ஆசிரியர் கருத்து

மற்றுமொரு மைல்கல்லைத் தாண்டி….

Written by Administrator
Editorial | 400

இலங்கையின் பத்திரிகைத் துறை வரலாற்றில் முஸ்லிம்களுக்கான தனியான அச்சு ஊடகம் நூறு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. மொழிரீதியிலான பத்திரிகைகள் நியாயமானவை, ஆனாலும் இனரீதியான பத்திரிகைகள் எதற்கு என்ற கேள்விக்கு இன்று கொடுக்க முடியுமான பதில்களைவிடவும், ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அதற்குரிய நியாயம் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே முஸ்லிம்களுக்கான தனியான பத்திரிகையை வளர்த்தெடுப்பதற்கான நியாயம் எனலாம்.

சிங்கள அச்சு ஊடகங்களுக்கும் தமிழ் அச்சு ஊடகங்களுக்கும் இடையில் போட்டி போட்டு வீறுநடை போடுகின்ற அளவுக்கு முஸ்லிம் அச்சு ஊடகங்கள் வளர்ச்சி அடையாமைக்கான காரணங்களைத் தெளிவாகக் கண்டறிவது, இன்று அவசியத் தேவையாகவிருக்கின்ற முஸ்லிம் அச்சு ஊடகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிய முடியும். கண்டறியப்படுகின்ற காரணம் எவையாக இருந்தாலும் இந்தக் காரணங்கள் அனைத்தையும் தாண்டி 23 வருடங்களில் 400 இதழ்களை பிரசவித்த மீள்பார்வையின் ஊடகப் பணி முஸ்லிம் இதழியல் துறை வரலாற்றில் நிச்சயம் ஓர் இடத்தைப் பெறும்.

முஸ்லிம் சமூகத்தில் அச்சு ஊடகங்கள் வளராமைக்கு வாசிப்புப் பழக்கத்தில் தோன்றியுள்ள குறைபாடுகளே பொதுவான காரணமாகச் சொல்லப்படுகிறது. நவீன சாதனங்களின் பாவனை அதிகரித்தமை அச்சு ஊடகங்களின் பாலான தேவையைக் குறைத்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும், ஆழ்ந்த வாசிப்புக்கள் எதனையும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தும் தலைமுறையிடம் காணக்கிடைக்காதிருப்பது கவலைக்குரிய விடயமே. வரைமுறைகள் அற்ற சமூக ஊடகங்களின் பாலான ஈர்ப்பு நாகரிகமான ஊடகச் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதிலும் தடைக்கல்லாக முன்நிற்கின்றமையும் வருந்தத் தக்கதாகவே இருக்கின்றது.

இந்த நிலைமையில் நெறிமுறைகளுடன் கூடிய அச்சு ஊடகங்களின் பாலான அணுகுதலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாகரிகமற்றதாக அமைந்து விடுவது வேதனைக்குரியது. சமூக ஊடகங்களில் தனிநபர்களை முன்வைத்துக் கருத்துச் சொல்லுகின்ற கலாச்சாரம் பெருகி, அச்சு ஊடகத்தையும் அவ்வாறு அணுக முயற்சிப்பது நாகரிகமான ஊடகக் கலாச்சாரமல்ல. இவ்வாறான கலாச்சாரச் சீரழிவுகளின் தாக்கம் மீள்பார்வையிலும் பாதிப்புச் செலுத்தியிருப்பது மறுப்பதற்கில்லை. பத்திரிகையில் தமது கருத்துக்கு மாற்றமான விடயங்கள் வெளிவருகின்ற வேளைகளில் பத்திரிகையையும் பத்திரிகை நிறுவனத்தையும் அச்சுறுத்திப் பணிய வைப்பதற்கு எடுக்கப்படும் எத்தனங்கள் இன்னும் முதிராத பருவத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.

கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுகின்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு முன்வருகின்ற போது தான் அங்கு ஆரோக்கியமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். மீள்பார்வை சமூக மாற்றத்துக்காக உழைக்கும் பத்திரிகை என்ற வகையில் சமூக மாற்றத்தை நோக்கிய கருத்துப் பரிமாறல்களை அது வரவேற்கிறது. 400 இதழ்கள் என்ற மைல்கல்லை எட்டிய பின்னரும் நல்ல வாசகர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் அது சலசலப்புக்களுக்கு அஞ்சாமல் பயணிக்கும் என்பதில் அது உறுதியாக இருக்கிறது.

தோள் கொடுக்கும் தோழமைகளுக்கு நன்றிகள்.

About the author

Administrator

Leave a Comment