏனெனில், ஒரு நாட்டின் நீதிப் பரிபாலனம் என்பது அதனை ஆளும் அரசாங் கத்திற்குரிய பொறுப்பாகும். அதேபோன்று நீதித் துறை பரிபாலனத்தில் பால் வேற்றுமைகள் கிடையாது. நீதி சட்டம் என்று வரும்போது ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவரும் சமமானவர்கள்.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இவ்விரு விடயங்களும் மிகத் தெளிவாக உள் ளடக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள காழி நீதிமன்ற முறைமை மற்றும் பெண்களுக்கு நீதி பதிகளாகப் பதவி வகிக்க முடியாமை குறித்து யாரேனும் ஒருவர் இலங்கையின் உச்சநீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தால் நம் கையிலிருக்கும் தனியார் சட்டம் காணாமல் போய்விடும் என்ற அடிப்படை உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படியொரு வழக்கை இதுவரை யாரும் தாக்கல் செய்ய வில்லை என்ற நம்பிக்கையில் கண்ணைப் பொத்திக் கொண்டு ஒழித்து விளையாடும் காட்சி இதற்கு மேலும் தொடரக் கூடாது.

ஷரீஆவை பாதுகாக்கும் அக்கறை ஜம்இய்யாவுக்கு மட்டுமல்ல. இந்த நாட்டில் பல தசாப்தங்களாக இஸ்லாமிய தஃவா பணியில் ஈடு படும் பல்வேறு இயக்கங்களுக்கும் உள்ளன. மத்ஹப் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காது இஸ்லாத்தை அதன் விரிந்த கண்ணோட்டத்தில் புரிந்து வைத்திருக்கும், ஆழ்ந்து கற்றிருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இந்நாட்டில் உள்ளனர்.

தாம் மத்ரஸாக்களில் கற்ற ஒரு மத்ஹபின் பிக்ஹே ஒட்டுமொத்த இஸ்லாம் எனக் கருதுவதும், இலங்கைச் சூழலின் கள யதார்த்தங் களை ஏற்க மறுப்பதும் இன்றைய சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தி வராத நிலைப் பாடுகளாகும்.

மத்ஹப் வட்டத்திலிருந்து வெளியேற மாட்டோம் என்று கூறுபவர்கள் தாம் வலியுறுத்து கின்ற ஒற்றை மத்ஹபையே இலங்கை முஸ் லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதற்கு ஷரீஆவிலிருந்து ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். எண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை போலல்லாது சமூக யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு திருத்தங்களுக்கு ஆதரவளிக்க சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வர வேண்டும்.

இது ஒழித்து விளையாடுவதற்கான நேரமல்ல. நாளை மிக வேகமாக நெருங்கி வருகின்றது.

Image result for mmda sri lanka protest

Image result for mmda sri lanka protest

About the author

Administrator

Leave a Comment