Features நாடுவது நலம்

தாரிக் ரழமான் விவகாரம்: கேள்விக்குறியாகும் பிரான்ஸின் நீதித்துறை

Written by Administrator

 – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

முன்னேற்றகரமான சமூகத்தில் ஒருவருக்கு எதிராக முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்ட மறுகணமே அவர் குற்றவாளியாக கருதப்படுவதில்லை. முன்னேற்றகரமான சமுதாயத்தில் சட்ட வல்லுனர்கள் போதிய ஆதாரங்களுடனேயே ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வார்கள். அதன் பிறகு சந்தேகத்திற்கிடமின்றி குற்றம் ஒப்புவிக்கப்படுமாயின் மாத்திரமே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆனால் பிரான்ஸின் இன்றைய நீதித்துறை பேராசிரியர் தாரிக் ரமழான் தொடர்பில் பின்பற்றியிருக்கும் அணுகுமுறைகள் காரணமாக தனது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

பேராசிரியர் தாரிக் ரமழான் ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் முதற்தர பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கு தனது பங்களிப்பை நல்கி வருபவர். உலகின் முதற்தர இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர். இவர் ஐரோப்பாவிற்குள் இஸ்லாம் குறித்து முன்வைத்துள்ள கருத்துக்கள் உலக அறிஞர்களுக்கு மத்தியில் அதிக கவனத்தை ஈரத்துள்ளன.

தற்போது பேராசிரியர் தாரிக் ரமழானை பிரான்ஸிய அதிகாரிகள் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பல மாதக் கணக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்கு இவர் சுயமாகவே முன்வந்தார். வாக்குமூலத்தை பதிவுசெய்துகொண்ட பொலிஸார் அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாமலேயே சிறைப்படுத்தியுள்ளனர். குடும்பத்தவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவராக அவரது கருத்துக்களுக்கு எதிரானவர்களால் பேராசிரியர் ரமழான் பயங்கரவாதி ஒருவரின் நிலைக்கு தள்ளிவிடப்பட்டிருப்பதன் மூலம் உலக நாடுகள் பிரான்ஸூக்கு எதிராக விரல் நீட்ட ஆரம்பித்துள்ளன. பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ஆராயும் போது பேராசிரியர் ரமழான் தொடர்பில் பிரான்ஸிய நீதித்துறை பின்பற்றி வரும் அணுகுமுறைகள் எவ்வளவு அநீதியானது என்பது புலப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு அதிக காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ள தாரிக் ரமழான் தொடர்பில் வழக்கு விசாரணைகளுக்கு இதுவரையில் திகதி குறிக்கப்படவில்லை. அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெறுமா என்பதும் நிச்சயமற்றது. சட்டத்தரணிகளை சந்திப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவரது தனித்துவ உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுடன், கடிதப் பரிமாற்றமும் இவருக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. தன்னைப் பற்றிய வழக்கை வாசிப்பதற்கோ, நூலகத்தில் வாசிப்பதற்கோ, கட்டுரை எழுதுவதற்கோ இடமில்லை. 24 மணிநேரமும் சிறைக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இவரது நிறை 12 கிலோவால் குறைந்துள்ளதுடன், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது. எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு போதிய மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரான்ஸிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இரு தசாப்தங்களாக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ‘பிரான்ஸின் முஸ்லிம் எதிரி’ என்பதாக தாரிக் ரமழானை இலக்கு வைத்து முன்வைத்த கருத்துக்களை மாற்றுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. தற்போதும் கூட இவருக்கு எதிரான கருத்தியல்கள் மெல்லக் கவனமாக பிரான்ஸிய ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரான்ஸில் ஊடகங்கள் ஓரு தரப்பினரின் கைப்பாவைகளாக மாற்றப்பட்டுள்ளன. பேராசிரியர் தாரிக் ரமழான் தொடர்பில் மாத்திரம் பிரான்ஸ் பின்பற்றி வருகின்ற இத்தகைய அனுகுமுறையானது அந்நாட்டின் இரட்டை வேடத்தை உலகுக்கு பரைசாற்றுவதாய் அமைந்துள்ளது. தாரிக் ரமழானின் மகளான மர்யம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்

‘ஏன் எனது தந்தையாரின் விடயத்தில் மாத்திரம் இப்படிச் செயற்படுகிறீர்கள். ஏன் இவருக்கு எதிராக நாலா புறங்களிலும் தாக்குதல் தொடுக்கின்றீர்கள்? குற்றம் ஓப்புவிக்கப்படும் வரையில் சந்தேகநபர்கள் நிரபராதிகள் என்கின்ற விடயம் ஏன் இவருக்கு மாத்திரம் செல்லுபடியாவதில்லை. இஸ்லாம் குறித்தும், இஸ்லாமிய அடையாளங்கள் குறித்தும். இஸ்லாத்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பிணைப்பு குறித்தும், பிரான்ஸில் இஸ்லாம் குறித்தும், பலஸ்தீன் தொடர்பிலும் எனது தந்தை கொண்டிருந்த நிலைப்பாடுகளுக்கு எதிர்க் கருத்தியல் மேலெழுந்தது எனக்கு தெரிந்ததே. இதனால் இவரை அபகீர்த்திக்கு உள்ளாக்க தொடர்ந்தேர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை ஒன்றும் இரகசியமல்ல’

இஸ்லாம் குறித்து துணிச்சலான கருத்துக்களை வெளிப்படுத்துவோரை அடக்கும் திட்டங்களுக்கு பல்வேறு உதாரணங்களை குறிப்பிட முடியும். மனித உரிமைகள், சமத்துவம், சட்டவாட்சி, ஜனநாயகம் போன்றவை தொடர்பில் உணர்வுள்ளோர் இதுபோன்ற சம்பவங்கள் உலகில் எங்கு இடம்பெற்றாலும் அவற்றை கண்டிக்க வேண்டும்.

நோம்ஸ் சொம்ஸ்கி, பேராசிரியர் ஏவிஎம் கெப்போன், பேராசிரியர் அபூ அல் பழ்ல் உள்ளிட்ட உலகம் ஏற்றுக்கொண்ட புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரான்ஸின் அநீதியான நடவடிக்கைகளை கண்டித்து குரல் எழுப்பியுள்ளனர். இலங்கையில் உள்ள நாமும் உலகில் எங்கு அநீதிகள் இடம்பெற்றாலும், அது எத்தகைய பலம்பொருந்திய நாட்டில் நடைபெற்றாலும் அவற்றுக்கு எதிராக எமது குரலை எழுப்ப வேண்டும். அது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

About the author

Administrator

Leave a Comment