Features சமூகம் ஷரீஆ

அறபா நோன்பும் ஹஜ்ஜுப் பெருநாளும் சில அவதானங்கள்

Written by Web Writer

முஹம்மத் பகீஹுத்தீன்

விடிஞ்சா பெருநாள்: அது நால்வகை மதமும் நாற்பது கொள்கையும் உள்ள ஒரு குக்கிராமம். ஆனால் இது வரை மதச் சண்டை ஏதும் அங்கு கிடையாது. இருந்தாலும் அங்கே கொள்கைச் சண்டைகளுக்கு குறைவே கிடையாது.

நாளைக்கு ஊருக்குள்ள யாரும் பெருநாள் கொண்டாட மாட்டாங்க. அதற்காக நாம சும்மா இருக்க முடியாது. நான் என்ன நடந்தாலும் பெருநாள் கொண்டாடுவேன் என மனதில் சபதம் எடுத்தவாறே ஒருவன் வீட்டிற்குள் நுளைகின்றான். அந்த முஸ்லிமுக்கு இதுதான் இஸ்லாம்.

மனைவிக்கு உரத்த குரலில் கூவிக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

ஏய்! எனக்கு விடிஞ்சா பெருநாள். எதாவது இருக்கிறத பார்த்து சுவையாக சமைத்து வை. நம்மட பள்ளிக்கு போய் தொழுதுட்டு வரும்போது சாப்பாடு தாயராகி இருக்கனும்.

அவர்ட மனைவி அடுத்த கட்சி. அவ பதறிப்போய் மாப்பிள்ளைக்கு சொல்றா:

நான் நோன்புங்க! ஒங்கட ஆசைக்காக எனக்கு பாவம் செய்ய ஏலா. இன்டைக்கு ஒன்றுமே சமைக்க மாட்டேன்.

கனவன்:
ஏய்! நான் சொல்வதைக் கேள். நான் உன்ட கனவன். திரும்பி வாரத்துக்குள்ள சமைக்கத்தான் வேண்டும். இல்லாட்டி ….
என்ன செய்ய சர்வதிகாரம் நாட்ல மட்டுமா! வீட்லயும் தான் ஜோரவே இருக்குது. நல்ல நாள் பொல்லாப்பா தொடங்குது.

பாவம் முஸ்லிம் வீட்டு ஹஜ்ஜுப் பெருநாள்.
அடுத்த வீட்ல நிலைமை அய்யோ பாவம். வாப்பா நோன்பாம். மூத்தவன் பெருநாளாம். இளையவன் குழம்பி நிற்கின்றான். இப்படி ஈந்தா இன்றைக்கு பெருநாள் பங்கு வருமோ தெரியா. இது வேலியோரத்தல கனபதியின் மனுசி பக்கத்து வீட்டு சாரதாவிடம் வியப்பா பேசிக்கொள்றாங்க.

அடுத்த கிராமத்ல ஒரு பிள்ளை: உம்மா உம்மா புதிசா கட்டின பள்ளிவாசல்ல தக்பீர் சொல்றாங்க. சத்தமா கேட்குது. வாப்பா எங்க உம்மா! நாம பள்ளிக்கு போறல்லயா?

எங்களுக்கு நாளைக்கு மவன் பெருநாள். ஏன்மா அப்படி? அது…அது… ரேடியோல அப்படித்தான் சொன்னாங்க. மவன் வாய பொத்திட்டான். இப்படித்தான் ஊறுவாயையும் பொத்த முயற்சிக்கிறாங்க

இனி சிலர் சிரிக்க சிலர் நகைக்க சிலர் பள்ளிவாசல் போகிறார்கள் பலர் ஏங்க சிலர் சினுங்க கொண்டாடும் பெருநாள் இன்பம் போன்ற துன்பமாய் மலர்ந்து மலராமலே வாடுகிறது.

தெருத்தெருவா கூட்டம். எல்லாருட வாயிலயும் ஒரே விசயம் தான்.. எது சரி? அதுவா இதுவா? பேசுராங்க.. உலமா சபை சரியா பிழையா? தெருத் தெருவாய் கதைக்கிறாங்க.

இது இப்படி இருக்க.. டி.வியில் அறபா நிகழ்வுகளை கண்ணால் பார்த்துக் கொண்டு நோன்பு பிடிக்காமல் இருப்பதா இவர்களட மூள எங்க? ஒருவர் சலித்துக் கொள்கிறார்.

இது தான் எமது வீட்டு நிலைமை. எமது நாட்டு அவலம். நமது வீட்டு அவஸ்தை.

இப்படித்தான் இந்த பெருநாளை மக்கள் பார்க்கிறார்கள்.

ஆனால் எப்படி பார்க்க வேண்டும் என்று சில அவதானங்களை தருவதுதான் இந்த தொகுப்பின் நோக்கமாகும்.

அறபா நோன்பு

அறிஞர்கள் இது குறித்து கூறிய கருத்துக்கள்:

சவுதி நாட்டில் கண்ட பிறையை பின்பற்றி சுன்னத்தான அறபா நோன்பை நோற்பதா? அல்லது அந்த அந்த நாட்டில் கண்ட பிறையை பார்த்து நோன்பு நேற்பதா என்று கேட்ட கேள்விக்கு 30 மேற்பட்ட தகுதிவாய்ந்த அறிஞர் பெருந்தகைகள் உங்கள் நாட்டில் கண்ட பிறையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு பத்வா வழங்கியுள்ளார்கள்.

இவர்கள் ஒரு நாட்டிற்குள் பல பெருநாள் தினம் வந்து பிளவுபடுவதை தவிர்க்கவே இக்கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

கராணம்; இவர்களுள் அதிகமான அறிஞர்கள் பிறை பிறக்கும் பிராந்திய வேறுபாட்டை ஏற்காது ஒரு பிரதேசத்தில் கண்ட பிறையை ஏனைய பிராந்தியங்களும் ஏற்று பின்பற்ற வேண்டும் என்ற சிந்தனையை ஆணித்தரமாக சமூகத்திற்கு முன்வைத்தவர்கள். முன்வைத்து வருபவர்கள்.

இருந்தும் சமூகம் பிளவு படக்கூடாது என்பதற்காவும், இது கருத்து முரண்பாடு உள்ள விவகாரம் என்பதாலும் ஒவ்வொரு பிராந்தியமும் தத்தமது பகுதியில் கண்ட பிறையின் அடிப்படையில் நோன்பு பிடிப்பதையம், பெருநாள் கொண்டாடுவதையம், துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் அறபா தினமாக இல்லாத போதும் நோன்பு வைப்பதையும் விசாலமான மனதுடன் அங்கீகரித்து அறிவுரையும் கூறியுள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இக்கருத்தை வலியுறுத்தியும் உள்ளார்கள். அந்த அறிஞர்களில் சிலரின் பெயரை இங்கு தருகின்றேன்.

அல்லாமா அஷ்ஷெய்க் முஹம்மத் அல்பானி
அல்லாமா அஷ்ஷெய்க் முஹம்மத் உஸைமின்
அல்லாமா அஷ்ஷெய்க் அப்துல்லா பின் பாஸ்
அல்லாமா அஷ்ஷெய்க் முஹம்மத் ஷன்கீதி
அல்லாமா அஷ்ஷெய்க் யூஸப் அல்கர்ளாவி
அல்லாமா அஷ்ஷெய்க் ஹானி அல்-ஜுபைர்
அல்லாமா அஷ்ஷெய்க் யூஸுப் அல்காஸிம்
அல்லாமா அஷ்ஷெய்க் இப்ராஹீம் ஆலு ஷெய்க்
அல்லாமா அஷ்ஷெய்க் முஹம்மத் அல்ஹரகான்
அல்லாமா அஷ்ஷெய்க் முஹம்மத் அல்மனீ

போன்ற 30க்கும் அதிகமான தகுதியுள்ள உலக முஸ்லிம் அறிஞர்கள் இக்கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

நாட்டிற்கு நாடு பிறை பார்ப்பதன் காரணமாக அறபா நோன்பு வித்தியாசமான நாளில் வந்தால் என்ன செய்வது? சவுதியை பின்பற்றி அறபா தினத்தில் நோன்பு வைப்பதா அல்லது நாட்டில் எடுத்த முடிவை வைத்து நோன்பு நோற்பதா பதில் தாருங்கள் என மர்{ஹம் அறிஞர் அல்லாமா முஹம்மத் உஸைமின் அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர் தந்த பதில்:

பிறை பார்த்தல் தொடர்பான மார்க்கப் பிரச்சினைகளில் முழு உலகிற்கும் ஒரு பிறையா அல்லது பிராந்திய வேறுபாடு உண்டா என்பதில் பிராந்திய வேறுபாடு உண்டு என்பதே எனது நிலைப்பாடாகும். அதாவது உள்நாட்டில் வெற்றுக்கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மாதம், நோன்பு, பெருநாள் போன்ற அனைத்து முடிவுகளும் பெறப்படுவது சரியானதே.

உதாரணத்திற்கு மக்காவில் துல் ஹஜ் ஒன்பதாம் நாள் (அதாவது மக்காவில் அறபா தினம்) மற்றொரு ஊரில் துல் ஹஜ் பத்தாம் நாளாக அமையலாம். அவர்கள் ஒரு நாள் முன்பு பிறை கண்டுள்ளார்கள். எனவே மக்காவில் அறபா தினம் என்பதற்காக அவர்களுக்குரிய 10ம் நாளில் (அது அவர்களுக்கு பெருநாள் தினம்) நோன்பு நோற்பது கூடாது. அவ்வாறே மக்காவில் அறபா தினம் அனுஷ்டிக்கப்படும் போது இன்னொரு பிராந்தியத்தில் பிறை எட்டாக இருக்கலாம். எனவே அவர்கள் தமது நாட்டின் பிறைக் கணிப்பின் படி அடுத்த நாள் தான் நோன்பு வைக்க வேண்டும். மக்காவின் அறபா தினத்தில் அல்ல. இதுவே மிகவும் சரியான முடிவாகும். பிறiயை கண்டு நோன்பு வையுங்கள். பிறையை கண்டு நோன்பை விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு நாடும் சூர்ய உயதம்-மறைவு அடிப்படையில் அதன் நாளை ஆரம்பித்து முடிக்கிறது. அவ்வாறே மாதத்தையும் அந்ததந்த ஊரின் பிறையை வைத்து ஆரமபிப்பதே முறையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன். (இப்னு உஸைமின்)

இதற்கு மாற்றமாக இன்னம் சில அறிஞர்கள அறபா நோன்பு என்பது ஹஜ்ஜாஜிகள் அறபா தினத்தில் தரித்திருக்கும் நாள் தான் என அபிப்பிராயப்பட்டுள்ளனர்.

இந்த கருத்து வேறுபாட்டிற்கு பல காரணங்கள் உண்டு. துல்ஹஜ் ஒன்பதாவது நாள் என்ற காலத்தின் அடிப்படையில் நோக்கியவர்கள் அறபா தினமான இடத்தை கருத்திற் கொள்ளவில்லை.

நபிகளாரிடம் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் இருந்து நோன்பு பிடிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது அறபா தினம் கிடையாது. காரணம் ஜஹ் கடமை ஹிஜ்ரி ஒன்பதில் தான் கடமையானது. இப்படியான பல விடயங்கள் இது குறித்து அறிஞர்கள் வித்தியாசமான கருத்துக்கு வருவதற்கு வழிகோலியது. இன்னும் சிலர் ஹஜ் மாதத்தில் மாத்திரிம் மக்காவின் பிறையை ஏற்பதே உசிதமானது எனவும் அபிப்பிராயப்பட்டுள்ளனர்.

இங்கு நாம் இன்னொரு விடயத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும். அதாவது நோன்பை ஆரம்பித்தல், பெருநாள் கொண்டாடுதல் போன்ற இபாதத்கள் தனிமனித வணக்க வழிபாடுகள் அல்ல. அவை சமூக செய்யும் வணக்கங்கள். எனவே அவை குறித்த தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தலைமையிடமே காணப்படுகிறது. இதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய பாரம்பரியமாகும்.

நபிகளாரின் காலத்திலும் கூட பிறை கண்ட செய்தியை சஹாபாக்கள் நபியவர்களிடம் வந்து தெரிவித்ததன் பின்னர், நோன்பு நோற்குமாரோ அல்லது பெருநாள் கொண்டாடுமாரோ நபியவர்கள்தான் கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள். அதன் பின்னரே சஹாபாக்கள் அதனை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்கள். மாற்றமாக தனிமனிதர்கள் தாம் பிறை கண்டதற்கு ஏற்ப தொழிற்பட்டமையைக் காணமுடியாது.’

இலங்கையில் பிறை விடயத்திற்கு அதிகாரம் பெற்றவர்களாக பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாதவின் பிறைக்கமிட்டி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய முத்தரப்பினரும் இணைந்து நீண்ட நெடுங்காலமாக தொழிற்பட்டுவருகின்றனர். அந்த வகையில் அவர்களது தீர்மானத்தை அனைவரும் ஏற்றுப் பின்பற்றுவது இஸ்லாமிய சட்ட மரபின் படி கடமையாகும். அதுவே ஒற்றுமைக்கு மிகவும் நெருக்கமானதாகும்.
எனவே இந்த விடயத்தில் (ரமாழான் நோன்பு அல்லது பெருநாள்) தனிமனிதர்களோ பள்ளிவாயல்களோ ஊர்களோ அமைப்புக்களோ தனித்து தீர்மானம் எடுத்துத் தொழிற்படுவது ஷரீஅத் ரீதியாக ஏற்புடைய ஒரு விடயமல்ல.

அறபா நோன்பு சமூகக் கடமையன்று. அதற்கு நாட்டின் சட்டமன்ற தீர்ப்புக்கு கட்டாயம் கட்டுப்படவேண்டும் என்ற கடப்பாடும் கிடையாது. காரணம் அது தனிமனித வழிபாடாகும். எனவே அறபா நோன்பை துல்ஹஜ் ஒன்பதாவது நாளிலோ அல்லது ஹஜ்ஜாஜிகள் அறபாவில் தரித்திருக்கும் நாளிலோ பிடிக்கலாம். இஸ்லாமிய சட்டப்பரப்பில் இத்தகைய கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் யாருடைய ஆதாரம் மனதிற்கு திருப்தி தரும் வகையில் உள்ளதோ அந்த வகையில் செயற்படுவதற்கு சுதந்திரம் உண்டு.

அல்லாஹ் யாவும் அறிந்தவன்.

About the author

Web Writer

Leave a Comment