Features சமூகம் விவாத மேடை ஷரீஆ

இது மகாஸித்துறை ஆய்வு மாணவர்களுக்கானது

Written by Web Writer

அக்ரம் அப்துஸ் ஸமத்(நளீமி)

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பான புத்திஜீவித்துவ மட்டக் கலந்துரையாடல்களை அவதானிக்கும் பொழுது இங்கு முக்கியமானதொரு ஆய்வுப் பிரச்சினை இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது, ஷரீஅத்தின் பொது மகாஸிதுகளுக்கும் குடும்பவியல் துறை மகாஸிதுகளுக்கும் இடையிலான இடைவெளி கருத்து வேறுபாட்டின் மையப் பு்ள்ளிகளுள் ஒன்று என்பது புலனாகிறது. இந்த இடைவெளியை நிரப்பும் முயற்சி இன்றைய அறிவுப் பணிகளுள் முக்கியமானதொன்று என நினைக்கிறேன்.

இதனை இன்னும் இலகுவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். மக்ஸதுல் அத்ல் – நீதியை நிலைநாட்டல், அநியாயத்தை அகற்றுதல் என்பது ஷரீஆவின் மிக முக்கிய பொது மகாஸிதுகளில் ஒன்று. திருமண வயது குறித்த விவாதம், பலதார மணத்திற்கான வரையறைகள் குறித்த விவாதம் போன்ற இன்னும் பல இடங்களில் நீதியை நிலைநாட்டல் அல்லது அநீதியைத் தடுத்தல் என்ற கருதுகோளின் அடிப்படையில் ஒரு புறம் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது போல் மக்ஸதுல் இஃபாப் எனும் கற்பைப் பேணுதல் அல்லது ஆபாசங்களிலிருந்து காத்தல் என்பது குடும்ப முறையின் முக்கிய மகாஸிதுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. மேற்சொன்ன வயது, பலதார மணம் போன்ற பல விடயங்களின் வாதத்தில் கற்பைப் பாதுகாத்தல் அல்லது ஆபாசத்திலிருந்து காத்தல் என்ற கருதுகோளின் அடிப்படையில் மற்றொரு புறம் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

மகாஸித் சிந்தனைப் புலத்தில் பொது மகாஸிதுகளும் முக்கியமானவை, குறித்த குறைசார்ந்த மகாஸிதுகளும் முக்கியமானவை. இவற்றுக்கிடையில் நீதியான சமநிலையே அமுலாக்கத்தின போது கருத்தில் கொள்ள வேண்டியது. குறிப்பான மக்ஸத், பொதுவான மக்ஸதை ரத்துச் செய்யும் வகையில் அமைந்து விடக் கூடாது. அதுபோல் பொதுவான மக்ஸத் குறிப்பான மக்ஸதின் பொருளை இழக்கச் செய்யும் வகையில் செயற்படுத்தப்படவும் கூடாது. முதல் நிலைப்படுத்தலில் குறிப்பானதை விடவும் பொதுவானது கருத்தில் கொள்ளப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. சமநிலைப்படுத்தலில் இமாம் ஷாதிபியை வாசிப்போருக்கு நல்ல முன்மாதிரி இருக்கிறது.

இதே விடயத்தை இஜ்திஹாத் கண்ணோட்டத்தில் சொன்னால், ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ் அவர்கள் கூறுவது போல், இஜ்திஹாத் இருவகைப்படும். ஒன்று இஜ்திஹாத் இஸ்தின்பாதி – அதாவது குறித்த ஒரு விடயம் ஷரீஆவுக்கு உற்பட்டதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் ஆய்வு முயற்சி. மற்றையது இஜ்திஹாத் தத்பீகி – அதாவது அந்த விடயம் நடைமுறைக்கு எந்தளவு பொறுத்தமானது என்பதைத் தீர்மானிக்கும் ஆய்வு முயற்சி.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்த முன்மொழிவுகள் இரண்டும் ஷரீஆவுக்குற்பட்டதா? இல்லையா? என்ற ஆய்வு முதல்வகையானது. இரண்டுமே ஷரீஆவுக்குற்பட்டது என்பது தெள்ளத் தெளிவானது. ஆனால் நடைமுறைக்குப் பொறுத்தமானது எது? என்ற ஆய்வு மிக முக்கியமானது. இதுதான் ஷரீஆவின் பொதுவான மகாஸிதுகளும் குடும்பம் தொடர்பான குறிப்பான மகாஸிதுகளும் சந்திக்கும் புள்ளி. இந்த இடம் தொடர்பான ஆய்வுகள்தான் இலங்கையின் சூழலை மிகச்சரியாக பிரதிபளித்துக் காட்டக் கூடியன. இலங்கைக்கு எது தேவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டப் கூடியன.

இந்த விடயத்தில் இரண்டுமே ஷரீஆவுக்குற்பட்டவைதான் என்று சொல்வதுடன் மாத்திரம் நாம் கடந்து சென்று விட முடியாது. தற்போதைய அவசரத்திற்கு பதில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆய்வுக்காய் மாணவர்கள் முன்வரட்டும். ஒரு புதிய பார்வைக்கான விதை நட்டப்பட்டதாய் அது அமையும்.

About the author

Web Writer

Leave a Comment