Features நாடுவது நலம்

முஸ்லிம்கள் நாட்டிற்கு சுமையாக இருக்கக் கூடாது

Written by Administrator

 – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் |நாடுவது நலம்

பெரும்பாலானவர்கள் இன்று நாட்டிற்கு ஏதாவதொன்றை வழங்குவதற்கு பதிலாக நாட்டிலிருந்து ஏதாவதொன்றை பெற்றுக்கொள்வதற்கே பழக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் எப்பொழுதும் நாட்டிற்கு சுமையாகாமல் நாட்டிற்கு ஏதாவதொன்றை கொடுப்பவர்களாக மாற வேண்டும். எமது எதிர்காலம் இளைஞர்களுக்கானதே. இளைஞர்கள் நேர்மையானவர்கள். இளைஞர்கள் எப்பொழுதும் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவர்கள்.

நல்லிணக்கம், சகவாழ்வு, சமத்துவம் தொடர்பில் இளைஞர்களுக்கு மிக முக்கிய பொறுப்புள்ளது. இவற்றுக்காக வேண்டி இளைஞர்கள் தங்கள் சக்தியை தியாகிக்கும் காலமே எழுந்திருக்கிறது. எமது நாட்டின் முஸ்லிம் சமூகம் தொடர்பாக இளைஞர்களிடம் ஒரு கனவுள்ளது என்பதை நாம் அறிவோம். நாட்டிலிருந்து நாம் இன்னும் வேண்டிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நாட்டிற்கு ஏதாவதொன்றை செய்கின்ற, அடுத்த மக்களுக்கு உதவும் சமூகமாக மாற வேண்டும். இந்தச் சவாலை இளைஞர்களே பொறுப்பேற்க வேண்டும்.

பல நாடுகளில் ஆட்சியை மாற்றியதில் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பறியவை. டியூனீஷியாவில் இடம்பெற்ற மல்லிகைப் புரட்சி இதற்கு சிறந்த உதாரணம். அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் இன்று அதிக இளைஞர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றார்கள். இளைஞர்களை சரியான பாதையில் வழிகாட்டுவதன் மூலம் ஒரு நாட்டிற்கு பல்வேறு துறைகளில் சாதிக்க முடிகின்றது. கடந்த காலப்பகுதியில் கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற இனவன்முறைகளை 25 வயதுக்கும் குறைவான இளைஞர்களே முன்னின்று செயற்படுத்தியுள்ளனர். எனவே இளைஞர்ளை பிழையான வழியில் நடாத்தும் பொது அதனால் ஏற்படுகின்ற பாதக நிலைமைகளை நாடென்ற வகையில் அனைவரும் அனுபவிக்க வேண்டியேற்படும். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

எனவே, இளைஞர்கள் இன, மதம் பாராமல் அதிகதிகம் சமூக சேவைப் பணிகளில் ஈடுபாடு காட்ட வேண்டும். இப்படியான மனப்பான்மைக்கூடாக மாத்திரமே சமூகம் என்ற வகையிலும், நாடென்ற வகையிலும் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும். என்றாலும் முஸ்லிம் சமூகத்திற்குள் இன்னும் பிற்போக்குத்தனமான சிந்தனை படைத்தவர்கள் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பது உண்மையே. எனினும் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான சிந்தனைகளை இளைஞர்களுக்கு மாற்றிவிட முடியும்.

இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சிறப்பானதொரு வரலாறுள்ளது. எமது சமூகத்தின் முன்னோடிகளான டொக்டர் கலீல், டீ.பி. ஜாயா, பதியுதீன் மஹ்மூத், பாக்கிர் மாக்கார் போன்றோர் நாட்டை முதன்மைப்படுத்தி பல விடயங்களை செய்துள்ளார்கள். அரசியல் கட்சி பேதம் பாராமல் பணியாற்றியுள்ளார்கள். அத்தகைய வரலாறு மாத்திரம் எமக்கு போதாது. எமது சமூக முன்னோடிகள் மேற்கொண்ட தீர்மானங்களை முன்மாதிரியாகக் கொண்டு பணியாற்றும் சமுதாயமொன்றை, அறிவுக்கு முதலிடம் வழங்கிச் செயற்படும் சமுதாயமொன்றை உருவாக்கிட வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment