Features நேர்காணல்

சிறுபான்மை என்ற சொல்லை நான் அவ்வளவு விரும்புவதில்லை – ஜீ.எல். பீரிஸ்

Written by Administrator

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் – தவிசாளர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

‘நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேளையில் பெரும்பான்மை சிங்கள மக்களினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் போதிய அளவு கவனம் செலுத்தப்படாமையானது மிகப்பெரும் குறைபாடாகக் காணப்படுகின்றது.’

நேர்காணல் :: ஹெட்டி ரம்சி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெற்று வருகின்றன?

கட்சியின் செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பதினாறு மாதங்களுக்கு முன்பாகவே இக்கட்சி தாபிக்கப்பட்டது. கடந்த உள்ள10ராட்சி மன்றத் தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல முடிந்தது. தற்பொழுது நாம் கட்சிக்கென்று விவசாய சங்கம், ஆசியர் சங்கம், கலைஞர்கள் சங்கம் மற்றும் மாணவர் இயக்கங்களை தாபித்து வருகின்றோம். கட்சியின் சம்மேளனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். எமது கட்சிக்கான யாப்பினை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இச்சகல நடவடிக்கைகளுக்கும் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களிடம் கருத்து வினவப்பட்டுள்ளன. இதுவரையில் எமக்கு கிடைத்திருக்கும் பதில்கள் நல்ல நிலையில் உள்ளன. கட்சியின் வேலைத்திட்டங்களோடு கைகோர்ப்பதற்கு நாலாபுறத்திலிருந்தும் அழைப்புக்கள் வருகின்றன. முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்கள். கட்சியுடன் இணைந்து தனியொரு கூட்டமைப்பாக பணியாற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளதாக முஸ்லிம் தலைவர்கள் எம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதன்படி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை அண்மையில் நாம் கொழும்பில் சந்தித்தோம். கடந்த தினம் அநுராதபுரத்தில் எஸ்.எம். சந்திரசேன எம்.பியின் வீட்டிலும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமார் 700 முஸ்லிம் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தார்கள்.

முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி அவசியமில்லை என நீங்கள் அண்மையில் தெரிவித்திருந்தீர்கள். முஸ்லிம்களுக்கென தனியான கட்சியின்றி வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா?

வரலாறு இதற்கு தெளிவாகவே சான்று பகர்கிறது. முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி போன்ற பிரதான கட்சிகளில் உயர் பதவிகளுக்குச் செல்ல முடிந்தது. முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டிலேயே நான் மேற்படி கருத்தை தெரிவித்திருந்தேன். அதில் பிரதான விருந்தினராக அமைச்சர் கபீர் ஹாசிம் பங்குபற்றியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் மாவன்னெல்லை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். முஸ்லிம்களது வாக்குகளால் மாத்திரம் அவர் பாராளுமன்றம் செல்வதில்லை. பெரும்பாலான சிங்கள மக்களும் அவருக்கு வாக்களிக்கிறார்கள். அக்குரணை ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் ஐதேகாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.சி.எஸ் ஹமீத் 35 வருடங்களாக பாராளுமன்றம் சென்றார். அவருக்கும் முஸ்லிம் வாக்குகள் மாத்திரம் கிடைக்கவில்லை. சிங்கள மக்களின் வாக்குகளும் கிடைத்தது.

இதுபோன்று பேருவளையில் பாக்கிர் மாக்கார், அவரது புதழ்வர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் போன்றவர்களும் இப்படித்தான் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டார்கள். இதுபோன்று அன்றைய கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் பௌசியையும் உதாரணம் காட்ட முடியும். எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் காலத்தில் சி.எஸ் மரிக்கார் கடுகண்ணாவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பதியுதீன் மஹ்மூத் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனால், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு பிரதான கட்சிகளில் உயர் இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வரலாற்றில் பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் சாதித்துக்காட்டியிருக்கிறார்கள். முஸ்லிம் கட்சி, தமிழ் கட்சி என தனித்துவ அடையாளங்களுடன் கட்சிகள் அமைப்பதில் பிரயோசனமில்லை. கடந்த 20 -25 வருட காலப்பகுதியிலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம்கள் பெரும்பான்மைக் கட்சிகளில் இணைந்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டது உண்மை. ஆனால் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கிலேயே தனிக்கட்சி அரசியலை நோக்கிப் பயணித்தார்கள். தனிக்கட்சி அரசியலால் முஸ்லிம்கள் பல உரிமைகளை வென்றுள்ளார்கள். இந்நிலையில் நீங்கள் உங்கள் கருத்தை எந்தளவு தூரம் நியாயப்படுத்துகிறீர்கள்?

நாம் இப்படி நினைக்கக் கூடாது. சிறுபான்மை என்ற சொல்லை நான் அவ்வளவு விரும்புவதில்லை. தமிழ், முஸ்லிம் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். சகலரும் இந்நாட்டுப் பிரஜைகள். தமிழ் பேசும் மக்களுக்கு கௌரவத்துடன் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்கிக்கொடுப்பது எம் அனைவரினதும் கடமையாகும். இம்மக்களுக்கான பெருளாதார, சமய, பௌதீகப் பாதுகாப்பு போன்ற விடயங்களை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கங்களின் பொறுப்பாகும். இவ்வகையில் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேளையில் பெரும்பான்மை சிங்கள மக்களினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் போதிய அளவு கவனம் செலுத்தப்படாமையானது மிகப்பெரும் குறைபாடாகக் காணப்படுகின்றது. நாம் வித்தியாசமான முறையில் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு இனமாக பிரிந்து நின்று சிந்திக்காமல் நாம் இலங்கையர் என்னும் அடையாளத்துடன் பரந்த அடிப்படையில் சிநதிப்பதே சிறந்தது. இதை மையப்படுத்தியே நான் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தேன். இது உடனடியாக மேற்கொள்ள முடியுமான விடயம் என நான் கருதவில்லை. குறிப்பாக நான் இதனை இளம் தலைமுறையினருக்கு சிறந்த விடயமாகக் காண்கிறேன்.

பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்த வகையில் முஸ்லிம் முற்போக்கு முன்னணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்கட்சியை பரந்த அடிப்படையில் முன்னெடுப்பதற்கான திட்டங்கள் ஏதும் உள்ளதா?

பொதுஜன பெரமுனவை முதன்மையாகக் கொண்ட எதிர்கால அரசாங்கத்திடம் மிக முக்கியமாக எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன என்பது குறித்து முஸ்லிம் சமூக பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி வருகின்றோம். இவ்வெதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உள்ள நடைமுறைச் செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பாகவும் அவர்களிடம் கருத்துக்கள் வினவப்பட்டு அதன் பிரகாரம் எமது கொள்கைத் திட்டங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எதிர்வரும் காலப்பகுதியில் பொதுஜன பெரமுன கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையும் எதிர்பார்ப்பில் உள்ளதா?

இல்லை. எமது ஆதரவாளர்களின் அபிலாஷை இதுவல்ல. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக மாறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் இன்று டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்திலிருந்து செயற்படுத்தப்படுகின்றன. மறைந்த முன்னாள் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிந்தனைகள், சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய சிந்தனைகளை இன்று அக்கட்சி அமுல்படுத்துவதில்லை. கடந்த உள்ள10ராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பது நிரூபணமானது. 13 வீதமான வாக்குகளையேனும் அக்கட்சியால் பெற முடியவில்லை. இலங்கை வரலாற்றில் மிகவும் துரதிஷ்டமான நிலையே இது. நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தலைமையில் உள்ள கட்சி 3 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்ததன் பிறகு 13 வீதமான வாக்குகளை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பமே இது. கட்சி தொடர்பில் மக்கள் நம்பிக்கை எந்தளவுக்கு சிதைந்துபோயுள்ளது என்பது இதன் மூலம் விளங்குகின்றது. இதனால் அபலையான அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றும் தேவை எமக்கில்லை. எமது கொள்கைகளே உண்மையான சுதந்திரக் கட்சியின் கொள்கைகளாகும். இதனை ஏற்றுக்கொள்ளும் சகலருக்குமான வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசின் மீது அதிருப்தி கொண்டமையினாலேயே பெரும்பான்மை மக்கள் மாற்றீடாக இந்த அரசாங்கத்தை தெரிவுசெய்தார்கள். எதிர்காலத்தில் உங்களது கட்சி தலைமையிலான அரசாங்கம் அமையும் பட்சத்தில் அதன் கீழ் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் எவ்வாறு காணப்படும்?

எமது கைகளாலும் ஒரு சில தவறுகள் ஏற்பட்டதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எம்மால் தவறுகள் ஏற்படாமல் இருந்திருப்பின் 2015 ஜனவரி 08இல் இப்படியொரு பெறுபேறு கிடைத்திருக்க வாய்ப்பில்லை அல்லவா. எமது தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் வருட இறுதியில் உறுதியாகவே அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் அரசாங்கத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு அச்சமின்றி வாழலாம் என்ற கருத்தை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றேன். முஸ்லிம்களது மத விவகாரங்கள், பள்ளிவாசல்கள், வியாபார நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தின் கீழ் சிதைந்துபோயுள்ளன. இன்று அராஜக நிலையே அரங்கேறுகிறது. எந்த விடயத்துக்கும் யாரும் பொறுப்புச் சொல்வதில்லை. இந்நிலை மாற்றப்படும். மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாழ்க்கையின் சகல துறைகளிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என நாம் தெளிவாகவே வாக்குறுpதியளிக்கிறோம்.

About the author

Administrator

Leave a Comment