Features குடும்பம்-உளவியல் சமூகம்

குடும்பங்களின் சமூக நிலவரங்கள்

Written by Administrator

 – எம்.ரிஸான் ஸெய்ன் –

  • கணவனுக்கு 74 வயது. மனைவிக்கு 69. கணவன் இன்னொரு திருமணம் செய்யத் துடிக்கிறார். அத்தோடு விவாகரத்தும் கேட்கிறார்.
  • முகநூலில் 5 நாட்கள் பழக்கம். ஆறாவது நாள் ஓட்டம்.  கணவனுக்கு 20 வயது. மனைவிக்கு 19. முடித்து 4 மாதங்கள். பிரிந்து 2 மாதங்கள். 3 மாதக் கர்ப்பம்.
  • திருமணம் முடித்து 10 வருடங்கள். நாளொன்றுக்கு 3 தடவைகள் 3600 ரூபாய்க்கு தூள் பாவிக்க வேண்டும். 8 வயதில் ஒரு பெண் பிள்ளையும் உண்டு.
  • கணவன் எங்கே போனார் என்றே தெரியாது. 6 வருடங்கள் ஆகிவிட்டன. 
  • முடித்து 30 வருடங்கள். 20 வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இப்போது விவாகரத்து கேட்கிறார்கள்.
  • திருமண பந்தத்திற்காக இந்து சகோதரர் இஸ்லாத்திற்கு வந்து, ஒரு பிள்ளை கிடைத்த பின்பு மீண்டும் மதம் மாறினார்.

கணவன் செலவுக்கு தராததால் பலர் விவாகரத்து கேட்கிறார்கள்.அதிகமாக ஆண்கள் அநீதமாக நடப்பது அதிகமாக உள்ளது. பெண்களுக்குரிய குற்றச்சாட்டு குறைவு. ஒரு சில ஆண்கள் நியாயமாக நடப்பதில் பகிர்ந்த சில விடயங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. பல விவாகரத்துகளுக்குப் பின்னணியில் மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதை உணர முடிந்தது. பெரும்பாலும் கணவர் மனைவிமார்கள் சார்பாக அவர்களோடு அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர்.விவாகரத்து வழக்கை விசாரிக்கும் போது பெற்றோர்கள் விடும் பெருமூச்சை மட்டும் சகிக்க முடியவில்லை.

இது அவர்களது தவறா..? பிள்ளைகளது தவறா..?

எது எப்படிப்போனாலும் குடும்ப அலகுகள் சிதைந்து சுக்கு நூறாகிப் போவதை நானும் நீங்களும் பார்த்துக் கொண்டிருப்பது நியாயமாகுமா..? திருமணம் முடிக்காத மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம்  முடிக்க  நல்ல பெண் மாப்பிள்ளை தேடவே முடியாமல் தவிக்கும் கால கட்டத்தில் விவாகரத்து பெறும் சமூகம் என்ன செய்யப் போகிறது..? அவர்களது பிள்ளைகள்..? இவற்றிற்கு யார் பொறுப்புக் கூறுவது..?

குடும்ப உளவளத்துணைக்கு வருபவர்களை பார்க்கின்ற போதும் காதி நீதிமன்ற வழக்குகளை அவதானிக்கின்ற பொழுதும் ஒருவகையான சைக்கோக்களையா பெண்கள் திருமணம் முடித்துள்ளார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. குடும்பங்களில் நடக்கும் அநீதமான சம்பவங்கள் இந்த எண்ணக் கருவை எமக்குத் தருகின்றது. சினிமாக்களில் கூட காணாத சிலவேளை நாம் கற்பனை செய்து கூட பார்க்காத அவலங்கள், அசிங்கங்கள் குடும்பங்களில் அரங்கேறுவதை காண முடிகின்றது.

பெண்களின்அறீவீனத்தையும் அப்பாவித்தனத்தையும் ஆண்களின் வக்கிரத்தனம் எப்படியெல்லாம் பாவிக்கின்றது என்பதைக் காணும் போது நெஞ்சம் கனக்கின்றது. அக்கிரமத்தனத்தின் உச்ச நிலையிலும் முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் அபலைகளின் கண்ணீர் கதைகளை மனச்சாட்சி உள்ளவனது காதுகளால் கேட்க முடியாது. அந்தளவு அவர்களுக்கு மனதிற்கு திராணி இருக்காது. பெற்றோர்களுக்கு எப்படி மீண்டும் சுமையாவது..? சமூகத்திற்கு என்ன சொல்வது..? உறவினர்களை எவ்வாறு சமாளிப்பது..? பிள்ளைகளை எப்படி தனியாக பராமரிப்பது.,?  பிற ஆண்களின் காமப் பித்தலாட்டங்களை விட்டும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு எவ்வாறு வாழ்வது ..?..என்று சிந்தித்து சிந்தித்து பெண்கள் மெளனிகளாக, ரகசியமாகப் புலம்பிக் கொண்டு ஒரு நரக வாழ்வை அச்சொட்டாகவே அனுபவிப்பதை பார்க்க சகிக்க முடியாதிருக்கும்.

பெண்களே அதிகமாக காதி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்கின்றனர். நான் மேலே குறிப்பிட்டவாறு ஜடங்களாக ஒரு கூட்டம் உள்ளது. அதே போன்று  உளவளத்துணைக்கு பொதுவாக பெண்களே வருகின்றனர். பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் வீதம் ஒப்பீட்டளவில் சிறிதாகவே உள்ளது. உளவளத்துணை அமர்வின் போது பெண்களது வாழ்க்கையின் சோகக் கதைகளின் புண்களின் ஆழங்களை காணும் போது தீர்வாக, ‘விடுதலையும் விவாகரத்தும்’ தென்பட்டாலும் அதை எமக்கு தெளிவாக கூற முடியாது. உளவளத்துணையாளர்களுக்கு தீர்வுகளை வழங்க முடியாது.

விவாகரத்தின் பின்னாலுள்ள சமூகச் சூழலைக் கண்டு பல பெண்கள் அச்சம் கொள்கின்றனர். அவர்களது வாழ்வாதாரங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்று அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். சமூக ஏற்பில் பாரிய பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டு என்பதை பல இடங்களிலும் பொதுவாகவே காணுகின்றனர். இவ்வாறான நிலையில் மன ரீதியாகப் புழுங்கிக் கொண்டு மட்டுமல்ல சகல விதத்திலும் பாதிக்கப்பட்டு, கையறு நிலையில் வாழும் பெண்களைக் காக்க, அபயம் அளிக்க, அவர்களது வாழ்வையும் திறனையும் மேம்படுத்த ஒரு பொறிமுறை அல்லது கட்டமைப்பு சமூகத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளதை ஈண்டு கூறலாம். ஆங்காங்கே சில உதவிகள் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றாலும் திட்டமிடலுடன் கூடிய ஒரு பொறிமுறை பெண்களுக்கு இன்னும் பொதுவாக உருவாகவில்லை.

ஏன் பல ஆண்கள் சைக்கோக்களாக ஆகியுள்ளனர்..?  தோற்றத்தைப் பார்த்தால் பலர் ஜென்டில்மென்னாக இருப்பார்கள். அவர்களை கண்டு பிடிக்க முடியாது. குடும்பம் நடாத்தும் போது வீட்டிற்குள் நிகழும் நடத்தைக் கோலங்களில் அவர்களின் உண்மையான சுயரூபம் வெளிப்படும். வுழு முறியும் என்று தனது மனைவியை தொட அனுமதிக்காத ஒரு கணவனை, 9 வருடங்கள் தனது மனைவியோடு தாம்பத்யம் கொள்ளாத  இன்னொரு கணவனை, 21  நாட்கள் திருமண வாழ்வை வாழ்ந்து விட்டு இன்னொன்று என்று பல திருமணங்களை செய்கின்ற ஒருவனை என்று பல கணவன்மார்களை காண முடிகின்றது. இதனோடு சேர்ந்து அவர்களது அந்தரங்கங்களை பார்த்தால் கொடுமையிலும் கொடுமை. இந்த சைக்கோ கூட்டத்தை நினைத்துப் பார்த்தால்  பெண்களை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மிகவும் அவதானமாகவே இன்று இருக்க வேண்டிய நிலமை உள்ளது. பல டெஸ்ட்களை வைத்து திருமணத் தேர்வை நடாத்த எதிர்காலத்தில் வழியேற்பட்டாலும் ஆச்சரியமல்ல என்றளவிற்கு நிலமை மோசமாகி விட்டது.

5 பிள்ளைகள் உள்ள 45 வயதுடைய ஒருவருக்கு  29 வயது விவாகரத்துப் பெற்ற தனது மகளை திருமணம் முடித்துக் கொடுத்ததாக நேற்று என்னை சந்திக்க வந்த அப்பெண்ணின் தாயார் கூறினார்.

“என் கணவனுக்கும் தொழிலில்லை. மகன்களும் கவனிப்பதில்லை. மகளை வைத்து பராமரிக்க முடியவில்லை. அதனால்தான்  அவ்வாறான முடிவை நான்  எடுத்தேன்” என்று அந்த ஏழைத் தாய் குறிப்பிட்டார். விவாகரத்து விடயங்களை அவதானிக்க வேண்டுமென்றால் காதி நீதி மன்றங்களுக்குப் போனால்  புரிய முடியும். அத்துடன் அதன் துர் நாற்றத்தை பொறுக்க முடியாமல் மூர்ச்சையாகி விடுவோம். இது ஒரு புறமிருக்க, முதிர் கன்னிகளது சோகங்களை நான் கூறி நீங்கள் விளங்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்று இலங்கையிலுள்ள 65 முஸ்லிம் காதி நீதிமன்றங்களில் 10 க்கும் மேற்பட்ட விவாகரத்துகள் மாதமொன்றுக்கு விண்ணப்பிக்கப்படுவதாக அறிய முடிகிறது. இவ்விடயம் சரியாக இருந்தால் குடும்ப அலகின் அவல நிலை நன்றாகப் புரியும். இதைத் தவிர மன ரீதியாக (  psychological divorce) பிரிந்த ,உடல் ரீதியாக தொடர்பு அறுந்த பலர் வாழ்ந்தும் வாழாமலும் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது சாத்தியமில்லை.

இஸ்லாமிய தனி நபர் உருவாக்க கருத்தியல் மூலம் குடும்ப அலகு சீரமைக்கப்படாமல் வெற்றுக் கோஷங்களாலும் உரத்துக் சொல்லப்படுகின்ற பயான்களாலும்  குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுகின்ற எழுத்துக்களாலும் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியாது.

பிரச்சினைகளின் ஆழத்தை அறிந்து,  அவற்றை தரப்படுத்தி, தொகுத்து, குறிப்பிட்ட விடயங்களை  முன்னிலைப்படுத்தி, குறுகிய மற்றும்   நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின்றி, காத்திரமான சமூக மாற்றத்திற்கான ஒன்றிணைவும் ஒத்துழைப்புமின்றி எங்ஙணம் அச் சவால்களைத் தாண்டுவது ..?

About the author

Administrator

Leave a Comment